sirukathai: arputhamana isaikalaignar- k.n.swaminathan சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் - கே.என்.சுவாமிநாதன்
sirukathai: arputhamana isaikalaignar- k.n.swaminathan சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் – கே.என்.சுவாமிநாதன்

முன்னொரு காலத்தில் ஜெர்மனி நாட்டில் வால்டர் என்ற அற்புதமான வயலின் வித்வான் இருந்தார். ஒரு நாள் கையில் வயலினுடன் காட்டுப் பாதை வழியே, நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தார். “தனிமையில் காட்டில் நடக்கும் போது, நேரம் செல்வது கடினமாக உள்ளது. இந்தத் தனிமையைப் போக்க ஒரு நல்ல துணை கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று நினைத்தபடி வயலின் இசைக்க ஆரம்பித்தார்.

வயலின் இசையைக் கேட்டவுடன் ஓநாய் ஒன்று ஓடி வந்தது. “நான் இது போன்ற துணையைக் கேட்கவில்லை” என்று சொல்லிக் கொண்டார் வால்டர்.

“உங்கள் வயிலின் இசை நன்றாக இருக்கிறது. எனக்கு கற்றுத் தர முடியுமா?” என்று கேட்டது ஓநாய்.

“என்னால் கற்றுத் தர முடியும். ஆனால், நீ நான் சொல்வதைக் கேட்க வேண்டும்” என்றார் வால்டர்.

இருவரும் காட்டு வழியே நடந்து செல்லும் போது வழியில் ஒரு கருவேல மரத்தைப் பார்த்தார் வால்டர். அந்தக் கருவேல மரத்தின் தண்டுப் பகுதியின் நடுவில் விரிசல் இருந்தது. இதுதான் சரியான வழி என்று முடிவு செய்த வால்டர் ஓநாயிடம் அதனுடைய முன் பாதங்கள் இரண்டையும் தூக்கி அந்த வெடிப்பில் நிறுத்தச் சொன்னார். பாவம் ஓநாய், வயலின் கற்றுக் கொள்ளும் ஆசையில் வால்டர் சொன்னபடி செய்தது. வெகு வேகமாக அருகிலிருந்த கல்லை எடுத்த வால்டர் அந்த வெடிப்பில் கல்லைச் செருகினார். ஓநாயின் முன் பாதங்கள் இரண்டும் வெளியில் எடுக்க முடியாமல் அந்த வெடிப்பில் மாட்டிக் கொண்டது. “நான் திரும்பி வரும் வரை, இங்கேயே இரு” என்று சொல்லி விட்டு, தன்னுடைய நடையைத் தொடர்ந்தார் வால்டர்.

சிறிது தூரம் சென்றதும், தனக்குள் சொல்லிக் கொண்டார். “தனிமையில் காட்டில் நடக்கும் போது, நேரம் செல்வது கடினமாக உள்ளது. இந்தத் தனிமையைப் போக்க ஒரு நல்ல துணை கிடைத்தால் நன்றாக இருக்கும்” வயலினை வாசித்தபடி நடந்தார் வால்டர்.

வயலின் இசையைக் கேட்டு ஒரு நரி ஓடி வந்தது. நான் தேடும் துணை இதுவல்லவே என்று நொந்து கொண்டார் வால்டர். “உங்கள் வயலின் வாசிப்பு மிக நன்றாக இருக்கிறது. எனக்கும் வாசிக்கக் கற்றுக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டது நரி.

“நான் சொல்கின்றபடி நீ செய்வதானால், உனக்கு வயலின் கற்றுத் தருகிறேன்” என்றார் வால்டர். அதற்கு ஒப்புக் கொண்ட நரி அவருடன் கூடவே நடக்க ஆரம்பித்தது.

அவர்கள் சில தூரம் சென்றவுடன் காட்டில், மரங்கள் அடர்த்தியாக இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். இரண்டு பக்கமும், அடர்த்தியான உயர்ந்த மரங்கள். வலது பக்க மரத்திலிருந்து தொங்கிய பழுப்பு நிறக் கொம்பை எடுத்துத் தரையில் நிறுத்தி ஒரு காலால் அதை கீழே அழுத்தி வைத்துக் கொண்டார். பின்னர், இடது புறத்திலிருந்த மரத்தின் கிளையை எடுத்துக் கொண்டார்.

“வயலின் கற்றுக் கொள்ளும் ஆசையிருந்தால் உன்னுடைய இடது பாதத்தைக் கொடு” என்றார் நரியிடம். நரி இடது பாதத்தைத் தூக்கிக் காண்பிக்க அதைக் கிளையில் நன்றாக இறுக்கிக் கட்டினார். பின்னர், நரியின் வலது பாதத்தை, வலப் புறத்திலிருந்த எடுத்த கொம்பில் அழுத்தமாகக் கட்டி விட்டு, கொம்பை பிடித்திருந்த தன்னுடைய வலது காலை எடுத்தார். வால்டர் காலை எடுத்தவுடன் கொம்பு மேலே எழும்பி, நரி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

“நான் வரும் வரை இப்படியே இரு” என்று சொல்லிப் பயணத்தைத் தொடர்ந்தார் வால்டர்.

சிறிது தூரம் சென்றதும், தனக்குள் சொல்லிக் கொண்டார். “தனிமையில் காட்டில் நடக்கும் போது, நேரம் செல்வது கடினமாக உள்ளது. இந்தத் தனிமையைப் போக்க ஒரு நல்ல துணை கிடைத்தால் நன்றாக இருக்கும்” வயலினை வாசித்தபடி நடந்தார் வால்டர்.

வால்டரின் இனிமையான வயலின் ஓசை கேட்டு ஒரு சிறிய முயல் ஓடி வந்தது. நான் விரும்பித் தேடும் துணை இதுவல்லவே என்று சொல்லிக் கொண்டார் வால்டர்.

“நீங்கள் மிகவும் நன்றாக வாசிக்கிறீர்கள். எனக்கும் வயலின் கற்றுத் தர முடியுமா?” என்று கேட்டது முயல்

:கற்றுத் தரலாம். ஆனால், நான் சொல்வது போல நீ செய்ய வேண்டுமே” என்றார் வால்டர்.

முயல் அதற்கு சம்மதம் சொல்ல, இருவரும் காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு பெரிய மரத்தைப் பார்த்தார் வால்டர். ஒரு பெரிய கயிற்றினை எடுத்து, அதனுடைய ஒரு முனையை முயலின் கழுத்தில் இறுகக் கட்டினார். கயிற்றின் மறு முனையை மரத்தில் கட்டி விட்டார். முயலிடம் “நீ இந்த மரத்தைச் சுற்றி, இருபது முறை ஓட வேண்டும்” என்றார். வால்டர் சொன்னபடி முயல் இருபது முறை, மரத்தைச் சுற்றி ஓடி நன்றாக தன்னை மரத்துடன் சேர்த்துப் பிணைத்துக் கொண்டது. தன்னை விடுவிக்க என்ன முயற்சி செய்தாலும் கயிறு முயலின் கழுத்தை மேலும் இறுக்கியது அதனால் கயிறிலிருந்து மீள முடியவில்லை. “நான் வரும் வரை இப்படியே இரு” என்று சொல்லி பயணத்தைத் தொடர்ந்தார் வால்டர்.

இதற்கிடையில் வயலின் வாசித்து வந்தவன் தன்னை ஏமாற்றி கட்டிப் போட்டு விட்டான் என்பதைப் புரிந்து கொண்டது ஓநாய். மரத்தின் தண்டுப் பகுதியின் வெடிப்பில் சிறை வைக்கப்பட்ட ஓநாய் தன்னுடைய முன் பாதங்களை விடுவித்துக் கொள்ளப் போராடியது. வயலின் கற்றுத் தருவதாகக் கூறி தன்னை வெடிப்பில் சிக்க வைத்த மனிதன் மேல் கோபம் வந்தது. வெகு நேரம் போராடிய ஓநாய், சிறிது சிறிதாக கால்களை நகர்த்தி, மரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. தன்னை ஏமாற்றிய மனிதனைக் கடித்துக் குதற வேண்டும் என்று வெறியுடன் மனிதனைத் தேடி ஓடி வந்தது.

ஓநாய் வருவதைப் பார்த்த நரி அதனைக் கூப்பிட்டு, “வயலின் வாசித்துக் கொண்டு வந்த இளைஞன் என்னை ஏமாற்றி, கயற்றில் கட்டி தொங்க விட்டு விட்டான். என்னைக் காப்பாற்று.” என்று கேட்டது. நரியை மேலிருந்து இறக்கி, இருவரும் வால்டரைத் தேடி வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தார்கள். வழியில் மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த சிறிய முயலையும் விடுவித்து, மிகுந்த கோபத்துடன் மூன்று மிருகங்களும் வால்டரைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தனர். வால்டர் காட்டிலிருந்து வெளியேறுவதற்குள் பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்

சிறிது தூரம் நடந்த வால்டர், தனக்குள் சொல்லிக் கொண்டார். “தனிமையில் காட்டில் நடக்கும் போது, நேரம் செல்வது கடினமாக உள்ளது. இந்தத் தனிமையைப் போக்க ஒரு நல்ல துணை கிடைத்தால் எத்தனை நன்றாக இருக்கும்” வயலினை வாசித்தபடி நடந்தார் வால்டர்.

வயலினின் இனிமையான நாதம் கோடாரியால் மரத்தை வெட்டிக் கொண்டிருந்த மனிதன் செவியில் விழுந்தது. தன்னுடைய வேலையை நிறுத்தி விட்டு இசை வந்த திசையை நோக்கிக் கையில் கோடாரியிடன் ஓடி வந்தான் அந்த மனிதன். மனிதனைப் பார்த்ததும், “விலங்கின் துணை இல்லாமல் நான் விரும்பிய நல்ல மனிதத் துணை கிடைத்து விட்டது” என்று மனம் மகிழ்ந்த வால்டர், மேலும் வயலினில் வாசிக்க ஆரம்பித்தார்.

வயலின் இசையைக் கேட்டவுடன் அந்த மனிதனைக் கண்டு பிடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில், அவன் மீது பாய்ந்து அவனைக் குதற வேண்டும் என்ற வெறியில் ஓநாய், நரி, முயல் வேகமாக ஓடி வந்தன. அவை வந்த வேகத்தில், அவற்றின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட வேடுவன் கையில் கோடரியுடன் வால்டரின் முன்னால் அவனை மறைத்துக் கொள்வதைப் போல நின்றான்.

கையில் கோடரியுடன் வேடுவனைப் பார்த்த விலங்குகள், உயிர் பிழைத்தால் போதும் என்று வேகமாக ஓடி அடர்ந்த காட்டுக்குள் புகுந்து கொண்டன. தன்னைக் காப்பாற்றிய வேடுவனுக்கு நன்றி சொல்லும் விதமாக சிறிது நேரம் வயலின் வாசித்து விட்டு நகரத்திற்குச் செல்லும் வழியில் சென்றார் வால்டர்.

(ஜெர்மனியின் நாட்டுப்புறக் கதை)

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *