NEETNEET

“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை) பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று 12.12.2018 அன்று முழுப்பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் இப்படிக்கூறுகிறது. இதனை இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதியுள்ளனர்.”-இப்படித் தொடங்குகிறது அந்தச் சிறு பிரசுரம். மிளகு சிறியதாக இருந்தாலும் காரம் குறைந்துவிடுமா என்ன?

மேநாள் நீதியரசர், மூன்று மருத்துவர்கள் என நான்கு ஆளுமைகளின் சமூகஅக்கறையையும் நீட் பற்றிய மோ(ச)டி உண்மைகளையும் மக்கள் சமூகத்தின்முன் குறிப்பாக மருத்துவம் பயில விரும்பும் மக்கள் நல்வாழ்வின்ஆணிவேர்களான மாணவ சமூகத்தின்முன் வைத்திருக்கிறார்கள். நீட் தேர்வு என்பது மாணவர்களோடும் அவர்களின் பெற்றோர்களோடும் சம்பந்தப்பட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள். அதனால்தான் பொதுமக்களிடமும் ஏன் மருத்துவம் பயிலும் எண்ணமில்லாத மாணவப் பெருந்திரளிடமும் கூடஇந்தப் பிரச்சனை போதிய கவனம் பெறவில்லை. தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றிவிட்டோம்; குடியரசுத்தலைவரின் ஒப்புதல்தான் பாக்கி என்று ஒரு பக்கம் சொல்கிறது.

நடந்துமுடிந்துள்ள மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் ஆளும் கட்சி அதனை ஒரு வாக்குறுதியாகவும் குறிப்பிட்டிருக்கிறது. மறுபக்கம் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயிற்சி மையம் தொடங்குவதாக அரசே அறிவிக்கிறது.இதுதான் முதல் பத்தியில் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் மனநிலையை உருவாக்குகிறது. இந்த மேல்தட்டு மனோபாவத்தால் திணிக்கப்பட்டுள்ள நீட் சாமானியர்களின் மருத்துவர் கனவில் எப்படி மண்ணைப் போடுகிறது என்பது பல சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளது. தப்பித்தவறி நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் பயின்றுவிட்டாலும் எக்சிட் என்ற பெயரில் வடிகட்டித் தடைபோடும் அபாயம் இருப்பதை எத்தனை பேர் அறிவார்கள்? அதற்கும் பயிற்சி மையம், கடுமையான பணச்செலவு என்ற தடைக்கற்கள் இருக்கின்றன. மருத்துவம் படிப்பதில் மட்டுமல்ல மக்களுக்கான மருத்துவப் பாதுகாப்பையே சீரழிக்கும் ஏற்பாடாக தேசிய மருத்துவ ஆணையம் என்பது உருவாக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் கட்டுப் பாடில்லாமல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும் கட்டணம் வசூலிக்கவும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு வேட்டு வைக்கவும் இந்தஆணையம் எப்படி உதவப்போகிறது என்பதை இந்தப் பிரசுரம் விவரிக்கிறது.

ஏற்கெனவே 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் இன்னமும் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும்போது நீட் விஷயத்தில் மத்தியஅரசின் ஆணை தமிழகத்தைக் கட்டுப்படுத்தாது என்ற தகவல் புதியது. பலராலும் புரிந்துகொள்ளப்படாமல் இருப்பது . இதேபோல் பொதுசுகாதாரம் என்பதன் பொதுவான புரிதலிலிருந்து மாற்றி யோசிக்கும் கருத்தும் இதில் பொதிந்துள்ளது. வந்தபின் பணத்தைக் கொட்டிக்கொடுத்து பாதுகாத்துக் கொள்ள துடிப்பதல்ல; வருமுன் எளிய முறையிலும் குறைந்த செலவிலும் காத்துக்கொள்வதுதான் பொதுமருத்துவம். இதனைச் சீர்குலைக்கும் சதியைத்தான் நீட், மருத்துவ ஆணையம் என்ற பெயரில் செய்யப்படுகின்றன என்பது போன்ற கருத்துக்கள் மக்களுக்குத் தரப்பட்டுள்ளன. நீட் அபாயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதை எதிர்த்துப் போராட இது சிறந்த ஆயுதமாக இருக்கும். தேர்தல் முடிந்தாலும் மாறுதல் ஏற்படும்வரை பரப்புரை செய்ய அவசியம் படிக்க வேண்டிய சிறுநூல் இது.

தீக்கதிர் – 22 – 04 -2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *