சிறு சிறு கதைகள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : சிறு சிறு கதைகள்
ஆசிரியர் : சுஜாதா
வெளியீடு : விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
விலை : 42
எந்தவிதமான கதைக்களத்திலும் புகுந்து விளையாடும் சுஜாதா அவர்களின் சிறுகதை தொகுப்பு இந்த நூல்.
கதைச்சுருக்கம் கேள்விப்பட்டிருக்கிறோம் கதையே சுருக்கமாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்த நூல் அதை நமக்கு முழுமையாக விளக்குகிறது. எந்தவிதமான பந்து வந்தாலும் அதை சிக்ஸருக்கு விரட்டும் டெண்டுல்கரைப் போல எந்தவித கதைக்களத்தையும் தனக்கே உரிய பாணியில் மக்கள் மனங்களில் கடத்திவிடும் இயல்பை உடைய சுஜாதா அவர்கள் இத்தொகுப்பிலும் புதிய புதிய உத்திகளையும் கதை சொல்லலில் புதிய புதிய பாங்குகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இரண்டு வரிகளில் கதை சொல்லலாம் இரண்டே வார்த்தைகளிலும் கதை சொல்ல முடியும் என்பதையும் இதில் அவர் நமக்கு அற்புதமான பாடமாக எடுத்து கொடுத்துள்ளார்.
சடன்பிக்சன் என்று அழைக்கப்படுகின்ற திடீர் முடிவுக் கதைகள் நம்மை வெகுவாக வியக்க வைக்கின்றன.
ஒரு நேர்கோட்டுப் பாதையில் செல்லும் வாகனம் திடீரென்று ஒரு யூ வளைவில் திரும்பும் போது நம்மை அறியாமல் நாம் என்ன மனநிலைக்கு செல்வோமோ அதே போல இதில் வரும் கதைகளின் முடிவுகளை வாசிக்கையில் நமக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை விளைவிக்கின்றன.
கதை சொல்லலில் புதிய புதிய உத்திகள் எப்படி எல்லாம் உருவாகின்றன, அதை எவ்வாறு எழுத்தாளர்கள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றனர் என்பதையும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் தொடங்கி நமக்கு நிறைய கதைக்கலங்களை அறிமுகம் செய்கிறார் சுஜாதா.
சில உதாரணங்களை பார்ப்போம். இரண்டே வார்த்தைகளில் ஒரு சிறு சிறு கதை எழுத முடியும் என்கிறார்.
தலைப்பு கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்.
கதை
ஐயோ சுட்டுடாதே.
55 வார்த்தைகளில் மட்டுமே எழுதப்படுகிற 55 சிறுசிறு கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளும் நமக்கு புதிய அனுபவத்தை நம்முள் புதிய புதிய கற்பனைச் சிறகுகளை விரிக்க வைக்கின்றன. அட நாமும் இப்படி எழுத முடியுமே என்று நமக்குள் கதைகளை உற்பத்தி செய்கின்றன இந்த நூலில் உள்ள கதைகள்.
ஒரு காட்சியை விரிவாக விளக்கி பெரிய கதைகளாக எழுதுவதாகட்டும் அதே காட்சிக்கு 3 வரிகளில் கதை சொல்லும் ஹைபுன் என்ற பாங்கையும் புதிய கவிதை வகையையும் இதில் அறிமுகம் செய்கிறார். வாசகர்களுக்கும் அதில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஈடுபடுத்துகிறார்.
குமுதம் இதழில் வெளிவந்த இந்த சிறு சிறு கதைகள் தொகுப்பாக நூலாகி வந்திருக்கின்றது.
உடனடிக் கதைகள் என்ற தலைப்பிலான கதைகள் நம்மை நிறைய சிந்திக்க வைக்கின்றன.
ஒரு சிறுகதையைப் பாருங்கள்.
அண்ணா சாமிக்கு ஒரு கடிதம்
இதில் பெயர் தெரியாத ஒரு பத்திரிகையின் முகவரியிலிருந்து ஒருவருக்கு கடிதம் வருகிறது. நீங்கள் இந்த எங்கள் பத்திரிகையை தொடர்ந்து பெற்று வருகிறீர்கள். இதுவரை நாங்கள் அனுப்பிய பத்திரிக்கைக்கு சந்தா செலுத்தவில்லை. எனவே உடனடியாக சந்தா செலுத்துங்கள் என்று அக்கடிதம் கூறுகிறது. பதிலுக்கு அண்ணாசாமியோ எனக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.உங்கள் பத்திரிக்கையை எனக்கு பிடிக்கவே இல்லை. அதில் வரும் செய்திகள் அனைத்தும் எவ்வித பயனும் இல்லை..எனவே சந்தை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் கடிதம் அனுப்புகிறார்.
மீண்டும் பத்திரிக்கையிலிருந்து அண்ணாசாமிக்கு கடிதம் வருகிறது. எங்கள் உண்மை விரும்பி பத்திரிக்கை சில புகைப்படங்களை உங்களுக்கு அனுப்புகிறது. இதைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள் என்கிறது. உடனே அண்ணாசாமி மறுகடிதத்தில் தங்களுக்கான சந்தா தொகை 5000 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் அனுப்புகிறார்.
நீண்டு கொண்டிருக்கும் இந்த கதையின் உடனடி முடிவை வாசித்துப் பார்த்தால்தான் கதையின் ஆழமும் கதையின் போக்கும் நம்மை சிந்திக்க வைக்கும்.
** திருடன் **.
இரண்டு இளம் பெண்கள் அழகாக இருக்கிறார்கள். அவர்களை ஒருவன் விமான நிலையத்தில் சந்திக்கிறான். தொடர்ச்சியாக கண்காணிக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் அருகில் சென்று அவர்களைப் பற்றி விசாரிக்க நினைக்கிறான். அவர்கள் இவனை உதாசீனம் செய்து கிளம்பி விடுகிறார்கள். விமான நிலைய பரபரப்பில் மீண்டும் ஒருமுறை அவர்களில் ஒரு அழகியை அவன் சந்திக்க நேர்கிறது. இந்த நிகழ்விற்கு அடுத்து அவன் விமான நிலையத்திற்குள் சென்று விமானம் ஏற வேண்டிய சூழ்நிலையில் அவனது பர்ஸ் காணாமல் போகிறது. இந்நிலையில் தன்னை உரசிச்சென்ற அந்த பெண்ணே பர்ஸை எடுத்து இருப்பாள் என்று மீண்டும் அந்த பெண்ணை தேடிச் சென்று பர்ஸை கொடுக்க வேண்டுகிறார். அந்த பெண் முதலில் மறுத்துவிட்டு பிறகு அவனிடம் பர்ஸை ஒப்படைக்கிறாள். பர்ஸை பார்த்தால் அது அவனுடையது அல்ல.
இது என்னுடையது அல்ல என்று அவன் அந்த பெண்ணிடம் கூறத் தொடங்கையில் அப்பெண் ஓட ஆரம்பிக்கிறார். இப்போது இவன் முறை. அந்தப் பெண்ணை துரத்திக் கொண்டு இவன் ஓடுகிறான். இங்கே தான் கதையில் ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கிறார் சுஜாதா. அந்த இரண்டாவது பெண் இப்போது திருடன் திருடன் என்று கத்திக்கொண்டு அவன் பின்னால் ஓடுகிறாள்.
இப்படி ஒரு எதிர்பாராத திருப்பத்தை வழங்கும் இந்த சிறுகதையை வாசித்துப் பார்த்தால் ஏமாற்றம் தொடங்கிய அதிர்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.
** வயலின் என்ற ஒரு சிறுகதை
மிகுந்த கடவுள் பக்தி உடைய ஒரு பெண் கடவுளிடம் வேண்டுவதெல்லாம் பலிக்கிறது..அப்படி ஒரு நாளில் அவளுக்கு திருமணம் நடக்கிறது. அவளது கணவன் ஒரு மிகப்பெரிய வயலின் வித்வான். இல்லற பந்தத்தில் எவ்வளவோ கனவுகளுடன் குடும்பம் நடத்த வந்த மங்கை கணவனின் செயல்களால் வருத்தம் அடைகிறாள். எப்பொழுதும் வயலினையே பிடித்துக் கொண்டிருக்கும் கணவன் தன்னை திரும்பியும் பார்ப்பதில்லை என்று புலம்ப ஆரம்பிக்கிறார். மீண்டும் கடவுளிடம் சரணடைகிறாள். கடவுளும் எவ்வளவோ வழிகள் கூறியும் கணவன் அவளை திரும்பிப் பார்ப்பது போல் இல்லை. இறுதியில் கடவுளே ஒரு வழி சொல்கிறார். பேசாமல் அவனுக்கு பிடித்த வயலினாக நீ மாறிவிடு. எப்பொழுதும் அவன் உன்னையே இசைத்துக்கொண்டிருப்பான் என்கிறார்.
அதே போல கடவுளின் அருளால் அவள் வயலினாக மாறிவிடுகிறாள். இப்போது கணவன் வெளியே சென்று வந்து அவளை தேடுகிறான் .அவள் கிடைக்கவில்லை.சரி என்று கடவுள் முன் சென்று அடுத்த வாரம் அமெரிக்க செல்ல வேண்டும் மிகப்பெரிய இசைக் கச்சேரி இருக்கிறது.அந்த கச்சேரிக்காக வாசிப்பதற்காக அந்த நாட்டு சீதோசன நிலைக்கு ஏற்ற ஒரு வயலினை வாங்கி வந்துள்ளேன். இனிமேல் இந்த பழைய வயலின் வேண்டாம் என்று கடவுளிடம் சொல்கிறதாக இந்த கதை முடிகிறது.
இப்படியாக தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு விதமான கதை சொல்லல் பானி பின்பற்றப்பட்டு இருப்பதை அழகாக நமக்கு விளக்குகிறார். நம்மையும் அதேபோல் எழுதுவதற்கான வழிகளையும் காட்டுகிறார்.
இந்த நூலின் சிறப்பு என்பது நம்மை வாசிக்க வைப்பது மட்டுமல்லாமல் நம்மையும் கதைகள் எழுத தூண்டுவது என்பதே.
இந்நூலில் வரும் படுக்கை பூரா ரத்தம், பொட்டு, வயசாளி,இல்லம் போன்ற சிறு சிறு கதைகளும் அவற்றின் எதிர்பாராத முடிவுகள் கொண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
ஒரு நீண்ட நெடிய நாவலில் சொல்லப்படும் கதைபாங்கும் சரி, ஒரு பக்கத்தில் சொல்லும் கதையின் போக்கும் சரி வாசிப்பவர்களை வியப்புள்ள ஆழ்த்தும் என்றால் அதுவே கதைகளின் சிறப்பு என்று சொல்லும் படியாக மாறிவிடுகின்றது.
அவ்வகையில் இந்த நூலும் சிறுகதைகளின் பக்கம் நம்மை ஈர்ப்பதில் பெரு வெற்றி கண்டிருக்கிறது.
எழுதியவர் :
இளையவன் சிவா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.