sirukathai: en jannaloram - p.geetha sundar சிறுகதை: என் ஜன்னலோரம் - பூ. கீதா சுந்தர்
sirukathai: en jannaloram - p.geetha sundar சிறுகதை: என் ஜன்னலோரம் - பூ. கீதா சுந்தர்

சிறுகதை: என் ஜன்னலோரம் – பூ. கீதா சுந்தர்

மறுநாள் பாட்டிக்கு திதி என்பதால் ஊருக்கு போக வேண்டிய சூழல். அலுவலகத்தில் அரை நாள் விடுமுறை சொல்லி விட்டு பஸ் நிலையம் வந்து சேர்ந்தாள் காவ்யா. செஞ்சியிலிருந்து வேலூர் போக வேண்டும். நீண்ட நேரமாகியும் இன்னும் பஸ் வரவில்லை. அரை மணி நேரம் மேல் காத்திருந்த பின் ஒரு பஸ் வந்தது.

பஸ்ஸில் ஏறியதும் கண்கள் ஜன்னல் சீட்டை தேடியது. மூன்று நபர் உட்காரும் சீட்டில் இரண்டு பெண்கள் மட்டும் உட்கார்ந்து இருந்தார்கள். ஜன்னல் பக்கம் மத்தியான வெயில் ‘சுரீர்’ என்று அடித்ததால், அவர்கள் இருவரும் ஜன்னல் பக்க சீட்டில் அமரவில்லை.

தான் அங்கே செல்ல, அவர்களை வழி விடும் படி கேட்டாள் காவ்யா. ஆனால் திடீரென இருவரில் ஒரு பெண்ணுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, வெயில் அடித்தாலும் பரவாயில்லை என்று ஜன்னல் பக்கம் நகர்ந்து உட்கார்ந்துக் கொண்டாள். அடுத்தவள் அவள் பக்கத்தில் இரண்டாவதாக உட்கார்ந்துக் கொண்டாள்.

‘ இவ்வளவு நேரம் காலியாதான இருந்தது.. இப்ப, நம்ம கேட்ட உடனே போய் உட்கார்ந்துட்டாளே..’ என்று மனதுக்குள் எண்ணியவள், சீட்டின் ஓரத்தில் அமராமல் நின்றபடியே, பஸ்ஸில் ஜன்னல் சீட்டுக்கு கண்களை தேட விட்டாள்.

அந்த சீட்டுக்கு பின்னாடியே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மட்டும் சீட்டு ஓரமாக உட்கார்ந்து இருந்தார். ஜன்னல் சீட்டு உட்பட இரண்டு சீட் காலியாக இருந்தது.

” சார், கொஞ்சம் வழி விடுங்க, நான் அந்த பக்கம் போறேன்.. ”

” ஏம்மா, அதான் முன்னாடி லேடீஸ் பக்கத்துல ஒரு சீட்டு காலியா இருக்குல்ல, அங்க உக்கார வேண்டியது தான… ” என்றார்.

” சார், நீங்க நகருங்க, எனக்கு ஜன்னல் பக்கம் வேணும்.. ” என்றாள் காவ்யா.

கொஞ்சமாக இடுப்பை வளைத்து, சாய்த்து, வழி விட்டார். ஆனால் காவ்யாவால் அதில் போக முடியவில்லை.

” சார் கொஞ்சம் எழுந்து தான் வழி விடுங்களேன்.. ” என்றாள்.

அவரும் சலிப்பாக எழுந்து வழி விட்டார். காவ்யா போய் ஜன்னல் பக்கம் உட்கார்ந்துக் கொண்டாள். முகத்தில் ஒரு புன்னகை தானாக வந்தது. ஆனால் அடுத்த நொடியே உணர்ந்தாள், வெயிலின் கடுமையை.

‘ அய்யயோ, அங்கேயே முன்னாடி சீட்டுல உட்கார்ந்து இருக்கலாம் போல இருக்கே, வெயில் இந்த காட்டுக் காட்டுதே .. ‘ என்று எண்ணியவள் ஜன்னல் கண்ணாடியை மூடலாம் என்று இழுத்தாள். ஆனால் அதை இழுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. பின்னாடி உட்கார்ந்து இருந்தவரிடம் சொல்லி கொஞ்சம் மூடச் சொன்னாள். அவரும் தள்ளி விட்டார். ஜன்னல் கண்ணாடி மூடிக் கொண்டது.

‘ அப்பாடா ‘ என்று பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.. ஆனால் கண்ணாடி மீது பட்ட வெயில் அவள் முகத்தில் பட்டு இன்னும் அனத்தியது. காற்றும் வரவில்லை.. மீண்டும் திறக்க முயன்றாள். அது அவ்வளவு சுலபமாக திறந்து விடுமா என்ன? .. மீண்டும் பின்னாடி இருப்பவரை திறந்து விடும்படி கேட்டாள். இந்த முறை அவர் ஒரு மாதிரியாக தான் பார்த்தார். ஆனால் காவ்யா அதை கண்டுக்காதது போலவே உட்கார்ந்துக் கொண்டாள்.

பஸ் கிளம்பி விட்டது. அடுத்தடுத்த பஸ் நிறுத்தத்தில் ஆண்கள் ஏறும் போதெல்லாம் காவ்யாவுக்கு
‘ பக் ‘ கென்று இருந்தது. ஏனெனில் தன் பக்கத்தில் ஓரு சீட்டு காலியாக இருந்தது.. ‘ அதில் வந்து உட்கார்ந்து விட்டால் என்ன செய்வது .. ‘ என்று.

அதே போல் தான் ஓர சீட்டில் உட்கார்ந்து இருந்தவரின் மனநிலையும் இருக்கும் போல,
‘ பெண்கள் யாராவது வந்தால் தன்னை எழுப்பி விடுவார்களோ’ என்று. பஸ்ஸில் ஏறியவர்கள் அந்த இடத்தில் சில நொடிகள் நின்று பார்த்து விட்டு பின்னால் இடம் இருக்க அங்கே போய் விட்டார்கள். யாரும் நடு சீட்டுக்கு இன்னும் வரவில்லை.

காவ்யாவுக்கு லேசாக கண்ணைக் கட்டியது. ஆனால் தூங்க முடியாது பக்கத்தில் வேறு ஒரு ஆண் உட்கார்ந்து இருக்கிறார் என்ற உணர்வு வேறு அவளை தூங்கவிடவில்லை, வெயில் ஒரு புறம் வதக்கி எடுத்தது.

‘ ப்ச், பேசாம அந்த லேடீஸ் பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்கலாம்.. ‘ என்ற எண்ணம் வந்து வந்து போனது. ஒவ்வொரு நிறுத்தம் வரும் போதும் அலர்ட் ஆனாள். ஏனென்றும் தெரியவில்லை.

சேத்பட் வந்ததும் தன் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் இறங்கி விட்டார். ‘ அப்பாடா ‘ என்று இருந்தது காவ்யாவுக்கு, ‘ அவர் ஒன்னும் பண்ணல, ஆனாலும் மனசுல ஏன் இப்படி பதட்டம் வருது..’ என்று தன்னை தானே நொந்துக் கொண்டாள். அப்படியே பக்கத்தில் அல்லது பின்னாடி வேறு இடம் இருக்கிறதா என்று பார்த்தாள்.

அவள் உட்கார்ந்து இருப்பது மூன்று பேர் சீட்டு என்பதால் ஆண்கள் உட்கார்ந்தால் தனக்கும் சங்கடமாக இருக்கும் அவர்களும் உட்கார யோசிப்பார்கள் என்று அவள் இரண்டு பேர் அமரும் சீட்டு இருக்கிறதா என்று எட்டி எட்டி பார்த்தாள். நான்காவது வரிசையில் இரண்டு சீட்டு வரிசை காலியாக இருந்தது. அவள் அங்கே போய் ஜன்னல் பக்கம் அமர்ந்துக் கொண்டாள்… இப்போது தான் வெயிலும் தாழ்ந்து இருந்தது.

செளகரியமாக உட்கார்ந்துக் கொண்டு ஜன்னல் பக்கம் வீடுகளையும், வயல்வெளிகளையும் வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள். லேசான சுகமான காற்று மனதுக்கு இதமாக இருந்தது. அடுத்த ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது. ஆறு, ஏழு இளம் வயது ஆண்கள் ஏறினார்கள்.. கையில் ஆளுக்கொரு துணிப்பை வைத்து இருந்தார்கள். ஆங்காங்கே கிடைத்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் இடம் இல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தான்.

காவ்யா பக்கத்தில் ஒரு சீட் காலியாக தான் இருந்தது. ஆனால் அவன் உட்கார தயங்கியபடியே நின்றுக் கொண்டிருந்தான்.. காவ்யா ஊரை வேடிக்கைப் பார்த்தபடியே வந்தாள். பஸ் ஒவ்வொரு சின்ன ஊரிலும் நின்று நின்று போனது சற்றுக் கடுப்பாக இருந்தாலும் ஜன்னலோர வேடிக்கை அவளுக்கு பிடித்து இருந்தது.

தன் அருகில் ஒருவன் நின்றுக் கொண்டு இருப்பதை பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது.

” உக்காருங்க… ” என்று அவளே சொல்லி விட்டு ஜன்னல் பக்கம் இன்னும் இடுக்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள். அவனும் சிரித்தபடியே உட்கார்ந்துக் கொண்டான். சற்று நேரம் ஆன பிறகு அவள் பக்கத்தில் உட்கார்ந்து இருநதவன் தன்னோடு வந்த பக்கத்து சீட்டில் இருப்பவனிடம் ஹிந்தியில் பேசினான்..

காவ்யா திடுக்கிட்டாள்..
‘ அய்யய்யே, இவன் இந்திக்காரனா.. இவளை போய் பக்கத்துல உக்காரச் சொல்லிட்டேனே.. ‘ என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டு மீண்டும் வேடிக்கைப் பார்க்க துவங்கினாள்.ஆனால் இப்போது அது முடியவில்லை.

‘ அவன் பாட்டுக்கும் நின்னுகிட்டு இருந்தான், பெரிய இவளாட்டும் அவனை பக்கத்துல உட்கார சொல்லிட்டேன், ஆனா இவனுங்கள பாக்கறதுக்கு நம்ம ஊரு ஆளுங்க மாதிரி தான இருக்காங்க.. ஒரு வேளை நம்ம ஊருக்கு வந்தப்புறம் அதே மாதிரி ஆயிட்டானுங்க போல, கொஞ்சம் கருப்பாகவும் ஆயிட்டாங்க போல.. ‘ என்று மனதில் என்னென்னவோ ஓடிக் கொண்டு இருந்தது.

ஒரே மாதிரியாக ஜன்னல் பக்கம் ஒடுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள் காவ்யா. காலும் இடுப்பும் வலித்தது. சற்று அப்படி இப்படி அசைந்தாலும் அவன் மீது பட்டு விடும் என்று அசெளகரிமாக உட்கார்ந்து இருந்தாள்.

அப்படியே இலேசாக திரும்பி அவனை கவனித்தாள். அவன் போதுமான இடைவெளி விட்டு சீட்டு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தான்..காவ்யாவுக்கு அது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

‘ ச்சே..ச்சே.. இவனை போய் ஏன் ஒரு மாதிரி நெனைக்கிறேன், பாவம் அவன்பாட்டுக்கும் இருக்கான், ஆனா நம்ம ஆளுங்கன்னு நெனைச்சி உக்கார சொல்லிட்டப்ப மட்டும் இப்படி எல்லாம் தோனலையே… இந்திக்காரன்னு தெரிஞ்சதும் மனசுக்குள்ள இவ்வளவு எரிச்சல் வருதே..’ என்று யோசித்தவள், ‘ நாம்ம இனி அப்படி நினைக்க கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்க்க துவங்கினாள். ஆனால் அப்படி இருக்கவில்லை அவள் மனது.

ஒரு சில நிமிடங்களில் பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றது.. அவளுக்கு பின்னால் இருந்த வரிசை காலியானது.. உடனே இந்திக்காரனிடம் திரும்பி,

‘ அங்க காலியாயிடுச்சி பாருங்க அதுல போய் உக்காருங்க ..” என்றாள் தமிழில். ‘ அவனுக்கு தான் பேசியது புரிந்து இருக்குமோ’ என்று யோசிப்பதற்குள் வேறு ஆட்கள் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.

‘ப்ச்.. ‘ என்று திரும்பி கொண்டாள்.

‘ ஏன் நம்மளால கொஞ்சம் அமைதியா இருக்க முடியல? நம்ம பக்கத்துல யார் வந்து உக்காந்தா என்ன ? எதுக்கு இவ்வளவு குழப்பமா இருக்கேன்.. ‘ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.

ஆரணி வந்ததும் கொஞ்ச பேர் இறங்கினார்கள். பக்கத்து வரிசையில் இடம் காலியானதும் இந்திக்காரன் அவனாகவே எழுந்து போய் உட்கார்ந்துக் கொண்டான். காவ்யாவுக்கு லேசாக சந்தோஷம் என்றாலும் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் வந்தது. அவள் பக்கத்து சீட்டு மீண்டும் காலியாக இருந்தது.. ஆரணியில் பஸ்ஸில் ஏறிய ஒருவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் சற்று பருமனாகவும், உயரமாகவும் இருந்தான்..

‘ என் பக்கத்துல உக்காந்துட கூடாது கடவுளே… ‘ என்று வேண்டி முடிப்பதற்குள் அவன் ‘ தொப்’ பென்று அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். நசுங்குவது தவிர வேற வழியே இல்லை என்பது போல நெருக்கமாக இருந்தது இடம் …

கண்டக்டர் அவனுக்கு டிக்கெட் தர அருகில் வந்தார்.

” சார் எனக்கு கொஞ்சம் கம்ஃபர்டபுலா இல்ல.. இவரை வேற சீட்டுல உக்கார சொல்லுங்க ..” என்றாள்.. கண்டக்டர் அவள் சொல்வதை கேட்காதது போல அங்கே இருந்து போய் விட்டார்..

‘ அய்யோ வேலூர் போறதுக்குள்ள இவன் நம்மள நசுக்கியே ஜூஸ் போட்டுடுவான் போல இருக்கே…அட கடவுளே… ” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அந்த பக்கத்தில் போய் உட்கார்ந்த இந்திக்காரன் இவளை பாவமாக பார்த்தான். அவன் பார்வையில் இருந்த பரிதாபம் அவளுக்கு குற்றவுணர்ச்சியை மேலும் அதிகரிக்க… வேறு வழியில்லாமல் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள் காவ்யா.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *