sirukathai: poorvajenma kaathalin payangaram -dr.udaliyangiyal baala சிறுகதை : பூர்வஜன்ம காதலின் பயங்கரம் - மரு.உடலியங்கியல் பாலா
sirukathai: poorvajenma kaathalin payangaram -dr.udaliyangiyal baala சிறுகதை : பூர்வஜன்ம காதலின் பயங்கரம் - மரு.உடலியங்கியல் பாலா

சிறுகதை : பூர்வஜன்ம காதலின் பயங்கரம் – மரு.உடலியங்கியல் பாலா

அன்றைய தினம்,
அமாவாசை இரவு நடுநிசியில் நடந்த அந்த சம்பவத்தால், அந்த ஊரே துயரத்தில் துவண்டது…!
அப்படி என்னதான் அன்று நடந்தது?.. வாங்க நிஜமும் கற்பனையும் கலந்த இந்த கதையை வாசித்து தெரிந்து கொள்வோம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ.இறுதி ஆண்டு படிக்கும், அந்த அழகான அடக்கமான மாணவன் “ராஜா”,எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். குறிப்பாக பருவ குமரிகளை ஏறெடுத்தும் பார்க்காத ஒரு வித்யாசமான “ஞானப்பழம்”.ஆனால் படிப்பில் படுசுட்டி, பல ஸ்காலர்ஷிப்களை அள்ளி குவித்த நடுத்தரவர்க்க மாணாக்கன்.அவன் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கர் வேலை பார்க்கும் மிக நேர்மையான மனிதர்.தன் ஒரே மகனின் வளர்ச்சிக்காக, தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய துடிப்பவர்.

அவர்கள் குடியிருந்த வீட்டின் மாடி போர்ஷனில் ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான்,ஒரு புதுமண தம்பதியர் குடிவந்தனர். அந்த புதுமணப்பெண், ரம்பை ஊர்வசியை தோற்கடிக்கும் வண்ணம் பேரழகு பதுமையாய் இருந்தாள்.அவள் கணவன்,கருப்பா, பல்லெடுப்பா,தொப்பையும் தோரையுமாய், அவளுக்கு சற்றும் இணையான ஜோடியாக தோன்றவில்லை. . இருவரும் பணிக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தினர்தான் என்பதை அந்த சுமாரான வீட்டில் குடிபுகுந்ததிலிருந்தே நாம் உணரலாம்.அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் வெகு அதிகம் போல் நினைக்க தோன்றியது.

ஒருநாள் காலை…
சாந்தி(அதுதான் புதுமண பெண்ணின் பெயர்) ராஜாவின் வீட்டின் கதவை தட்டி அவன் தாயிடம், “அக்கா. என் பேர் சாந்தி. மாடி போர்ஷனுக்கு முந்தாநாள்தான் புதுசா குடிவந்திருக்கோம். எங்க வீட்டுக்காரர் கருவேப்பிலை கொத்துமல்லி வாங்க மறந்துட்டார்.தக்காளி சாதம் செய்யணும்.ஆபீசுக்குவேற நேரமாயிடுச்சி. கொஞ்சம் குடுத்து உதவ முடியுமா” என பணிவுடன் விண்ணப்பிக்க “ஓ அப்டியாம்மா.உள்ள வாம்மா தரேன்” என அன்பாய் பேசி ,அவளை நாற்காலியில் அமரச்செய்து, அதை எடுத்துவர அடுப்படிக்கு சென்று மறைந்த அதே நிமிடம்…,
ராஜா டர்க்கி டவலை இடையில் சுற்றியபடி பாத்ரூமில் இருந்து வெளியேவர, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் நோக்க, ஏதோ மின்சாரம் பாய்ந்ததுபோல் இருவருக்கும் ஷாக்கடிச்ச உணர்வு ஏற்பட்டது. ராஜா எப்படியோ சமாளித்துக்கொண்டு, சட்டென்று தன் அறைக்குள் நுழைந்து, ஏதோ ஒரு அரைமயக்க நிலையில் தொப்பென்று கட்டிலில் விழுந்தான். சாந்திக்கும் அதேபோல் ஒரு விசித்திர உணர்வு ஏற்பட,அவளும் எப்படியோ சமாளித்துகொண்டு சட்டென எழுந்து, தடதட வென ஓட்டம் பெருநடையாக தன் வீட்டுக்குள் நுழைந்து மறைந்தாள். கருவேப்பிலை இத்யாதியுடன் வெளியே வந்தவள் ,சாந்தி இல்லாததால் “எங்கே போயிடுச்சி அந்த பொண்ணு” என்று வியந்தபடி நிற்க “அம்மா அம்மா” என ஈனஸ்வரத்தில் அழைத்த மகனின் குரல் கேட்டு பதற்றத்துடன் அவன் அறைக்குள் ஓடினாள். அங்கு அவன் அரை மயக்கத்தில் ஏதேதோ பிதற்றுவதை கண்டு ஓவென்று அழுகிறாள்.

அன்று மாலை அவன் பெற்றோர்..
ஜமீன் பல்லாவரத்தில் ,தங்கள் வீட்டின் அருகில் உள்ள, குடும்ப டாக்டரான, ஊசீஸ்வரனிடம், ராஜாவை அழைத்து சென்றனர்..டாக்டரின் அறைக்குள் நுழைவதற்கே ராஜா ரொம்ப சிரமப்பட்டான்.
“டாக்டர்! காலைலயிருந்து தம்பிக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே,குளிச்சுட்டு வந்ததிலிருந்து பாவம்.ஏதேதோ பெணாத்தறான் .”சுந்தரி சுந்தரி! நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்.என்ன மன்னிச்சிடு. உன்ன விட்டுட்டு இனிமே நான் எங்கேயும் போகமாட்டேன். இது சத்தியம்” அது இதுன்னு என்னென்னமோ ஒளர்ரான். காத்தால இருந்து எதுவுமே சாப்புடவும் இல்ல. கொஞ்சம் நல்லா செக் பண்ணி பாருங்க டாக்டர்” என்று சற்றே கண்கலங்கி கூற…டாக்டர் அவனை முற்றும் முழுதும் பரிசோதித்துவிட்டு, “அம்மா அவருக்கு உடம்புல எந்த கோளாறும் இல்ல. இதுக்கு முன்னாடி இதுபோல ஏதேனும் அவருக்கு ஏற்பட்டிருக்கா?”என வினவ. “அப்டியெல்லாம் ஒண்ணும் இல்லியே சார். தான் உண்டு தன் படிப்பு உண்டுன்னு இருப்பான்.யார்கிட்டயும் ரொம்ப பேசமாட்டான்”.என் ராஜாவின் அப்பா கவலையுடன் கூற, டாக்டர் மெல்ல அவன் தாயிடம் “லவ்வு கிவ்வுன்னு எதேனும் இருந்துச்சா..இன்னிக்கு காலம்பற அவன் கேர்ள் ஃபிரண்ட் யாரையாவது பாத்தானா? நல்லா யோசிச்சு சொல்லுங்க” என இழுக்க அவன் அப்பாவே மீண்டும் “சேச்சே…என் மவன் ரொம்ப ஒழுக்கமான பையன் சார்”என சான்றிதழ் வழங்கினார்.அனால் அந்த அம்மா குறுக்கிட்டு, “மாடி போர்ஷனல புதுசா கல்யாணமான பொண்ணு, காலைல எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க சார், அவங்கள வேணா இவன பாத்திருக்க வாய்ப்பு இருக்குங்க டாக்டர்.அவங்க வந்து போனதுக்கப்ரம்தான் இவன் இப்டி ஆய்ட்டான் சார்” என கூறக்கேட்ட ஊசீஸ்வரனுக்கு, ஏதோ ஒரு நெருடல் கலந்த ஐயம் மனதில் தோன்றியது.உடனே அவன் பெற்றோரை வெளியே அமர்த்திவிட்டு, ராஜாவிடம் தனிமையில் பேசினார். அவன் அரைமயக்கத்தில் திக்கி திக்கி கூறிய அனைத்து விவரங்களும் டாக்டரை பேராச்சரியத்தில் ஆழ்த்தியது..மேலும் ராஜா தான் கூறிய அனைத்து விஷயங்களை தன் தாய்தந்தையரிடம் கூறவேண்டாம் என்று டாக்டரிம் மன்றாடி கேட்டுக்கொண்டான்.

பிறகுஅவன் பெற்றோரை அழைத்து அவர்களிடம்,
“பயப்படரத்துக்கு ஒண்ணும் இல்லம்மா. எதுக்கம் ஒரு “காம்போஸ் இன்ஜெக்ஷன்” போடறேன். நல்லா துங்கனா எல்லாம் சரியாயிடும்.நாளிக்கு மறக்காம அழைச்சிண்டு வந்து காமிங்கம்மா” என ஆறுதல் கூறி, சிலபல மாத்திரைகளை எழுதி கொடுத்து அனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்றதும், டாக்டர் ஊசீஸ்வரனின் ஆழ்மனதில் இந்த கேஸில் ஏதோ ஒரு பெரிய மனோ தத்துவம் சார்ந்த மர்மம் உள்ளதென உள்ளணர்வு உறுத்த, உடனே தன் நெருங்கிய நண்பனும் மனோதத்துவ நிபுணருமான “டாக்டர் டேவிட்” க்கு போன் செய்து முழுவிவரத்தையும் கூறினார்,அவர் சற்று யோசித்தபின் சிரித்துக்கொண்டே “இன்ட்ரஸ்டிங் கேஸ் இன் டீட்.,இப்படித்தான், சுமார் ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன், கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் நான் பணிசெய்து கொண்டு இருந்தபோது,.. ஒரு 70 வயது பாட்டியை, 16 வயது மதிக்கதக்க, பேரன் வயதுள்ள ,பள்ளி மாணவன் “நீதான் என் போன ஜன்மத்து காதலி,வாங்க நாம இந்த பிறவியிலாவது ஒண்ணு சேர்ந்து கல்யாணம் பண்ணிக்கலாம்”ன்னு ஒரே அடம்பிடித்து ஆர்பாட்டம் பண்ணிய ஒரு விசித்திரமான கேசை நான் பார்த்திருக்கிறேன்..

பிறகு நாங்கள் அவனுக்கு உடனடியாக மனோதத்துவ ரீதியில் ஒரு மூன்று மாதம் முறையான நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்து குணப்படுத்தினோம்.இப்போது அவன் திருமணமாகி நலமாக இருக்கிறான். எதுக்கும அந்த தம்பிய அவளிடமிருந்து “ஐஸோலேட்” பண்ணிவைக்கறது நல்லது” என ஆலோசனை கூற, உடனே உஷாராகிய ஊசீஸ்வரன் ராஜாவின் வீட்டுக்கு பல முறை ஃபோன் செய்து, எச்சரிக்கை செய்ய முயன்றார். ஆனால் அவர்கள் ஃபோனை எடுக்காததால், அலுத்துபோய் ..,’சரி நாளை பார்த்துக்கலாம்னுட்டு’, டாக்டர் தன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ராஜாவோ,தன் வீட்டுக்கு போவதற்குள்ளேயே, ஊசியின் விளைவால் நல்லா தூங்கிபோய்விட்டான். அவன் பெற்றோரும் களைப்பில் உணவு கூட சரியாக சாப்பிடாமல் சீக்கிரமே தூங்கிவிட்டனர். ஊரே நல்ல உறக்கத்தில் இருந்த…

அந்த அமாவாசை இரவின் நடுநிசியில், தங்கள் வீட்டு கதவு தட்டப்பட்டு “ராஜா! வாங்க .கதவ திறங்க ப்ளீஸ் சீக்கிரம் வாங்க” என சன்னமாக ஒலித்த சாந்தியின் இனிய குரல் கேட்ட, ராஜா சட்டென விழித்துக்கொண்டு,தன் பெற்றோர் நல்ல தூக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு , ஏதோ ஒரு மந்திர சக்தியில் கட்டுண்டவன் போல் மெல்ல நடந்து சென்று, கதவை திறக்க ,அங்கு சாந்தி அப்ஸரஸ்போல் அழகே வடிவாய் நின்றபடி “ராஜா, போன ஜன்மத்தில் உன்னை ஏனோ நான் நிராகரித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இந்த ஜன்மத்தில் என்னை மறுக்காமல் ஏற்றுக்கொள்.இனி எந்த ஜன்மத்திலும் நாம் பிரியவே கூடாது” என கூறி அவனை மார்போடு ஆரத்தழுவி கலகலவென சத்தமாய் சிரித்தபடி,அவன் இதழோடு இதழ் பதித்து ஆழமாய் முத்தம் கொஞ்சிய, அந்த நொடியில்….
அவர்கள் இருவரும் நெருக்கமாய் நேருக்கு நேர் சந்தித்த அந்த கணத்தில்,… ஒரு பூர்வஜென்ம காதல் சுனாமி அவர்களுக்குள் ஏற்பட…”சாந்தி இனிமே நான் உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். இது சத்தியம்” என காட்டுகத்தலாய் அவன் கத்த, சாந்தியும் உணர்ச்சிவசப்பட்டு “உங்க அன்ப நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன்,
இனி நான் எத்தன பிறவி எடுத்தாலும் உன்னிய விட்டு சத்தியமா பிரியவே மாட்டேன் “என்று கூறி கேவிக்கேவி கண்ணீர்விட்டபோது ,…
ஏதேதோ சத்தம் கேட்டதால் கண்விழித்த
சாந்தியின் கணவனும், ராஜாவின் அப்பா அம்மா உட்பட அனைத்து அக்கம்பக்கத்தினரும் அங்கு வந்து,
இந்த காட்சியை கண்டு… அருவருப்பு கொண்டு ஆளாளுக்கு கண்ட கண்ட வார்த்தைகளில் வசைபாட தொடங்கினர்..,

ஆனாலும் அவர்கள் நெருக்கமும், முத்தமும் இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்தது.
சாந்தியின் கணவன் ஒருகட்டத்தில்,அதீத கோபம் கொண்டு தன் மனைவியை நெருங்கி பலம் கொண்டமட்டும் வலுக்கட்டாயமாக பிரிக்கமுயன்ற போது, இருவர் உடல்களும் இறுக்கமாக பிணைந்த வண்ணம் தொப்பென தரையில் விழுந்தன. ஒன்றும் புரியாத ஜனங்கள், அவர்கள் மயக்கநிலையில் உள்ளதாக எண்ணி ,இருவரையும் தண்ணீர் தெளித்து பிரிக்க முயன்று தோற்றனர்.

வெகுநேரம் ஆகியும் கண்விழிக்காததால்,அவர்கள் இருவரையும் அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக ஆட்டோவில் வைத்து தூக்கி சென்றனர்.அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள்.
அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக அறிவிக்கின்றனர். நீலம் பாரித்த அவர்களின் உடலை கண்டு சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்ய உத்தரவிடுகின்றனர் ஜன்மங்கள் கடந்தும் இணைய இயலாத அந்த கவின்மிகு காதலர்கள், மரணத்தில் மட்டுமே இணைய முடிந்தது.

(பி-கு)அடுத்த நாள் மாலை, டாக்டர்.ஊசீஸ்வரன் தன் கிளினிக்கில் மாலைமுரசு பத்திரிக்கை வாசிக்கையில்…
முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில்…

“கட்டாய திருமணத்தால் மனம் உடைந்த பெண்!

காதலனை சந்தித்து,
வாயில் கொடிய விஷ கேப்சியூலை கடித்தபடி தன் காதலனுக்கு முத்தம் கொடுத்ததால் , இருவரும் மரணம் அடைந்தனர்!!.

ஜமீன் பல்லாவரத்தில் நடந்த பரிதாப சம்பவம்.”

என்ற தலைப்பு செய்தியை வாசித்துவிட்டு அரண்டு போகிறார்.!!

நேற்று தன்னிடம் பேஷண்ட் ராஜா தனிமையில் பேசியபோது ” சார் சாந்தி என் கல்லூரி கிளாஸ்மேட்.ஒருநாள் அவள் என்னிடம் வந்து ‘நான் பூர்வ ஜென்மத்தில் உன் காதலை நிராகரித்த “சுந்தரி”. அப்போது உன் பெயர் “குமார்”. அதற்கு பிராயர்சித்தமாய் நாம் இந்த ஜன்மத்தில் திருமணம் செய்து கொண்டு ஒன்று சேரலாமா?. ப்ளீஸ் என்னை ஏற்றுக்கொள்வீர்களா?” என கெஞ்சி அழுதாள். நான் பெரிய படிப்பு படித்து சாதனை செய்ய வேண்டும் என்ற இலட்சியத்தில் தீவிரமாக இருந்ததால்,அவள் கூறியதை ஏதோ உளறல் என நினைத்து அதை நம்பாமல், அப்போது நிராகரித்து விட்டேன். சிலநாட்கள் கழித்து அவள் அப்பா படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக,
பிறகு கேள்விப்பட்டேன்.

ஆனால் இன்று மீண்டும் அவளை நேரில் என் வீட்டில் திடீரென சந்தித்த போது,அவள் கண்களில் தோன்றிய ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி “அவள் சொன்னதெல்லாம் உண்மை. நீ அவளை கைவிட்டுவிடாதே! அவளுடன் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்” என என் ஆழ்மனதை கட்டளையிட்டு மாற்றிவிட்டது. ஆனால் அவளோ ஏற்கனவே திருமணம் ஆனவள் என்பதை நினைக்கும்போது மனம் நிம்மதியிழந்து குழம்பி தவிக்கிறது…எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல், பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கிறது டாக்டர்.” என தன் கவலைகளை கொட்டி தீர்த்ததை நினைத்து, ஆழ்ந்த சோகத்தில் ஊசீஸ்வரன் மூழ்கி போனார்.

(முற்றும்)
மரு உடலியங்கியல் பாலா
.
எனும் புனைப்பெயரில் எழுதிவரும்:

DR.K.BALASUBRAMANIAN. MD
11A, ARUNAGIRI ST
WEST KAMAKOTI NAGAR
VALASARAVAKAM
CHENNAI-600087.
MOBILE…9382876968.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *