பல்கேரிய கிராமம் ஒன்றில் தாய், தந்தையரை இழந்த சிறுமி சியோனா தாத்தாவுடன் வசித்து வந்தாள். சியோனாவின் மனோ தைரியம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு, இனிமையாகப் பேசும் தன்மை ஆகியவை அவளை அந்தக் கிராமத்தில் எல்லோரும் விரும்பும் சிறுமியாக உயர்த்தியது.
குளிர் காலம் முடிவுறும் தருவாயில் இருந்தது. கிராம மக்கள் வசந்தம் வரும் நாளை எதிர் நோக்கிக் காத்திருந்தார்கள். கடும் குளிர், பனிப் பொழிவு இவற்றால் வெளியே வராமல் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்தனர். தன்னிடம் மக்கள் பயப்படுவதில் மகிழ்ச்சியடைந்த குளிர்கால சூனியக்காரி, வசந்தம் வாராமல் தடுத்து நிரந்தரமாகத் தங்கினால் என்ன என்று நினைக்க ஆரம்பித்தாள். அதற்காக, கருமையான மேகத்தின் நடுவில் சூரியனை மறைத்து வைத்தாள். தன்னுடைய திட்டத்திற்கு தன்னுடைய மகள்கள் சூறாவளிக் காற்று மற்றும் பனிப்புயலை ஏவி விட்டாள்.
பனிப்பொழிவால் வீடுகள் பனியால் மூடப்பட்டன. வாசல்களையும் பனி அடைத்து விட்டது. மக்கள் பனிக்கட்டிகளை செதுக்கி எறிந்து நடப்பதற்கு பாதை உண்டாக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வர வேண்டி இருந்தது. இந்த வருடம் வழக்கத்தை விடக் குளிர் கடுமையாக உள்ளதே, வசந்தம் ஏன் இன்னும் வரவில்லை, கடுங்குளிரிலிருந்து நம்மை யார் காப்பாற்றுவார் என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
சியோனாவின் தாத்தா சொன்னார். “தொலை தூரத்தில் தெரியும் அந்த உயர்ந்த மலையின் உச்சியில், பனிக்கட்டியால் கட்டப்பட்ட அரண்மணையில், உறைபனியின் தந்தை இருக்கிறார். அவர் இரக்க குணமுள்ள மந்திரவாதி. குளிர் குறைந்து வசந்தம் வர வேண்டிய இந்த நேரத்தில், குளிர் அதிகமாகி மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது என்ற விவரத்தை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இது தெரிந்தால் அவர் உடனே வசந்தத்தை வரச் செய்வார். ஆனால், அந்த மலைக்குச் செல்லும் பாதை கடுமையானது. அதுவும் உடலை வாட்டி வதைக்கும் குளிரில் இன்னும் சிரமமாக இருக்கும். எனக்கோ வயதாகி விட்டது. வேகமாக நடக்க முடியாது. கிராம மக்கள் யாரேனும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்”
தரையெல்லாம் பனி பொழிந்து உறைந்திருப்பதாலும், குளிர் வாட்டி வதைப்பதாலும் கிராம மக்கள் எவரும் மலை உச்சிக்குச் செல்ல முன் வரவில்லை. நிலைமையை உணர்ந்த சியோனா, சென்று வருவதாகக் கூறினாள். “ஆனால், உன்னிடம் கடும் குளிருக்குத் தேவையான உடைகளும், குல்லா, கையுறை, காலுறை ஒன்றுமில்லையே” என்று மற்றவர்கள் தடுத்தனர். “நம்முடைய கிராமத்தைக் குளிரிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால், யாரேனும் ஒருவர் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். எனக்கு மனோதிடம் உள்ளது. என்னைத் தடுக்காதீர்கள். நான் சென்று வருகிறேன்” என்று உறுதியுடன் சொன்னாள் சிமோனா.
சிமோனாவின் மனோதைரியத்தை மெச்சிய கிராம மக்கள் அவளுக்குத் தேவையான குளிர்கால உடைகளையும், காலுறை, கையுறை மற்றும் உணவையும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். நான் எத்தனை சீக்கிரம் மலையுச்சியை அடைகிறேனோ அது நம்முடைய மக்களுக்கு உதவியாக இருக்கும், ஆகவே வழியில் எங்கும் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்த சியோனா மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
சிறுமி நடந்து வருவதைப் பார்த்த சூறாவளிக் காற்றுக்கு கோபம் வந்தது. “குளிருக்கும், கடும் பனிக்கும் பயந்து, வெளியே வராமல் வீட்டில் முடங்கிக் கிடப்பார்கள் என்று நினத்தால், இந்தச் சிறுமி எந்த தைரியத்தில் மலையை நோக்கிச் செல்கிறாள். அவள் மேலே செல்ல முடியாமல் நம்முடைய பலத்தை அவளுக்குக் காட்ட வேண்டும்” என்று முடிவு செய்த சூறாவளிக் காற்று தன்னுடைய மற்ற சகோதரிகளுடன் சியோனாவைச் சுற்றிக் கடுமையான சூறாவளிகளை வீசத் தொடங்கினாள்.
ஆனால் கிராமத்திற்கு உதவ வேண்டும் என்ற நல்ல மனதுடன் சென்று கொண்டிருக்கும் சியோனாவை சூறாளிக் காற்றுகளினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவைகள் செயலிழந்து விழ ஆரம்பித்தன. “இந்தப் பெண்ணை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நம்முடைய சகோதரிகளான பனிப் புயல்களின் உதவியை நாடுவோம்.” என்று முடிவு செய்தன.
“ஒரு சிறு பெண்ணிற்கு சூறாவளியை விட சக்தி இருக்க முடியுமா. நாங்கள் யாரென்று காட்டுகிறோம்” என்று பனிப்புயல் தன்னுடைய சகோதரிகளுடன் சியோனாவைச் சுற்றி வீசத் தொடங்கின. சற்று தடுமாற்றம் ஏற்பட்டாலும், சுதாரித்துக் கொண்ட சியோனா, முன்னேறிச் செல்ல ஆரம்பித்தாள். “எங்களால் அந்த சிறுமியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை” என்று சூறாவளிக் காற்றும், பனிப்புயலும் அம்மா குளிர்கால சூனியக்காரியை சரணடைந்தார்கள்.
சூனியக்காரி சொன்னாள் “நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நம்மால் ஒருவரைத் தோற்கடிக்க முடியவில்லை என்றால், நம்முடைய செயல் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நம் மனதில் உள்ளதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நாம் அவருடன் நண்பனாக பழக வேண்டும். சரியான சந்தர்ப்பம் வரும் போது நம்முடைய எண்ணத்தை நிறை வேற்ற வேண்டும்”
காற்றும், பனிப்புயலும் அந்த இடத்தை விட்டு அகன்றன. குளிரும், பனியும் குறைந்து, அதனுடன் வந்த ஓசையும் குறைந்து அமைதி நிலவியது. அப்போது குளிர்கால சூனியக்காரி ஒரு அழகான இளம் பெண் வடிவத்தில் சியோனாவின் முன்னால் தோன்றினாள்.
அழகிய பெண்ணைப் பார்த்த சியோனா ஆனந்தமடைந்தாள். அவளுடைய மனம் நினைத்தது, “நான் கனவு காண்கிறேனா? தோற்றத்தில் என்னுடைய அம்மாவைப் போலவே இருக்கும் இவள் யார்? இந்தப் பெண்ணின் குரல் தான் எத்தனை இனிமை. இந்தப் பெண், அம்மா என்னை சிறிய வயதில் பாடித் தூங்க வைத்த தாலாட்டுப் பாடலை அல்லவா பாடுகிறாள். சற்று நேரம் அமர்ந்து பாட்டைக் கேட்டு விட்டுச் செல்வோம்” என்று அமர்ந்தாள் சியோனா.
இனிய இசையில் மயங்கிய சியோனா தன்னை அறியாமலே நித்திரையில் மூழ்கினாள். தான் நினைத்த காரியத்தை முடித்ததில் மகிழ்ச்சி அடைந்த சூனியக்காரி, “நன்றாகத் தூங்கு சிறு பெண்ணே. நீ இப்படியே நிரந்தரத் தூக்கத்தில் மூழ்குவாய்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் சூனியக்காரி.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த சியோனாவின் மீது காற்றும், பனியும் பொழிய ஆரம்பித்தது. சியோனாவின் இளஞ்சிவப்பு வண்ணக் கன்னங்கள் சிறிது சிறிதாக சிவப்பு, நீலம், மெழுகு போன்ற மஞ்சள் என்று நிறம் மாற ஆரம்பித்தன. சியோனா பனியில் உறையத் தொடங்கினாள்
சற்று நேரம் கழிந்தது. பனியைக் கிழித்துக் கொண்டு ஒரு சிறிய எலி வெளியே வந்தது. சியோனாவின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த எலி, சியோனாவைக் காப்பாற்ற உதவிக்குத் தன்னுடைய நண்பர்களைக் கூட்டி வந்தது. சியோனாவின் கை, கால், உடல் முழுவதும் ஓடி வெப்பம் ஏற்ற முயன்றன எலிகள். ஆனால் இந்த வெப்பம், போதுமானதாக இல்லை. ஆகவே ரோமம் நிறைந்த உடல்கள் உள்ள நண்பர்கள் முயல்கள் மற்றும் அணில்களின் உதவியை நாடின. முயல்கள் மற்றும் அணில்கள் சியோனாவின் மீது ஏறி விளையாடி அவளுக்கு வெப்பத்தை ஏற்றின. சியோனாவின் கன்னங்கள் சிறிது சிறிதாக இளஞ் சிவப்பு நிறத்திற்கு மாறி, சியோனா கண் திறந்தாள்.
கண் விழித்த சியோனா, தன்னைக் காப்பாற்றிய விலங்குகளுக்கு நன்றி கூறினாள். தான் வந்த காரணத்தையும், உறைபனியின் தந்தையிடம் உதவி கேட்பதற்கு வந்திருப்பதாகவும் கூறினாள். “பனிக்காலம் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருப்பதால், தாங்களும் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கூறிய விலங்குகள். நாங்களும் உன்னுடன் வருகிறோம் என்று கூறின.
நண்பர்களுடன், மலையுச்சியிலிருந்த அரண்மனையை அணுகினாள் சியோனா. அங்கு உறைபனியின் தந்தை, அவர் கிறிஸ்துமஸ் தந்தை என்றும் அழைக்கப்படுவார், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். முயல்கள் அவர் மீது ஏறி விளையாட, உறக்கம் கலைந்து எழுந்தார்.
தன்னைப் பார்ப்பதற்கு ஒரு இளம் பெண்ணும், எலிகள், முயல்கள் மற்றும் அணில்கள் வந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். சியோனா, குளிர் நாளுக்கு நாள் கடுமையாவதையும், பனிப் பொழில் அதிகரித்து வருவதையும், இவற்றால் கிராம மக்கள் படும் இன்னல்களையும் எடுத்துச் சொன்னாள், சியோனாவின் கூற்றை மற்ற மிருகங்களும் ஆமோதித்தன.
“நான் சிறிது நேரம் கண் அயர்ந்ததை, குளிர்கால சூனியக்காரி தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளப் பார்க்கிறாள். உரிய நேரத்தில் வசந்தம் வருவதைத் தடுத்து பூமியில் நிரந்தரமாக வசிக்க ஆசைப்படுகிறாள். நான் இதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன். எந்தெந்த பருவங்கள் எப்போது வரவேண்டுமோ, அந்த மாற்றங்கள் நடக்க வேண்டும். அதுதான் உலக நியதி.” என்றார் கிறிஸ்துமஸ் தந்தை.
தன்னுடைய பணியாட்களை கூப்பிட்ட கிறிஸ்துமஸ் தந்தை கட்டளையிட்டார்.” குளிர்கால சூனியக்காரியை கைது செய்து சிறையில் அடைத்து விடுங்கள். ஒரு வருடம் கழித்துத் தான் அவர் சிறைச்சாலையிலிருந்து வெளியில் வர வேண்டும். வானத்திலுள்ள கரு மேகங்களைக் கலைத்து விடுங்கள். சூரியன் தென்பட பனி உருகுவதுடன், வசந்த காலம் பிறக்கும். மற்றவர்க்கு உதவும் நோக்கத்தில் பல தூரங்கள் கடந்து வந்த சியோனாவைப் பாராட்டிப் பரிசுகளும் அளித்தார்.
கிறிஸ்துமஸ் தந்தைக்கும், நண்பர்களுக்கும், நன்றி தெரிவித்து தன்னுடைய கிராமத்திற்குப் புறப்பட்டாள் சியோனா. திரும்பிச் செல்கையில் காட்சிகள் ரம்மியமாகத் தோன்றின. வழியெல்லாம் பனி உருகி இருந்தது. மரங்கள் துளிர் விட ஆரம்பித்து இருந்தன, திடமான மனதுடன், கிராமத்திற்கு வசந்தத்தைக் கூட்டி வந்த சியோனாவைப் பாராட்டி, கிராமச் சிறுவர்கள் ஆடிப்பாடி பரவசம் அடைந்தனர்.
(பல்கேரியா நாட்டின் நாட்டுப்புறக் கதை)