அநாதைச் சிறுவனும், அரக்கர்களும்
முன்னொரு காலத்தில், கனடா நாட்டில், சிவப்பிந்திய குடியிருப்பு ஒன்றில் அநாதைச் சிறுவன் ஒருவன் அவனுடைய தாய்மாமனுடன் வசித்து வந்தான். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த அவன் வேறு புகலிடமின்றி தாய்மாமன் வீட்டிற்கு வந்தான்.
மாமன் கொடுமையே வடிவானவன். அந்தச் சிறுவனை எப்படியாவது தொலைத்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். மிருகங்களை வேட்டையாடுவது முதற் கொண்டு, பெரியவர்கள் செய்ய வேண்டிய வேலையை சிறுவனை செய்யச் சொல்லி ஏவுவான். நன்றாக வேலை செய்தாலும், ஏதேனும் குற்றம் சொல்லி அடிப்பான். அப்படிச் செய்தால் சிறுவன் தானே வீட்டை விட்டு ஓடி விடுவான் என்பது அவனது எண்ணம். பாவம், அந்த சிறுவன். வேறு உறவினர்கள் இல்லை. காட்டுப் பக்கம் செல்லலாம் என்றால் கொடிய மிருகங்கள் பயம். விதியை நொந்தவாறு மாமனுடன் வசித்து வந்தான்.
அந்தக் குடியிருப்பைத் தாண்டி நதிக்கரையில் மற்றுமொரு சிவப்பிந்தியக் குடியிருப்பு இருந்தது. அந்தக் குடியிருப்பின் தலைவன் கொடூர மனம் படைத்தவன். தன்னைத் தானே உயர்வாகப் பேசுபவர்களைக் கண்டால் அவனுக்குப் பிடிக்காது. அவர்கள் சொல்வதை நிரூபிக்கச் சொல்வான். அவர்களால் முடியவில்லை என்றால் கொன்று விடுவான். அந்தத் தலைவனைப் பற்றிக் கேள்விப்பட்ட மாமன், சிறுவனைப் பற்றிப் பொய் சொல்லி அந்தத் தலைவனிடம் மாட்டி விட முடிவு செய்தான். அதற்கேற்ற நல்ல சமயத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.
நதிக்கரையோரம் இருந்த குகையொன்றில் மூன்று அரக்கர்கள் வந்து தங்கினர். வயலில் விளைந்திருந்த தானியங்கள், காய்,கறி மற்றும் பழ வகைகளை பறித்துச் சாப்பிடுவதும், ஆற்றங்கரையோரம் விளையாட வரும் சிறுவர்களையும், வழிப்போக்கர்களையும் கடத்திச் சென்று உணவாக்கிக் கொள்வதும் என்று அந்த கிராமத்தை பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.
தலைவர் அனுப்பிய வீரர்களையெல்லாம் அந்த அரக்கர்கள் கொன்று தின்று விட்டார்கள். தலைவனுக்கு திருமண வயதில் ஒரு அழகிய மகள் இருந்தாள். அந்த மூன்று அரக்கர்களை யார் கொல்கிறார்களோ அவனுக்கு என்னுடைய மகளை மணம் முடித்து வைப்பேன் என்று தலைவன் அறிவித்தான். மகளின் அழகில் மயங்கி, இளைஞர்கள் யாரேனும் அரக்கர்களைக் கொல்ல முன் வருவார்கள் என்பது அவனுடைய நம்பிக்கை.
சிறுவனைத் தன்னிடமிருந்து கழட்டிவிட இதுதான் தக்க சமயம் என்று நினைத்த மாமன், சிறுவனைக் கூட்டிக் கொண்டு தலைவனைப் பார்க்கச் சென்றான். ‘இந்தச் சிறுவன் என்னுடைய சகோதரியின் மகன். அரக்கர்களைத் தன்னால் கொல்ல முடியும் என்று ஊர் முழுவதும் சொல்லித் திரிகிறான்” என்று தலைவனிடம் கூறினான்.
“இந்தச் சிறுவனாவது அரக்கர்களைக் கொல்வதாவது” என்று அலட்சியமாகப் பார்த்தத் தலைவன் சிறுவனைப் பார்த்துச் சொன்னான். “நீ சொல்வது போல அந்த அரக்கர்களைக் கொன்று விட்டால், நான் வாக்கு கொடுத்தபடி என்னுடைய மகளை உனக்கு மணம் செய்து கொடுப்பேன். ஆனால் அரக்கர்களைக் கொல்லாமல் நீ பயந்து ஒடி வந்தால் நானே உன்னைக் கொன்று விடுவேன். எனக்கு தற்பெருமை, தற்புகழ்ச்சி பேசித் திரிபவர்களைப் பிடிக்காது.”
வேறுவழியின்றி அரக்கர்கள் இருந்த குகை நோக்கிச் சென்றான் சிறுவன். ஆற்றங்கரையில் அமர்ந்து தன்னுடைய நிலையை நினைத்து அழுது கொண்டிருந்தான். அவன் நிலையறிந்து பரிதாபப்பட்ட அந்த ஆற்றின் தேவதை ஒரு வயதான பெண் உருவத்தில் அவனிடம் வந்தாள். “நீ யார், எதற்கு அழுது கொண்டிருக்கிறாய்” என்று கேட்டாள்.
“நான், ஒரு அநாதை. குகையில் வசிக்கும் அரக்கர்களைக் கொல்லச் சொல்லி கட்டளையிட்டு என்னை அனுப்பியிருக்கிறார்கள். அரக்கர்களைக் கொல்லும் பலம் எனக்கில்லை. அந்த அரக்கர்கள் என்னைக் கொன்று தின்று விடுவது உறுதி. அரக்கர்களிடமிருந்து நான் தப்பித்துச் சென்றாலும், சொன்னதைச் செய்யவில்லை என்று தலைவன் என்னைக் கொன்று விடுவான். எப்படியும் எனது இறப்பு உறுதியாகி விட்டது” என்று சொன்ன சிறுவன் மறுபடியும் அழத் தொடங்கினான்.
சிறுவனை சமாதானப்படுத்திய தேவதை அவனுக்கு மூன்று சிறிய வெள்ளைக் கற்கள், ஒரு நீண்ட பை, சிறிய கத்தி ஆகியவற்றைக் கொடுத்தாள். சிறுவனுக்குத் தைரியம் கொடுத்த தேவதை அந்தப் பொருட்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று அவனுக்கு எடுத்துச் சொன்னாள். அதன் பின்பு அந்த தேவதை மேகத்தில் மறைந்து விட்டாள்.
சிறிது நேரம் தூங்கிய சிறுவன், இரவு வருவதற்காகக் காத்திருந்தான். நிலா வெளிச்சம் வந்தவுடன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரக்கர்கள் தங்கியிருந்த குகையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
குகையில் அரக்கர்கள் மூவரும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போட்ட குறட்டைச் சத்தம் மிக பயங்கரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
வயதான பெண்மணி சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டான் சிறுவன். பெண்மணி கொடுத்த அந்தப் பெரிய பையை தன்னுடைய மேல் சட்டையின் கீழ் பையின் அகன்ற வாய் முகவாய் கட்டையின் அருகிலிருக்கும்படி கட்டி வைத்துக் கொண்டான். பின்னர் மூன்று வெள்ளைக் கல்லில் ஒன்றைக் கையில் எடுத்தான். கையில் எடுத்தவுடன் அந்தக்கல் பெரிதாகவும், கனமானதாகவுமாக மாறியது. தூங்கிக் கொண்டிருந்த அரக்கர்களில் மிகப் பெரியவனுடைய தலையைக் குறிபார்த்து அந்தக் கல்லை எறிந்தான். அந்தக் கல் அரக்கனின் தலையில் மிகுந்த வேகத்துடன் மோதியது.
பெரிய கல் விழுந்த அதிர்ச்சியிலும், வலியிலும் விழித்துக் கொண்ட அரக்கன், அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவனுடைய தம்பியை எழுப்பி, “நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏன் என் தலையில் அடித்தாய்” என்று மிகுந்த கோபத்துடன் கேட்டான். “நான் எங்கே உன்னை அடித்தேன்” என்றான் தம்பி. “இங்கு வேறு யார் இருக்கிறார்கள். நீ தான் என்னை அடித்தாய். இப்படி மறுபடியும் செய்தால் உன்னைக் கொன்று விடுவேன்” என்று கூறிவிட்டு உறங்கச் சென்றான். இரண்டு அரக்கர்களும் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லும் வரை காத்திருந்தான் சிறுவன்.
அரக்கர்களின் குறட்டைச் சத்தம் பெரியதாகக் கேட்க ஆரம்பித்தவுடன், அந்தச் சிறுவன் இரண்டாவது கல்லைக் கையிலெடுத்தான். முன்பு போலவே, அந்தக் கல்லும் பெரியதாகவும், கனமானதாகவும் மாறியது. அதிக வேகத்துடன் அந்தக் கல்லை பெரிய அரக்கனின் தலையை நோக்கி வீசினான். மிகுந்த வலியுடன் எழுந்த அரக்கன், கோபத்துடன், தன்னுடைய அருகிலிருந்த கோடரியை எடுத்து தம்பியை ஒரே வெட்டில் கொன்று விட்டு உறங்கச் சென்றான்.
அரக்கன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, சிறுவன், மூன்றாவது கல்லை எடுத்தான். அந்தக் கல் பெரிதானவுடன் மறுபடியும் பெரிய அரக்கனின் தலை மீது எரிந்தான். “என்னுடைய தம்பிகள் என்னைக் கொல்லச் சதி செய்கிறார்கள்” என்று கூறிக் கொண்டே, கோடரியை எடுத்து இரண்டாவது தம்பியையும் கொன்றான். அரக்கன் உறங்கியவுடன் சிறுவன் அந்த மூன்று கற்களையும் தேடி எடுத்துக் கொண்டான். அந்த மாயக் கற்கள் இப்போது பழைய அளவிற்குத் திரும்பி விட்டன. பின்னர் ஆற்றங்கரையில் மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டான்.
காலையில் அந்த அரக்கன் தண்ணீர் எடுக்க ஆற்றிற்கு வந்தான். அப்போது அந்தச் சிறுவன் மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். “யார் நீ, ஏன் அழுகிறாய்” என்று கேட்டான் அரக்கன். “நான் வழி தவறி வந்து விட்டேன். என் பெற்றோர்கள் என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். உங்களைப் பார்த்தால் நல்லவர் போலத் தெரிகிறது. என்னை வேலைக்கு வைத்துக் கொண்டால் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என்றான் சிறுவன்.
அரக்கனுக்கு சிறுவர்களை உணவாக்கிக் கொள்வது பிடிக்கும். ஆனால் சிறுவன் புகழ்ந்து பேசினதால் அவனுக்கு சிறுவனைப் பிடித்து விட்டது. “நமக்கோ இப்போது யாருமில்லை. இந்தச் சிறுவனை நம்முடைய வேலைக்காரனாக வைத்துக் கொள்ளலாம்” என்று முடிவு செய்து, சிறுவனை குகைக்கு கூட்டிச் சென்றான். “நான் இப்போது காட்டிற்குப் போகிறேன். எனக்கு நல்ல இரவு விருந்து சமைத்து வை. நான் மிகுந்த பசியுடன் வருவேன்.” என்று கட்டளையிட்டு விட்டுச் சென்றான்.
சிறுவன் ஒரு பெரிய பானையில் மான் கறி சமைத்து வைத்தான். காட்டிலிருந்து வந்த அரக்கனுக்கு, ஒரு பெரிய பானை நிறைய அவனுக்குப் பிடித்த மாமிசக் கறியைப் பார்த்தவுடன் மகிழ்ச்சி பொங்கியது. சிறுவனும், அரக்கனும் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். சிறுவன் சொன்னான். “நாம் இருவருமாக இந்த மான் கறி முழுவதும் இன்றே தின்று முடிக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பானையில் நாளைக் காலை சிற்றுண்டி சமைக்க முடியும்.”
மாமிசம் மிகவும் சூடாக இருந்தது. வாயில் போட்டுக் கொண்டால் நாக்கு எரிய ஆரம்பித்தது. அதனால் அரக்கன் மாமிசத்தை ஊதி ஊதிச் சாப்பிட ஆரம்பித்தான். சிறுவன் மாமிசத்தைச் சாப்பிடுவது போல வாயருகே கொண்டு சென்று, அவன் சட்டைக்குள் இருந்த பைக்குள் நிரப்பிக் கொண்டான்.
சிறுவன் அரக்கனைப் பார்த்துச் சொன்னான். “மாமிசத்தை சூடாகச் சாப்பிட வேண்டும். எங்கள் ஊரில் உன்னைப் போல யாரும் ஊதிச் சாப்பிட மாட்டார்கள்” என்று கேலி செய்தான். குகையில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், அரக்கனுக்கு சிறுவன் மாமிசத்தை வாயில் போட்டுக் கொள்ளாமல் பையில் நிரப்பிக் கொள்வது தெரியவில்லை. சிறுவனை விட சளைத்தவன் என்று காட்டிக் கொள்ள விரும்பாத அரக்கன், வேறு வழியின்றி மாமிசத்தைச் சூடாகச் சாப்பிட ஆரம்பித்தான். அவனுடைய தொண்டை சூட்டினால் பற்றி எரிவது போல இருந்தது.
பாத்திரத்திலிருந்த உணவு பாதி உண்டவுடன் அரக்கன் “எனது வயிறு நிரம்பி விட்டது. எனக்குப் போதும்” என்றான். “உனக்கு என்னுடைய சமையல் பிடிக்கவில்லையா என்ன? உன்னை விட நானே அதிகமாக சாப்பிடுகிறேன்” என்றான் சிறுவன். வேறு வழியில்லாமல் அரக்கன் சிறுவனுடன் சேர்ந்து பாத்திரத்தில் மீதியிருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தான். அரக்கன் மிகுந்த கஷ்டத்துடன் வயிற்றை நிரப்பிக் கொள்ள, சிறுவன் அவனுடைய பங்கை பையில் நிரப்பிக் கொண்டான். பை நிரம்பியதால், சிறுவனுடைய வயிறு பெரியதாகத் தெரிந்தது.
அரக்கனால் உடலை அசைக்க முடியவில்லை. “நான் நிறையவே சாப்பிட்டு விட்டேன். என்னுடைய வயிறு மிகவும் வலிக்கிறது” என்றான். சிறுவன் சொன்னான். “எனக்கு வயிற்று வலி ஒன்றுமில்லை. ஆனால் எங்கள் ஊரில் வயிற்று வலி போவதற்கு ஒரு வழி வைத்திருக்கிறோம். அதனால் வலி நின்று விடும்” என்றான்.
“அந்த வழி என்ன? எனக்குச் சொல்லு” என்றான் அரக்கன்.
“நான் செய்தே காண்பிக்கிறேன்” என்று சொன்ன சிறுவன், முதிய பெண்மணி கொடுத்த கத்தியை எடுத்து அவனுடைய வயிற்றில் குத்திக் கொண்டான். அப்போது சிறுவன் வயிற்றிலிருந்த பையிலிருந்த மாமிசம் வெளியேறி அவனுடைய வயிறு பழைய நிலைக்குத் திரும்பியது.
“கத்தியால் வயிற்றில் குத்தினால், வலிக்காதா?” என்று கேட்டான் அரக்கன்.
“வலிக்காது. இப்படிச் செய்வதால் வயிற்றிலிருக்கும் உணவு வெளியேறி வயிற்று வலி நின்று விடும்” என்றான் சிறுவன்.
“எனக்குத் தொண்டையும் வலிக்கிறது” என்றான் அரக்கன்.
“நான் சொன்னபடி செய்தால் உன்னுடைய வலியெல்லாம் நின்று விடும்” என்றான் சிருவன்.
கத்தியினால் வயிற்றில் குத்திக் கொள்ளத் தயங்கினான் அரக்கன். கத்தியால் குத்திக் கொண்டும் சிறுவன் வலியெதுவும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தான். நேரம் செல்லச் செல்ல அரக்கனின் வயிற்று வலியும் அதிகமாகியது. அவனிடமிருந்த நீண்ட வாளையெடுத்து வயிற்றில் குத்திக் கொண்டான். “நன்றாகக் குத்திக் கொள். அப்போதுதான் வலி முழுவதும் குறையும்” என்றான் சிறுவன். அரக்கன் கத்தியை ஆழமாக வயிற்றில் குத்திக் கொள்ள உடனே இறந்து விட்டான்.
கிராமத்திற்குத் திரும்பிய சிறுவன் தலைவனிடம் மூன்று அரக்கர்களையும் கொன்று விட்டதாகக் கூறினான். தலைவனால் நம்ப முடியவில்லை. வீரர்களை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். வீரர்கள் மூன்று அரக்கர்களும் இறந்து கிடப்பதாகத் தெரிவித்தார்கள்.
தலைவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி . சிறுவனுக்கு அவனுடைய மகளைத் திருமணம் செய்து கொடுத்து நிறைய வெகுமதிகளையும் கொடுத்தான். எனக்குப் பின்னால் இந்தக் குடியிருப்பிற்கு சிறுவன் தலைவனாவான் என்று அறிவித்தான்.
கதைஆசிரியர்
கே.என்.சுவாமிநாதன், சென்னை
98410 94270
[email protected]