சிற்பி தானே சிற்பங்களை செதுக்குவார்! இது என்ன சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்? தலைப்பே வியக்க வைக்கிறதல்லவா?..
காலம் காலமாய் தன்னிடம் வரும் குழந்தைகள் கல்லை போலவும், களிமண்ணை போலவும் இருப்பதாகவும் அவர்களைத் தாங்கள் சிற்பமாக்குவதாகவும் , ஆசிரியர்கள் உலகில் இருக்கும் பிரம்மையை சிதறடிக்கும் தலைப்பு தான் இது.
ஆம்.. ஒரு ஆசிரியர் தன்னை செதுக்கிய மாணவர்களைப் பற்றித்தான் இந்த நூலில் எழுதியிருக்கிறார்.
ஆசிரியர் மாணவர் உறவு என்பது வகுப்பறையை தாண்டிய உணர்வு வயப்பட்டது என்பதை உணர்த்திய இவருடைய முதல் மாணவன் பழனிநாதன் மூத்த பிள்ளையாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், இவரை செதுக்கிய உளியாகவும் இருந்திருக்கிறார்.
ஆசிரியர் நாடகங்களை உருவாக்குவதில் வல்லவர். அப்படி அரங்கத்தில் அனைவரையும் சிரிக்க வைப்பதற்காக காது கேளாத, திக்கிப் பேசும் கதாபாத்திரங்களை உருவாக்கி நாடகங்களை உருவாக்கினார்.
‘ சார் தயவு செய்து உங்கள் நாடகங்களில் நகைச்சுவைக்காக கூட இப்படி பாத்திரங்களைப் படைக்காதீர்கள். ஊனப்பட்டவனுக்கு தான் அந்த வலி தெரியும்’ முதல் உளி சிற்பத்தின் மீது விழுகிறது. அதற்குப் பிறகு சின்ன சின்ன குறைபாடு உடைய மாணவர்களை பயிற்சியின் மூலம், மேடை ஏற்றி அவர்களை சாதனைகள் படைக்க வைத்தார்.
பாடத்திட்டத்தில் மட்டுமல்ல பரந்துபட்ட அறிவையும் ஒரு ஆசிரியர் வளர்த்துக் கொண்டால் மட்டுமே வகுப்பறையில் அவர் வெற்றி பெற முடியும் என செதுக்கிய மாணவன் சரவணன்…
தன் ஆசிரியர் மீது, கொண்ட அளவற்ற பாசத்தால் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனார். அப்படி இவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவருடைய பல மாணவர்கள் இவருடைய தாசனாய் மாறியதை குறிப்பிட்டுள்ளார்.
வகுப்பறை நூலகம் அமைக்க விரும்பிய போது, ஏராளமாய் நிதி தந்து நேசக்கரம் நீட்டிய மூத்த மாணவர்கள்…
‘உங்கள் குழந்தைகளைப் படித்த ஆசிரியரிடம் ஒப்படைக்காதீர்கள். படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியரிடம் ஒப்படையுங்கள்’ என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப , இன்று வரை இவர் படித்துக் கொண்டே இருக்க காரணமானவன் பெயரறியாத ஒரு மாணவன்… ஆசிரியர்கள் ஆயுற்கால மாணவர்கள்..
இவரிடம் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் வகுப்பு தேர்வில் , குறைவாக மதிப்பெண் எடுத்த பொழுது, மாணவர்களை அடித்து தண்டித்திருக்கிறார்.
‘ நோயற்றவர்களுக்கு அல்ல- நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை’ என்ற ஒற்றை காகித பீரங்கியால் , அடித்துத்தான் திருத்த முடியும் என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்த மாணவன் வில்லியம்ஸ்…
அவரிடம் படித்து, பட்டங்கள் பல பெற்று, பல நூல்களை எழுதியுள்ள அருட்தந்தை ஜெயசீலன் அவர்கள் தான், அன்பு கட்டளை இட்டு இவரை எழுத வைத்தவர். இந்த நூல் அனைவர் கைகளிலும் கிடைக்க இவரது மாணவர் தான் காரணம். என்னை செதுக்கி தூண்டியதால் எனக்கும் குருவானவன் என்று மகிழ்வோடு ஆசிரியர் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 5 என்றால் ஞாபகப்படுத்த வேண்டியது டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, வ உ சி யையும் தான் என்று உளிகொண்டு செதுக்கிய மாணவன் ஜெகன்..
இப்படி தன்னுடைய ஆசிரியர் வாழ்வில் தன்னை செதுக்கி கொண்டே இருக்கும் மாணவர்களை பற்றி இந்த நூலில் ஆசிரியர் அழகாய் வெளிப்படுத்தியுள்ளார்.
சூழ்நிலையை ஆளும் திறன், கற்பனைத்திறன், ஆளுமை, சுயக்கட்டுப்பாடு ,ஊக்கம் ,கூட்டுணர்வு மனப்பாங்கு ,தன்னொழுக்கம், உடல் நலம், மனநலம், சமுதாய உணர்வு ,நேர்மை , அன்பு, தலைமைப் பண்பு , பணியில் ஈடுபாடு, சிறந்த அறிவு தாகம் போன்ற 16 பண்புகளும் அமையப்பெற்றவரே நல்லாசிரியர் என்கிறார். -பூங்கொடி பாலமுருகன்
‘ தலைவர்களை திரையரங்குகளில் தேடாமல் வகுப்பறையில் தேடுவோம்’ என்ற ஆசிரியரின் குரல் நூலை வாசித்து முடித்து வைத்தாலும் நமக்குள் எதிரொலிக்கும்.
நூலின் தகவல்கள்
நூல் : செதுக்கும் சிற்பங்கள்
ஆசிரியர் : ஜோல்னா ஜவஹர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 112
விலை : ₹100.00
நூலறிமுகம் எழுதியவர்
பூங்கொடி பாலமுருகன்