Subscribe

Thamizhbooks ad

சிறுகதை : அடக்கம் – தங்கேஸ்

அத்தை உயிரோடிருக்கும் போதே அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு விட்டு செத்துப் போய்விட்டாள் .
நாங்கள் பிறந்த கோடியோடு இழவு வீட்டுக்குள் நுழைந்த போதே சனங்கள் ஆங்காங்கே கூரைத் திண்ணைக்கடியில் திட்டு திட்டாக உட்கார்ந்து ஆவலாதி சொல்லி கொண்டிருந்தார்கள்.
ஊரின் கடைசித் ;தெருவே அத்தையின் வீடிருக்கும் இந்த தெருதான். . நான் கடைசியாக இங்கு வந்து போன இத்தனை வருடங்களில் இந்தத் தெரு ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை. ஆங்காங்கே இரண்டு மூன்று காரை வீடுகள் மட்டும் புதிதாக எட்டிப்பார்த்திருந்தன.

பிறந்த கோடி சேலை நல்ல விலை உயர்ந்ததாகவும் மரியாதை தரக்கூடிய உருப்படியாகவும் இருக்க வேண்டுமென்று நான் என் மனைவியிடம் பல முறை சொல்லி சொல்லி கடைசியாக இரண்டு மூன்று கடைகள் தேடிப்பிடித்து தான் இந்தப் புடவையை நாங்கள் எடுத்து வந்தோம்.
அப்பாவின் உடன் பிறந்த நான்கு சகோதர சகோதரிகளிலும் அவர் மீது அதிகப் பாசம் வைத்திருந்தது இந்த சின்ன அத்தை மட்டும் தான். அப்பாவிற்கு நேர் மூத்தவள் இந்த அத்தை . தன்னை தூக்கி வளர்த்ததே தனது சின்ன அக்கா தான் என்று அப்பா அடிக்கடி எங்களிடம் சொல்லியிருக்கிறார். .
அவருக்கு உடம்புக்கு முடியாமல் போன கால கட்டத்தில் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் ஒரு சிறிய தூக்குவாளிப் பாத்திரத்தில் அத்தை அவருக்குப் பிடித்த ஏதாவது ஒரு பலகாரத்தை செய்து கொண்டு வந்து இரகசியமாக அவரை சாப்பிட வைத்து விட்டுத் தான் செல்வாள். பேச்சு பேச்சாக இருந்தாலும் அந்தப் பலகாரங்களை எல்லாம் எங்கள் கண்ணில் கூட காட்டமாட்டாள்.

அப்பா இறந்த அன்று துக்கத்தை ஆற்ற முடியாமல் அவள் அழுத அழுகையை இந்த ஊர் கூடி தடுத்தும் நிறுத்த முடியவில்லை. உறவு கூடி தடுத்தும் நிறுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட அத்தையின் மரணத்தோடு அப்பா வழி உறவு முடிந்து விட்டது என்பதை நினைப்பதே எங்களுக்கெல்லாம் பெரிய துக்கமாக இருந்தது . அத்தையை தெற்கு வடக்காக ஐஸ் பெட்டியில் கிடத்தி வைத்திருந்தார்கள். அவள் தலைக்கும் மேலே அப்பாவின் அந்தக்கால மிடுக்கான புகைப்படம் தொங்கிக்கொண்டிருந்தது.
நாங்கள் உள்ளே நுழைந்ததும் அழுகைச்சத்தம் சற்று உயர்ந்து அடங்கியது. ஐஸ் பெட்டிக்குள் இருந்த உருவத்தைப் பார்த்ததும் அப்படியே திகைத்து விட்டேன். அப்பாவைப் போலவே நல்ல ஓங்கு தாங்காக இருந்தவள் தான் இந்த அத்தை. இப்போது தேகம் மெலிந்து ஒடுங்கிய பல்லி போல கிடந்தாள். நான்கு பிள்ளைகள் இருந்தும் கடைசி காலத்தில் அவளை யாரும் பாசமாக வைத்துப் பார்த்துக்கொள்ளவில்லை என்பதைத்தான் ஊரெல்லாம் பேசியது..

‘’ அக்காவுக்கு பிறந்ததுல ஒன்னு கூட உருப்படியில்ல. நாலு பயல்களும் குடிகாரப்பயகளா போய்ட்டானுங்க. இரண்டு பொம்பளைப் புள்ளைகளும் அக்காகிட்ட இருந்த நகை நட்டு எல்லாத்தையும் பறிச்சிகிட்டு அக்காவை தனி மரமா விட்டுட்டு போயிட்டாளுக ‘’ என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்
வெளியே வாசலுக்கு வந்த போது சாமியானாவுக்கு கீழே போடப்பட்டிருந்த சேர்களில் சனங்கள் உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டிருந்தார்கள். அத்தையின் கணவர் வயதான மாமா ஒரு மூலையில் கையில் ஊன்று கோலுடன் தலை குனிந்தபடியே அமர்ந்திருந்தார். நாங்கள் போய் துட்டி விசாரித்த போது மாமாவுக்கு எங்களை சுத்தமாக ஞாபகமில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.தெரு நாட்டாமை தாசு மாமா தான் அங்கே ஓடியாடி ஆட்களை வேலை ஏவிக்கொண்டிருந்தார். இடை இடையே ரொம்ப சடைவான குரலில் அத்தையை திட்டிக்கொண்டுமிருந்தார்.

‘’ இந்த தெருவுக்குன்னு இருக்கிற கையகல குறுக்கத்தில மாசம் ஒன்னு விழுந்தா அதுக்குள்ள எத்தனையை கொண்டு போய் தான் அதற்குள் புதைக்கிறது ?
மாமா தண்ணி போட்டு விட்டு சொன்னது எல்லோருடைய காதிலும் விழுந்தது . ஆனால் யாரும் பதில் பேசவில்லை.
பேசுவதற்கு தான் என்ன இருக்கிறதென்று எல்லோரும் நினைத்திருப்பார்கள். .’’ இன்னைக்கு நேத்தா இந்தப் பிரச்சினை இருக்கு ? இந்த ஆளுகளுக்கு சுடுகாடு இடுகாடு எல்லாமே இருக்கிற அந்த கையகல நிலம் தான். காலம் காலமா இங்க செத்தவங்களை அதுக்குள்ள தான புதைச்சிகிட்டும் எரிச்சுகிட்டும் இருக்காங்க. தவிர என்னைக்காவது எந்தப் பொணத்தையாவது சண்டை சத்தம் இல்லாமத்தேன் அடக்கம் பண்ணியிருக்காங்களா ? அதச் சொல்றதுக்கு நாட்டாமைக்கு இல்லாத உரிமை இங்க யாருக்கு இருக்குது ? .
மாமா அப்பிடி இப்பிடி பேசினாலும் துக்க வீட்டில் அடக்கம் முடிகின்ற வரைக்கும் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர மாட்டார் என்பது அங்கு அனைவருக்குமே தெரியும்.

‘ வாப்பா தாசு வந்து இந்த நாற்காலில கொஞ்ச நேரம் உக்காரு ‘’ என்று அவரை அருகே கூப்பிட்டார் வீடு விழுங்கி பெரியப்பா .ஏன் வீடு விழுங்கி என்று அவருக்கு பெயர் வந்ததென்று கேட்டால் அந்தக்கால ஆட்களெல்லாம் ஒரு புன்னகையோடு. ‘’ இவனுக்கு இவுங்க அப்பன் ஆத்தா வச்ச பேரு கருப்பழகு தான் . ஆனா சின்னப்புள்ளைள நல்லா மண்ண தின்னு பழகிட்டானாம். அதனால மண்சுவர் வச்சு கட்டியிருந்த அவுங்க கூரை வீட்டை எப்ப பார்த்தாலும் போய் நக்கிட்டே இருப்பானாம். அதனால பார்த்தவங்கள்ளாம் அப்பவே வீடு விழுங்கின்னு கூப்பிட்டாங்க. பின்னால அதே நிலைச்சுப் போச்சு ‘’ என்று சொல்வார்கள்
‘ நம்ம உக்காந்தா சோலி கெட்டுப் போயிரும்போய் கிழவியை நல்லபடியா அனுப்பி விட்டுட்டுத் தான் அடுத்த வேலையைப் பார்க்கனும் ‘’ என்று சொல்லிய படி சற்று நேரம் ஆசுவாசமாக வந்து உட்கார்ந்தார் தாசு மாமா.
பிறகு‘ கிழவி மாசிப்பச்சியும் அதுவுமா இப்பிடி போய் சேர்ந்திருச்சு வருசத்துல இன்னைக்கு ஒரு நாள் தான எல்லாரும் குல தெய்வம் கோயிலுக்குப் போவாங்க .அங்கேயும் போக முடியலேன்னதும் சனம் பூராம் பொலம்பிகிட்டு இருக்கு ‘’ என்றார் .

‘’ ஏண்டா அதுக்காக எமன்கிட்ட பெர்மிசன் கேட்டு மக்கா நாளா சாக முடியும் ?’’ என்று கேட்டு விட்டு பெரிதாக சிரித்தார் வீடு விழுங்கி பெரியப்பா.
‘’ அதுக்கில்லைப்பா பொழைக்கும் போது தான் அரைப் பொழைப்பும் கொரைப் பொழைப்புமா இருக்குது நம்ம பொழைப்பு . மனுசங்க சாகுற போதாவது முழுசா சாகவேண்டாமா ? ‘’ என்று கேட்டார் மாமா
” முழுசா சாகிறதுக்கெல்லாம் நம்மள மாதிரி .எளிய சாதியில் பொறக்க ‘ கூடாது . தாசு ”
” குறிப்பா நம்மாளுகளா பொறக்க கூடாதுன்னு சொல்றியா ?”
“ஏழையா கூட பொறக்கலாம் தாசு ஆனா எளிய சாதில பொறக்க கூடாது”
அதற்குள் அத்தையின் மகன் வயிற்றுப் பேரன்களும் மகள் வயிற்றுப் பேரன்களும் அங்கே கூடிவிட்டார்கள். ஒருவன் தவறாமல் ஏறத்தாழ எல்லாப் பயல்களுமே முழு போதையில் தான் இருந்தார்கள் அத்தையின் .மகபுள்ள பேரன் மட்டும் பாட்டி மேலிருந்த பாசத்தில் சோகம் தாளாது ஏதேதோ உளறிக் கொண்டிருந்தான்.
” தாசு தாத்தா பாட்டிகிட்ட நான் ஒரு தடவை ‘’ பாட்டி செத்தா உன்னை அங்கே கல்லறை தோட்டத்துக்கு எடுத்துட்டுப் போயி நல்ல பெட்டியில வச்சு அடக்கம் பண்ணுவாங்க பாட்டி நீ வேண்ணா வேதத்துக்கு மாறிக்கிறியா அப்டின்னே கேட்டுப்போட்டேன்”

“அதுக்கு கிழவி என்னடா சொன்னா ?” என்று கேட்டார் தாசு மாமா”
‘’ அடிக்க வந்துட்டா தெரியுமா ? ஏன்டா பொசை கெட்ட பயலே கருப்பசாமி கூடயே கிளித்தட்டு ஆடுனவடா இந்தக் கிழவி .வெந்தாலும் இந்தக் கட்டை இங்க தான் வேகனும் புதைச்சாலும் இந்தக் கட்டையை இங்க தான் புதைக்கனும்னு ‘’ அப்டின்னு உறுதியா சொல்லிப்புட்டா .
‘’ தெரியும்டா கெழவி கடுசானவள்ள. அவள் அப்பிடித்தான சொல்லுவா ‘ என்று சொன்னார்கள் சுற்றிலும் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
‘’ கிழவி ஆசைப்பட்டபடியே பொதைச்சிருவோம் அதான் ஆளுக எல்லாம் வந்துட்டாகள்ள ‘?
ஆளுக வந்துட்டாகப்பா ஆனா குழி ரெடியாக வேண்டாமா ‘’ ?
’ ஏன் மாமா இன்னும் குழி ரெடியாகலயா ?’’ என்று நான் கேட்டேன்
காலையிலேயே ஆள் அனுப்பியாச்சு மாப்பிள்ளை , ஆனா எந்த இடத்துல குழி தோண்டுறது. ? தோண்டுறதுக்குத் தான் இடமேயில்லையே
‘ஏன் மாமா ?
‘’ எல்லாம் பச்சைக் குழியா இருக்கு மாப்பிள்ளை . இருக்குற இத்தினி கூண்டு இடத்துக்குள்ள மாசம் ஒண்ணு விழுந்தா எங்க கொண்டு போயித்தான் நாம புதைக்கிறது ?‘’
ஏன் மாமா போன மாசமே சுடுகாட்டை விரிவாக்கம் பண்ணித்தரனும்னு நீங்க போராட்டமெல்லாம் பண்ணீங்கள்ள ?

போராட்டம் பண்ணோம் மாப்பிள்ளை நம்ம தெரு மொத்தமும் மெயின் முக்கு ரோட்டுல போய் உக்காந்துருச்சு ..ஒத்த வண்டி அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போகலையே .அப்படியே அதது சட்டடிக்க நின்னு போச்சு . .பிறகு யார் யாரோ ஆர்டிஓ, தாசில்தார், வி ஏ ஓ ன்னு பெரிய பெரிய ஆபிசர்கள்லாம் வந்து பேச்சு வார்த்தை நடத்துனாங்க. .
அப்புறம் என்னாச்சு ?
‘’ ஐயா செத்தவங்களைப் பொதைக்குறதுக்கு எங்க சனங்களுக்க இடமில்லை. இன்னைக்கு நேத்துன்னு இல்லை ஒரு நூறு வருசத்துக்கும் மேலேயே இங்க இந்தப் பிரச்சினை. தான் ‘’ அப்டின்னு சொன்னோம்
அப்புறம் என்னாச்சு ?
‘’ அதாவது எங்க தாத்தன் பூட்டன் காலத்துலயிருந்தே ஓடை மேல கிடக்குற ஒரு கையகலக் குறுக்கத்துல தான் ஒருத்தர் மேல ஒருத்தரை புதைக்குறோம். முதல்ல எங்க தாத்தன் பூட்டன் காலத்துலயில்லாம் காடு என்னமோ பெரிசாத்தான் இருந்திருக்கு. ஆனா போகப் போக பக்கத்துல இருக்குற பிச்சைக்காரங்க இந்த இடத்தையும் ஆக்ரமிச்சுகிட்டு இது எங்க இடமின்னு சண்டைக்கு வராங்க. ஒவ்வொரு எழவும் பெரிய சண்டையில தான் முடியுது . ‘’ அப்டின்னோம்
அப்பிடியே சொன்னீங்களா மாமா ?

‘’ ஆமா பெறகென்ன பொய்யா சொல்றேன். அது மட்டுமில்ல அதே மாதிரி பொணத்தை தூக்கிட்டுப் போற பாதையும் பொம்பளைங்க ஒதுங்கிற ஓடையா இருக்கு .அந்த ஓடைக்காட்டுக்குள்ள கால் வைக்க முடியாது. .வண்டியில வச்சு தள்ளிகிட்டும் போக முடியாது. .பாடை கட்டி தூக்கி கிட்டுத்தான் போறோம் அதுக்கும் ஒரு வழி பண்ணுங்க இல்லேன்னா இங்கயிருந்து செத்தாலும் நகரமாட்டோம்னு கண்டிசனா உட்கார்ந்துட்டோம்’’
‘’ பிறகு என்ன நடந்துச்சு ?’’
‘’ பெறகென்ன நடந்துச்சு ,பெரிய பெரிய டிவி காரங்கள்ளால் வந்து படமெடுத்தாங்க .அதிகாரிகள்ளாம் உடனே கூடிப் கூடிப் பேசி இப்போதைக்கு பொணத்தை தூக்கிட்டுப் போறதுக்கு பாதையை உடனடியா ரெடி பண்ணித்தாரோம் . வச்சுக்கோங்க ..கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு நல்ல விஸ்தாரமான இடத்தைப் பார்த்து பத்திரம் முடிச்சு வைக்கிறோம் அப்டின்னு வாக்கு குடுத்துட்டு கூட்டமெல்லாம் கலைஞ்சு போன பின்னாடி தான் போனாங்க . .ஆனா அதுக்கடுத்து இன்ன தேதி வரைக்கும் யாரும் இந்தப் பக்கம் எட்டிப் கூட பார்க்கலை ‘’
‘’ தாசு செத்த கிழவி அந்தக் கூட்டத்துல என்ன சொல்லுச்சுன்னு அவர்கிட்ட நீ சொல்லலையே ‘’ என்று வீடு விழுங்கி பெரியப்பாக எடுத்துக்கொடுத்தார்.’’
ஆமா ஆமா அதை மாப்பிள்ளைகிட்ட சொல்றதுக்கு மறந்துட்டேன்ல என்றபடி தாசு மாமா தொடர்ந்தார்
‘’ .ரொம்பத் தைரியமான கிழவி மாப்ளை உங்க அத்தை ஒரு டிவிக்காரன் உங்க அத்தைகிட்ட மைக்கை கொண்டாந்து நீட்டிகிட்டு இந்த ஊர் பொம்பளைங்க சார்பா இதப் பத்தி நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டான். கிழவி என்ன சொன்னா தெரியுமா ‘’?

‘’ என்ன சொல்லுச்சு மாமா ‘’
‘’ என்ன சொல்லுச்சா போதும் போதும்கற அளவுக்கு சொல்லிப்புடுச்சு மாப்பிள்ளை ‘
‘’ ஏன்யா என்னமோ சாதனை பண்ணிட்டோம்னு எந்த ஆட்சி வந்தாலும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீங்க ? எங்களை மாதிரி எத்தனை எளிய சனங்க இந்தப்பக்கம் இப்பிடி பொணத்தை தூக்கி கிட்டு பொதைக்க வழியில்லாம சுத்தி சுத்தி வாராங்க தெரியுமா உங்களுக்கு ? அவங்களுக்கு நிம்மதியா சாக ஒரு சுடுகாட்டையாவது குடுக்க முடிஞ்சுச்சா உங்களால ? அய்யய்யோ
அப்டியா கேட்டுச்சு ?
‘’ அட ஆமா மாப்பிள்ளை அதோடயா விட்டுச்சு’’
‘’ அய்யா குடி நீர் தொட்டில மலம் கலக்கினவனை இன்னும் உங்களால கண்டுபிடிச்சு தண்டிக்க முடியல , .சாதிய ஒழிக்கறேன்னு சொல்றீங்க ஆனா இரட்டை கிளாசை இன்னும் காலி பண்ண முடியலை .எங்களை மாதிரி ஏழை பாழைகளுக்கு வாழத்தான் வழி பண்ணிக்குடுக்க முடியலை . சரி செத்தவன் சிவனேன்னு போய் சேர்றதுக்காச்சும் வழி பண்ணிக்குடுக்க முடியுதா உங்களுக்கு ? அதுக்கு முதல்ல ஒரு வழி பண்ணிக்குடுங்க மத்தத அப்புறம் பேசுவோம் ..’’ அப்டின்னு நறுக்குன்னு கேட்டுப்புடுச்சில்ல
‘’ ரொம்பத்தான் பேசிருக்கு அத்தை ‘’
அந்த டிவிக்காரனே ஏன்டா இந்தப் பொம்பளைகிட்ட மைக்கை குடுத்தோம்னு அதை புடுங்க வந்தான். ஆனா கிழவி சொல்றதை எல்லாம் சொல்லிட்டுத்தான் மைக்கை குடுத்தா
‘’ அய்யா எனக்குன்னு ஒரே ஆசை தான் இருக்கு .என் வயசும் எம்பதை தாண்டிருச்சு .நாங்கள்ளாம் எத்தனையோ நல்லது கெட்டதும் பார்த்துட்டோம்
‘’ நாளைக்கு நானே செத்தன்னாலும் எங்க தெருக்காரப் புள்ளைங்க கிழவி ஏன் போயி சேர்ந்தா ? இன்னொரு சண்டையும் சத்தமும் போட்டு இவளை எப்டி கொண்டுட்டு போயி எப்படி புதைக்கிறதுன்னு புலம்பாம , ஆத்தா போயிட்டாளேன்னு ஒரு சொட்டு கண்ணீர் விட்டு அமைதியாப் கொண்டு போயி அடக்கம் பண்ணணும் அதுக்கு ஒரு வழி பண்ணிக்குடுங்கய்யா மகராசங்களா என்று சொல்லி விட்டு இரண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டா பாருங்க அப்டியே சிலிர்த்துப் போச்சு மாப்பிள்ளை ….
. ‘ஓஹோ ‘’
கிழவிக்கு பேப்பர் வாசிக்க தெரியுமா இல்ல செய்தி பார்க்குறாளா இதெல்லாம் யார் சொல்லிக்குடுத்ததுன்னு ஒரே ஆச்சரியமாப் போச்சு ‘’
அப்டியா ?
‘’ அப்படியே மலைச்சு நின்ன எல்லா மீடியாக்காரனும் உடனே கை தட்டிட்டாய்ங்க அந்தப் பேச்சுக் கூட எல்லா டிவிலயும் வந்துச்சுன்னு சொன்னாங்க ‘’
‘’ பேஸ் புக் யூ டியூப்னு எல்லாக் கழுதையிலயும் வந்துச்சு. ஆனா அடுத்த நாளே எல்லாப்பயலும் மறந்துட்டாங்களே ‘என்றான் .இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அத்தையின் பேரன் ஒருவன்.
வீடு விழுங்கி பெரியப்பா சொன்னார். ‘’ இன்னோரு தடவை குட்டி குருமானோட போய் முக்கு ரோட்டுல உட்கார்ந்தாத்தான் நியாயம் கிடைக்கும்னு நெனைக்கிறேன் ‘
‘’ அப்டித்தான் நம்ம ஊரு இளந்தாரிப்பயல்களும் சொல்றாய்ங்க ‘’
‘’ ஆனா அதையும் ஒன்னு சேர விடாம சில பேரு தடுத்துகிட்டு இருக்காய்ங்களே ‘’
‘’ நீ யார சொல்ற நம்ம ஊரு பிரசிடென்டைதான ?’’
‘’ ஆமா அவன் நம்மை இனத்தவன் , நம்ம சுடுகாட்டுப் பிரச்சினை தீர ஏதாவது வழி பண்ணுவான்னு நினைச்சுத் தான் ஓட்டுப் போட்டு செயிக்க வச்சோம். கடைசில வேற தெருக்காரங்களோட கூட்டு சேர்ந்து கிட்டு கடைசியில அவனே நமக்கு எதிரியா வந்து நிக்கான் என்ன செய்ய ? ‘’

‘’ அது வாஸ்த்தவம் தான் .கிழவி செத்து இவ்வளவு நேரம் ஆகிப்போச்சு இன்னும் துட்டி கேட்டாவது இங்க வந்திருக்கானான்னு பாரு. நாளைக்கு அவன் செத்தாலும் நம்ம சுடுகாட்டுல கொண்டு வந்து தான புதைக்கனும் இல்லை இவன் அவுங்களுக்கு சப்போர்ட்டா இருக்குறதுனால .அவங்களே இவனை தூக்கிட்டுப்போய் அவுங்க சுடுகாட்டுல புதைச்சிருவாய்ங்களா ?’’
அப்போது அங்கே வந்த சில இளவட்டப்பயல்கள் தாசு மாமாவைப்பார்த்து நக்கலாக சிரித்தபடி ‘’’ நாட்டாமைத் தாத்தா கவலையை விடுங்க . இன்னிக்கே இதுக்கு ஒரு வழி பண்ணிருவோம் ‘’ என்று சொல்லி விட்டு நகர்ந்து போனார்கள்.
இதைக் கேட்டதும் தாசு மாமா சட்டென்று எழுந்து நின்று விட்டார். அவர் உடம்பு எதையோ உணர்ந்து கொண்டு பதட்டத்தில் ஆடியது.. ‘’ பாவிப்பயல்களா கிழவியை அவ ஆசைப்பட்டபடி நல்லபடியா அடக்கம் பண்ண விடுங்கடா .. குடியை கெடுத்துப் புடாதீங்கடா சொல்லிட்டேன்‘’ என்றார்
‘’ யாரு குடியை யாரு கெடுக்குறாங்கன்னு பொறுத்திருந்து பாரு ‘’ என்று சொல்லி விட்டு அவர்கள் அனைவரும் சாவுக் கொட்டுக்கு ஆடுவதற்காக சென்று விட்டார்கள். அனைவரும் முழுப்போதையில் இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
தாசு மாமா நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்தவராக நீர் மாலைக்கு ஏற்பாடு பண்ணுவதில் மும்மரமாக இறங்கினார்.
‘’ ஏம்பா இன்னும் மக்கமாரு பேரமாரெல்லாம் வந்து சேரட்டும் என்றார்கள் கூடியிருந்த கிழவிகள்.

‘’ எல்லாம் வந்து சேர்ந்துகிருவாங்க ‘’ மொதல்ல நீர் மாலைக்கு போகட்டும் என்று அவசரப்படுத்தினார்.
நீர் மாலை எடுத்து வருவதற்கே எப்படியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகி விட்டது. ஊர் கிணற்றை ஒட்டியுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பி ஆளாளுக்கு நாலு செம்பு தண்ணீரை ஊற்றி விட்டு மாமன் மச்சினன் முறைப்படி வேட்டி துண்டு போட்டு முறைப்படி உருமா கட்டி ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். அத்தையின் வீட்டுக்காரர் இந்த வயதான மாமாவும் தள்ளாத வயதில் ஒரு கோலை ஊன்றியபடி அந்த கூட்டத்தில் வந்து கொண்டிருந்தார். தலைக்கு மேலே ஒரு புது வெள்ளை வேட்டியை விரித்து பந்தல்போல பிடித்த படி துட்டி வீட்டுக்கு வந்து கூட்டம் வந்து சேர்ந்தது..
நீர் மாலை வீட்டிற்கு முன் வந்தது தான் தாமசம் , தாசு மாமா அத்தையை எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தீவிரமாக செய்ய ஆரம்பித்து விட்டார்.
சொர்க்க ரதம் ஏற்கனவே தயாரக அங்கே வந்து நின்று கொண்டிருந்தது. கிழவியை குளுப்பாட்டி பிறந்த கோடி உடுத்தி கொண்டு வாங்க ‘’ என்று மாமா அங்கேயிருந்த அந்த வீட்டுப் பெண்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தார். அளாளுக்கு அவசர அவசரமாக ஓடினார்கள்.
வாசலில் கொட்டுச்சத்தம் மட்டும் நிற்கவேயில்லை.
கிழவியை குளுப்பாட்டி , புதுக்கோடி உடுத்திவிட்டு சொர்க்க ரதத்தில் வைக்கப்பட்டடிருந்த இரும்பு படுக்கையில் கிடத்திய போது பெண்களின் அழுகைச் சத்தம் ஆளுயர நெல் பயிரை வளைத்து சாய்க்கும் சூறாவளிக்காற்றைப் போல உச்சத்தில் உயர்ந்து எழுந்து அடங்கியது.
அத்தையை சொர்க்க ரதத்தின் ஸ்ட்ரெச்சரின் மேல் கிடத்தினார்கள். ஆளுயர முழு மாலை அத்தையின் மேல் சாத்தப்பட்டு அதற்கும் மேலே ஐஸ் பெட்டியின் மேல் போடப்பட்டிருந்த அத்தனை மாலைகள் போடப்பட்டன. வண்டியின் நாலு பக்கத்திலும் மீதமிருந்த மாலைகளெல்லாம் தொங்கவிடப்பட்டன.

நாலு மகன்களும் உரிய பேரப்பிள்ளைகளும் வண்டியின் மீது ஏறி மூலைக்கொருவராக நின்று கொண்டனர். கொள்ளி குடத்தை சுமந்படி அத்தையின் இரண்டு மகள்களும் வண்டிக்கு பின்புறம் தயாராக இருந்தார்கள்
‘’ வண்டியை எடுப்பா ‘’ என்று தாசு மாமா சத்தம் கொடுத்தார். .டிரைவர் வண்டியை உசுப்பியதும் கார்ப்ரேட்டரில் இருந்து திட்டு திட்டான கருப்பு புகை வெளியேறியது. பிறகு அது உறுமத் தொடங்கி கிளம்பியது..
இப்போது ஓர் அருவி இரைச்சல் எழுந்தது போல அழுகை ஒலி எங்கும் எழுந்து அடங்கியது
சொர்க்க ரதம் படு கேவலமாக பிய்ந்து போன வண்டியாக இருந்தது. .மேடும் பள்ளமும் குண்டும் குழியும் நிறைந்த குறுகிய பாதையில் கட்டை வண்டி போல அது ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தபோது. அதற்கேற்றபடி அத்தையின் உடம்பும் அப்படி இப்படியுமாக அசைந்தபடி சென்று கொண்டிருந்தது .
ஒரு மின் கம்பி மரத்திற்கு அருகில் ரதம் சென்ற போது கம்பத்தில் மோதி விடாமல் இருப்பதற்காக டிரைவர் ஸ்டியரிங்கை வலது புறம் ஒடிக்க சடென்று வலது புறம் இருந்த சிறிய பள்ளத்திற்குள் வலது பக்க பின் சக்கரம் இறங்கி விட்டது. யாவரும் நிலை குலைந்து பொத் பொத்தென்று கீழே விழுக அத்தையை கிடத்தி வைத்திருந்த ஸ்ட்ரெட்சர் படுக்கை பிடிமானமில்லாமல் அப்படியே வலது புறம் சறுக்கி கொண்டு போய் கீழே விழப்போக சுற்றிலும் நின்றவர்கள் அதை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் போதே அத்தையின் உடம்பு அப்படியே புரண்டு போய் சாக்கடைக்குள் விழுந்தது..எல்லாம் கண்மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது.
ஓவென்ற அமைச்சல் உயர்ந்து உயர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது. வேனில் இருந்து குதித்தவர்களைத் தவிர மற்றவர்கள் பொத்து பொத்தென்று சாக்கடைக்குள் விழுந்து கொண்டிருந்தார்கள்.
‘’ பாவிப்பய கெடுத்தானே பாதியிலேயே பொணத்தை ‘’’ என்றபடி கிழவிகள் அங்கலாய்த்துக் கொண்டு வண்டியைச் சுற்றி சுற்றி வந்தார்கள்.
‘’என்னடா வண்டி வச்சிருக்க மசிரு வண்டி ‘’ என்று டிரைவரை யாரோ திட்டிக்கொண்டிருந்தார்கள்.
‘’ இதுக்குத் தேன் பேசாம பாடை கட்டி தூக்கிட்டு போயிரலாம்னு சொன்னது ‘’ என்று யாரோ திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சிலர்அத்தையின் உடலை அலேக்காகத் தூக்கி தனியா வைத்து விட்டு அனைவரும் வாருகாலுக்குளு இறங்கி சக்கரத்தை மீட்டெடுத்து தள்ளி விட்டார்கள். .
அத்தையின் கடைசிப் பேரன் வண்டியில் அத்தையின் பக்கத்தில் உட்கார்ந்து பிணத்தின் மீது கையை வளைத்துப் போட்டு அதை அசைய விடாமல் பிடித்துக்கொண்டான். மற்றவர்களெல்லாம் நடந்து தான் வந்தார்கள்.
கொள்ளிக்குடம் உடைக்கும் தெரு முக்கிற்கு வந்த போது வண்டி ஒரு சுற்று சுற்றி நின்றது. கொள்ளிக்குடத்ததை தலையில் வைத்துக்கொண்டு அத்தையின் மூத்த மகள் ஒரு சுற்று சுற்றி வந்தாள் .அவள் தோளைப் பிடித்துக் கொண்டே அத்தையின் இரண்டாவது மகளும் உடன் வந்தாள்.

சரியாக ஒரு சுற்று சுற்றி அத்தையின் கால் மாட்டிற்கு வந்த போது கோணவாயன் வாய் வளைந்த அரிவாளால் குடத்தின் மையத்தில் ஒரு கொத்து கொத்தி விட்டான். அத்தையின் மகள்கள் இருவரின் மீதும் தண்ணீர் வழிந்து. ஓடியது. . ஒவ்வொரு முறை சுற்றி வரும் போதும் பெண்கள் உயர்ந்த குரலெடுத்து அழுதார்கள். மூன்றாவது சுற்று சுற்றி முடிந்ததும் குடத்தை கொத்திய கையோடு அதை வாங்கி தரையில் வேகமாக விசிறி விட்டான் கோணவாயன்.
கொள்ளிக்குடம் தரையில் விழுந்ததும் சுக்கல் சுக்கலாக சிதறியது. ‘’ பொம்பளைங்க எல்லாம் திரும்பி பார்க்காம போங்க என்று யாரோ உரத்து குரல் கொடுத்தார்கள்-
பெண்கள் எல்லாம் மூக்கை சிந்தி சிந்தி முந்தானையால் துடைத்துக் கொண்டு வீட்டைப்பார்க்க சென்று கொண்டிருந்தார்கள்.வண்டி நிற்காமல் வேகமாக சுடுகாட்டை நோக்கி சென்றது.
அந்த ரோடு பத்துக்கு பத்து அகலம் கூட இருக்காது. வெறும் சரளைக் கற்களை பாவி அதன் மீது செம்மண்ணை கொட்டியிருக்கிறார்கள். ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தது சாலை.
ரோட்டுக்கும் வலப்புறம் தாத்தாப்பூச் செடிகளும் நாயுருவிச் செடிகளுமாக மண்டிக் கிடந்தன. அங்காங்கே பீக்காடு கால் வைக்க முடியவில்லை. அதை ஒட்டி சிறு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது.
மழைக்காலத்தில் அதில் தண்ணீர் ஓடியிருக்க வேண்டும் .இப்போது ஆங்காங்கே நீர் சாக்கடை போலே தேங்கி கிடந்தது. இடது புறம் முழுவதும் இவர்களின் பத்து நூறு வீடுகள் தான் இருந்தன. அதை தாண்டியதும் விவசாயக் காடு வந்துவிட்டது.. கம்பம் புல் போட்டிருந்ததார்கள். .யாரும் உள்ளே நுழைந்து விடாதபடிக்கு . பெரிய பெரிய கல்கால்கள் ஊன்றி இரும்பு கம்பி வலை அடித்திருந்தார்கள். அந்த வயல் பகுதி முழுவதும் வேற்று சமூகத்தார்களுக்கு உரியது என்று உடன் வந்தவர்கள் சொல்லிக் கொண்டார்கள்..

வலது புறம் ஒடும் சிறிய ஓடையும் அதை ஒட்டிய சிறிய மேட்டில் கையகல நிலமும் தான் இவர்களின் சுடுகாட்டு இடம்.
வண்டி ஓடையை தாண்டி போக முடியாது என்பதால். அதற்கும் முன்பாகவே நின்று விட்டது. .இனி இதை இந்த இடத்தில் திருப்பி எடுக்கவும் முடியாது போல் தோன்றியது.. பின்னாடியே ரிவர்ஸில் தான் போவான் போல் தெரிகிறது.
பேரன்மார்களெல்லாம் சேர்ந்து வந்து சட்டென்று அத்தையின் உடலை வண்டியிலிருந்து இறக்கி தலைமாடு கால்மாடாய் தூக்கி கொண்டு சின்ன ஓடையை கடந்து குடு குடுவென்று சிறிய மேட்டுப் புஞ்சைக்கு கொண்டு போனார்கள்.
புஞ்சையின் வரப்பு மேட்டில் ஒரு பெரிய வாகை மரம் கிளை பரப்பி பெரும் போர்ட்சாக வளர்ந்து நின்றது. அதன் இடது கிளைகளின் நிழல் ஓடையில் விழுந்து அசைந்தாடிக்கொண்டிருந்தது. காற்றுக்கு அசைந்து கொண்டிருந்தது- வலது பக்க கிளைகளின் நிழல் புஞ்சையில் ஒரு பருத்த மலைப்பாம்பைப் போல விழுந்து கிடந்தது- நிழல் விழுந்த இடம் ரொம்பவும் சிறிய இடமாகத்தான் இருந்தது.
ஆங்காங்கே எலும்புகளும் மண்டை ஓடுகளும் சிதறி கிடந்தன. குடித்து விட்டு வந்த இரண்டு மூன்று இளவட்டங்கள் எந்த மண்டை ஓடு யார் யாருடையது தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கியிருந்தனர். சுடுகாடு எங்கும் சரளமாக கெட்ட வார்த்தை புளங்கியது.
. எனது பார்வையில் தோராயமாக இது இரண்டு செண்டாவது இருக்குமா என்பது கூட சந்தேகமாக இருந்தது.
அத்தைக்கு வரப்பு மேலே குழி இறக்கியிருந்தார்கள். எப்படியும் ஆறடிக்கு குறையாது. .வெட்டியெடுத்த ஈரக் கரம்பை மண் இரண்டு பக்கமும் குவிக்கப்பட்டிருந்தது.
மொட்டையடிப்பது வாய்கரிசி போடுவது பாலூற்றுவது என சாங்கியமெல்லாம் மரத்தடியிலே நடைபெற்றது.
எதிரேயிருந்த கருவேல மரத்தில் ஊர்க்காரர்கள் கட்டை மொய் வாங்கி கொண்டிருந்தார்கள் . .வெய்யில் தாங்க முடியாதவர்கள் ஆங்காங்கே கருவேல மரத்துக்கு கீழே நின்று கொண்டிருந்தோம். .நிமிர்ந்து தலை உயர்த்தினால் தலையில் கருவேல முள் குத்தியது. கால் வைக்கும் இடம் பார்த்து வைக்கவில்லையென்றால் எங்காவது நரகலில் மிதித்து விடுவோமோ என்று பயமாக வேறு இருந்தது.
சற்று தூரத்தில் முள்காட்டுக்குள் சிறிய பொட்டல் போன்ற இடத்தில் ஒரு கும்பல் உட்கார்ந்து கொண்டு சலம்பியபடியே குடித்துக்கொண்டிருந்தார்க.ள்
‘’ கட்டைமொய் செய்றவங்க வாங்கய்யா ‘’ சின்ன நாட்டாமை மொட்டையாண்டி கூப்பிட்டான் .ஆனால் யாருமே அருகில் போவில்லை
‘’ ஒரு வெண்ணெயும் வரமாட்டேங்குறாய்ங்க மாமா ‘’
‘’ வசூல் பண்றவன் வந்தால்ல கரெக்ட்டா இருக்கும் ‘’

‘’ இங்க பாரு குடுத்தா குடுக்கான் இல்லேன்னா போறான். உன் பாட்டுக்கு ஊர் பணத்துலயிருந்து உரியதை அந்த குடும்பத்துக்கு குடுத்துட்டு கணக்கை எழுதிட்டுப்போ ‘’’ என்றார்கள் அனுபவப்பட்ட நாலைந்து பெரிசுகள்.
‘’ கடைசியா முகம் பார்க்குறவங்க வாய்க்கரிசி போடுறவங்க பாலூத்துறவங்க எல்லாம் வாங்கய்யா வாங்க ‘’ என்று குழி தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த சம்முகம் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஆளாளுக்கு அங்கே போகும் போது கவனமாக நடந்தார்கள். கொஞ்சம் பிசகி இடது பக்கம் விழுந்தால் கீழே ஓடைக்குள் தான் விழ வேண்டும் .. வலது பக்கம் விழுந்தால் பிணத்தின் மீது தான் விழ வேண்டும். இடையில் குழி தோண்டிய மண்ணை போட்டு ஒரு சிறிய பாதையை உருவாக்கியிருந்தார்கள். .அதில் தான் எல்லோரும் கவனமாக நடந்து போனார்கள்.
‘’ வாரவங்க எல்லாம் நல்லா காணிக்கை போட்டுட்டு போங்கய்யா ஆத்தா மனங்குளுந்து ஆசிர்வதிப்பா ‘’ என்றான் சம்முகம். அவ்வளவு போதையிலும் அவன் துண்டில் விழுகிற காசை எடுத்து சேகரம் பண்ணிக் கொண்டிருந்ததை எல்லோரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்கள். .
அத்தையின் மகன்கள் பேரன்கள் உட்பட அத்தனை பேருமே முழுப்போதையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. நான் அருகே சென்ற போது ‘ செருப்பை கழட்டிட்டுப் போ ‘ என்றான் அத்தையின் மூன்றாவது மகன்.
‘’ நான் செருப்பை கழட்டி வைத்து விட்டு பால் கிண்ணத்தைத கையில் வாங்கிய போது மொது மொதுவென்று ஐந்தாறு இளந்தாரிப்பயல்கள் யாரையும் சட்டை பண்ணாமல் உள்ளே நுழைந்தார்கள்.. யாரையும் எதுவும் ஒரு வார்த்தை கேட்கவில்லை.

‘’ டேய் பொணத்தை வீடியோ எடுறா ‘’ என்றான் முதலாவதாக வந்த ஒருவன் . எதிரிலிருந்து இரண்டு பேர் கை பேசி வழியாக பிணத்தையும் சுடுகாட்டையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை இளைஞர்களும் நீல வண்ண டிசர்ட் போட்டிருந்தார்கள். டிசர்ட்டின் முன்பக்கம் அவர்களுடைய அரசியல்கட்சி த்தலைவரின் படம் அச்சிடப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவன் கையை உயர்த்திபடியே கோசம் போட ஆரம்பித்தான். உடன் வந்தவர்களெல்லாம் அதையே திரும்பவும் சொன்னார்கள் ..
‘’ அடங்க மறு
அடங்க மறு
‘’ அத்து மீறு ‘’
அத்து மீறு
‘’ திருப்பி அடி ‘
திருப்பி அடி ‘’’
‘’ ஒன்று சேர்
ஒன்று சேர்
‘ கற்பி’
கற்பி
‘’புரட்சி செய்
புரட்சி செய் ‘’ கோசம் உச்சத்தை தொட்டபோது ஆங்காங்கே கருவேலம் முள் காட்டுக்குள்ளிருந்தும் கம்பபுல் காட்டுக்குள்ளிருந்தும் சில தலைகள் முளைத்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன..
அரசின் மீதும் நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களின் மீதும் கோசம் நீண்டு கொண்டே சென்றது.
‘’ வாழ விடு வாழ விடு உயிரோடு வாழ விடு – இல்லை
சாக விடு சாக விடு நிம்மதியாக சாக விடு
சுத்தி சுத்தி கருவேலங்காடு – எங்களுக்கு
புதைக்க இல்லையே சுடுகாடு .
ஆக்ரமிப்பை அகற்று ஆக்ரமிப்பை அகற்று ‘
கோசம் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ பறந்து வந்த கரம்பை கட்டி ஒன்று அத்தையின் தலை மாட்டில் விழுந்து.
அடுத்தடுத்து அதே போல இரண்டு கற்கள் வந்து சுற்றிலும் வந்து விழுந்தன.
‘’ எவன்டா அது முள்ளுகாட்டுக்குள்ள ஒளிஞ்சிருந்து கல் எறியிற ஆம்பளை ? தைரியமிருந்தா உத்திக்கு உத்தி நேர்ல வாங்கடா ‘ என்று சில இளைஞர்கள் இங்கிருந்து கல் வந்த திசையை நோக்கி கோபமாக குரல் கொடுத்தார்கள்.

இதற்குள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் செல்போனை அந்தப்பக்கம் திருப்பி அதையும் வீடியோ எடுக்க ஆரம்பித்தார்கள்.‘’
அராஜகம் ஒழிக ! அராஜகம் ஒழிக ! சாதி வெறி ஒழிக ! சாதி வெறி ஒழிக ‘’ என்று உரத்துக் கத்தினார்கள்.
இப்போது சற்று பெரிய பெரிய கற்கள் பறந்து வந்து சடசடவென்று அருகில் விழுந்தன. சற்றும் எதிர்பாராமல் அதில் ஒரு கல் வந்து தாசு மாமா நெஞ்சின் மேல் மடாரென்று விழுந்தது.
அவ்வளவு தான் தாசு மாமா நெஞ்சைப் பிடித்தபடி அப்டியே உட்கார்ந்து விட்டார் ‘’ சிறுக்கி புள்ளைகளா இதுக்குத்தாண்டா கிழவியை நல்லபடியா அடக்கம் பண்ற வரைக்கும் சும்மா இருங்கடான்னு தலையில அடிச்சு சொன்னேன் கேட்டீங்களாடா என்ற படியே ‘’’ என்று நெஞ்சில் கை வைத்து அப்படியே உட்கார்ந்து விட்டார்..
அதற்குள் ஒரு பெரிய கல் எங்கிருந்தோ பறந்து வந்து அத்தையின் நெஞ்சின் மீது விழுந்தது ..கல் விழுந்த அதிர்ச்சியில் பிணம் ஒரு முறை ஆடி அடங்கியது. .’அவ்வளவு தான் அங்கேயிருந்தவர்கள் அனைவரும் கொந்தளித்து விட்டார்கள். ஆளாளுக்கு கையில் கிடைத்த கட்டை, கல் , கொள்ளிகுடம் உடைக்க வைத்திருந்த அரிவாள். தரிசுக் காட்டில் விழுந்து கிடந்த காலி மதுப்புட்டிகள் என எடுத்துக்கொண்டு கற்கள் வந்த திசையை நோக்கி வேகமாக கிளம்பி போனார்கள். அந்த இடமே குய்யோ முறையோ என்று ஒரே கூச்சலும் அமைச்சலுமாக இருந்தது. கற்களும் ஆயுதங்களும் , சாதியின் பேரைச் சொல்லி திட்டும் கெட்ட வார்த்தைகளும் இரண்டு பக்கமும் பறந்து கொண்டிருந்தன.. என்ன நடந்து கொண்டிருக்கிறதென்றே யாருக்கும் நிதானம் தெரியவில்லை.
பொடிப்பயல்களும் வயதான பெருசுகளும் பாதுகாப்பாக ஒண்டிக்கொள்வதற்கு கூட ஒரு இடமுமில்லாமல் குய்யோ முறையோ என்று சத்தம் எழுப்பிய படியே அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு சனம் கூட பக்கத்தில் இல்லாமல் , அத்தையின் பிணம் மட்டும் புதைகுழி மேட்டில் தனியாக கிடந்தது..

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here