sirukathai: arupaththi ainthu kilo velli - raman mullippallam சிறுகதை: அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி - இராமன் முள்ளிப்பள்ளம்
sirukathai: arupaththi ainthu kilo velli - raman mullippallam சிறுகதை: அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி - இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை: அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி – இராமன் முள்ளிப்பள்ளம்

முதல் மருமகளும் மூன்றாம் மருமகளும் தனியாக கலந்து பேசினர்

முதலில் மூத்தவள் பேசினாள்.

‘’மாமியார் நமக்கு தெரியாமா பெரிசா பண்ணியிருக்காங்க.’’

’’புரியல்லயே’’

’’நம்ம ரெண்டு பேருக்கும் மத்தியிலே இருக்காளே சாதி மறுப்பு புரட்சி மருமகள் அவளுக்கு மாமியார் பெரிசா ஏதோ கொடுத்துருக்காங்க.’’

’’எப்படி சொல்ற என்ன கொடுத்தாங்க.’’

’’அது தெரியல. ஆனா அவர் புதிர் போட்டு சொல்றாங்க.’’

’’இன்னும் எனக்கு புரியல்ல.’’

’’எனக்கும் கண்டு பிடிக்க முடியல்ல.’’ மூத்தவள் சொன்னாள்

’’மாமியாரையே நேரடியா கேட்கலாமே.’’ இளையவள் சொன்னாள்

திட்டமிட்டு இருவரும் மாமியாருக்கு பிடித்த மோர்க் குழம்பு செய்தனர், அப்பளமும் பொறித்தனர். இருவரும் நின்று மாமியாருக்கு பரிமாறினர். சாராதாம்பாளுக்கு வயது 78. ஆனால் ஆரோக்யமான உடல். கம்பீரமான குரல். மூன்று மருமகள்களை விட உயரம் அதிகம். படிப்பு 1958 ல் ஆங்கில மீடியம் எட்டாம் வகுப்பு. ஆங்கிலம் , தமிழ் தவிர்த்து மேலும் மூன்று மொழிகள் தெரிந்தவர். நான் முழுதாய் படித்திருந்தால் மாவட்ட கலெக்டர் ஆகியிருப்பேன் என அடிக்கடி அறிவித்து ஆனந்தப்படுபவர். கணவர் காலமான பிறகு மூன்று மகன்களையும் நன்கு படிக்க வைத்து நல்ல வாழ்க்கையில் அமர்த்தியவர். இரண்டாம் மகனுக்கு சாதி மறுப்பு மணம் செய்து சொள்ள அனுமதி கொடுத்தவர். இப்போது பிரச்னை அந்த இரண்டாம் மருமகளே. .

ஒரு நாள் கலெக்டர் பதவியை தவறவிட்ட மாமியார் இரண்டாம் மருமகள் தேவிகாவை கேட்டார், ‘’ நீ கோதண்டன கேட்டு ஏதும் நகை பட்டு புடவை வாங்கிக்கிறது இல்லையா ?’’

’’எனக்கு கிடைச்ச வெள்ளியே போதும்.’’

’’என்ன வெள்ளியா ! ‘’

’’ஆமா அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி.’’

படிப்பு கடவுளின் பெயரானா சாராதாவின் பெயர் கொண்ட மாமியாருக்கு உடனே புரியவில்லை ஆனால் அடுத்த நாள் நீண்ட யோசனைக்கு பின் புரிந்தது.மனதினுள் சிரித்துக் கொண்டார். வேறு ஏதோ பேச்சு வருகையில் முதல் மருமகளிடம் இதைத்தான் புதிராக போட்டு வைத்தார், ‘’ நடு மருமகள் தேவிகாவுக்கு அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி கிடைச்சதாம் அதுவே போதுமாம்.’’

இதைக்கேட்ட மூத்த மருமகள் காயத்ரிக்கு அன்றிலிருந்து பிடித்தது சந்தேகப் பேய். சொல்லிக் கொள்ளும்படி வருமானம் இல்லாத இரண்டாம் மகனின் மனைவிக்கு எப்படி அந்த மாதிரி கிடைக்கும்.

அதையே ஓரகத்தி மைத்ரேயி உடன் பகிர்ந்து அவளுக்கும் சிறிது பேய் அடித்து பார்த்தாள். அவளுக்கு உண்மை அறிய ஆவல் வர இப்போது சூடான மோர்க் குழம்பும் சுட்ட அப்பளமும் சாராதம்பாளுக்கு சுவைக்க கிடைத்தது.

மெதுவாய் மேலும் மோர்க்குழம்பு ஊற்றி மாமியாரை உரசி நின்று மூத்தவள் கேட்டாள், ‘’ தேவிகாவுக்கு அறுபத்தி ஐந்து வெள்ளி எப்படி கிடச்சது அத்தே.’’

எப்போதும் போல சாரதாம்பாளுக்கு உடனே புரியவில்லை. ஆனால் ஐந்து நிமிடம் கழித்து பதில் சொன்னார் !

’’அதுதான் எனக்கும் விளங்கல்ல ஆனா அவகிட்ட அவ்வளவு வெள்ளி இருக்கு, எப்படி கிடச்சதன்னு தெரியல்ல.’’

காயத்ரியும் மைத்ரேயியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

காயத்ரி கணவர் ராமகோபால் வழக்கறிஞர். கொலை வழக்கு மட்டும் எடுக்க கூடியவர். எந்த கொலை நடந்தாலும் காவலர் இவரைக் கேட்டுத்தான் எஃப் ஐ ஆர் போடுவார்கள். எப்படி எழுதினால் காவலருக்கும், வழக்கறிஞருக்கும் ஆதாயம் என தெரிந்து அப்படி எழுத சொல்வார் காயத்ரி கணவன் ராமகோபால். கொலை செய்தவனும் நானே கொலை செய்யப்பட்டவனும் நானே எனச் சொல்வது கீதை. கொலை செய்யப்பட்டவன் பண்ம் தர முடியாது ஆனால் கொலை செய்தவன் ஏராளம் பணம் தன் நிலம் நீச்சு விற்று தர முடியும் என சொல்பவர் மூத்த வழக்கறிஞர். ராம கோபால்.

மைத்ரேயி கணவர் ராமமோகன் சார்பதிவாளர். இவர் கிம்பள ஆதாயம் குறித்து விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பட்ட மூத்த உடன் பிறப்பும் கடை உடன் பிறப்பும் ஈட்ட முடியாத வெள்ளியை எப்படி நடுவில் இருந்த ராமமூர்த்தி சம்பாதிக்க முடிந்தது. அண்ணன் வழியில் வழக்கறிஞர் ஆன ராமமூர்த்தி எடுத்த வழக்குகள், மனித உரிமை மீறல், தேசத் துரோகம், வேலை இழந்த தோழிலாளர் வழக்குக்கள். பல தருணங்களில் பொது நலன் கருதியும் வழக்குகள் பதிவு செய்துள்ளார். இவர் நீதிமன்றம் சென்றால் நீதிபதிகளுக்கு முதுகில் தீ வைத்த உணர்வு வரும் ராமமூர்த்தி வருமானம் பெருமைப் படும் அளவு கிடையாது.

காயத்ரி, மைத்ரேயி மனதினுள் புழுங்கும் பொறாமைக்கு முடிவுகட்ட சாரதாம்பாள் ஒரு முடிவு எடுத்து அதை அறிவிக்கவும் செய்தார். காயத்ரி, தேவிகா, மைத்ரேயி அனைவரும் அதை கேட்டுக் கொண்டனர். அது என்னவெனில் அடுத்த ஞாயிறு அன்று மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமை மூன்று மருமகள்களுக்கும் தரப்பட்டது. இதில் அப்படி என்ன சிறப்பு எனில் அந்த கூட்டு சாப்பாட்டில் பதிமூன்று பேர் இருப்பார்கள். மூன்று உடன் பிறப்புக்களின் தலா இரு குழந்தைகள், மூன்று மனைவிகள் , மூன்று கணவர்கள், ஆளும் தாய் சாரதாம்பாள் ஆக மொத்தம் பதிமூன்று பேர். எண் 13 அவ்வளவு நன்றாக இல்லைதான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் வந்தது. இது சிலப்பதிகார மங்கல வாழ்த்து பாடல் இல்லை. அதே வரிகள். ஆனால் எதிர் பார்க்கப்பட்ட ஞாயிறு. சாராதாம்பாள் வீட்டில் வந்தது. அனைவரும் நீள் வட்ட மேஜையில் அமர முதலில் இனிப்பு பரிமாறப்பட்டது.

சாரதாம்பாள் முதல் மருமகள் காயத்ரியை கேட்டார்

‘’காயத்ரி உன் வீட்டுக்காரர் உனக்கு கல்யாணத்துக்கு அப்புறமா எவ்வளவு பவுன் நகை வாங்கியிருப்பார்.?’’

காயத்ரி கணவரை பார்த்தார் அவர் கூறினார்,’’ சொல்லு காயத்ரி சொல்லு உண்மைய சொல்ல பயப்படாதே அம்மா அந்த நகையெல்லாம் வாங்கிக்க மாட்டாங்க.’’

’’தலை தாழ்ந்து மெல்லிய குரலில் காயத்ரி கூறினார், ’’நூறு பவுன்’’

அடுத்து

சாரதாம்பாள் மூன்றாம் மருமகள் மைத்ரேயியை கேட்டார்

‘’மைத்ரேயி உன் வீட்டுக்காரர் உனக்கு கல்யாணத்துக்கு அப்புறமா எவ்வளவு பவுன் நகை வாங்கியிருப்பார்.?’’

மைத்ரேயி கணவரை பார்த்தார் அவர் கூறினார்,’’ சொல்லு மைத்ரேயி சொல்லு உண்மைய சொல்ல பயப்படாதே அம்மா அந்த நகையெல்லாம் வாங்கிக்க மாட்டாங்க.’’

’’தலை தலை தாழ்ந்து மெல்லிய குரலில் மைத்ரேயி கூறினார், ’’நூற்றி ஐம்பது பவுன்’’

அடுத்து

சாரதாம்பாள் தேவிகாவை பார்த்து கேட்டார், உன் கணவர் எவ்வளவு தங்க நகை வாங்கி கொடுத்தார் ?

’’அத்தே நான் இரண்டாவது மருமகள் என்னை மூனாவதா கேக்குறீங்க பரவாயில்ல நான் அன்னைக்கே சொன்னேன் எனக்கு கிடைச்சது அறுபத்தி ஐந்து கிலோ வெள்ளி.’’

ராமமூர்த்தி குறுக்கிட்டு மனைவியை பார்த்து பெரும் குரலில் கூறினார், ‘’ தேவிகா பொய் சொல்லாதே.’’

‘’ நான் உங்க எடையை சொன்னேங்க.’’

காயத்ரியும் மைத்ரேயியும் ஒருவரை ஒருவர் பார்த்த பார்வையில் இருந்த அதிர்ச்சியை யாரும் விவரிக்க முடியாது.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *