சிறுகதை : வனம் தந்த மருமகள்-கே.என்.சுவாமிநாதன் sirukathai : vanam thantha marumagal - ke.en.swaminathanசிறுகதை : வனம் தந்த மருமகள்-கே.என்.சுவாமிநாதன் sirukathai : vanam thantha marumagal - ke.en.swaminathan

முன்னொரு காலத்தில் பின்லாந்து நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு அய்னோ, எய்னோ, வெய்க்கோ என்று மூன்று மகன்கள். பிள்ளைகளுக்கு கல்யாண வயது வந்தவுடன் அவர்களைக் கூப்பிட்டுச் சொன்னான். “உங்களுக்கு கல்யாண வயது வந்துவிட்டது. ஆகவே நீங்கள் மூவரும் சென்று உங்களுக்கு ஏற்ற பெண்ணைத் தேடி வர வேண்டும்.
“ஆனால், எந்த திசையில் சென்று மணமகளைத் தேடுவது” என்று கேட்டான் மூத்த மகன் அய்னோ.
“நீங்கள் மூவரும் ஆளுக்கொரு மரத்தை வெட்டிச் சாய்க்க வேண்டும். அந்த மரம் எந்த திசை நோக்கி விழுகிறதோ அந்த திசையில் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவி கிடைப்பாள்” என்றார் அவன் தந்தை.
அடுத்த நாள் மூவரும் ஆளுக்கொரு மரத்தை வெட்டினார்கள்.
அய்னோ வெட்டிய மரம் வடக்கு திசையைக் காட்டியது. அந்த திசையில் ஒரு பண்ணையில் அழகான பெண் ஒருத்தி இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியும்.
எய்னோ வெட்டிய மரம் தென் திசையைக் காட்டியது. அந்த திசையில் உள்ள பண்ணையில் உள்ள பெண்ணுடன் அவன் நடனமாடி இருக்கிறான். ஆகவே அவனுக்கும் மகிழ்ச்சி.
வெய்க்கோ வெட்டிய மரம் காடு இருந்த திசையைக் காட்டியது. அவனைப் பார்த்து அவனுடைய சகோதரர்கள் நகைத்தார்கள். “நீ அந்த திசையில் சென்றால் உனக்கு பெண் ஓநாய் அல்லது பெண் நரி மனைவியாகக் கிடைப்பாள்” என்று கேலி செய்தார்கள்.
மூவரும் மரம் காட்டிய திசையில் பயணம் செய்தார்கள்.
வடக்கு திசையில் சென்ற அய்னோ அந்த அழகான பெண் வீட்டிற்குச் சென்று, அந்தப் பெண்ணின் தந்தையைப் பார்த்து அவருடைய மகளை மணக்கச் சம்மதம் பெற்றான். அதைப் போலவே எய்னோவும் அவனுடன் நடனமாடிய பெண்ணின் தந்தையைப் பார்த்து திருமணத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டான்.
மரம் காட்டிய காட்டுப் பாதையில் நடந்த வெய்க்கோ “மனித நடமாட்டமே இல்லாத இந்தக் காட்டுப் பாதையில் எனக்கு எப்படி பெண் கிடைப்பாள்” என்று நினைத்த வண்ணம் நடந்து கொண்டிருந்தான்.
காட்டு வழியில் ஒரு குடிசையைப் பார்த்த அவன் அதனுள் நுழைந்தான். அங்கு ஒரு சிறிய எலி மேஜை மேலே அமர்ந்து இருந்தது. மனிதர்கள் எவருமில்லை.
“வீட்டில் யார் இருக்கிறார்கள்” என்றான் வெய்க்கோ.
“ஏன், நான் இருக்கிறேன் வெய்க்கோ” என்றது எலி.
எலி தன்னுடைய பெயரைச் சொன்னது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “நீ எதைத் தேடி காட்டிற்கு வந்தாய்” என்று கேட்டது எலி.
“என் தந்தை சொற்படி என்னுடைய வருங்கால மனைவியைத் தேடி வந்தேன்” என்றான் வெய்க்கோ.
தந்தை சொல்படி மரத்தை வெட்டியதும், அவனுடைய இரு சகோதரர்களுக்கும் மக்கள் வசிக்கும் பக்கம் நோக்கி மரம் காட்டியதும், தனக்கு காட்டுப் பாதையைக் காட்டியதையும் கூறினான். “என்னுடைய சகோதரர்களுக்கு அவர்கள் எண்ணத்திற்கேற்ப பெண் கிடைப்பார்கள். ஆனால் எனக்குப் பெண் கிடைக்காமல் வீடு திரும்பி நான் அவமானம் அடைவேன்” என்று வருத்தப்பட்டுச் சொன்னான் வெய்க்கோ.
“நீ ஏன் என்னை உன் வருங்கால மனைவியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது” என்று கேட்டது எலி.
வெய்க்கோ சிரித்தான். “எங்காவது மனிதன் எலியை மணந்து கொண்டதைப் பற்றிக் கேட்டிருக்கிறாயா” என்றான்.
“நான் உனக்கு நல்ல மனைவியாக இருப்பேன். உன்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வேன்” என்ற எலி ஒரு பாடலைப் பாடியது. எலி பாடியது மனதை மயக்க “நான் உன்னை மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் வெய்க்கோ. “நீ வரும் வரை உனக்காக நான் காத்திருப்பேன்” என்றது எலி.
வீடு திரும்பிய மூத்த சகோதரர்கள் இருவரும் அவர்களின் வருங்கால மனைவியின் அழகை வர்ணித்துக் கொண்டிருந்தார்கள். “:சொல், வெய்க்கோ, உன்னுடைய வருங்கால மனைவி எப்படி இருக்கிறாள், நீண்ட காதுடனும், கூர்மையான பற்களுடனும் இருக்கிறாளா” என்று அவனை கேலி செய்தார்கள்
“என்னுடைய மனைவி சிறிய உருவம். எப்போதும் உடலைச் சுற்றி மென்பட்டுத் துணி அணிந்திருப்பாள். அவள் பாடும் போது நான் மெய்மறந்து நிற்பேன்” என்றான் வெய்க்கோ.
“உன் வருங்கால மனைவி என்ன இளவரசியா” என்று கேலி செய்தார்கள். வெய்க்கோவிற்கு இப்படி ஒரு பெண் கிடைத்திருப்பாளா. அவர்களால் நம்ப முடியவில்லை.
சிறிது நாட்கள் கடந்தன. தந்தை மூவரையும் கூப்பிட்டுச் சொன்னார். “நீங்கள் பார்த்த பெண்கள் நல்ல மனைவியாக இருப்பாளா என்று பார்க்க வேண்டும். ஆகவே உங்கள் எதிர்கால மனைவியிடம் எனக்கு ஒரு ரொட்டி சுட்டுத் தரச் சொல்லி வாங்கி வாருங்கள்” என்றார்.
நாங்கள் பார்த்த பெண்களுக்கு ரொட்டி சுடத் தெரியும் என்ற சகோதரர்கள் வெய்க்கோவிடம் “உன்னுடைய இளவரசிக்கு ரொட்டி சுடத் தெரியுமா” என்று கேலி செய்தார்கள்.
“எனக்குத் தெரியாது. அவளிடம் கேட்க வேண்டும்” என்றான் வெய்க்கோ. காட்டில் எலி வசிக்கும் வீட்டிற்கு செல்லும் போது “இந்த முறை நான் தோற்பது நிச்சயம், எலியால் எப்படி ரொட்டி சுட முடியும். என்னுடைய சகோதரர்கள் முன்னால் நான் தலை குனிந்து நிற்கப் போகிறேன்” என்று வருந்தியபடியே சென்றான்.
வெய்க்கோவைக் கண்ட எலி மகிழ்ச்சியில் ஆடிப் பாடினாள். “நீ ஏன் வாட்டமாக இருக்கிறாய்” என்று கேட்டாள். அப்பாவின் கட்டளையைக் கூறிய வெய்க்கோ “என்னுடைய இரண்டு சகோதரர்களும் ரொட்டி கொண்டு வருவார்கள். நான் வெறுங்கையுடன் சென்றால் என்னைக் கேலி செய்வார்கள்” என்றான்.
“நீ ஏன் வெறுங்கையுடன் செல்ல வேண்டும். நான் உனக்கு ரொட்டி சுட்டுத் தருகிறேன்” என்றது எலி.
வெய்க்கோவினால் நம்ப முடியவில்லை.
எலி ஒரு சிறிய வெள்ளி மணியை எடுத்து சத்தம் எழுப்பியது. உடனே நூற்றுக்கணக்கான சுண்டெலிகள் எலியின் முன்னால் வந்தன.
“நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு உயர்ந்த ரக கோதுமை தானியம் கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டது எலி.
சற்று நேரத்திற்கெல்லாம் சுண்டெலிகள் கோதுமை தானியம் கொண்டு வர எலி ஒரு அழகான கோதுமை ரொட்டி சுட்டுக் கொடுத்தது.
அடுத்த நாள் மூன்று சகோதரர்களும் அவர்கள் வருங்கால மனைவிகள் சுட்டுக் கொடுத்த ரொட்டியைத் தந்தையிடம் கொடுத்தனர்.
அய்னோ கொண்டு வந்தது கம்பு ரொட்டி. “நம்மைப் போன்று கடினமான வேலை செய்பவர்களுக்கு உகந்தது இந்த ரொட்டி” என்று பாராட்டினார் தந்தை. எய்னோ கொண்டு வந்த ரொட்டி பார்லியினால் செய்யப்பட்டது. “இதுவும் நன்றாக உள்ளது” என்று பாராட்டினார். வெய்க்கோ கொண்டு வந்த ரொட்டியை சாப்பிட்டவுடன் சந்தோஷத்தில் கூச்சலிட்டார். “கோதுமை ரொட்டி. வெய்க்கோவின் வருங்கால மனைவி செல்வச் செழிப்புடன் இருப்பவர்கள் போலும்” என்றார்.
இரு சகோதரர்களுக்கும் அதைக் கேட்டவுடன் பொறாமை மிகுந்தது.” வெய்க்கோ, உன்னுடைய இளவரசி எங்கிருந்து கோதுமை வர வழைத்தாள்?” என்று கேட்டார்கள்.
“அவள் கையிலிருந்த வெள்ளி மணியில் ஓசை எழுப்பினாள். பணிப்பெண்கள் வந்தார்கள், நல்ல தரமான கோதுமை கொண்டு வரும்படி ஆணையிட்டாள்.” என்றான் வெய்க்கோ.
அவர்களின் பொறாமை அதிகமாகியது. அவர்களை அடக்கிய தந்தை சொன்னார், “நீங்கள் பார்த்துள்ள பெண்கள் மூவரும் அவரவர்களுக்குத் தெரிந்த முறையில் நல்ல ரொட்டி செய்திருக்கிறார்கள். மூவரும் நல்ல மனைவியாக இருப்பார்கள். அவர்களுக்கு மற்றுமொரு சோதனை கொடுக்கப் போகிறேன். அவர்கள் மூவரும் துணி ஒன்று நெய்து எனக்குக் கொடுக்க வேண்டும்” என்றார்.
இரு சகோதரர்களுக்கும் மகிழ்ச்சி. அவர்கள் பார்த்திருக்கிற பெண்கள் நன்றாக துணிகள் நெய்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், இந்த முறை வெய்க்கோவின் இளவரசியை விட இவர்கள் நெய்து கொடுப்பது நன்றாக இருக்கும் என்று நம்பினர்.
‘”எலியாவது. துணி நெய்வதாவது. இந்த முறை தோல்வி நிச்சயம்” என்ற மனநிலையுடன் எலியின் வீட்டை அடைந்தான் வெய்க்கோ.
“வெய்க்கோவைக் கண்ட எலி மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டது. உனக்காகத் தான் காத்திருக்கிறேன். இந்த முறை உன்னுடைய தந்தை என்ன கேட்டிருக்கிறார்” என்றது எலி.
“என் தந்தை இந்த முறை துணி நெய்து தரச் சொல்லியிருக்கிறார். ஆனால் உன்னால் துணி நெய்ய முடியுமா?” என்றான் வெய்க்கோ.
“ஏன் முடியாது” என்று கேட்ட எலி வெள்ளி மணியை எடுத்து ஓசை எழுப்பியது. உடனே நூற்றுக் கணக்கான சுண்டெலிகள் எல்லா திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்தன.
“நீங்கள் எல்லோரும் சென்று மிகவும் மிருதுவான மெல்லிய பட்டு இழை கொண்டு வாருங்கள்” என்று எலி கட்டளையிட்டது.
அந்த பட்டு இழை கொண்டு மிகவும் அழகான துணி ஒன்றை நெய்தது எலி. மெல்லியதாக இருந்த அந்தத் துணியை சிறிய பெட்டியில் போட்டு வெய்க்கொவிடம் கொடுத்தது. அதை வெய்க்கோ சட்டைப் பையில் மறைத்து வைத்துக் கொண்டான்.
அய்னோவின் வருங்கால மனைவி கரடுமுரடான பருத்தியில் நெய்திருந்தாள். “நல்ல தரமான துணி என்று சொல்ல மாட்டேன். பரவாயில்லை என்றார்.”
எய்னோவின் வருங்கால மனைவி நெய்த துணி பருத்தி மற்றும் கைத்தறியால் ஆனது. “முன்னதை விட இது கொஞ்சம் நன்றாக இருக்கிறது” என்றார்.
“வெய்க்கோ உன்னுடைய இளவரசி நெய்த துணி எங்கே” என்று கேட்டார்.
வெய்க்கோ தன்னுடைய பையிலிருந்த சிறிய பெட்டியை எடுத்ததும் இரண்டு சகோதரர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்களுடைய தந்தை பெட்டியிலிருந்து அழகிய பட்டுத் துணியை எடுத்ததும் அவர்கள் சிரிப்பு அடங்கி ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
தந்தை கேட்டார் “இத்தனை அழகான பட்டு இழை உன்னுடைய வருங்கால மனைவிக்கு எப்படி கிடைத்தது.”
“அவள் ஒரு வெள்ளி மணியை அடித்து பணிப்பெண்களைக் கூப்பிட்டு பட்டு இழைகளை எடுத்து வரச் சொல்லி இந்த துணியை நெய்தாள்” என்றான்.
“இத்தனை அழகான பட்டுத் துணியை நான் பார்த்ததில்லை. மற்ற இரண்டு பெண்களும் விவசாய குடும்பத்திற்கு ஏற்றவர்கள். ஆனால் வெய்க்கோவின் வருங்கால மனைவி உண்மையிலேயே இளவரசி. நான் உங்கள் வருங்கால மனைவிகளைப் பார்க்க வேண்டும். நாளையே கூட்டி வாருங்கள்” என்றார்.
“என்னுடைய வருங்கால மனைவி எலி. எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. ஆனால் நாளை அவளைப் பார்த்தவுடன் என்னுடைய சகோதரர்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். ஆனால், அதற்காக நான் வெட்கப்படப் போவதில்லை” என்று மனதில் நினைத்துக் கொண்டான் வெய்க்கோ.
தந்தை அழைத்து வரச் சொன்னதை சொல்லியவுடன் எலி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. எலி வெள்ளி மணியை அடித்து வண்டியை தயார் செய்யச் சொல்லியது. வண்டியில் எலி உட்கார சிறிய பெட்டி, அதை இழுப்பதற்கு ஐந்து சுண்டெலிகள், முன்னால் வண்டியை ஓட்ட ஒரு சுண்டெலி, வண்டியின் பின்னால் ஒரு சுண்டெலி, வெய்க்கோவின் வருங்கால மனைவி எலி சிறிய பெட்டியில் உட்கார்ந்ததும், வண்டி வெய்க்கோவின் வீட்டை நோக்கி நகர ஆரம்பித்தது. வெய்க்கோ வண்டியின் பின்னால் நடந்து வந்தான்.
காட்டைக் கடந்ததும் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றைக் கடக்க ஒரு சிறிய பாலம் இருந்தது. எலியின் வண்டி பாலத்தின் நடுவில் வந்த போது, எதிர்புறத்தில் ஒரு மனிதன் நடந்து வந்தான். சுண்டெலிகள் இழுக்க, எலி அமர்ந்து வரும் வண்டியைப் பார்த்தவுடன் பலமாகச் சிரிக்க ஆரம்பித்தான். பின், காலால் அந்த வண்டியை ஆற்றில் தள்ளி விட்டான்.
“என்ன இப்படி செய்து விட்டாய். ஏன் என் மனைவியை ஆற்றில் தள்ளினாய்” என்று கேட்டு வெய்க்கோ அழ ஆரம்பித்தவுடன், “இது ஏதோ பைத்தியம்” என்று நினைத்து அங்கிருந்து வேகமாக நடந்து போனான்.
கண்களில் கண்ணீருடன் வெய்க்கோ ஆற்றைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
அப்போது ஆற்றின் கரையில் ஒரு அழகிய வண்டியைப் பார்த்தான். அந்த வண்டியை இழுக்க ஐந்து குதிரைகள் பூட்டியிருந்தன. வண்டியை ஓட்ட ஒருவன், வண்டியின் பின்புறம் ஒருவன் இருந்தனர். வண்டிக்குள் நிறைய ஆபரணங்களோடு ஒரு அழகானப் பெண் அமர்ந்திருந்தாள்.
வெய்க்கோ கரையை அடைந்ததும் அந்தப் பெண் “வெய்க்கோ, வாருங்கள். வண்டியில் என்னருகில் அமர்ந்து கொள்ளுங்கள்” என்று கூப்பிட்டாள்.
“நானா என்று விழித்தான்” வெய்க்கோ. “நான் எலியாக இருந்த போது என்னை மணந்து கொள்ள நீங்கள் மறுக்கவில்லை. நான் இளவரசி என்பது தெரிந்தால் என்னை மறுப்பீர்களா” என்று கேட்டாள்.
வெய்க்கோவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இளவரசி சொன்னாள். “ஒரு தீய சக்தியால் நான் எலியானேன். எலி என்று தெரிந்தும், நீங்கள் அன்பு செலுத்தியதாலும், ஒரு மனிதன் என்னைத் தண்ணீரில் தள்ளி விட்டதாலும், என் மீது போட்டிருந்த மாயவலை முழுவதும் அழிந்து விட்டது. உங்கள் தந்தையிடம் ஆசி பெற்றுக் கொண்டு நாம் என்னுடைய ராஜ்ஜியத்திற்குச் செல்வோம்” என்றாள்.
ஒரு இளவரசியின் வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றதைப் பார்த்த வெய்க்கோவின் தந்தையும், சகோதரர்களும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் வந்திருப்பது வெய்க்கோவின் வருங்கால மனைவி என்று தெரிந்ததும், வெய்க்கோவின் தந்தையின் மகிழ்ச்சி பல மடங்காயிற்று.
“வெய்க்கோ, உனக்கு எப்படி இளவரசி மனைவியாகக் கிடைத்தாள்” என்று கேட்டார்.
“மரம் என்னுடைய வருங்கால மனைவி இருக்கின்ற திசை காடு என்று காட்டியது. அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சென்றேன். இளவரசி கிடைத்தாள்.”
“மனைவியைக் கண்டுபிடிக்க மரம் எப்போதும் நல்ல வழி காட்டும்” என்றார் தந்தை.
தந்தையின் ஆசி பெற்று, இளவரசியின் ராஜ்ஜியத்திற்குச் சென்று அவளை மணந்து ஆனந்தமாக வாழ்க்கை நடத்தினான் வெய்க்கோ.

கே.என்.சுவாமிநாதன்,
Flat No.2, Anugraha Apartments,
17A, First Cross Street,
Dr.Radhakrishnan Nagar,
Thiruvanmiyur,
Chennai – 600041 (M) 98410 94270
[email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *