சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள் – நூல் அறிமுகம்

நூலின்  தகவல்கள்: 

நூல்: சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள்

ஆசிரியர் : பேராசிரியர் பெ.விஜயகுமார்

பதிப்பகம்: பட்டறிவு பதிப்பகம் மதுரை

முதல் பதிப்பு : 2023

பக்கம் : 100

விலை : ரூ.120

தொடர்புக்கு : 9500740687

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் புதிய ஆசிரியன் இதழின் இணை ஆசிரியராகப் பணிபுரிபவர் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் ஓர் அறிமுகம், புனைவிலக்கிய நதியில் நீந்தி, வாசிப்பிற்கு திசை இல்லை, தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளவர் மனித நேயப் பண்பாளர் சிறந்த வாசிப்பாளர் சிறுகதை எழுத்தாளர் சிறந்த கதை சொல்லி என பல சிறப்புகளுக்கு உரியவர் பேராசிரியர் பெ.விஜயகுமார். தமிழைத் தாண்டி உலக மொழிகளில் சிறுகதைகளில் சிறப்பான இடத்தைப் பிடித்து வாசகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது இவரது இந்த நூல்.

பிறமொழிச் சாத்திரங்களையும் தமிழ் வாசகர்கள் அறிய வேண்டும் என்ற பாரதியின் ஆசைக்கேற்ப உலகின் தலைசிறந்த சிறுகதைகளுக்குள் வாசகச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது நூல்.

வெறுமனே ஓர் எழுத்தாளரைப் பற்றிய அறிமுகத்தோடு நின்றுவிடாமல் அவர்கள் வளர்ந்த சூழல் வாழ்ந்த வாழ்வின் நகர்வில் இலக்கியத்தின் வேட்கை எப்படி அவர்களை எழுத வைக்கிறது என்பதையும் அறிமுகம் செய்கிறது நூல். அத்தோடு சிறந்த சிறுகதையின் சுருக்கத்தை வழங்கி அதன் வழியே எழுத்தாளரின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது நூல்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் எழுத்தில் இருக்கும் தனித்தன்மையையும் அடையாளம் கண்டு அதையும் அறிமுகம் செய்து உத்திகளின் பலவிதங்களையும் நமக்கு உணர்த்துகிறது இச்சிறுகதைச் சுருக்க நூல். இன்பம் துன்பம் துப்பறிதல் நிராதரவுத் தன்மை ஏமாற்றத்தின் நிலை ஏழ்மையின் நெருக்கடி என காணும் காட்சிகளுக்குள் தன்னைக் கரைத்துக்கொண்டு கதைகளைப் படைக்கும் எழுத்தாளர்களின் எண்ணங்கள் வாசிப்போரை இழுத்துப் பிடித்து கதைக்குள் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது.

வாசிப்பை மறந்து தொடுதிரைக்குள் தமது எதிர்காலத்தைத் தேடும் சூழலில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினருக்கு நூல் வாசிப்பினால் பயன் என்ன என்பதையே விளக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வாசிப்பினால் வாழ்வின் தடங்களை சிறப்பாகக் கட்டமைக்க முடியும் நெருக்கடிகளின் தீராப் பொழுதுகளில் தீர்வுகளைத் தேடும் மனவலிமையைக் கொடுக்கவும் எழுத்தும் வாசிப்பும் துணைபுரிகின்றன. உலகம் முழுதும் தமது சிறுகதைகளின் வழியே நல்ல நல்ல கதைகளைப் படைத்து காலத்தால் அழிக்கமுடியாத கதாபாத்திரங்களை உலவவிட்டு நமக்குள் புத்துணர்வை உண்டாக்கும் சிறுகதை எழுத்தாளர்கள் 20 பேர்களை வாழ்வும் எழுத்துமென அறிமுகம் செய்கிறது நூல்.

ஒவ்வொரு எழுத்தாளரது சிறந்த சிறுகதைகளை முழுமையாக வழங்கி அவர்களது காலச் சூழலை நமக்குக் கடத்துகிறது நூல்.

மருத்துவம் எனது மனைவி எழுத்து என் ஆசை நாயகி என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொண்ட ரஷ்ய இலக்கிய உலகின் சிறுகதை மன்னன் ஆண்டன் செக்காவ் வாழ்ந்தது 44 ஆண்டுகள் மட்டுமே. ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவம் பார்ப்பதில் கவனமாக இருந்தவர் ஆழ்ந்த பொருள் உள்ள தீவிர இலக்கியங்களை படைத்தவர் ஆரம்பத்தில் நகைச்சுவை துணுக்குகள் எழுதிய பணம் ஈட்டினார்
ஒரு சிறுகதைக்கான சிறந்த இலக்கணங்கள் ஆறு என்பது செக்காவின் கூற்று. கதைக்குத் தேவையற்ற விசாரணைகளைத் தவிர்ப்பது, சுருங்கச் சொல்வது, விவரணைகளை நேர்மையுடன் கொடுப்பது, தன்வயப்படாமல் விலகி நின்று கதை சொல்வது, அன்பின் வழி நிற்பது என தனது கதைகளுக்குள் இவற்றைப் பின்பற்றியவர் செக்காவ். அதிகாரம் ஒரு மனிதனை எந்த எல்லைக்கு இட்டுச் செல்லும் என்பதையும் அதே அதிகாரம் அடுத்தவருக்குச் செல்லும்போது தான் எப்படி மாறிப் போகிறோம் என்பதையும் ஏழை எளிய மக்களை எப்படி அரவணைக்க வேண்டும் என்பது மருத்துவத்தில் வேலை செய்யும் எல்லோருக்கும் அவசியம் என்பதையும் தெளிவாக விளக்குகிறது அண்டன் செக்கோ எழுதிய வார்டு நம்பர் 6 சிறுகதை. இன்று வரை செக்காவின் புகழை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த சிறுகதை.

இந்திய ஆங்கில இலக்கியம் என்ற வகைமையின் முன்னோட எழுத்தாளர் ஆர் கே நாராயண் தமது கதைகளின் வழியே புதிய உலகத்தை படைத்திருக்கிறார். மால்குடி என்ற நகரையே வர்ணனைகள் மூலமும் காட்சி அமைப்பின் மூலமும் நிஜம் என வாசிப்பவரை நம்ப வைத்தார்.
மிக எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இவரது சிறுகதைகள் மனிதர்களின் பலவீனங்களையும் அபிலாசைகளையும் சபலங்களையும் சலனங்களையும் எள்ளி நகையாடுகிறது. மென்மையான மொழியில் மனிதர்களின் மனம் புண்படாமல் எழுதிச் செல்லும் தாலாட்டு எழுத்து இவரது. மனித மனத்தின் பலவீனங்களையும் அதன் வழியே அவர்கள் தங்களது வாழ்வை எவ்வாறு சிக்கல் ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதையும் இவரது எழுத்து அருமையாக படம் பிடிக்கிறது. சிறுகதை இலக்கிய வகையின் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி தனது கதைகளை எளிமையான மொழியில் எழுதிச் சென்று இருக்கிறார் ஆர் கே நாராயண்.

பிரான்ஸ் நாட்டின் மாபசான் உலகின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராக போற்றப்படுகிறார் அவ்வகையில் அமெரிக்காவின் மாப்பஸான் என்று அழைக்கப்படுபவர் ஓ ஹென்றி. 381 சிறுகதைகள் படைத்துள்ள இவர் சிறு வயதிலேயே படைப்பிலக்கிய வகையில் வெற்றி பெற்றவர் தான் சந்தித்த சாதாரண மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்களையே தனது கதையின் கருப்பொருளாக்கி சற்றும் எதிர்பாராத முடிவுகளும் திடீர் திருப்பங்களும் கொண்ட துப்பறியும் நாவலைப் போல இவரது சிறுகதைகள் அமைந்துள்ளன. இவரது மிகச் சிறப்பான சிறுகதை “தி கிப்ட் ஆப் தி மெஜை” காதலுக்காக காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கொடுக்கும் பரிசு பொருள் இறுதியில் அவர்களுக்கு எப்படி உதவாமல் போகிறது என்பதை வெகு அழகாக எடுத்துச் சொல்கிறது இந்தச் சிறுகதை. இவரது அனைத்து சிறுகதைகளும் ஏழை எளிய மனிதர்களின் வழியே நின்று வாழ்வில் எதிர்பாராத திருப்பங்களை நமக்கும் கடத்திச் செல்கிறது.

சோசலிச சித்தாந்தத்தில் உறுதியாக கற்றுக் கொண்டிருந்த இந்திய ஆங்கில எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை உருவாக்கியவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.இவரது அழகான சிறுகதை ஒன்று முடி திருத்துவோர் தொழிற்சங்கம் என்பதாகும் இவரது கதைகள் அரசின் திட்டங்கள் எப்படி எல்லாம் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு முயற்சி எடுக்கின்றன என்பதையும் அதன் வழியே மக்கள் இன்னும் மேன்மை அடையாமல் வறுமையிலேயே வளர்ந்து கொண்டு இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. முல்க்ராஜ் ஆனத்தின் கதைகள் அனைத்தும் சமூகத்தின் அவலங்களை படம் பிடித்து காட்டி அன்றைய அரசின் நிலையையும் மக்களின் நிலையையும் முழுமையாக நமக்குள் கடத்துகிறது.

வங்காள இலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமை கவிதை கட்டுரை நாடகம் சிறுகதை நாவல் ஓவியம் இசை என கலை இலக்கிய வகைமைகள் அனைத்தையும் தொட்டுத் துலங்க வைத்தவர் இந்தியாவிற்கான முதல் நோபல் பரிசு பெற்று தந்தவர் என சிறப்புகளுக்கு சொந்தக்காரரான இரவீந்திரநாத் தாகூர் சிறுகதைகளிலும் தமது ஆழமான தடத்தை பதித்துள்ளார். ஊமைப் பெண் பற்றிய அவரது சிறுகதை சுபா வெகு அருமையான அவளின் மௌன மொழியை நாமும் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது. வாழ்வின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு மனிதர்களும் வாழ்வை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றனர் என்பதை தாகூரின் சிறுகதைகள் முழுமையாக எடுத்துக் கூறுகின்றன.

ரஷ்யாவில் வசதியான நிலப் பிரப்புத்துவக் குடும்பத்தில் பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் எளிமையையும் அன்பையும் கடைபிடித்தவர் புனைவிலக்கிய உலகின் மிகப்பெரும் சாதனைகளை ஈட்டிய லியோ டால்ஸ்டாய் இவரது சிறுகதைகள் அனைத்தும் அன்பையும் கருணையையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கின்றன. மகாத்மா காந்திக்கு வழிகாட்டியது இவரது எழுத்து என்பதை அறியும்போது இவருக்குள் பொங்கி வழியும் அன்பு எப்படி எல்லாம் நமக்கும் வழிகாட்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது

இவர்களைப் போலவே
ஆண்டர்சன்
கேத்தரின் மேன்ஸ்ஃபீல்டு
வில்லியம் சாமர் செட் மாம்
முன்சீப் பிரேம்சந்த்
நிக்கோலாய் கோகால்
டி எச் லாரன்ஸ்
ஜேக் லண்டன்
ஹெச்.ஜி.வெல்ஸ்
ரஸ்கின் பாண்ட்
ஜெஃப்ரி ஆர்ச்சர்
சர் ஆர்டர் கோனன் டயல்
கிரீம் சகோதரர்கள்
எட்கர் ஆலன் போ

ஆகிய சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமும் அவர்களின் சிறந்த சிறுகதைகளும் இந்நூலை அலங்கரிக்கின்றன.

ஒவ்வொரு எழுத்தாளர்களைப் பற்றிய முழுமையான தகவல்களையும் இந்த நூல் நமக்கு படம் பிடிப்பதில் வெற்றி பெருகிறது. எழுத்தாளர்கள் தங்களது காலச் சூழ்நிலையை சிறுகதைகளில் பிரதிபலித்து அன்றைய காலகட்ட மக்களின் வாழ்நிலையையும் எழுத தலைப்பட்டுள்ளனர் அவ்வகையில் சிறுகதை இலக்கியத்தின் சிகரங்களை நாம் எழுத்தின் வழியே ஏறிச் சென்று ரசிக்க முடிகிறது என்பது ஆசிரியரின் உழைப்பிற்கும் ஆழமானதொரு வாசிப்பிற்கும் கிடைத்த பயன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கணக்கிட இயலாத தகவல்கள் நம் உள்ளங்கையில் வந்து விழும் இன்றைய தகவல் யுகத்தில் எது மெய் எது பொய் என பகுத்தறியவும் அவரவர் வாழ்வை சிறப்பான எதிர்காலத்தைத் நோக்கி நகர்த்திச் சென்றிடவும் மனிதர்கள் மீதான கருணையை அன்பை உணர்ந்து கொள்ளவும் மனித நேயத்தை எல்லோருக்குள்ளும் விதைத்திடவும் உயரிய குறிக்கோளாக உலகை நேர்வழியில் நடத்திச் செல்லவும் மக்களுக்கு உதவி செய்கின்ற இங்சிறுகதைகளை அருமையாகத் தொகுத்தளித்திருக்கும் நூலாசிரியரின் சிறப்பான தேடல் நமக்கு நல்லதோர் உலகைத் திறந்து விடுகிறது.

 

நூல் அறிமுகம் எழுதியவர்: 

சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள் (Peaks of Short Story Literature) - நூல் அறிமுகம் | Sirukadhai Ilakiyathin Sigarangal Tamil Book Review | https://bookday.in/

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *