சிறு வீ ஞாழல் | siru vee gnaazhal

காஞ்சிபுரம் அருகில் வெம்பாக்கத்தில் பிறந்து தற்போது மிச்சிகன் மாகாணத்தில்,பொது நிறுவனமொன்றின் மேலாளராகப் பணிபுரியும் திருமதி.பிரியா பாஸ்கரன்,சங்க இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்.இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

புலிநகக்கொன்றை மரத்துக்கு ஞாழல் என்று பெயர்.அம்மரத்தின் வெண்கடுகு போன்ற சிறு மலரைக் குறிக்கிறது தலைப்பான சிறு வீ ஞாழல்.
ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்

செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறையணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை நெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.

குன்றியனார்

பூங்குன்றன்,ஆதனியின் களவொழுக்க வாழ்வு,அதற்கு ஆதன்,குழலியின் உதவிகள், பின்னர் அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் மணம் புரிந்து கொண்டது, மணம் புரிந்து சிறிது காலத்திற்குள் அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு பிணக்கு, அது எவ்வாறு சரியானது என்ற காதலர்களின் வாழ்வின் பின்னணியில், குறுந்தொகை பாடல்களின் விளக்கங்களை ஒரு குறு நாவலின் வடிவில் மிக அழகாகப் பேசுகிற புத்தகம்.

கொலுசு இதழில். சங்க முழக்கம் என்ற பெயரில் வந்த கட்டுரைத் தொடரின் புத்தக வடிவம் இது.ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் உள்ள வார்த்தைகளால்,வாசகனை,அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கும்படி செய்தது சிறப்பு.

வெறுமனே, குறுந்தொகைப் பாடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களை மட்டும் சொல்லாது, அந்தப் பாடல்களின் கருத்துக்குப் பொருத்தமான திரைப்பட பாடல்களையும், புதுக்கவிதைகளையும்,நிகழ்கால வாழ்வையும் மிக அழகாக, மிக இயல்பாக இணைத்திருப்பதனாலேயே இந்தப் புத்தகம் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது.

சமையல் பற்றி ஏதும் அறியாத, புதிதாகத் திருமணமாகிச் சென்ற தனது பெண்,கணவனுக்கு சமையல் செய்து பரிமாறுகிற அழகைப் பார்த்து ரசிக்கிற தாயை நாமறிவோம். ஆனால் இங்கே அதைப் பார்த்து ஒரு செவிலித்தாய் அத்தனை பரவசப்படுகிறார்.

பூங்குன்றனுக்கும் சரி, ஆதனிக்கும் சரி, உதவியாக மட்டுமல்ல,இடிக்கும் கேளிராகவும் குழலியும், ஆதனும் இருக்கிறார்கள்.காதலர்கள் இணைவதில் தோழர்களின், தோழிகளின் உதவி,அன்றும் இன்றும் என்றும் மிக முக்கியமானதல்லவா.

பாடல்களின் வழி விவரிக்கப்படுகிற அந்தக் காலத்தின் நிலவெளி, தாவரங்கள், பறவைகள், மக்களின் பண்பாடு எல்லாமே அத்தனை அழகு.அத்தனை ஆச்சர்யம்.

கொங்குதேர் வாழ்க்கை என்று துவங்கும் பாடலைச் சுமந்தபடி, திருவிளையாடல் திரைப்படத்தில் நாம் பார்த்த தருமியின் கதை வேறு. உண்மையான கதை வேறு என்பதை அறிகையில் ஆச்சரியமாக இருக்கிறது.யாயும் ஞாயும் யாராகியரோ என்கிற செம்புலப் பெயல்நீரார் பாடலைத்தான் நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.முருக்கு என்றால் புரச மரம். கங்காதீசர் கோவில் தல மரம். சென்னை புரசைவாக்கத்தின் பெயர் கூட இம்மரத்தால்தான் ஏற்பட்டது என்பது போன்ற நிறைய ஆச்சர்யங்கள் புத்தகத்தில் உண்டு.

பேதை பெதும்பை என்று பெண்களுக்கும் பாலன்,மீளி என்று ஆண்களுக்கும் வயதின் அடிப்படையில் ஏழு பருவப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளதை அறிவோம்.அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ ,செம்மல் என பூவின் ஏழு நிலைகளின் பெயர்களை அறிவீர்களா? நான் இந்தப் புத்தகத்தை வாசித்துத்தான் அறிந்து கொண்டேன்.

காதலில் தோல்வியுற்ற தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடல் ஏறுவது போன்ற அக் காலப் பழக்க வழக்கங்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அட்டைப்படம் அவ்வளவு அழகு.எத்தனை அழகிய இரு மொக்குப் பறவைகள்.

நம் தமிழ் இலக்கிய பொக்கிஷங்களில் மிக முக்கியமான குறுந்தொகைப் பாடல்களை, எளிய கதை வடிவில் ஏராளமான வாசகர்களுக்கு கொண்டு சேர்த்ததற்காக, திருமதி. பிரியா பாஸ்கரன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். நல்வாழ்த்துகள்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : சிறு வீ ஞாழல்
            கதை வடிவில் குறுந்தொகைப் பாடல்கள்

ஆசிரியர் : பிரியா பாஸ்கரன்

வெளியீடு :   டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 

பக்கங்கள் 112

விலை ரூ.140

தொடர்புக்கு : 44 2433 2924

 

எழுதியவர் 

ஜி.சிவக்குமார்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *