” ஹலோ அத்த, நான் ஜான்சி பேசறேன், எப்படி இருக்கீங்க ? நல்லா இருக்கீங்களா ? ”
” நான் நல்லா இருக்கம்மா, நீங்கல்லாம் எப்டி இருக்கீங்க?”
” நாங்க நல்லா இருக்கோம், அப்புறம் அத்த, எங்க வீட்டுக்காருக்கு
தெரிஞ்ச ஒருத்தருக்கு பொண்ணு பாக்கறாங்க, உங்களுக்கு தெரிஞ்சப் பொண்ணு இருந்தா சொல்லுங்கத்த ”
” சரிம்மா, விசாரிச்சி பாத்துட்டு இருந்தா சொல்றேன்ம்மா ”
” ம் .. அத்த, அப்புறம் பவித்ரா எப்படி இருக்கா ? ” என்று தயங்கியபடியே கேட்டாள்.
” ஏதோ இருக்காம்மா ”
” அவக் குழந்தைக்கு இப்போ ரெண்டு வயசு இருக்கும்ல, அவளே ஒரு குழந்தை, அவளுக்கு ஒரு குழந்தை. ப்ச்… நினைச்சாலே கஷ்டமா இருக்கு ”
” என்னம்மா பண்றது எல்லாம் அவளா பண்ணிக்கிட்ட வேலை, நம்ம அவளப் பாத்து பாத்து அழுவுறது தவிர வேற என்ன பண்ண முடியும் ? ”
ஜான்சியின் தாய் மாமன் மனைவி தான் தனம், பதினாறு வயதில் திருமணம் ஆகி வந்த போது ஜான்சி சின்ன பெண்ணாக இருந்தாள். திருமணமாகி ஒரு வருடத்தில் ஒரு பையன் தொடர்ந்து ஒரு பெண் குழந்தை. மாமாவுக்கு அரசு அலுவலகத்தில் கார் ஓட்டும் வேலை. மாமாவுக்கு குடிப் பழக்கம் உண்டு, கார் ஓட்டும் போது குடித்து விட்டு வண்டி ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி இறந்து விட்டார்.
அத்தைக்கு அப்போது பத்தொன்பது வயது தான் இருக்கும், மாமா இறந்த அன்று தனத்திற்கு செய்த சடங்குகள் அவ்வப்போது ஜான்சிக்கு நினைவு வரும், பாவம் அத்தை சிறுவயதில் கணவனை பறிக்கொடுத்ததோடு இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டார். வேலையில் இருக்கும் போது கணவர் இறந்ததால் படிப்புக்கேற்ப தனத்துக்கு அரசு வேலைத் தரப்பட்டது, அது அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.
தனத்தின் மகன் புகழேந்தி நல்ல படிப்பாளி, கல்லூரி படிப்பு முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான், அம்மாவுக்கு எல்லா வகையிலும் மிக உதவியாகவும் இருப்பான்.
ஆனால் மகள் பவித்ரா அப்படி இல்லை , சரியாகப் படிப்பும் வராது, எப்படியோ பத்தாவது வரைக்கும் தள்ளிக் கொண்டு வந்தும், பத்தாம் வகுப்பில் மூன்று பாடங்களில் தேறவில்லை. எப்போதும் அம்மாவை எதிர்த்து பேசும் சுபாவம். யாருக்கும் அடங்காமல் சுற்றி வருவாள். அவளைப் பற்றிய கவலை தான் தனத்துக்கு.
ஒரு நாள்,
பவித்ரா, டுடோரியல் வகுப்புக்கு சென்றவள் வீடு திரும்பவே இல்லை, எங்கு தேடியும் கிடைக்கவிலலை, அவள் பழகிய அனைவரின் வீட்டுக்கும் சென்று விசாரித்ததில், அவள் தோழி ஒருத்தி தான் கூறினாள், பவித்ரா யாரையோ விரும்பவதாகவும் அவன் வீட்டில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று, அவர்கள் வேறு எங்கோ சென்று விட்டதாகவும் கூறினாள்.
தனத்துக்கு தலை மேல் இடி இறங்கியது போல் இருந்தது… கணவன் இல்லாத நிலையிலும் தனி ஆளாக இருந்து வளர்த்து ஆளாக்கி விட எவ்வளவு சிரமப் பட்டும் தன் மகளின் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று அவள் மிகவும் வேதனைப்பட்டாள்.
எங்கு தேடியும் பவித்ரா இருக்கும் இடம் தெரியவில்லை,
மாதங்கள் சில கடந்தது..
ஒரு நாள் பவித்ரா வீட்டுக்கு வந்தாள் தனியாக, கோபமும் வருத்தமும் இருந்தாலும் மகள் திரும்ப கிடைத்த சந்தோஷம் தான் தனத்துக்கு இருந்தது.
தன் மகளை ஆரத் தழுவியவள்,
” சட்டென ‘ விலகினாள். மகளின் வயிறு அவளை முட்டியது.
பவித்ரா ” ஓவென ” அழுதாள்.
” அம்மா, என்னை மன்னிச்சிடு, நான் தப்பு பண்ணிட்டேன், அவன் என்னை ஏமாத்திட்டான், எங்கூட சுகமா இருக்கற வரைக்கும் இருந்துட்டு எங்கேயோ ஒரு நாள் ஓடிப் போய்ட்டான், திரும்ப வரவே இல்லம்மா ” என்று அழுதாள்.
” அடிப்பாவி, இப்படி
பண்ணிட்டியேடீ, இனிமே என்ன பண்றது?”
என்று தலையில் அடித்துக் கொண்டாள் தனம். பவித்ராவுக்கு அப்போது ஏழு மாதம், அந்த குழந்தைக்கு தான் இப்போது இரண்டு வயது ஆகப் போகிறது.
புகழுக்கும் மனது மிகவும் வருத்தமாக இருந்தது, பவித்ராவை நினைத்து என்பதை விட அம்மாவை நினைத்து, ‘ இன்னும் அம்மா எவ்வளவு தான் கஷ்டப்படனுமோ’ என்று.
புகழுக்கு எப்போதும் தன் தாயை பற்றி நினைக்கும் போது அவனுக்கு மனது கணத்து விடும். சிறு வயது விதவையான தன் தாய், எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் தனக்காவும், தன் தங்கைக்காகவும் மட்டுமே வாழ்ந்து வருகிறாள், எந்த வகையில் அவருடைய வாழ்க்கையை இனிமையாக மாற்ற இயலும் என்று அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் ஏதாவது செய்ய வேண்டும், என்று மட்டும் அவனுக்கு தோன்றும்.
தனத்திற்கு பவித்ராவை பார்க்கும் போதும், குழந்தையைப் பார்க்கும் போதும், வலியும் வேதனையும் நெஞ்சை அடைக்கும், இப்படியே நாட்கள் ஓடியது, பவித்ராவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகும் என்று எண்ணினாள். ஒரு முடிவுக்கு வந்தவளாய் போனை எடுத்து ஜான்சியை தொடர்புக் கொண்டாள்.
” ஹலோ ஜான்சி நான் அத்தை பேசறேம்மா ”
” சொல்லுங்கத்த ”
” பொண்ணு இருந்தா சொல்ல சொன்ன இல்லம்மா, நம்ம பவித்ராவுக்கு வேணா கேக்கலாமா ஜான்சி ? ”
” என்னது பவித்ராவுக்கா ? ”
ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்டாள்.
” ஆமாம்மா, மாப்ள வீட்டுல கேட்டு பாரும்மா ”
” அத்தை, அவருக்கு வயசுக் கூட இருக்கும் போல, பவித்ரா ரொம்ப சின்ன பொண்ணு ”
” வயசு என்னம்மா வயசு, இந்த வயசுலயே வாழ்க்கையை இழந்து கையில ஒரு கொழந்தையோட நிக்கிறா, அந்த கொழந்தைக்கு ஒரு அப்பா வேணும், இவளுக்கும் ஒரு வாழ்க்கை வேணும்மா, தனியா வாழறது அவ்வளவு சாதாரண காரியம் இல்லம்மா, அவ கையில கொழந்தையோட இருக்கற இந்த நிலையில, அவள யாரும்மா கல்யாணம் பண்ணிக்குவாங்க ? கேட்டுப் பாரும்மா… தனியா பொம்பள புள்ளைய வச்சிக்கிட்டு அவ இன்னும் எப்படி கஷ்டப்படணுமோ.. அதாம்மா ”
அத்தை தன் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பேசியது புரிந்தது. ஆனாலும் தயங்கியபடியே
” அத்தை நான் அவங்கள கேட்டுப் பாக்கறேன், நீங்க அதுக்கு முன்னாடி பவித்ராவை ஒரு வார்த்தை கேளுங்க, முக்கியமா வயசு வித்தியாசம் பற்றி அவக்கிட்ட சொல்லுங்க ”
” சரிம்மா, நீயும் அவங்ககிட்ட பவித்ரா பத்தியும், கொழந்தை இருக்கற விஷயத்தையும் சொல்லிடும்மா ”
” சரிங்கத்த, இது என்னமோ எனக்கு கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு, கடவுள் விட்ட வழி, பாக்கலாம் ” என்று பேசி விட்டு போனை வைத்தாள்.
வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்த தன் கணவரிடம்,
” ஏங்க, சங்கர் அண்ணாவுக்கு வயசு என்ன இருக்கும்? ”
” என்ன ஒரு முப்பத்து ஒன்பது வயசு இருக்கும் ”
” ஹாங், அவ்ளோ வயசா, அப்ப ஏன் அவருக்கு இன்னும் கல்யாணம் பண்ணல ? ”
” அவங்க அப்பா தான் காரணம், வர்ற வரணை எல்லாம் தட்டிக் கழிச்சிடுவார், ஏற்கனவே கூட ஒரு பொண்ண முடிவு பண்ணி நிச்சயம் கூட பண்ணியாச்சு, கடைசியில பொண்ணு பேரு சரி இல்லன்னு கல்யாணத்தை நிறுத்திட்டாரு ”
” அதென்ன பேரு சரியில்லன்னு ? முதல்லயே தெரியாதா அவருக்கு? ஆமா அப்படி என்னங்க பேரு ?”
” வேண்டாமிருதம் , அதாவது அவங்க வீட்டுல ஏற்னவே அஞ்சி பொண்ணு,இது ஆறாவது பொண்ணு இதுக்கு மேல அமிர்தம் வேணாம்ணு அப்படி பேர் வச்சாங்களாம் ”
” அட. ச்சே.. இதெல்லாம் ஒரு காரணமா வச்சா கல்யாணத்தை நிறுத்தினாரு ?”
” அது இல்ல ஜான்சி, சங்கருக்கு அம்மா இல்ல, இறந்துடுட்டாங்க, தம்பிக்கு கொஞ்சம் மன நிலை சரி இல்ல, சொத்து பத்து சொல்லிக்கிற அளவுக்கு நல்லாவே இருக்கு, மூணு சொந்த வீடு இருக்கு, வர்ற பொண்ணு சங்கரண்ணாவை கை வசம் வச்சிக்கிட்டு எல்லாத்தையும் புடிங்கிட்டா என்ன பண்றதுன்னு, இவரு இப்படியே கல்யாணத்தை தட்டிக் கழிச்சிட்டு வறாரு, புள்ளைக்கு வயசு ஏறிட்டா கல்யாணமே நடக்காது பாரு, அதனால ”
” இப்படியும் ஒரு அப்பாவா?”
என்று முகத்தை சுளித்தாள் ஜான்சி.
” ஆமா, எதுக்கு இதெல்லாம் கேக்கற ?”
” எங்க தனம் அத்தை பொண்ணுக்கு சங்கர் அண்ணாக்கு பேச தான் ”
” யாரு ? பவித்ராவா? அந்த பொண்ண எப்படி சங்கரண்ணாக்கு பேசறது ? அது ரொம்ப சின்னப் பொண்ணு இல்ல.. ”
” இங்கதாங்க நம்ம யோசிக்கனும், அது சின்ன வயசுலயே ஓடிப் போய், ஏமாந்து போச்சு, ஒரு குழந்தைக்கும் அம்மாவாயிடுச்சி, இந்த நிலையில அந்த பொண்ணு வாழ்க்கை என்னாவறது? அந்த கொழந்தை நிலமை என்னாவறது ? அதுக்கு ஒரு வாழ்க்கை தர ஆள் வேணும், யார் முன் வருவாங்க ? ”
” அதே மாதிரி, இந்த அண்ணனுக்கு
வயசு ஏறிக்கிட்டே போகுது, இவருக்கு பொண்ணு கிடைக்கறதும் கஷ்டம், அதனால ”
” அதனால ?”
” மைனஸ் இன்ட்டூ மைனஸ் பிளஸ் ன்ற மாதிரி, இவங்க வாழ்க்கையில ஒரு நல்லது நடக்கும் இல்ல, அந்த குழந்தைக்கும் சேர்த்து தாங்க சொல்றேன் ”
” ஏய் ஏய்… அப்புறம் எதாவது சொல்லிட போறேன், போ, போய் வேலை இருந்தா பாரு, அவங்க அப்பா ஏற்கனவே நல்ல நல்ல வரன் வந்தாலே தொரத்தி அடிச்சிட்டு மத்தவங்க மேல பழிப் போட்டுடுவாரு, இதுல அந்த பொண்ணு விஷயமும் சேர்ந்து தெரிஞ்சா அவ்ளோ தான், ப்பா.. வாய்ப்பே இல்ல ”
” ஏங்க இப்படி பேசறீங்க, அவருக்கு ஒரு நல்லது நடக்கனும்னு நினைக்கிறீங்க இல்ல, அப்ப நம்ம முயற்சி பண்ணலாங்க , அவங்க அப்பா தான் மகா மட்டமா இருக்காரு, ஆனா அந்த அண்ணன் நல்லவருங்க, அதுக்காகவாவது நாம முயற்சி பண்ணலாமேங்க ”
” சரி, நீ என்னமோ சாதாரணமா பேசிட்ட, என்ன நடக்கப் போவுதோ , பாக்கலாம் ”
சங்கர் அண்ணாவை வீட்டுக்கு அழைத்து அனைத்து விஷயமும் கூறினார்கள். பவித்ராவின் போட்டோவையும் காண்பித்தார்கள் . பவித்ரா மிகவும் அழகாக இருந்தாள்,
” பாக்க ரொம்ப சின்ன பெண்ணாக இருக்காங்க, அது எப்படி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க, முதல்ல பொண்ணுக்கு சம்மதம் இருக்கான்னு கேளுங்க, அதுக்கப்பறம் பேசலாம்..
அப்படி ஓ. கே ஆனாலும் எங்கப்பாகிட்ட நான் நேரம் வரும்போது கல்யாணத்தை பத்தி சொல்றேன், எல்லா விஷயமும் நல்லபடியா பேசி முடிக்கிற வரைக்கும் அவருக்கு எதுவும் இப்போ சொல்லப் போறது இல்ல இந்த தடவை ”
” சரிங்கண்ணா அப்போ, நான் அத்தகிட்ட பேசிட்டு அவங்க வீட்டுக்கு போக ஏற்பாடு பண்றேன் ” என்றாள் ஜான்சி.
ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை, ஜான்சி, அவள் கணவர், சங்கர் மூவரும் தனம் வீட்டுக்கு சென்றனர்.
” ஹாய் பவி, எப்படி இருக்க ? அம்மா விஷயத்தை எல்லாம் சொன்னாங்களா ? உனக்கு இதுல சம்மதமா ? என்று தனி அறையில் இருந்த பவித்ராவிடம் கேட்டாள் ஜான்சி.
” சொன்னாங்க கா, எனக்குன்னு இப்போ எந்த ஆசையும் இல்ல கா, எங்கொழந்தைக்காக தான் நான் இப்ப கூட இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன் ”
” அதெல்லாம் நீ கவலப்படாத, அவர் ரொம்ப நல்ல டைப், உன்னையும், பாப்பாவையும் நல்லா பாத்துப்பாரு ”
தனமும், புகழும் சங்கரிடம் பேசிக் கொண்டு இருந்தார்கள், பவித்ராவின் விஷயத்தை எதையும் மறைக்காமல் கூறினார்கள்.
சங்கருக்கு முன் மண்டைக் கொஞ்சம் வழுக்கை விழுந்து இருந்தது, ஆனால் முகம் களையாக இருந்தது. பேச்சில் நிதானம் இருந்தது., அவர்களுக்கு சங்கரை மிகவும் பிடித்துப் போனது.
” நாம முடிவு செய்ற முன்னாடி, உங்கப் பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசணும் ”
” பேசுங்க, வாங்க என்று அழைத்துச் சென்றான் புகழ்.
அவரை பவித்ராவுக்கு அறிமுகம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
பவித்ராவை பார்த்தும் சங்கருக்கு உள்ளுக்குள் ஏதோ உறுத்தலாக இருந்தது, ‘ இவ்வளவு சின்னப் பொண்ணா இருக்காளே, போட்டோவுல பாத்தாப்போ அந்தளவுக்குத் தெரியல… ”
ஆனால், பவித்ராவிடம் எந்த சலனமும் இல்லை.
ஒரு வழியாக சங்கர் பேசத் துவங்கினார்.
” உங்களுக்கு உண்மையிலேயே என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா, இந்த விஷயத்துல யாரும் உங்களை கட்டாயப்படுத்தலையே ?”
பவித்ராவும் நேரடியாக சங்கரைப் பார்த்தாள், அவள் கண்களில் புதிதாக ஒருவரை பார்க்கும் தயக்கம் இல்லை.
” எனக்கு எல்லாமே என்னோட குழந்தை தான், அவளுக்காக தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன், அவளுக்காக தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன், நீங்க என் குழந்தையை வாரிசா ஏத்துக்கணும் , கண்டிப்பாக நான் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியா இருந்து உங்களுக்கு நான் குழந்தை பெற்றுத் தருவேன், ஆனா இவள தான் மூத்த மகளா நீங்க பாக்கனும் ” என்று கூறியபடியே விளையாடிக் கொண்டு இருந்த தன் குழந்தையைக் காட்டினாள்.
” கண்டிப்பாக, அது பற்றி நீங்க எதுவும் கவலப் பட வேணாம், மற்றபடி என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு முழு சம்மதமா, ஏன்னா என்னோட வயசுக் கூட.. அதனால தான் திரும்ப, திரும்ப கேக்கறேன் ”
இப்போது தான் சற்று முகத்தை உற்றுப் பார்த்தாள், மிக ஒல்லியான உடம்பு, தலை சற்று வழுக்கை, அவள் கண்கள் லேசாக தாழ்ந்தது, உடனே, ‘ ஆமா அழகு பாத்து போன வாழ்க்கை தான் நாசமா போச்சே ‘ என்று தன்னையே நொந்துக் கொண்டாள் .
” எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம், ஆனா ரொம்ப ஆடம்பரம் இல்லாம, எளிமையா பண்ணனும் ” எனறாள்.
அனைவரின் சம்மதததோடு கல்யாணத் தேதி குறிக்கப்பட்டு வேலைகள் வேகமாக நடந்தது. கோவிலில் வைத்துக் கல்யாணம் நடந்த ஏற்பாடு செய்தனர். சாப்பாடு, மேள தாளம் எல்லாத்துக்கும் முன் பணம் கொடுக்கப்பபட்டது.
சங்கர் அவங்க அப்பாவுக்கு விஷயம் சொல்லப்பட்டது. அவர் தாம் தூம் என குதித்தாலும் சங்கர் கண்டுக் கொள்ளவில்லை , அதோடு எதிலும் தலை இட விடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். எல்லாம் நன்றாக தான் போனது.
பெண் வீட்டில் நூறுப் பத்திரிக்கை கேட்டு இருந்தார்கள், அதைக் கொடுக்க பெண் வீட்டுக்கு சென்றனர், சங்கர் அப்பாவும் உடன் வந்தார்,
‘ எதுவும் பேச மாட்டேன் ‘ என்ற உத்தரவாதத்தோடு,
பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்தது. யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் சங்கர் அப்பா வாயைத் திறந்தார். சங்கரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
” அது வந்துங்க, கல்யாணப் பொண்ணுக்கு ஏற்கனவே கொழந்தை இருக்கற விஷயம் சொந்தக் காரங்களுக்கு தெரியாது, தெரிஞ்சா பலவிதமா பேசி, கல்யாணத்தை நடத்த விடாம பண்ணிடுவாங்க, பாப்பாவ என் பேத்தி மாதிரி நான் பாத்துக்குவேன், ஆனா மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது பாருங்க, அதனால ”
” அதனால ” என்றாள் பவித்ரா.
அனைவருக்கும் ‘ திக் திக்’ என்று இருந்தது.
” அதனால கல்யாணம் முடிஞ்சி ஒரு ரெண்டு மாசத்துக்கு பாப்பா உங்க வீட்டுலயே இருக்கட்டும், அதே மாதிரி கல்யாணத்தன்னைக்கு பாப்பாவை கொண்டு வர வேணாம், தேவை இல்லாம எல்லாரும் கேள்வி கேப்பாங்க அதனால தான், மத்தபடி பாப்பாவை அதுக்கப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்ட்டு நல்லா பாத்துக்குவோம் ” என்று சொல்லி முடித்தவுடன்,
‘ பத்த வச்சிட்டியே பரட்டை ‘ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ஜான்சி. ஏதோ பேச வாய்த் திறந்தாள், அவ்வளவு தான் சங்கர் அப்பா அவளைப் பேச விடாமல் கையை உயர்த்தி அமர வைத்தார்.
ஆனால் பவித்ரா பேசினாள், இதைத் தான் அவர் எதிர்ப்பார்த்தார்.
” ஓஹோ, நீங்க அப்படி சொல்றீங்களா ? இப்போ என் முடிவைக் கேட்டுக்கோங்க, நான் கல்யாணத்தப்போ பாப்பாவை மடியில வச்சிக்கிட்டு தான் தாலிக் கட்டிக்குவேன், அதுக்கு சம்மதம்னா இந்த கல்யாணம் நடக்கும், அது மட்டும் இல்ல, என் குழந்தையை உங்க மகனோட வாரிசா ஏத்துக்குறேன்னு சொன்னா போதாது, இப்பவே பத்திரப் பேப்பர் வாங்கிட்டு வந்து அதுல எழுதிக் கையெழுத்துப் போட்டா தான் நம்புவேன் என்றாள் பவித்ரா.
அவ்வளவு தான், சற்று நேரத்தில் அனைவரும் ஆளுக்கொன்று பேச பேச,வாய் தகராறு நீண்டது.
” பவித்ரா, கொஞ்சம் பொறுமையா இரு, என்ன பெரியவங்ககிட்ட இப்படி பேசற நீ .. ? இந்த முப்பத்தெட்டு வயசுல யார்க்கிட்டயும் நான் இப்படி பேசினது இல்ல, வாயை மூடு ” என்று மகளை அதட்டினாள் தனம்.
ஒருப் பக்கம் ஜான்சியும், அவள் கணவரும் சங்கர் அப்பாவை வாயை மூட எவ்வளவோ சமாதானம் செய்தனர். ம்ஹீம்.. ஒன்றும் பலனில்லை.
” ஏம்மா, நீ இப்பவே இவ்ளோ வாயாடியா இருக்க, இன்னும் கல்யாணம் ஆனா, அய்யயோ, இது நம்ம வீட்டுக்கு சரிப்படாது பா சங்கரு.. இது என்னப்பா இப்பவே வாரிசு உரிமை கேக்குது, போறப் போக்குல சொத்தை எழுதிக் கேக்குமோ ” என்று அப்பா கூற,
” பெரியவராச்சேன்னு பாக்கறேன், இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்கன்னா அவ்வளவு தான் மரியாதை ” என்று பவித்ரா கூறவும்,
சங்கர் அப்பா தலைக்கால் புரியாமல் கத்த ஆரம்பித்து விட்டார்.
அனைவருக்கும் மிகவும் கலக்கமாகி விட்டது, இவ்வளவு கஷ்டப்பட்டு திட்டம் போட்டு அழகாக இது வரை கொண்டு வந்ததை ஒரு நொடியில் தகர்த்து விட்டார் சங்கர் அப்பா, அதற்கு பவித்ராவின் பேச்சுக் கிட்ட தட்ட துணையாக இருந்தது. ஏதோ உணர்ச்சி வசப்பட்டு திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாளே தவிர, முழு விருப்பம் இல்லை என்பது அவள் பேச்சில் தெரிந்தது.
இவ்வளவு நடக்கும் போது சங்கர் மட்டும் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தார். எதுவும் பேசவில்லை.
தன் தந்தையின் நாடகம், பவித்ராவின் விருப்பமின்மை, ஒரு தாயின் தவிப்பு.. கொஞ்ச நேரத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டது.
தனம் வீட்டிலிருந்து ஜான்சி உட்பட அனைவரும் கிளம்பி விட்டனர். ஜான்சி போகும் போது,
” அத்தை, எல்லாம் சரியாயிடும், நான் போய் சங்கர் அண்ணா கிட்டயும், அவங்க அப்பாகிட்டயும் பேசறேன், கவலைப்படாதீங்க ” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள்.
அவர்கள் சென்ற பின்,
அம்மாவுக்கும் மகளுக்கும் வாக்குவாதம் முற்றியது, புகழ் இருவரையும் சமாதானம் செய்ய முயன்று தோற்றான்.
” அவங்கள இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசறீயே, நீ எல்லாம் இன்னமும் கூட படப் போறடீ ”
” உனக்கு என்ன இப்போ, ஒரு கெழவன கொண்டு வந்து என் தலையிலக் கட்ற, அதுக்கும் நான் சரின்னு ஒத்துக்கிட்டேன், என் பிள்ளைக்காக, ஆனா அவங்க அப்பன் என் பிள்ளைய விட்டுட்டு வர சொல்றான், இன்னும் பத்து வருஷத்துல நான் என்னமோ அப்படியே தான் இருப்பேன், ஆனா அந்தாளு எனக்கு அப்பன மாதிரி இருப்பான்னு இப்பவே கிரிஜா கேலிப் பண்றா தெரியுமா ? ”
” ஏய், ஏய் சீ, வாய மூடு, வேணான்னா வேணாண்ணு சொல்லு, அத விட்டுட்டு வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாதடீ, அந்த மனுஷன் எவ்வளவு தங்கமா இருக்காரு, உனக்கு வந்த நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துட்ட டீ பாவி ”
” சும்மா என்ன அவங்க பக்கம் பேசற, வீடு சொத்தெல்லாம் இருக்குன்னு தான, உனக்கு அவங்க ஒசத்தியா இருந்தா நீ போய் கல்யாணம் பண்ணிக்கோ, உனக்கு தான் அந்த கெழவன் சரியா வருவான் ”
தூக்கி வாரிப் போட்டது தனத்திற்கு, தாயை இவ்வளவு இழிவாகப் பேசியவளை ‘ ஓங்கி ‘ ஒரு அறை விட்டான் புகழ்.
இதற்கு மேல் இவளிடம் பேசி மரியாதையை இழக்க விரும்பாத தனம் அழுதுக் கொண்டே உள்ளேப் போய் விட்டாள்.
இரண்டு நாட்களுக்கு பின்,
” ஹலோ அத்தை, என்னாச்சி? பவித்ரா என்ன சொல்றா ? ”
நடந்தவற்றைக் கூறியவர் தேம்பி தேம்பி அழுதார்.
” அவர என்னைப் போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றாம்மா, வாய்க்கு வந்தபடி பேசறா, வேணாம் ஜான்சி, அவரைப் பாத்தா ரொம்ப நல்லவரா தெரியுது, இவளை அவர் தலையிலக் கட்ட வேணாம், நானே நேர்ல வந்து அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்டு கல்யாணத்தை நிறுத்த சொல்றேன் ”
” சரிங்க அத்தை, வாங்க நான் அவங்ககிட்ட விஷயத்த சொல்றேன் ” என்று வருத்ததோடு போனை வைத்தாள்.
சங்கரை பேச வேண்டும் கூறி ஜான்சி வீட்டுக்கு அழைத்தனர்.
சங்கர் வீட்டிலிருந்து கிளம்பும்போது, தன் அப்பாவை கவனித்தான், இட்லி தட்டில் இட்லி ஊற்றிக் கொண்டு இருந்தார். திருமணம் நின்று போன சந்தோஷம் அவர் முகத்தில்.
ஜான்சியின் வீட்டிற்கு தனம் வந்து இருந்தார். சங்கரிடம் மன்னிப்பு கேட்கவும், திருமணத்தை நிறுத்தவும்.
” சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா, மனசுல வச்சிக்காதீங்க, அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், அவளுக்கு கொடுப்பனை இல்லைங்க, இதுக்கு மேல இந்த கல்யாணம் நடக்கறது யாருக்கும் நல்லது இல்ல, தயவு செய்து தப்பா எடுத்துக்காம கல்யாணத்தை நிறுத்திடுங்க ” என்றாள் தனம்.
” அப்போ உங்களுக்கு கொடுப்பனை இருக்கா?”
நிதானமாக சங்கர் கேட்க,
” என்ன சொன்னீங்க, புரியல ”
படப் படப்பாக கேட்டாள்.
” இல்ல, உங்களுக்கு கொடுப்பனை இருக்கான்னு கேட்டேன், பவித்ரா எனக்கு பொருத்தம் இல்லங்க, பாவம் சின்னப் பொண்ணு, நான் தப்பு செய்றனேன்னு மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு, நல்ல வேளையா அப்படி எதுவும் நடக்கல, தெரிஞ்சோ தெரியாமலோ எங்கப்பா ஒரு நல்ல காரியம் பண்ணிட்டாரு இந்த விஷயத்துல, தப்பா நினைக்காதீங்க உங்களுக்கு சம்மதம்னா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்,நீங்க தான் எனக்கு பொருத்தமா இருப்பீங்க, அந்த இடத்துல உங்க வயசு பத்தி நீங்க சொன்னதும் நான் ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டேன், பாவம் பவித்ரா. எல்லாம் சரியாதாங்க நடக்குது. பவித்ராவுக்கு வேற மாப்பிள்ளை பாக்கலாம்.
தனத்திற்கு பேச்சு வரவில்லை, அவள் கண்கள் திகைப்பில்,
ஜான்சியின் கணவர் என்ன நடக்குமோ என்ற பயத்தில்,
ஜான்சியோ இரட்டிப்பு மகிழ்ச்சியில்,
அந்த சில நொடிகள் எல்லாம் ஒரு முறை நின்றது.
ஜான்சிக்கும் இப்போது தான் பொறி தட்டியது, அந்த சம்பவதன்று சங்கர் அண்ணா ஏன் அவ்வளவு அமைதியா இருந்தாரு என்று. அந்த இடத்துல அவ்வளவு அமளி துமளி நடந்த போது அவரிடம் மட்டும் எந்த சலனமும் இல்லை. ‘ எங்கேயோ ஏதோ நடக்குது, அதனால நமக்கு என்ன என்பது போல உட்கார்ந்து இருந்தார்.
” ஏங்க, கொஞ்சம் உள்ள வறீங்களா ? ” என்று தன் கணவரை அழைத்தாள் ஜான்சி.
” ஏன்? ”
” அவங்களோட கல்யாணத்தை பத்தி அவங்கப் பேசட்டும் ” என்று கூறி விட்டு உள்ளேப் போய் விட்டாள் ஜான்சி.
” என்னங்க நீங்க திடீர்னு இப்படிக் கேட்டுட்டீங்க? பசங்க என்ன நினைப்பாங்க, ஊரு ஒலகம் இதை ஏத்துக்குமா ? அய்யோ.. என் பையன் அவனை நினைச்சா… ”
” ஏங்க, உங்களை நான் தனம்னு கூப்பிடலாமா ? ”
” ம் ”
” இது தப்பு இல்லங்க தனம், என் பொண்ணு வயசுல இருக்கற ஒரு பொண்ணு, வாழ்க்கையில தவறிப் போய், கையில் குழந்தையோட இருக்க விஷயத்தை பலவீனமா எடுத்துக்கிட்டு அப்பா வயசுல இருக்கற நான் கல்யாணம் பண்றது தான் உண்மையிலயே மனசுக்கு உறுத்தும் காரியம், நீங்க ஒரு இளம் விதவை, உங்க கூட என் வாழ்க்கையைப் பகிர்ந்துக்க விரும்பறது கண்டிப்பா தப்பு இல்லங்க”
” இது நம்ம வாழ்க்கை, நம்ம வாழறதுக்கு யாரோட சம்மதம் வேணும், கண்டிப்பா எங்கப்பா ஒத்துக்குவாரா ? மாட்டாரு, உங்க பிள்ள கூட என்ன சொல்லுவார்ன்னு இப்போ யோசிக்க முடியாது, முதல்ல உங்களுக்கு சம்மதமா ன்னு சொல்லுங்க தனம் ”
‘ எப்படி ஒப்புக் கொண்டோம் ‘ என்று தனத்திற்கு தெரியவில்லை. ஆனால் மெளனம் சம்மதமானது.
****
வெளியே சென்று வந்தான் புகழ். வீட்டு அருகில் சிறு கூட்டம் விலக்கி விட்டு சென்றவனுக்கு, காணும் காட்சியை கண்கள் நம்ப மறுத்தது, அம்மாவும், சங்கரும் மணக்கோலத்தில்,
பிள்ளையை கையில் வைத்தபடி பவித்ரா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
மகனைக் கண்டதும் ஏறெடுத்து பார்த்தக் கண்கள் தாழ்ந்தன, தனம் தலை குனிந்தாள்,
புகழைக் கண்டதும் சற்று சுயத்துக்கு திரும்பிய பவித்ரா கண்ணாபின்னா என்று கத்தத் துவங்கினாள்.
” பாத்தியாண்ணா எவ்வளவு கேடுக் கெட்ட வேலைப் பாத்து இருக்காங்க? மானம், மரியாதை எல்லாம் போச்சி, இதுக்கு இந்த வயசுல இது தேவையா ? கல்யாண வயசுல புள்ளைங்க இருக்கும் போது, இதுக்கு என்ன ஆம்பள துணைக் கேக்குது ” என்று வாய் கூசாமல் பேசிக் கொண்டு போக,
” பளார் ” என்று ஒரு அறை, புகழ் பவித்ராவின் கன்னத்தில் அறைய, அனைவரும் திகைத்து நின்றனர். தனம் உட்பட,
” வாயை மூடு, இனி ஒரு வார்த்தை அம்மாவை பத்தி எதாவது பேசினா அவ்ளோ தான், உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு அம்மா எத்தனையோ நாள் அழுவாங்க, உனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து அதை சரி பண்ண நினைச்சாங்க, இதே மாதிரி அவங்க சின்ன வயசுல கணவனை இழந்து நின்னப்போ அவங்களுக்கு யாருமே அதை செய்யல, நீ அவங்க பொண்ணு தான, இப்படி பேசற? புரிஞ்சிக்கோ பவி, அம்மா பாவம், இனியாவது அவங்க வாழ்கையை அவங்க வாழட்டும் ” என்றான்.
கோபத்திலும், அவமானத்திலும் அங்கே நிற்க முடியாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளேப் போய் விட்டாள் பவித்ரா.
ஏதோ ஒன்று தன் தாய்க்கு செய்ய வேண்டும் என்று எப்போதும் புகழுக்கு தோன்றும் ஆனால், அது என்ன என்று தான் இது நாள் வரை விளங்காமல் இருந்தது. இப்போது தான் புரிந்தது. தன் தாய்க்கு, அவளுக்கே அவளுக்கென்று ஒரு துணை வேண்டும் என்று..
தன் தாயின் அருகில் அமைதியாக சென்ற புகழ், அவள் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றினான், அதில் ஈரம் இருந்தது.
சங்கரிடம் திரும்பியவன், அவர் கைகைளைப் பிடித்து வாழ்த்துக் கூறி, சோபாவில் அமர வைத்தான்.
வந்தவர்கள் ‘ ஆ ‘ வென்று வாய் பிளந்து நின்றிருந்தனர், சில நொடிகளில், அனைவரின் கைகளும் தானாக கரவொளி எழுப்பியது. சத்தம் கேட்டு உள்ளே சென்ற பவித்ராவும் கண்களைத் துடைத்தபடியே வெளியே வந்தாள்.
தன் தாயின் முகத்தைக் கண்டாள். அதில் என்றும் காணாத அழகும், அமைதியும் நிறைந்து இருந்தது.
முற்றும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.