Sirumi Kondu vantha malar Short Story by Vimalathitha Mamallan Synopsis 88 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 88: விமலாதித்த மாமல்லனின் சிறுமி கொண்டு வந்த மலர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

புதிர்த் தன்மை கொண்ட மொழி நடை, ஆரம்ப காலத்தில் அவ்வளவாக அங்கீகாரம் பெறாவிட்டாலும் காலம் செல்லச் செல்ல அதுவே இலக்கிய மொழியின் ஆதார சுருதி என்பது இங்கே நிலை நிறுத்தப்படுகிறது.

சிறுமி கொண்டு வந்த மலர்
              – விமலாதித்த மாமல்லன்

இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன்.  எழுந்தவர் காற்று கருப்பு அடித்தது போல் வெறித்த பார்வையுடன் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தார்.  காலி டபரா செட் எதிரிலிருந்தது.  ஆனால் வேறு யாரோ காப்பி குடித்தது போன்ற பிரமையே அவருக்கு ஏற்பட்டது.  உண்மையிலேயே ஒன்றும் புரிபடவில்லை.  தலைக்கு நாள் மதியத்திலிருந்து இப்போது படுக்கையில் இப்படி உட்கார்ந்திருப்பது வரை அனைத்தும் நாட்டுப்புறக் கட்டுக் கதைகளில் சொல்லப்படுவது போலவே நடந்தேறியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு.

முன் தினம் பகல் உணவை முடித்துக் கொண்டு கடைக்கு வந்தார்.  பையனை சாப்பிட அனுப்பி வைத்து திண்டில் சாய்ந்து கொண்டார்.  காலையிலிருந்து நடந்த வியாபாரத்தைக் கணக்கு பார்த்தார்.  இரண்டு பொருட்கள் மீட்கப்பட்டு போயிருந்தன.  மற்றபடி பெரிய வியாபாரமொன்றும் நடந்திருக்கவில்லை.  

அப்போதுதான் அவளைப் பார்த்தார்.  இருந்தபடிக்கே சற்று முகத்தை மட்டும் தூக்கிப் பார்த்தார்.  எதிர்சாரியில் நின்றபடி அவள் தம் கடையைப் பார்ப்பதை கவனித்தார்.  அவள் தெருவைக் கடந்து படிகளில் ஏறினாள்.  பள்ளிச் சிறுமிக்கு அடகுக் கடையில் என்ன ஜோலி இருக்கப் போகிறது?  மிட்டாய் விற்கிற லாலாக்கடை என தவறி வந்திருக்கும் என்று நினைத்தார்.  முகம் மட்டும் உடம்புடன் ஒட்டாமல் பெரிய மனுஷி போல் கம்பீரமாகக் களையுடன் இருந்தது.  

“இதை எடுத்துக்கிட்டுப் பணம் குடு” மூடியிருந்த வலதுகையை நீட்டிப் பேசினாள்.

வயசுப் பையன்கள் மோதிரம் செயின் என்று அடகு வைக்க வருவார்கள்.  அவர்களிடம் இல்லாத உருட்டெல்லாம் உருட்டுவார்.  இது உன்னுடையதுதானா?  படிக்கிறாயா?  வேலை செய்கிறாயா? கேள்விகள் கேட்பார்.  அதே சமயம் வந்தவனையும் போகவிடமாட்டார்.  இவ்வளவு சிறிய பெண்ணிடம்  ஏதோ அவரால் ஒன்றுமே பேசமுடியவில்லை.  சிறுமியின் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.  

“நான் சீக்கிரம் போகணும்.”

“நிம்பள் என்னா கொண்டாந்திருக்கான்?”

“பூ”

“என்னாது?”

“பூ, புஷ்பம்.”

தேர்ந்த ஜாலவித்தை நிபுணனைப் போல மூடியிருந்த வலது கையை விரல்கள் மெல்லப் பிரிய  விரித்தாள்.   இதழ்களை நமுட்டிச் சிரிப்பது போலிருந்தது.  அசட்டுத்தனமாய் ஆச்சரியப்படப்  போகிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் செய்கை.  நிஜமாகவே அசந்து போனார்.  வேறு வழி, நட்ட நடுப்பகலில் பேத்தி போல ஒரு சிறுமி விலைக்கு வாங்கிக் கொள் என்று வந்து நிற்கிறாள்.  கையை விரித்தால் தங்கரோஜா.  ரோஜாப்பூ சொக்கத் தங்கத்தில், சந்தேகத்திற்கு இடமேயில்லை.  அறுபத்தி மூன்று வயதிலும் கண்ணாடியில்லாமல் பார்க்கிற கண் தவறாது.  கையை படக்கென்று மூடிக் கொண்டாள்.  

“நிம்பள் எவ்ளோ கேக்றான்?”

“ஆயிரம்.”

“என்னாது?”

“ஆ..யி..ர..ம்”

“அவ்ளோ அல்லாம் நம்பல்கு கட்டாது.”

“கட்டாதுனாப் போ, வேற கடைக்குப் போறேன்.”

“நம்பள் அதைத் தேச்சி பாக்றான்.”

“பூவை நான்தான் பிடிச்சுப்பேன்.  கல்லை எடுத்து நீ ஒரசிக்கணும்.”

இரண்டு மூன்று முறை உரசினார்.  எனினும் இன்னுமொருமுறை சோதித்துவிடலாம் என்றது உள்மனம்.  வலியவரும் அதிருஷ்டத்தை நழுவவிடதேயென அதட்டியது மூளை.

கை மாறியது.

குள்ள மேசையின் கீழ் டிராயரைத் திறந்து உள்ளே வைத்தார்.  பணத்தை இரண்டாம் முறையாக அவள் எண்ணிக் கொண்டு இருந்தாள்.  திரும்ப ஒரு தடவை திறந்து பார்த்து மூடினார்.  

நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்காந்திருந்ததில் கால்கள் மரத்துப் போயிருந்தன.  அந்தச் சிறுமியிடம் முகவரி வாங்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது.  சுதாரித்து கடைவாசலுக்குப் போய் கதவைப் பிடித்தபடி தெருவின் இருபுறமும் பார்வையை ஓட்டினார்.  

சிறுமியைக் காணவில்லை.

முகவரி இல்லாவிட்டால் என்ன?  அதுவும் நல்லதற்குத்தான்.  யாரையேனும் அழைத்து வந்தாலும் ஒரு ஆதாரமுமில்லை.  கனத்தை வைத்து எட்டு பத்துப் பவுன் தேறும்.  ஏழெட்டு கிராம் செம்பைக் கழித்தாலும் இன்றைய தினத்திற்கு கிராமம் 180 ரூபாய்.

“உள்ளே வாங்கோம்மா!’

கிழவியும் பெண்ணுமாக உள்ளே வந்தனர்.  அவர் தம்மிடத்தில் வந்து உட்கார்ந்தார்.

“உட்காருங்கோம்மா.”

உட்கார்ந்தபடி இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையை விரித்து காகிதப் பொட்டலத்தை எடுத்தாள்.  இரண்டு கம்மல் மூக்குத்தி முதலியவற்றைக் கண்ணாடிப் பெட்டியின் மேல் வைத்தாள்.  அவற்றைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.  விசும்பும் சப்தம் கேட்டது.  குங்குமப் பொட்டு தவிர ஆபரணமற்றிருந்த அந்தப் பெண் மூக்கும் கன்னமும் துடிக்க அழுது கொண்டிருந்தாள்.  

பேரம் பேசிக் கொண்டார்கள்

“நம்பள் டோட்டல் ஐநூறு தரான்.  நிம்பள் இஸ்டம் செய்றான்.”

பையன் வந்தான்.  ரசீது போடச் சொல்லி அவர்களை ஒரு வழியாக அனுப்பி வைத்தார்.  விளக்கு வைக்கிற நேரமாகிவிட்டது.  நெகிழ்ந்திருந்த கச்சத்தை சரி பண்ணிக்கொண்டு இரவு உணவுக்காக மாடிக்குப் போனார்.  

கொஞ்சம் ஓய்வெடுத்தபின் கடைக்கு வந்தார்.   மகனை அனுப்பிவிட்டு திண்டில் சாய்ந்தார்.  ஒரு அழகான ரோஜா மலர் இருந்தது.  பரபரப்பாய் மேல் டிராயரை இழுத்தார்.  சில்லறைக் கிண்ணங்களும் அவற்றினடியில் நோட்டுகளும் இருந்தன.  இரும்புப் பெட்டியைத் திறந்தார்.  இருக்கிற பொருட்கள் பத்திரமாய் இருந்தன.  அதைப் பூட்டிவிட்டு கீழ் டிராயரைத் திறந்தார்.  துல்லியமாக அந்த ரோஜா மலர் வீற்றிருந்தது.

மாடியைப் பார்த்து மகனுக்கு குரல் கொடுத்தார்.  வந்தவனிடம் விஷயத்தைக் கூறினார்.  சாவியை அவரே எடுத்துப் போய்விட்டதாகவும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று கைப்பணத்திலேயே தான் வியாபாரம் செய்வதாகவும்  மகன் கூறினான்.  திரும்பவும் குனிந்து திறந்து பார்த்தார்.  இன்னும் நூறாயிரும் முறை மூடித் திறந்தாலும் நான் நான்தான் என்றது ரோஜா மலர்.

தெருக்கள் விளக்கற்று இருண்டிருந்தன.  கண்களை இடுக்கிய வண்ணம் தெருக்களை சுற்றி வந்தார்.  இந்த இடங்களில் இருக்க நியாயமில்லை என்று ஒரு தெருவில் திரும்பினார்.  அதுபோய் ஒரு வீட்டில் முட்டிக் கொண்டது.  வந்த வழியே திரும்பி வேறு தெருபார்க்க நடந்தார்.  கடைக்குத் திரும்ப இருந்தவர் எதற்கும் கோவிலை எட்டிப் பார்த்துவிடலாம் என்று குளத்திற்காய் திரும்பினார்.  

கோபுரத்து மெர்க்குரி விளக்கு இருண்ட வானத்தின் பின்னணியில் ஒற்றைக்கல் மூக்குத்தியென சுடர்விட்டது.  நீரற்ற குளம் அமைதி கொண்டிருந்தது.  ஏற்கனவே சில சமயம் இந்தப் பக்கம் நடந்திருந்தாலும் கடக்கவியலா நீளம் கொண்டிருப்பதான பிரமிப்பை அளித்தது குளத்தங்கரை.  

அவருக்கு படபடப்பாக வந்தது.  என்ன அநியாயம் பெரிய பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது.   இதைப் போலீசில் போய் புகார்  பண்ண முடியுமா?  இல்லை யாரிடமாவது சொல்லி அழத்தான் முடியுமா?  எவன் நம்புவான். கனவில்லை கதையில்லை ஒரு சின்னப் பெண் ஸ்கூல் போகிற பெண் என்னை ஏமாற்றி விட்டது.  

அந்தச் சிறுமியின் பிராயத்திலேயே மதராஸ் வந்தாயிற்று.  தாத்தாவின் அருகிலிருந்து பார்த்துப் பார்த்து கற்றுக் கொண்ட தொழில்.  அப்பா அடிக்கடி சொல்லுவார் முகத்தைப் பார்த்தும் சொல்ல வேண்டும்.  அவன்தான் தேர்ந்த வியாபாரி.  இது எப்படி திரும்ப வந்து மீட்குமா?  இல்லை இப்போதிருந்தே நம்முடையது தானா என்று முடிவு செய்ய வேண்டும்.  இப்படியாக தாத்தாவின் ஞானம் அப்பாவின் அறிவு மற்றும் தாமே சுயமாகக் கண்டு கொண்டு அமல் நடத்திவரும் சூட்சுமங்கள் என்று எதற்கும் ஓர் அர்த்தமின்றிப் போய்விட்டது.

அநேகமாக அந்தப் பகுதி முழுக்க அலைந்தாயிற்று.  இனிப் பயனில்லை.  அசதியும் சோர்வும் அந்தரத்திலிருந்து தோன்றியவை போல அவர் மீது திடீரெனக் கவிந்தது.  சீரமமாக இருந்தாலும் சற்று வேகமெடுத்து நடந்தார்.  எது எப்படியிருந்தாலும் கடை திறந்தாக வேண்டும்,  நாளை வெள்ளிக்கிழமை.  வாராந்திர விடுமுறை.  ஏற்கனவே தாமதமாகிவிட்டது.  சோர்வாயிருந்தாலும் அன்றைய தினத்தைத் தொடங்க ஆயத்தமானார்.

கடையைத் திறந்து வைத்திருந்தான் மகன். அவனை அனுப்பி வைத்தார்.  திண்டில் சாய்ந்தபடியே இடுப்புச் சாவியை எடுத்தவர் ஒரு கணம் நிதானித்தார்.  சுயரூபத்தை அடைந்திருக்கலாகாதா என்ற நப்பாசை அவரைப் பிடித்தது.  கழுத்தை ஒடித்து திருப்பி அண்ணாந்து தலைக்குமேல் நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த மகாவீரரைப் பார்த்து மனதிற்குள் பிரார்த்தித்தபடி கீழ் டிராயரைத் திறந்தார்.   அப்போதுதான் கொய்யப்பட்டதுபோல் ரோஜா மலர் நிர்மலமாய் காட்சியளித்தது.  

அவருடைய கடைசிப் பேரன் கைகளால் படிகளைப் பிடித்து ஏறி கடைக்குள் வந்தான்.  வேறு சமயமாயிருந்தால் குழந்தையைத் தூக்கி மார்பிலணைத்துக் கொண்டிருப்பார்.  குழந்தைக்குள்ள மேசையில் கையூன்றி ஏறினான்.   மூடப்படாதிருந்த கீழ் டிராயரில் மலரைப் பார்த்ததும் குதூகலமாய் மழலையில் கூவிக் கொண்டு அதையெடுக்கக் கையை நீட்டினான்.  எரிச்சலுடன் அவன் கையைத் தட்டிவிட்டு மேலே போகும்படி விரட்டினார்.  தாங்கவியலாத ஆற்றாமையுடன்  மலரை எடுத்துத் தெருவில் வீசினார்.  அது சாக்கடையோரத்தில் போய் விழுந்தது.

கனத்த பேரேட்டைத் தூக்கி வைத்துக் கொண்டு வேலையில் மூழ்கினார் அவர்.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *