மச்சக் குப்பனும் பிசாசுகளும்
ஒரு கிராமத்தில் குப்பன், சுப்பன் என்று இரு தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்தார்கள். குப்பன் நன்றாக நடனம் ஆடுவான். சுப்பனுக்கு அவ்வளவாக நடனம் ஆடத் தெரியாது. குப்பனுக்கு வலது கன்னத்தில் பெரிய மச்சம் உண்டு. அதைப் போலவே சுப்பனுக்கு இடது கன்னத்தில் பெரிய மச்சம்.
குப்பனும், சுப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். குப்பன் எல்லோரிடமும் நன்றாகப் பழகுவான். இனிமையாகப் பேசுவான். அதிக வருமானம் வரும் போது, கிராமத்தில் மற்றவர்களுக்கு உதவுவான். சுப்பன் குப்பனுக்கு நேர் எதிர். அவனை சிடுமூஞ்சி என்று சொல்வர். குப்பன் மீது சுப்பனுக்குப் பொறாமை. ஊர் மக்கள் இருவரையும் மச்சக் குப்பன், மச்சச் சுப்பன் என்று கூப்பிடுவர்.
குப்பனுக்கு ஊர்மக்கள் மச்சக்குப்பன் என்று கூப்பிடுவது பிடிக்கவில்லை. கிராமத்திலுள்ள மருத்துவர்களின் பச்சிலை வைத்தியம் கை கொடுக்கவில்லை. மாறாக மேலும் பெரியதாக வளர ஆரம்பித்தது. நீ நகரத்திற்குச் சென்று நல்ல மருத்துவரைப் பார் என்று எல்லோரும் சொன்னார்கள்.
அந்த காலத்தில் வசதியற்றவர்களுக்கு எல்லாம் நடைப் பயணம்தான். கிராமத்திலிருந்து நகரத்திற்கு காட்டு வழியாகச் செல்ல வேண்டும். கட்டுச் சாதம் கட்டிக் கொண்டு குப்பன் நகரத்திற்குக் கிளம்பினான்.
குப்பன் பாதி தூரம் காட்டைக் கடந்த போது மணி ஆறாயிற்று. நன்றாக இருட்டி விட்டதால் பாதை தெரியவில்லை. அன்று அமாவாசையானதால் நிலவொளியில்லை. இருட்டில் நடந்து சென்றால் வனவிலங்குகளிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயம். இருட்டில் பாதை மாறிச் சென்றாலும் வழி தப்பிவிடும். எனவே, இரவில் காட்டில் தங்கிச் செல்ல முடிவெடுத்தான். அருகிலே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதனுடைய பொந்துக்குள் பதுங்கிக் கொண்டான். நடந்து வந்த களைப்பு, அசதியில் நன்றாகத் தூங்கி விட்டான் குப்பன்.
வாத்தியங்களின் ஓசையும், பாட்டும், கூத்தும் குப்பனைத் தூக்கத்திலிருந்து எழுப்பின. எங்கிருந்து இந்த சப்தம் வருகிறது என்று எட்டிப் பார்த்த குப்பன் கண்ட காட்சி அவனை நடுக்கமுறச் செய்தது. நடுவில் நெருப்பை மூட்டி, அதைச் சுற்றிப் பிசாசுகள் நடனமாடிக் கொண்டிருந்தன. பிசாசுகளின் தலைவன் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான்.
பிசாசுகளின் நடனம் தாளத்திற்கு ஏற்றாற் போல இல்லை எனத் தோன்றியது குப்பனுக்கு. பிசாசுகளின் தலைவனும் “உங்கள் நடனம் நன்றாகவே இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
பாட்டிலும், நடனத்திலும் ஆர்வமுள்ள குப்பன் தன்னை அறியாமலேயே மரப் பொந்திலிருந்து இறங்கி பிசாசுகளுடன் சேர்ந்து நடனமாட ஆரம்பித்தான். அவனுடைய நடனத்தின் அழகைக் கண்ட பிசாசுகள் நடனமாடுவதை நிறுத்தி குப்பனின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
இரவு முடிந்து சூரியன் உதிக்க ஆரம்பித்தான். பிசாசுகள் இசையையும், வாத்தியங்களையும் நிறுத்தின. பிசாசுகளின் தலைவன் குப்பனிடம் “நீ, மிகவும் நன்றாக நடனமாடுகிறாய்” என்று சொன்னான். குப்பன் சொன்னான் “இல்லை, இல்லை, எல்லாப் பிசாசுகளும் நன்றாக நடனமாடின.” மகிழ்ந்த பிசாசுகளின் தலைவன் “இந்தப் பரிசுகளை வைத்துக் கொள்” என்று நூறு தங்க நாணயங்களைப் பரிசாக அளித்தான்.
மேலும் சொன்னான். “நாங்கள் ஒவ்வொரு அமாவாசை இரவிலும் இங்கு வருவோம். நடனமாடுவோம். நீயும் அடுத்த அமாவசைக்கு வந்து நடனமாடி எங்களை மகிழ்விக்க வேண்டும். அதற்கு சன்மானமும் தருவோம்.”
“இந்த மனிதன் மறுபடியும் வருவான் என்பது என்ன நிச்சயம்” என்றது ஒரு பிசாசு.
“நீ சொல்வது சரிதான். இவனுடைய உடைமை ஒன்றை எடுத்து வைத்துக் கொள்வோம். அந்த உடைமையைத் திரும்ப பெறுவதற்காக இவன் நிச்சயம் வரத்தான் வேண்டும்” என்றது தலைமைப் பிசாசு.
குப்பனை உற்று நோக்கிய தலைமைப் பிசாசுகளின் கண்களில் அவனுடைய வலது கன்னத்தில் இருந்த பெரிய மச்சம் தென்பட்டது. “உன்னுடைய வலது கன்னத்தில் உள்ள இந்த பெரிய ஆபரணத்தை நான் எடுத்து வைத்துக் கொள்கிறேன். நீ அடுத்த அமாவாசைக்கு வரும்போது திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லிய வண்ணம் வலது கன்னத்திலிருந்த மச்சத்தைப் பிய்த்து எடுத்துக் கொண்டது. பின் பிசாசுகள் சென்று விட்டன.
குப்பனால் நடந்ததை நம்ப முடியவில்லை. கனவு போலத் தோன்றியது. அவன் முகத்தில் விகாரமாக இருந்த மச்சம் போனதுடன், வசதியான வாழ்க்கை வாழ நூறு தங்கக் காசுகளும் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் குப்பன்.
குப்பனின் கதை அந்தக் கிராமம் முழுவதும் பரவியது. கன்னத்தில் இருந்த மச்சம் போனதுடன் குப்பன் பணக்காரனாகி விட்டான். அதுவும் பிசாசைக் கண்டு பயப்படாமல் அதனிடமிருந்து சன்மானமும் பெற்று வந்திருக்கிறான். ஊரெங்கும் குப்பனைப் பற்றியே பேச்சு.
சுப்பன் பொறாமையில் வெந்து போனான். அடுத்த அமாவசை அன்று குப்பனுக்குப் பதிலாகச் சென்று, மச்சத்தைக் கொடுத்து தங்க நாணயங்கள் வாங்கி வர வேண்டும் என்று முடிவு செய்தான்.
அமாவாசை வந்தது. குப்பனிடம் வழி கேட்டுக் கொண்டு காட்டிற்குச் சென்றான் சுப்பன். முன்னதாகவே சென்று ஆலமரத்தின் பொந்தில் அமர்ந்து கொண்டு பிசாசுகளின் வருகைக்காகக் காத்திருந்தான். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வந்த பிசாசுகள் நடனமாட ஆரம்பித்தன.
ஆலமரப் பொந்திலிருந்து வந்த சுப்பன் பிசாசுகளுடன் சேர்ந்து நடனமாட ஆரம்பித்தான். சுப்பனின் நடனத்தைப் பார்த்த பிசாசுகளின் தலைவன் “நிறுத்து, என்ன நடனம் ஆடுகிறாய். இசைக்கும், நடனத்திற்கும் சம்பந்தம் இல்லை. உன்னுடைய நடனம் சகிக்கவில்லை” என்றது. சுப்பனுக்கு கோபம் வந்தது “உன்னுடைய பிசாசுகளின் நடனமும் நன்றாக இல்லை. என்னுடைய நடனத்தைக் குறை சொல்ல நீ யார்?” என்று கேட்டான்.
கோபம் கொண்ட பிசாசுகளின் தலைவன் குப்பனின் வலது கன்னத்திலிருந்து எடுத்த மச்சத்தை சுப்பனின் வலது கன்னத்தில் பொருத்தி “உன்னுடைய ஆபரணத்தை உன்னிடம் திரும்பக் கொடுத்து விட்டேன். இனி இந்தக் காட்டுப் பக்கம் வராதே.” என்று சொல்லி விரட்டி விட்டான்.
இனிய தன்மையால் குப்பன் மச்சம் நீங்கி பணக்காரனாக மாறினான். மூர்க்க குணத்தால், சுப்பன் இரண்டு கன்னங்களிலும் மச்சத்துடன் திரும்பினான்.
குப்பனை ஒருவரும் இப்போது மச்சக் குப்பன் என்று கூப்பிடுவதில்லை. பாவம் குப்பன், அவனை இப்போது எல்லோரும் பிசாசுக் குப்பன் என்று கூப்பிடுகிறார்கள்
கே.என்.சுவாமிநாதன், சென்னை