sirukathai: aththippazham - k.n.swaminathan சிறுகதை: அத்திப்பழம் - கே.என்.சுவாமிநாதன்
sirukathai: aththippazham - k.n.swaminathan சிறுகதை: அத்திப்பழம் - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: அத்திப்பழம் – கே.என்.சுவாமிநாதன்

ஒரு அறிவாளியும், முட்டாளும் போட்டியிட்டால், யார் வெல்வார்கள். சந்தேகமில்லாமல் அறிவாளி வெல்வான் என்று நினைப்போம். ஆனால், எல்லோராலும் முட்டாள் என்று அழைக்கப்பட்டாலும், அந்த முட்டாள் அறிவாளி என்று கொண்டாடப்படும் தன்னுடைய அண்ணனைத் தோற்கடித்து, செல்வந்தனின் மகளைக் கரம் பிடித்த கதை.

பல நூறு வருடங்களுக்கு முன்னால் போர்ச்சுகல் நாட்டில் சோஃபியா என்ற இளம் பெண் தந்தையுடன் வசித்து வந்தாள். அவளுடைய தந்தை பெருத்த செல்வந்தர். அந்த வருடம் குளிர் காலம் மிகவும் கடுமையாக இருந்தது. பனிப் பொழிவும் அதிகம். அதீத குளிரினால் நோய் வாய்ப்பட்டாள் சோஃபியா. மருத்துவர்கள் கொடுத்த மூலிகை மருந்துகள் உட் கொண்டும் நோயின் கடுமை குறையவில்லை. சோஃபியாவிற்கு அத்திப் பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதைச் சாப்பிட்டால் தன்னுடைய உடல் நோய் நீங்கி விடும் என்று தோன்றியது அவளுக்கு.

சோஃபியா தன்னுடைய ஆசையைத் தந்தையிடம் தெரிவித்தாள். மகளின் ஆசையை நிறைவேற்ற ஆசைப்பட்டார் அவள் தந்தை. ஆனால், குளிர் காலத்தில், பனி பெய்யும் தருணத்தில் அத்தி மரத்திற்கு எங்கு போவது? அத்திப் பழம் கிடைப்பது எப்படி? அவர் எங்கு தேடியும், அத்திப் பழம் கிடைக்கவில்லை. நண்பர்களைக் கலந்து ஆலோசித்த செல்வந்தர், “அத்திப்பழம் கொண்டு வருகின்ற கல்யாண வயதிலுள்ள இளைஞனுக்குத் தன்னுடைய மகளை மணமுடித்து வைப்பதாகவும், இளைஞர் இல்லாமல் முதியவர் அத்திப்பழம் கொண்டு வந்தால் அவருக்குத் தகுந்த வெகுமதிகள் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

செல்வந்தரின் அறிவிப்பு நாடு முழுவதும் பரவியது. அத்திப்பழம் கொடுத்துப் பணக்கார வாழ்க்கைத் துணைவியை அடையலாம் என்பதால் இளைஞர்கள் பலர் அத்திப்பழம் தேடி அலைய ஆரம்பித்தார்கள்.

செல்வந்தர் இருந்த நகரத்திலிருந்து தொலைவில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு பெண் தன்னுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தாள். மூத்தவன் பெயர் ஜோஸ். அதி புத்திசாலி. எதனையும் சீக்கிரம் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவன். அவனுடைய தம்பி கார்லோஸ்.. விரைவில் எதுவும் புரியாது. கிராம மக்கள் அவனை முட்டாள் என்று பட்டம் கட்டினர்.

அந்தப் பெண் வீட்டில் அத்திமரம் இருந்தது. குளிர் காலம் ஆரம்பித்தவுடன், அவர்கள் அத்தி மரத்தை குளிர் அதிகம் தாக்காத வண்ணம் வேறிடத்தில் நட்டு வைத்திருந்தார்கள். அந்த மரத்தின் மீது அதிகமான பனி பொழியாமல் பாதுகாப்பான இடத்தில் இருந்தது. அதனால், அந்தக் குளிர் காலத்திலும், அத்திமரத்தில் பழங்கள் இருந்தன. செல்வந்தரின் அறிவிப்பைக் கேட்ட பக்கத்து வீட்டுப் பெண், அறிவிப்பைக் கூறி, “உன்னுடைய அத்தி மரத்தில் பழங்கள் இருக்கின்றன. “நீ உன் புத்திசாலி மகன் ஜோஸிடம் அத்திப்பழங்கள் கொடுத்து அவனை செல்வந்தரிடம் அனுப்பு. அவனுக்குப் பணக்காரப் பெண் மனைவியாக வந்தால் உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்” என்றாள்.

ஒரு பெரிய கூடையில் அத்திப்பழங்களை நிரப்பி, மூடியிட்டு ஜோஸிடம் கொடுத்தாள் அவன் தாய். “ஞாபகம் வைத்துக் கொள். அத்திப்பழம் தேடி இளைஞர்கள் பலர் அலைகின்றனர். ஆகவே நீ என்ன கொண்டு செல்கிறாய் என்பது எவருக்கும் தெரிய வேண்டாம். புத்திசாலியாக நடந்து கொள்” என்று அறிவுரை செய்தாள்.

தன்னுடைய ஊரிலிருந்து நகரத்திற்கு செல்லும் வழியில் ஜோஸ் ஒரு காட்டை கடக்க வேண்டி வந்தது. காட்டில் பாதி வழி சென்ற போது, அவனுடைய எதிரில் ஒரு இளம் பெண் கையில் குழந்தையுடன் வந்தாள். அந்தப் பெண் அந்த வனத்தைக் காக்கும் வன தேவதை. ஆனால், இதை ஜோஸ் அறியவில்லை.

‘உன்னுடைய கூடையில் என்ன கொண்டு செல்கிறாய்” என்று கேட்டாள் வன தேவதை.

அம்மாவின் அறிவுரை ஜோஸின் ஞாபகத்திற்கு வந்தது. “கொம்புகள் கொண்டு செல்கிறேன்” என்றான் ஜோஸ்.

“ஆமாம், கொம்புகள் கொண்டு செல்கிறாய்” என்று சொல்லிச் சென்றாள் அந்தப் பெண்.

கூடை சற்றே கனமாக இருப்பது போலத் தோன்றியது ஜோஸுக்கு. கூடையுடன் ஜோஸ் செல்வந்தர் வீட்டை அடைந்தான். அத்திப்பழம் கொண்டு வந்திருப்பதாக செல்வந்தரிடம் சொன்னான். “நான் மகளை மணம் செய்து கொடுக்கிறேன் என்று அறிவித்தும் ஒருவரும் அத்திப்பழம் கொண்டு வரவில்லையே” என்று கவலையிலிருந்த செல்வந்தருக்கு ஜோஸைக் கண்டவுடன் மகிழ்ச்சி. “பார்க்க புத்திசாலியாகத் தெரியும் இளைஞன் அத்திப்பழத்துடன் வந்திருக்கிறான்” என்று ஆவலுடன் கூடையைத் திறந்த செல்வந்தர் கூடையில் கொம்புகளைப் பார்த்தவுடன் மிகுந்த கோபம் கொண்டார். “என்னை ஏளனம் செய்கிறாயா” என்று கூறியபடி ஜோஸை நையப் புடைத்து விரட்டி விட்டார்.

“மரத்திலிருக்கும் மீதி அத்திப்பழத்தை எடுத்துக் கொண்டு நான் செல்வந்தர் வீட்டிற்குப் போகிறேன்” என்று அம்மாவிடம் சம்மதம் கேட்டான் கார்லோஸ். “புத்திசாலியான உன்னுடைய அண்ணன் அத்திப்பழம் எடுத்துச் சென்று நல்ல உதை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். உனக்கு என்ன மகளையா மணமுடித்துக் கொடுக்கப் போகிறார். உன்னுடைய இஷ்டம் போல் செய்” என்றாள் அவன் தாயார்.

ஒரு கூடையில் மரத்தில் மீதியிருந்த பழங்களை வைத்துக் கொண்டு செல்வந்தர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றான் கார்லோஸ். காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது, இளம் பெண் கையில் குழந்தையுடன் எதிரில் வந்தாள். “உன் கூடையில் என்ன எடுத்துச் செல்கிறாய்” என்று கேட்டாள். “அத்திப்பழம் எடுத்துச் செல்கிறேன்” என்றான் கார்லோஸ். “ஆமாம், அத்திப்பழம் எடுத்துச் செல்கிறாய்” என்றாள் அந்தப் பெண்.

கூடையை இறக்கி வைத்துத் திறந்தான் கார்லோஸ். கூடை முழுவதும் அத்திப்பழம். பார்க்கவே அப்போதுதான் பறித்தது போல இருந்தது. கூடையிலிருந்து ஒரு அத்திப்பழத்தை எடுத்துக் குழந்தையின் கையில் கொடுத்த கார்லோஸ், “எத்தனை அழகான குழந்தை” என்றான்.

செலவந்தரின் வீட்டை அடைந்த கார்லோஸ், கூடையை செல்வந்தரிடம் கொடுத்தான். கார்லோஸ் தோற்றத்தில் திருப்தியடையாத செல்வந்தர், அசிரத்தையுடன் கூடையை வாங்கிக் கொண்டார். கூடையைத் திறந்தவர்க்கு ஆச்சரியம் காத்திருந்தது. கூடை முழுவதும் அப்போதுதான் பறிக்கப்பட்ட அத்திப்பழங்கள். அந்தப் பழத்தைப் பார்த்து, அதிலிருந்து பழத்தை எடுத்துச் சாப்பிட்டவுடன், சோஃபியாவின் கன்னங்கள் பழைய நிறத்தை அடைந்தன. மந்திரத்தால் ஏற்பட்டது போல அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.

மகள் குணமடைந்ததில் செல்வந்தருக்கு மகிழ்ச்சி. ஆனால், வாக்கு கொடுத்தது போல மகளை கார்லோஸூக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமே. பார்ப்பதற்கு முட்டாள் போல இருக்கும் இவனுக்கு, அழகும், பணமும் உள்ள என் பெண்ணை எப்படிக் கல்யாணம் செய்து கொடுப்பது? என்ன செய்வது? கல்யாணத்தை எப்படி தட்டிக் கழிப்பது? என்று நெருங்கிய நண்பரிடம் ஆலோசனை கேட்டார்.

“நான் சொல்வது போலச் செய். உன்னிடம் உள்ள இரண்டு முயல்களை காட்டில் அவிழ்த்து விட்டு விடு. இரவு முடிவதற்குள் கார்லோஸ், அந்த இரண்டு முயல்களையும் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று சொல். அப்படி, அவனால் அந்த முயல்களைப் பிடித்து வர முடியவில்லை என்றால் அவன் கொல்லப்படுவான். என்று சொல்” என்று அறிவுரை செய்தார் நண்பர்.

நண்பர் சொன்னது போலவே செய்தார் செல்வந்தர். கார்லோஸ் எத்தனை முயற்சி செய்தாலும் அவனால் அந்த முயல்களைப் பிடிக்க முடியவில்லை. கார்லோஸ், முட்டாளாக இருந்தாலும், அடர்ந்த காட்டில் முயல்களைப் பிடிப்பது கடினம் என்று உணர்ந்து கொண்டான். இன்று இறக்கப் போவதும் உறுதி என்று செய்வதறியாது திகைத்து நின்றான்.

அந்த சமயம், இளம் பெண் வடிவத்தில் வன தேவதை அவன் முன்னால் வந்தாள். “ஏன் வருத்தத்தில் இருக்கிறாய்” என்று வினவினாள். நடந்த அனைத்தையும் அவளிடம் சொன்ன கார்லோஸ், “இரவுக்குள் முயல்களை செல்வந்தரிடம் சேர்ப்பிக்காவிட்டால் உயிர் போய் விடும்” என்றான்.

ஒரு நாணலை எடுத்த வனதேவதை அதை ஒரு ஊதுகுழலாக மாற்றினாள். “இந்த ஊதுகுழலை வாசித்தால், முயல்கள் உன்னைத் தேடி வரும்” என்றாள்.

கார்லோஸ் ஊதுகுழலில் இனிமையான இசையை வாசிக்க இரண்டு முயல்களும் அவனை நோக்கி ஓடி வந்தன. இனிமையான இசையைக் கேட்டு மிருகங்களும், பறவைகளும் கூட வந்தன.

இரண்டு முயல்களையும் கையில் எடுத்துக் கொண்டு கார்லோஸ் செல்வந்தர் வீட்டிற்குச் செல்லும் வழியில், அவனைக் கொல்வதற்காக செல்வந்தர் அனுப்பிய கொலைகாரர்களைப் பார்த்தான். கையில் முயலுடன் கார்லோஸ் வருவதை அதிசயத்துடன் பார்த்தனர் கொலையாளிகள்.

இனிய இசையை வாசித்துக் கொண்டே கார்லோஸ் வருவதையும், அவன் பின்னால் முயல்கள் வருவதையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் செல்வந்தர். இனிய இசையில் மயங்கிய சோஃபியா, கார்லோஸை மணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தாள்.

சோஃபியா, கார்லோஸ் திருமணம் விமரிசையாக நடை பெற்றது.

(போர்ச்சுகல் நாட்டின் நாட்டுப்புறக் கதை)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *