sirukathai : aathalaal kathal saiveer ulagatheere by raman mullippallam சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே-இராமன் முள்ளிப்பள்ளம்
sirukathai : aathalaal kathal saiveer ulagatheere by raman mullippallam சிறுகதை : ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே-இராமன் முள்ளிப்பள்ளம்

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே

ஓய்வு பெற்ற கலெக்டர் இராமு படுக்கையில். தூய மலையாளத்தில் மகனை அழைத்தார். ’’சகா இவ்விட வரு’’ . இராமனாதன் மொழி மலையாளம் அல்ல. ‘’இராமு சேட்டா’’ என காதல் மனைவி அழைத்தார். பிள்ளைகள் அச்சன் என அழைத்தனர்.
தந்தை அருகே வந்து நின்றான் சகாதேவன். அவன் கையைப் பற்றினார் இராமனாதன். ’’முதுகில் சிறிது மஹா நாராயணா தைலம் தடவு மகனே’’.
சகாதேவன் மர அலமாரியில் இருந்த தைலப் புட்டியை எடுத்து வந்தான். இராமனாதன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த நிலைக்கு வந்தார். சிறிது தைலம் கையில் எடுத்து தந்தையின் நடு முதுகில் வைத்து மேலும் கீழும் பரப்பி தடவினான். பின் பக்கவாட்டில் இடதும் வலதும் தடவினான். தந்தைக்கு ஒரு உற்சாகம் வந்தது. ஒரு புன்னகை கூடவே வந்தது. தந்தையின் வலி குறைந்து மனம் மகிழ்ந்து இருப்பதை சகாதேவன் பயன்படுத்த விரும்பினான். தன் விரல்களை முதுகில் இருந்த ஆழமான் நீளமான வடுவில் வைத்தான்.

’’அச்சா இப்ப சொல்லுங்க ரிடையர் ஆகி அஞ்சு கொல்லம் ஆச்சு, இப்ப சொல்லுங்க இந்த காய வடு எப்படி வந்தது. சொல்லுங்க’’
’’சகாதேவா நான் சொல்ல சொல்ல எழுதறயா ?’’
உடனே சகாதேவன் வேகமாக சென்று கைகளை கழுவி, துவாலையில் துடைத்து. ஒரு நீண்ட நோட்டு புத்தகத்துடன் தந்தை எதிரே அமர்ந்தான். அனைத்தையும் கவனித்த ஸ்ரீஜா நாயர், ‘’ உங்களால சம்சாரிக்க முடியுமா’’ என்றார்.
’’ ஸ்ரீஜா முதுகுல வலி நாக்குல வலி இல்ல ‘’ என்றார்.
சகாதேவன் நல்ல தமிழில் எழுதினான். மூன்றாம் நபர் சொல்லுவது போல் எழுதினான். தன்னிலையில் தந்தை சொன்னதை ஒரு காவியமாக்கினான். உரை நடை காவியம்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
ஆனால் இராமனாதன் வாழ்வில் முதுகு தண்டு வடத்திற்கு இணையாக ஓடிய வடு இன்னும் வலியை கொடுத்தது. நாவினால் சுட்ட வடு ஆறி விட்டது..
1952 ல் கும்பகோணத்தில் இராமனாதன் தந்தை சேஷாத்ரி காவல் அதிகாரி. கண்டிப்பான காவல் ஆய்வாளர். இரு ஆண்கள் ஒரே பெண் குழந்தை. இராமு என்றழைக்கப்பட்ட இராமனாதன் இரண்டாவது மகன். பள்ளி இறுதி வகுப்பில் தோற்று ஊர் சுற்றியாய் இருந்தான். தமிழில் பாடல்கள் எழுதி பாடினான். பாரதியார் கவிதைகளை படித்து விட்டு அதே போன்ற நடையில் எழுத முயற்சித்தான்.
‘’காதல் செய்வீர் உலகத்தீரே’’ பாரதியின் இந்த வரிகள் இராமனாதனின் நெஞ்சில் ஆழமாக பதிந்தது. ஆகவே இராமனாதன் காதலித்தான். ஆம் ஸ்ரீஜாவை காதலித்தான், அழகிய சிவந்த பதினெட்டு வயது பெண். இராமனாதனுக்கு இருபது வயது. இத்தகைய ஒரு அழகிய பெண்ணை அவன் முன் பின் கும்பகோணத்தில் பார்த்தது இல்லை. அவள் கோவிலுக்கு வந்தாள். அதே கோவில் வாசலில் இருந்து அவளை பின் தொடர்ந்தான்.அவள் டபீர் தெருவில் தன் வீட்டினுள் சென்றாள். அவள் வீட்டின் வெளியே நின்றான் பத்து நிமிடம் கழித்து பாடல் இனிமையாக வந்தது
அச்யுதம் கேஷவம் கிரிஷ்னதா மோதிரம் ……

அவனுக்கு புரியாத மொழி. ஆனால் புரிந்த பிலவல் இராகம் 1952 ல் காதலிப்பது என்பது குதிரை கொம்பு தேடுவது போல். ஒரு வாரத்தில் ஸ்ரீஜாவின் வீட்டினுள் சென்று அவள் தந்தை தாய், தம்பி அனைவருடனும் மணிக்கணக்கில் பேசும் நண்பனாகி விட்டான். ஸ்ரீஜா வின் தந்தை கணித ஆசிரியர். இதை துப்பறிந்து அறிந்த இராமனாதன் அவரிடம் ட்யுஷன் சேர்ந்து விட்டான். அவன் பல முறை தோற்ற கணிதத்தில் தேர்ச்சி பெற்று பதினோராம் வகுப்பை முடித்தான்.
எண்பத்தாறு வருடங்களுக்கு முன் 1867 ல் துவக்கப்பட்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பிஏ கணித பிரிவில் சேர்ந்தான். மூத்த சகோதரனுக்கு திருமணம் முடிந்தது. அந்த திருமண வைபவத்திற்கு வந்த ஒரு நிலச் சுவான்தார் இருபது ஏக்கர் மூன்று போக நெல் வயலின் ஏகபோக பிரபு இராமனாதனை தன் பெண்ணிற்கு கேட்டார். அது தை மாதம். அடுத்த சித்திரையில் நடத்தலாம் என சேஷாத்ரி வாக்கு கொடுத்தார். இராமனாதன் அப்போது ஒரு காகிதத்தில் ஸ்ரீஜா என எழுதி அதை எப்போதும் தன் சட்டைப் பையில் வைத்திருந்தான். சட்டை அணியாத போது வேட்டியின் இடுப்பு மடிப்பில் வைத்திருந்தான். இந்த நிலப் பிரபு எங்கிருந்து வந்தான். விசாரித்தான். பல தகவல்கள் கிடைத்தன. வேறு வழியில்லை. கணித ஆசிரியரிடம் சரண் அடைந்தான்

’’நான் உங்க பெண் ஸ்ரீஜாவை கல்யாணம் கழிக்கணும்’’
‘’இராமனாதா நாங்கள் மலையாளிகள். உங்க அச்சன் இதை சம்மதிக்குமா.’’
‘’எனக்கு உங்க சம்மதம் போதும்..’’
‘’இல்ல இராமனாதா நான் நாளை உங்க அச்சன காணும்.’’
அடுத்த நாள் கணித ஆசிரியர் வேலாயுதன் நாயர் காவல் ஆய்வாளர் சேஷாத்ரியை பார்த்து பேசினார். அவர் மகன் தன் மகளை விரும்புவதையும் அவருக்கு சம்மதம் உண்டா எனவும் கேட்டார்.
பண்போடு பதில் பின் வருமாறு வந்தது
’’ஏய் நாயரே நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிஞ்சுதான் பேசுறயா உன் குலம் என்ன உன் உணவு என்ன ’’
’’நாங்கள் திருச்சூர் நாயர் எங்க உணவு மீன். அதுக்கு என்ன’’
’’பின்ன எப்படிடா ஒரு பிராம்மண போலீஸ் கிட்ட சம்பந்தம் பேச வர்ற’’
’’ஏய் ஐயரே நான் நாயர்தான் ஆனா போலிசுக்கு பயந்தவன் இல்ல என் தம்பி கம்யூனிஸ்ட் கட்சி ஜில்லா காரியதரிசி எங்களுக்கு போலிஸ் பயம் கிடையாது, போலீசுக்குதான் எங்க கிட்ட பயம். எதோ பட்டம்மாருக்கு மரியாத தரலாம்னு நினச்சா நீ கேவலமா பேசினா நானும் அப்படித்தான் பேசுவேன் ’’வா குட்டி எங்க வீட்டுக்கு’’ ’’ இராமனாதனை இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றார் வேலாயுதன் நாயர். வீரமாக பேசிய போலீஸ் சேஷாத்ரி அசைவற்று நின்றார்.

இரு நாள் கழித்து பத்து போலீஸ்காரர்கள் வேலாயுதன் வீட்டிற்கு சென்று இராமனாதனை தூக்கினார்கள். வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இராமனாதனை கைகள் பின்புறம் மடித்து ஒரு தூணோடு சேர்த்து கட்டினார்கள் முதலில் பெல்டில் விளாசி அடித்தவர் தந்தை; சும்மாவா சொன்னார்கள் மூத்த சகோதரன் தந்தைக்கு சமம் என, தந்தை களைப்பு அடைந்ததும் அண்ணன் ஜானகிராமன் பெல்ட்டால் இராமனாதனை அடித்தான். எதிரில் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்ட இராமனாதனின் தாயும் தங்கையும் கூவி அழுதனர். ஆனால் இராமனாதன் அழவில்லை, ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. மூன்று நாள் அடி வாங்கினான். தாய் தங்கையை வேறு எதோ ஒரு உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். நான்காம் நாள் தந்தை அவசர போலீஸ் வேலைக்கு சென்று விட்டார். அண்ணன் பிரசவித்த மனைவியை பார்க்க சென்று விட்டான். வேலாயுதன் வந்து அவனை விடுவித்து அழைத்து சென்றார். குடும்பத்தோடு மெட்ராஸ் சென்றார். இராமனாதன் எம் ஏ கணிதம் முடித்தான். அரசு வேலையில் சேர்ந்தான். இறுதியாக நீலகிரி மாவட்ட கலெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

’’என்ன மூனு நாள் கட்டி வச்சி அடிச்சாங்க எல்லாம் என் காதலி ஸ்ரீஜா வுக்காக பொறுத்துக்கிடேன்’’
அவர் கண்களில் அருவியாக நீர் வந்தது.
’’அந்த நாள் காதலி இந்த நாள் மனைவி.’’ சகாதேவன் சொன்னான்
இராமனாதன் நீர் வழிந்த கண்ணங்கள் சிரித்தன.
’’இப்படியே சிரிச்சீட்டு இருங்க அச்சா, அழ வேண்டாம்’’
’’நான் அழுறது எனக்கு கிடச்ச அடிக்காக இல்ல, என் அப்பா பக்கவாதம் வந்து பல வருடம் கை விளங்காம இறந்தார். என் அண்ணன் அத்த மகள கட்டி பெத்த ஒரே மகன் பிறவி ஊமை. என் அம்மா தங்கை இருக்குற இடம் எனக்கு தேரியாது. நான் பிறந்த குடும்பம் சிதறி போயிடுச்சு அத நினச்சா எனக்கு அழுகை வருது.’’.
’’ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *