sirukathai thogupu : thangam vilai thakkaali vilai-raman சிறுகதை தொகுப்பு : தங்கம் விலை தக்காளி விலை-இராமன் முள்ளிப்பள்ளம்
sirukathai thogupu : thangam vilai thakkaali vilai-raman சிறுகதை தொகுப்பு : தங்கம் விலை தக்காளி விலை-இராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை தொகுப்பு : தங்கம் விலை தக்காளி விலை-இராமன் முள்ளிப்பள்ளம்

கலைஞர் கருணாநிதி நகர் ஏற்ற தாழ்வு அற்ற ஒரு பகுதி. குறிப்பாக நீங்கள் காணப் போகும் பின் வரும் நிகழ்வுகளை விருந்தாக அளிக்க கூடிய இப்பகுதி ஒரு சம தர்ம சமூகம். ஏனெனில் அங்கு எல்லோரும் சம அளவில் செல்வந்தர்கள். ஆனால் இத்தகைய செல்வம் கொழிக்கும் சோசலிஸ குடியிருப்பில் ஒரே ஒரு ஏழை இருந்தாரென்றால் அது காய்கறி கடை கந்தசாமி தவிர்த்து வேறு யாருமல்ல. அப் பகுதி செல்வந்தர்களுக்கு மருத்துவர் கொடுத்த அறிவுரை என்னவோ காலை அரை மணி நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டுமென்பதே. ஆனால் அவர்களோ ஐந்து நிமிடம் நடந்து கந்தசாமி காய்கறி கடையை முற்றுகையிடுவார்கள்.
மாதம் பதினைந்து ஆயிரம் வாடகை கொடுத்து ஒரு வீட்டின் பத்துக்கு பத்து முன் பகுதியை கந்தசாமி காய்கறி கடையாக மாற்றி வருடங்கள் பல ஆயினும் வாடகைக்கு போக மீதம் வருவதே லாபம். படிப்படியாக நீண்ட நாட்கள் கழித்து லாபம் வந்தது. ஆனால் செலவும் வந்தது.
இருபத்தி ஐந்து வயது ஆன மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். ஒரே மகள். காளை (பையன்) வீட்டார் ஒரே குலம்தான். அதே சாதி , இருந்தாலும் ‘’ நீயும் நானும் ஒரே சாதி அதனால் வரதட்சனை வேண்டாம்’’ அன்று அவர்கள் சொல்லவில்லை, மாறாக பத்து பவுன் மட்டும் போடுங்கள் என்றனர். பேரம் நடந்து இறுதியாக ஐந்து பவுனுக்கு ஒத்துக் கொண்டனர். பையன் மருத்துவ அதிகாரி என்ற தகவல் கந்தசாமிக்கும் அவர் மனைவிக்கும் உற்சாகத்தை கொடுத்திருந்தது.
அந்த பேரம் நடந்து முடிந்த நாளிலிருந்து பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டார் கந்தசாமி. முதலில் கடையில் விற்பனைக்கு உதவியாக இருந்தவனை வீட்டுக்கு அனுப்பினார். அவனுக்கு கொடுத்த மாத சம்பளம் ஏழு ஆயிரத்து ஐநூறு மிச்சமானது. காய்கறியுடன் சில பருப்பு வகைகளையும் சேர்த்து விற்றார். அடுத்து ஐம்பதாயிரம் ரெண்டு வட்டிக்கு கடன் வாங்கினார். ஐந்து பவுனுக்கு வேண்டிய நிதியை திரட்டி விட்டார். அவர் அபிமான கடவுள் கந்தனே. ஆகவே அன்று மகிழ்ச்சியுடன் கடையை திறந்தவுடன் கடவுள் கந்தன் கருணையோ என்னவோ அவர் யாரைப் பார்த்தால் பெரு மகிழ்ச்சி அடைவரோ அவரே கடையின் முதல் வாடிக்கையாளராக வந்து அவர் முன் நின்றார். கந்தசாமி மகிழ்ச்சி பொறுக்க முடியாமல் கூவினான்,
‘’ சாமி நானே உங்கள வந்து பக்கனும்னு நினச்சிட்டு இருந்தே, கும்பிடப் போன தெய்வம், நீங்களே ஏ கடைக்கு வந்திட்டீங்க’’
’’ நான் சாமியில்ல கந்தா’’
’’அப்படியில்ல சாமி தங்கம் உள்ளவங்க சாமி மத்த எல்லாரும் தூசி’’
‘’தங்கம் வாங்க வர்றியா ‘’
’’ஆமா சாமி’’
’’சரி வா இன்னைக்கு’’
அவர் இரு நூறு ரூபாய்க்கு காய்கறி வாங்கினார்
‘’சாமி இரு நூறு ஆகுது நீங்க 150 கொடுங்க போதும்’’
அவர் போனதும் கந்தசாமி ஆனந்தத்தில் மூழ்கினான். மாலை அவர் தங்க கடை பாக்யலக்ஷ்மி ஜுவல்லர்ஸ் போனால் ஏதேனும் சலுகையில் தங்கம் வாங்கலாம். மனது பூரிப்பில் திளைத்தது.
மாலை மனைவி மகளுடன் பாக்யலக்‌ஷ்மி ஜுவல்லர்ஸ் முன்னால் போய் நின்றார். பரபரப்பான தெற்காவணி மூல வீதி. கடை கதவு முன்னே நின்றான். காவலன் ஒருவன் உள்ளே போவோருக்கு கதவை திறந்த போதெல்லாம் குளிர் காற்று வந்து அவன் முகத்தில் அடித்தது. கந்தனுக்கு உள்ளே செல்ல நினைக்கையில் ஒரு நடுக்கம் வந்தது. அவன் வேட்டியில் இருந்தான், மகள் அவன் முதுகை பிடித்து தள்ள உள்ளே நுழைந்தான், பின்னே மகளும் மனைவியும்.
உள்ளே குளிர். ஏராளமான ஒளி வெள்ளம். அழகான பெண்கள் ஒரே மாதிரி சேலையில் தங்க நகை கண்ணாடி பெட்டிகளின் பின்னே நின்றனர். உள்ளே வந்தவரை வரவேற்க இரு பெண்கள் கந்தசாமியை பார்த்தனர். அருகில் வந்த ஒரு பெண் கேட்டார்
‘’என்ன வேணும்’’
‘’தங்கம் வேணும்
அந்தப் பெண் உடன் இருந்த இன்னொரு பெண்ணை பார்த்தாள்
’’எவ்வளவு பட்ஜெட்’’
மகள் முன்னே வந்தாள் புன்னகையுடன் சொன்னாள்
‘’அஞ்சு பவுன்ல செயின், தோடு, வளையல் வாங்கனும்’’
’’வாங்க’’
மூவரும் கண்ணாடிப் பெட்டிகளின் முன்னே அமர ஒரு பெண் சிரித்தவாறே கேட்டாள்.
‘’எது வேணும்னு சொல்லுங்க, எடுத்து காட்றேன்’’
ஒரு மெல்லிய செயின், தோடு செட், ரெண்டு வளையல் எல்லாமாக சேர்ந்து அறுபது கிராமில் ஒரு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் என ஒரு சீட்டி எழுதி கொடுத்தனர்.
‘’பணம் கட்டிட்டு வாங்க’’
’’நா முதலாளிய பாக்கனும், ஏ கடையில அவர் தக்காளி வாங்குவார்’’
மகளுக்கு அவமானமாக போய் விட்டது. அப்பாவை கடிந்தாள்
‘’அப்பா முதலாளி உங்க மச்சானா இந்த கடையில நட்பு உறவு சொல்ல முடியாது?”’
’’இல்ல ஏ கடையிலதான் அவரு தக்காளி கத்திரிக்கா வாங்குவாரு, நா குறச்சி தருவேன்’’
‘’சிரித்தவாறே அந்த பெண் சொன்னாள், முதலாளி மேல இருக்கார்,’’ அவள் சற்றுத் தள்ளி இருந்த கூண்டுக்கு அருகே சென்று ஏதோ சொன்னாள். கூண்டுக்குள் இருந்தவன் கைபேசி எடுத்து பேசினான். அந்த ஏ சி யில் கந்தசாமிக்கு வியர்த்தது.
‘’அப்பா 186000/ வச்சிருக்கயா, எனக்கே ஓ மேல சந்தேகமா இருக்கு, இவ்வளவு தங்கம் கொடுத்து அந்த ஆள நா கல்யாணம் பண்ணனுமா’’
அம்மாவின் கண்களில் இரு நீர் முத்துக்கள் ஊற்றெடுத்து விழாமல் ஒளி பிரதிபலிப்பை கொடுத்தது.
’’நீ எங்க ஒரே பொண்ணு, இதெல்லாம் எங்க கவலை, நீ கல்யாணப் பொண்ணு, இதையெல்லாம் கணக்கு போடாத.’’
திடீரென நின்ற பெண்கள் பரபரப்பாயினர், அமர்ந்திருந்த பெண்கள் எழுந்தனர். அவர்கள் ஆட்டத்தை கண்ட கந்தசாமி பின்னே பார்த்தார், வேகமாய் எழுந்தார். சாமியை கண்டார்
‘’சாமி நான் கந்தசாமி காய்கறிக் கடை’’
பாக்யலக்‌ஷ்மி ஜுவல்லர்ஸ் முதலாளி உடனே புரிந்து கொள்ள முடியவில்லை
‘’அப்படியா என்ன வாங்கற’’
’’சாமி வாங்கியாச்சு’’
கடை விற்பனை ஊழிய பெண் விலை சீட்டை அவரிடம் நீட்டினாள்
’’’செனா மூனா ^^^^^^^^”’
அவர் என்னமோ சொன்னார், பின் போய்விட்டார்
கடை விற்பனை பெண் அந்த விலை சீட்டில் எதோ எழுதினார். அதை கந்தசாமிக்கும், அவர் மகளுக்கும் காட்டினார் அதில் முன்னூறு குறைக்கப்பட்டு 185700 என இருந்தது. முன்னூறு எழுதப்பட்டு குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் கந்தசாமி சின்ன கணக்குகளில் தேர்ச்சி பெற்றவர். மூன்று நூறு கழிவு ஒரு இழிவு என நினைத்தார்
அவர் கொண்டு வைத்த பணத்தை எண்ண மறந்து விட்டார். நான்கு கத்தைகளை எடுத்து காசாளரிடம் கொடுத்தார். அவற்றை ஒரு குட்டி இயந்திரத்தில் சொருகி எண்ணினார்கள். வியப்புடன் பார்த்த காசாளர் அவரையும் விற்பனை ஊழிய பெண்ணையும் வருமாறு தலையாட்டினார். கந்தசாமியும் அந்த பெண்ணும் காசாளார் கூண்டை நெருங்கினார்கள்.
‘’ ஒரு லட்சத்து எழுபதாயிரம் இருக்கு’’
கந்தசாமி மனைவியை பார்த்தார். அவர் ஆமாம் என தலையாட்டினார். கந்தசாமியும் காசாளரை பார்த்து, ‘’ஆமா’’ 170000 என்றார்.
‘இன்னும் ரூபாய் பதினைந்தாயிரத்து ஏழு நூறு ? ‘’
’’நாளைக்கு சாமி எங்க கடைக்கு வரையில கொடுத்துடுறேங்க’’ காசாளரும் கன்னிப்பெண்ணும் சிரித்தனர் சற்று ஏளனமாய். அந்த பெண் மீண்டும் ஒரு கண்ணாடிக் கூண்டினுள் சென்றாள். மகள் சொன்னாள், ‘’அப்பா இருக்குற பணத்துக்கு வாங்குங்க அப்பா, இந்த கல்யாணம் என்னமோ தேவையில்ல மாதிரி தெரியுது’’
இப்போது அப்பா கண்களில் நீர் முத்துக்கள். அவையும் கூட அங்கு இருந்த வெள்ளம் போன்ற ஒளியை பிரதிபலித்தன.
மீண்டும் கடை பெண்களின் பரபரப்பு, முதலாளி வருகை. அவர் சொன்னார்.
’’ஓ பேரு என்ன சொன்ன’’
’’கந்தசாமி’’
’’ஆ அதுதான் கந்தா உன்னால ஆகுமுன்னா இருக்குற பணத்த கட்டி ரசீது வாங்கீட்டு போ, நாள வந்து பாக்கிய கொடுத்தூட்டு நகைய வாங்கீட்டு போ சரியா?’’
கந்தசாமி சரியென தலையசைத்தான்
தந்தை மகள் மனைவி மூவரும் வீடு திரும்பினார்கள்
மகள் வள்ளி அப்பா அம்மா இருவரையும் இரு நாற்காலிகளில் உட்கார வைத்து அவர்கள் முன்னால் ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்தாள்.
’’நா கடையில என்ன சொன்னே, இருக்குற பணத்துக்கு வாங்க சொன்னேன், நீங்க ரெண்டு பேரும் ஏ பேச்ச எதுக்கு கேக்கல்ல’’
அம்மா சொன்னார்கள்
’’நீ எங்க ஒரே பொண்ணு இந்த மாதிரி இடம் கிடைக்கிறது கஷ்டம்’’
வள்ளி எழுந்து போய் விட்டாள்
அடுத்த நாள் மகள் மறுக்க கணவனும் மனைவியும் மட்டும் பாக்யலக்‌ஷ்மி ஜுவெல்லரஸ் சென்றனர். எப்படியோ கை மாத்தாக வாங்கிய 15700 பணத்தை மனைவியிடம் கொடுக்க அவரும் அதை தன் கை பையில் வைத்திருந்தார்.
முந்திய நாள் வரவேற்ற அதே பெண் ஊழியர் வந்தார். கந்தசாமி மனைவி மீனாட்சி பணத்தை நீட்டினார்.
‘’இருங்க’’ சொல்லி விட்டு அவர் காசாளர் கூண்டுக்கு சென்றார். ஐந்து நிமிடங்களில் கந்தசாமி மீனாட்சி இணையரிடம் வந்து ஒரு சீட்டு கொடுத்தார். அதில் ரூ.33700 என எழுதியிருந்தது.
‘’இது என்ன’’ கம்மிய குரல் கந்தசாமியினுடையது
’’இன்னையில இருந்து பதினெட்டாயிரம் தங்கம் விலை கூடியிருக்கு’’
’’நான் நேத்தே பணம் கொடுத்துட்டேன், இன்னைக்கும் நேத்துக்கும் என்ன வித்தியாசம்’’
’’நேத்து மார்ச் 23 இன்னைக்கு மார்ச் 24 ரூபாய் 600 கிராமுக்கு கூடியிருக்கு’’
’’நான் நேத்தே ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கொடுத்துட்டேன்’’
‘’அத திரும்பி வாங்கிக்கலாம், நகை வாங்கனும்னா இன்னும் பதினெட்டாயிரம் அதிகம் கொடுக்கனும்’’
’’நா முதலாளி சாமிய பாக்கனும்’’
முதலாளி வந்தார் நேற்று போலவே முன்னூறு ரூபாய் குறைத்தார், நேற்று போலவே அது கழிவு இல்லை இழிவு என நினைத்த கந்தசாமி தன் பணம் 170000 திரும்ப பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.
மகளுக்கு அளவற்ற மகிழ்ச்சி தங்க வியாபாரம் நின்று போனதில். அடுத்து மார்ச் 25. தெருவில் கூட்டம் இல்லை. மார்ச் 26 ரோட்டில் கார், பைக் ஒன்றும் ஓடவில்லை. கந்தசாமியின் நிம்மதி அவன் கேட்ட தொலைக்காட்சி செய்தி. காய்கறி விற்பனை அத்தியாவசிய பொருள். ஆகவே அவன் கடைக்கு மூடுதல் இல்லை. மனதுக்குள் தங்க நகை கடைகள் மூடப்படுவது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது. புல்லட்டில் அவர்கள் காய்கறி விற்போர் சங்க தலைவர் வந்தார். வண்டியிலிருந்து இறங்காமல் ரெண்டு விரலை காட்டினார். கந்தசாமி கடை விட்டு வெளியேறி தலைவனிடம் சென்று அவர் கையை பிடித்தார்.
‘’என்ன’’
‘புரியலயா எல்லா ரெண்டு மடங்கு ஏத்தனும், நா இன்னும் பத்து கடைக்கு சொல்லனும், எவனும் மொபைல் எடுக்கமாட்டய்ங்றான்’’
புல்லட் போய்விட்டது
கடை முன்னே ஆடிட்டர் வீட்டு மாமி
ஒரு கிலோ பீன்ஸ், ஒரு கிலோ தக்காளி, கேரட் அரை கிலோ, மாமி வாங்கினார்கள்.
’’கந்தா எவ்வளவு ஆச்சு’’
மனக் கணக்கில் புலி கந்தசாமி, வேகமாய் மனக் கணக்கை வாக்கில் விட்டான்
‘’பீன்ஸ் ஒரு கிலோ 80, தக்காளி ஒரு கிலோ 90, கேரட் அரை 50 கொத்த மல்லி கருவேப்பிலை ஃப்ரீ மொத்தம் ரூ220’’
ஏற்கெனவே சிவந்த ஆடிட்டர் மாமியின் முகம் மேலும் சிவந்தது பொறிந்து தள்ளினார்கள்
‘’மூனு நாள் ,முன்னமே 110 ரூபாய்க்கு வித்தத இன்னைக்கு 220க்கு விக்கிற’’
அவன் பதில் சொல்ல முடியவில்லை. அடுத்த வாடிக்கையாளர் சாமியின் மனைவி. ஆம் பாக்யலக்‌ஷ்மி ஜுவெல்லர்ஸ் மனைவி
‘’என்னப்பா பீன்ஸ் எவ்வளவு’’
வேகமாக சொன்னான் கந்தசாமி, பீன்ஸ் கிலோ 80, தக்காளி 90, கேரட் 100 கொத்தமல்லி கருவேப்பிலை இலவசம்.
கேட்டியா கனகம் ( தங்க கடையின் மனைவி) எல்லாம் டபுள் பண்ணியிரருக்கா. வாங்கிய காய்கறிய மாமி அப்படியே கந்தசாமி முன் இருந்த கூடையில் கொட்டினார்.கனகத்தை கை பிடித்து இழுத்துக் கொண்டு சென்று விட்டார்.
கந்தசாமி தலைவனுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தார்
‘’தல ஏதாவது பிரச்னை வருமா டபுள் வித்தா’’
‘’ஒரு பிரச்னையும் இல்ல, பாரு கொஞ்ச நேரத்துல கூட்டம் நிறைய வரும், ஏப்ரல் 14 வரையிலும் முழு அடைப்பு நம்ம ஆட்சிதான், போலீஸ் வந்தா மட்டும் கவனிச்சுக்க’’
நிம்மதியுடன் பெரு மூச்சு விட்டார் கந்தசாமி.
சற்று நேரம் நல்ல விற்பனை. அதிகம் பணம் பெற்ற அமைதி விரும்பிய சிலர் சொன்ன விலைக்கு வாங்கினர். இருவர்தான் அப்படி வாங்கினர்.
கடை நோக்கி ஆறு பேர். மாதர் மூவர், பின் தொடர்ந்த ஆண்கள் மூவர். மாதர் அணி முன் வந்தது. கந்தசாமியை கேட்டனர். கேட்டதும் பாக்யலக்‌ஷ்மி ஜுவெல்லர்ஸ் ,மனைவி , ‘’அதே விலையா இல்ல குறைக்கப் போறியா நா வார்டு கவுன்சிலரோட, வந்துருக்கேன்’’
‘’இவர்ட்ட என்ன பேச்சு, கலெக்டருக்கு போன் போடு’’ சொன்னது ஆடிட்டர் மனைவி
ஆண் மகன்களில் ஒருவர் கைபேசி எடுத்தார். பேசினார், பேசினார். பேசி முடித்துவிட்டு உடன் வந்தவர்களிடம் சொன்னார்.
‘’ இதுக்கு முந்தியே புகார் வந்துருக்காம், செய்தி கொஞ்ச நேரத்துல வருதாம், இல்லாட்டி ஏற்கனவே வந்துருக்குமாம் ‘’
‘’அப்பா இங்க வா ‘’ கட்டளையிட்ட மகள் கடையிலிருந்து பத்து அடி தள்ளி ஆஃப் ஆகாதா மொபெட்டில் அமர்ந்திருந்தாள். கந்தசாமி அனைவரையும் மறந்து விட்டு மகளிடம் சென்றார்
‘’இப்பயாவது நான் சொல்றத கேப்பயா’’
சரியென தலையசைத்தார்
‘’கடைய பூட்டீட்டு வா வீட்டுக்கு போகலாம்’’
’’ஏ பாப்பா’’
’’வீட்டுக்கு வந்தா சொல்றேன்’’
கந்தசாமி கடை முன் கூடியிருந்த அறுவரை பார்த்து கையெடுத்து கும்பிடு போட்டான், ‘’ நான் விக்கல்ல, கடைய பூட்டீட்டு போறேன் அதிக விலைக்கு வித்தா கலெக்டருக்கு புகார் கொடுப்பீங்க அவர் ஏ மேல நடவடிக்கை எடுப்பார் நா காய்கறி விக்கல்ல’’
பாக்யலக்‌ஷ்மி ஜுவெல்லர்ஸ் மனைவி சொன்னார்
’’என்ன கந்தசாமி ரொம்பதான் கோவிச்சிக்கிற நியாயமான விலைக்கு விக்கனும்னு சொன்னோம் அது தப்பா’’
அப்போதே அங்கு வந்த வள்ளிக்கு நிலைமை புரிந்தது அவள் சொற்கள் சூடாக தெறித்தது
’’அநியாய விலைக்கு விக்கிறதுக்கு நாங்க ஒன்னும் தங்க நகை கடை நடத்தல்ல, தடை உத்திரவு மீறி நீங்க ஆறு பேர் ஒன்னா கூடியிருகீங்க நா போலீசுக்கு போன் பண்ணி ஒங்கள கைது செய்ய சொல்லனும்’’
‘’என்னம்மா ரொம்ப பேசுற நாங்க சொன்னா கலெக்டர் உங்க கடைக்கு சீல் வைப்பார்’’
’’ ஏ அப்பாவே கடைய பூட்டுறாரு பாருங்க’’
வள்ளியும் கந்தசாமியும் வீடு வந்து சேர்ந்தனர். சூடான கொரோனா செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
‘’ தற்போதுள்ள ஊரடங்கு உத்திரவின் போது சிறிய மளிகை கடை மற்றும் காய்கறி கடை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது, இது சம்பந்தமாக மக்கள் தரும் புகார்களின் மீது சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சென்று சீல் வைத்து மூடுவார்கள்…………………………###########”’
இன்னும் என்னன்னமோ அந்த செய்தி வாசிப்பாளர் சொல்லிக்கொண்டே போனார்..வள்ளி தொலைக்காட்சியை துண்டித்தாள்.
தந்தையின் கண்களில் நீர் அருவியாக விழுவதை பார்த்தாள். அவரிடம் சென்று அவர் கையை தன் கையில் எடுத்தாள்; அப்போது அம்மாவும் வந்தார்.
‘’அப்பா கிட்ட சொல்லிட்டியா’’ என்றார் அம்மா
’’சொல்றது என்ன தங்கத்துக்கு ஒரு நியாயம் தக்காளிக்கு ஒரு நியாயம்’’
’’வள்ளி அப்பா கிட்ட சொல்லு கண்ணு’’
என்ன சொல்லப் போற ?
’’நான் அவரோட பேசினே அப்பா’’
’’யாரோட என்ன பேசின வள்ளி’’
வள்ளியும் அத்தியப்பனும் பேசியதை வள்ளி சொல்வதை விட அந்த உரையாடலை மீண்டும் நிகழ்வாக்குவதே மேல். அது கைபேசி உரையாடல்.
‘’ வணக்கம் நாந்தான் பேசுறேன் ‘’
’’நீங்க யாருன்னு சொல்லீட்டு பேசுங்க’’
’’என்ன வந்து பெண் பாத்தீங்க காய்கறிகடை கந்தசாமி பொண்ணு’’
’’ஓ மறக்க முடியாது சொல்லுங்க’’
’’உங்க பேரு என்ன’’
’’என்னங்க பேரு கேக்குறீங்க உங்க பேரு வள்ளி எனக்குத் தெரியும் ஆனா ஏம் பேரு உங்களுக்கு தெரியாம போச்சே சரி சொல்றேன் அத்தியப்பன்’’
’’இல்ல உங்க பேரு தங்க அத்தியப்பன்’’
ஏ அப்படி சொல்றீங்க ?”
’’அஞ்சு பவுன் தங்கம் போட்டாதான் கல்யாணம் பண்ணுவீங்க அதனால உங்க பேர நான் மாத்தீட்டேன்’’’
’’அப்படியெல்லாம் இல்ல உங்க அப்பாவும் ஏ அப்பாவும் பேசினாங்க, இப்ப என்ன ஆச்சு’’
’’அஞ்சு பவுன் வாங்கி உங்களுக்கு கொடுக்கறதுல்ல எனக்கு உடன்பாடு இல்ல நீங்க வேற பொண்ணு அஞ்சு பவுன் போடுற பெண் பாத்துக்கோங்க’’
’’ நா ஏற்கனவே என்னோட வேலை பாக்குற எல்லாருக்கும் சொல்லீட்டேன்’’
’’என்ன சொன்னீங்க’’
’’வள்ளின்னு ஒரு சூப்பர் அழகு பொண்ண மணம் முடிக்கப் போறேன்னு சொல்லீட்டேன்’’
’’நீங்க மருத்துவ அதிகாரியா’’
’’இல்லை ட்ரைவர்’’
’’அப்ப உங்க அப்பா அம்மா பொய் சொல்லியிருக்காங்க’’
’’இங்க பாருங்க நீங்க அஞ்சு பவுன் போட வேணாம் என்ன கட்டிக்கிட்டா நானே உங்களுக்கு அஞ்சு பவுன் தங்க நகை வாங்கித் தரேன்’’
’’உண்மைய சொல்லுங்க நீங்க மருத்துவ அதிகாரியா இல்லை ட்ரைவரா’’
’’ரெண்டுந்தான்’’
’’ நீங்க என்ன வேலைன்னு சொல்ல மாட்டீங்களா’’
’’ நான் 108 ஆம்புலன்ஸ் ட்ரைவர் கம் நர்ஸ்’’
உரையாடலின் இந்த மறு ஒலிபரப்பை கேட்ட கந்தசாமி அப்பாவியாக ஒரு கேள்வி கேட்டார்.
’’பாப்பா சமூகம் மாறிருச்சு பொண்ணும் பையனும் பேசிதான் கல்யாணத்த முடிவு செய்யனும் ஆனா இன்னும் சமூகம் முழுசா மாறானும்’’
’’எப்படி மாறனும் அப்பா’’
’’தங்க நகை கடைகளுக்கு சீல் வைக்கனும்’’
மகள், அம்மா அப்பா எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.

Show 1 Comment

1 Comment

  1. D Solomon Pandian

    Good. Relevant to the present times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *