ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை தோலுரிக்கிறது தோழர். சீதாராம் யெச்சூரியின் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?
பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த கடந்த 11 ஆண்டுகளில் மதச்சார்பின்மை மீதும் மதச்சார்பின்மையை பாதுகாத்து நிற்கின்ற அரசமைப்புச் சட்டத்தின் மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. அவர்களின் ஒட்டுமொத்த நோக்கம் இந்தியாவில் ஒரு இந்து ராஷ்டிரத்தை அமைப்பது தான். அத்தகைய இந்து ராஷ்டிரத்துக்கு கோல்வால்கரால்(RSS தலைவர் 1940 – 1974) 1939 – ல் வெளியிடப்பட்ட “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்” என்னும் அருவறுக்கத்தக்க புத்தகம் சில வரையறைகளை நிர்ணயம் செய்கிறது. மிக மோசமான திரிபுகளையும், வன்மத்தையும் கொட்டி தீர்த்துள்ள அந்த புத்தகத்தை கோல்வால்கர் எழுதவே இல்லை என ஆர்எஸ்எஸ் மறைக்க முயன்றாலும் அதனுடைய முன்னுரை கோல்வால்கரால் தான் அந்த புத்தகம் எழுதப்பட்டது என அம்பலப்படுத்தி விட்டது. ஆர்எஸ்எஸ் கொண்டுள்ள இந்து ராஷ்டிர பார்வையை விவரிக்கின்ற கோல்வாக்கரின் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்” புத்தகத்தை, 1993 – ல் ஒரு விரிவான பகுப்பாய்வுக்கு உட்படுத்தி தோழர். சீதாராம் யெச்சூரி அவர்களால் எழுதப்பட்டது தான் “இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?” என்கின்ற இந்த புத்தகம்.
சுதந்திரப் போரில் ஆர்எஸ்எஸ் பங்களிப்பு
இந்திய மக்களின் ஒற்றுமையில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தினை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஒட்டுமொத்த மக்களும் சாதி, மத, இன பாகுபாடின்றி ஒற்றுமையோடு நின்று பிரிட்டிஷாருக்கு எதிராக போராடியதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. விடுதலைப் போரில் பிரிட்டிஷாருக்கு எதிராக சிம்ம சொப்பனமாக பகத்சிங்கின் தோழர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு சுரண்டலுக்கு எதிராகவும், காலணிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைக்காகவும்போராடி தூக்கு மேடை ஏறினர். காலணிய இந்தியாவில் நில பிரபுத்துவத்திற்கு எதிராகவும், பரிபூரண சுதந்திரத்தை முன்னிறுத்தியும் காங்கிரசுக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்தனர். தேசமே பிரிட்டிஷாருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான தங்களின் வெறுப்பு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் காலனித்துவத்துடன் இணைந்து பணியாற்றி, பிரித்தாளும்’ நடவடிக்கையை நடைமுறைப்படுத்திய ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ் மட்டும் தான்.
காந்தியை படுகொலை செய்த RSS
மத பிளவுவாத அரசியலை ஆர்எஸ்எஸ் நினைத்ததை போல் அவர்களால் முன்னெடுக்க முடியவில்லை. அதற்கு ஒரு வகையில் காந்தியும் தடையாக இருப்பதாக கருதினர். காந்தி கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற தேசமாக இருக்க வேண்டும் என காந்தி உறுதியாக இருந்தார். காந்தியை பின்பற்றியவர்களும் ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்திற்கு நேர் எதிரான மதச்சார்பின்மை எனும் நிலைப்பாட்டை எடுத்தது சங்பரிவார கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனவேதான், ஆர்எஸ்எஸ் – ஐ சேர்ந்த நாதுராம் கோட்சே 1948 ஜனவரி 30 அன்று காந்தியடிகளை படுகொலை செய்தான்.(அந்த காலகட்டத்தில் கோல்வால்கர் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்) இதனை தொடர்ந்து 1948 பிப்ரவரி 4 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. இந்த தடையினை போக்கிக் கொள்ள அரசோடு பல்வேறு பொய்யான சமரசங்களையும், நயவஞ்சக நடவடிக்கைகளையும் ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டது. கலாச்சார அமைப்பாக செயல்படுவோம் எனவும் அரசியலில் ஈடுபட மாட்டோம் எனவும் அனைத்து தரப்பினரிடமும் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்வோம் எனவும் உறுதி அளித்து தங்கள் மீதான தடைகளை விளக்கிக் கொண்டனர்.
அரசியல் முகம்
பொதுமக்களின் பார்வையில் கலாச்சார அமைப்பாக இருந்து கொண்டு, அதே வேளையில் இந்து ராஷ்டிரம் எனும் அவர்களின் அஜண்டாவை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு ஏராளமான சங்பரிவார கிளை அமைப்புகளை உருவாக்க கோல்வால்கர் திட்டமிட்டார். அப்படிதான் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஷிவ்ராம் சங்கர் ஆப்டே என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகரால் உருவாக்கப்பட்டது. தனித்தனி அமைப்பாக இந்துத்துவ அமைப்புகள் தோற்றமளித்தாலும் அவை அனைத்தும் RSS – ன் நோக்கங்களை தங்கு தடையின்றி செயல்படுத்தும். இப்படியாக நூற்றுக்கணக்கான இந்துத்துவ அமைப்புகள் இந்தியாவில் வேரூன்றி உள்ளது. அவர்களின் நோக்கம் வரலாற்றை திரித்து பிரச்சாரம் செய்வது, அந்த திரிபுகளுக்கு எதிராக பேசுபவர்களை படுகொலை செய்வது, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தி கலவரத்தை நிகழ்த்துவது தான். 1951- ல் ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவாக ஷியாமா பிரசார முகர்ஜியால் ஜன சங்கம் உருவாக்கப்பட்டது. ஜன சங்கத்தை தோற்றுவிக்க தீனதயாள உபாத்யாயா, வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்றோர் கோல்வால்கரால் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த ஜனசங்கம் தான் தற்போது இந்த நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய RSS – ன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சி. அவர்களின் கையில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு எந்தெந்த வகையில் எல்லாம் இந்து ராஷ்டிரம் என்கின்ற அவர்களின் கருத்தியலை நோக்கி முன்னேற முடியுமோ அந்த எல்லா முயற்சிகளையும் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
கோல்வால்கர் வரையறுத்த தேசம்
தேசம் என்ற வரையறைக்கு கோல்வால்கர் ஐந்து குணாம்சங்களை சொல்கிறார். “பூகோள நிலை,இனம்,மதம்,கலாச்சாரம் மற்றும் மொழி” இதன் மூலம் நமக்கு ஒரு விஷயம் தெளிவுபடுகிறது.
பல்வேறு தேசிய இனங்கள் அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பின்பற்றி வாழ்வதை அடிப்படையில் இவர்கள் ஏற்க தயாராக இல்லை. இதனால்தான் கல்வி, மொழி, கலாச்சாரம், மதம் என அனைத்தையும் ஒற்றைத் தன்மைக்குள் கொண்டு வர பாஜக துடிக்கின்றது. பாடத்திட்டங்களில் வரலாற்றை மாற்றி எழுத முயல்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்க வில்லை என்றால் கல்விக்கான நிதியை வழங்க மாட்டோம் என கூறுவது தர்மேந்திர பிரதானின் குரல் மட்டுமல்ல. அதுதான் ஆர்எஸ்எஸ்-ன் குரல். கோல்வால்கரின் குரல்.
இந்துராஷ்டிர செயல் திட்டத்தின் குரல். “இந்த தேசத்திற்கு சொந்தமாயிராத மற்ற அனைவரும், அதாவது, இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றிற்கு சொந்தமாயிராத அனைவரும் இயற்கையாகவே உண்மையான “தேசிய” வாழ்விலிருந்து விலகி விடுகிறார்கள். ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில் மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும் வரை அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும்” என்று தனது புத்தகத்தில் கோல்வால்கர் எழுதுகிறார். இந்த செய்தியை தான் நாட்டு மக்களுக்கு பாஜக CAA சட்டத்தின் வாயிலாக சொல்கிறது.
பாசிச குணாம்சம்
கோல்வால்கர் தன்னுடைய புத்தகத்தில் ஹிட்லரை உச்சி முகர்ந்து பாராட்டுகிறார். அவர் குறிப்பிடுகிறார் “ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக தங்கள் நாட்டிலிருந்து யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ஹிந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை இதனை நாம் கற்றுக் கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.” உண்மையில் இவர்கள் எத்தகைய கொடிய எண்ணம் கொண்டவர்கள் என்பது இதன் வாயிலாக புரிந்திருக்கும்.
ஆர்எஸ்எஸ் அமைக்க நினைக்கும் இந்துராஷ்டிரம் யாரை கொன்று, யாரை கீழ்ப்படியச் செய்து, யாரை உச்சிமுகர்ந்து கொண்டாட போகிறது என்பதை நாம் சொல்ல வேண்டாம் கோல்வாள்கரே வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இந்து ராஷ்டிரம் என்பது இந்துக்கள் அல்லாத மத சிறுபான்மையினருக்கு மட்டும் ஆபத்து அல்ல. இந்தியாவில் வாழும் பல்வேறு மொழி பேசக்கூடிய, பல்வேறு பண்பாட்டு கலாச்சார அடையாளங்களை கொண்டுள்ளவர்களுக்கும், தேசிய இன உரிமைகளை பேசக்கூடியவர்களுக்கும் இந்து ராஷ்டிரம் என்பது ஒரு சவப்பெட்டியை போன்றது. எனவே ஆர்எஸ்எஸ் – ன் இந்த நிகழ்ச்சி நிரலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, அதற்கு எதிராக செயல்பட வேண்டிய அவசியம் முன்னுக்கு வந்துள்ளது.
இப்படி ஒரு புத்தகமே வெளிவரவில்லை என்று ஆர்எஸ்எஸ்காரர்கள் சொன்னாலும் கூட, இதில் உள்ள கருத்துக்களை மறுப்பதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த எந்த ஒரு நபரும் இதுவரை சொன்னதில்லை. இதுதான் ஆர்எஸ்எஸ் – ன், அதனுடைய அரசியல் வடிவமான இன்றைய பாஜகவின் ஒட்டுமொத்த அரசியல் நிகழ்ச்சி நிரல். “பாசிசம் மக்கள் மத்தியில் வெறியைக் கிளப்புவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பிரத்தியேகமான சிறப்பியல்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் மக்கள் உணர்ச்சியை வெறித்தனமாகக் கிளப்பிடும் பேச்சுகளுக்கு, சிறு முதலாளிய வர்க்கத்தினரும், ஏன், தேவையாலும், வேலையின்மையாலும் பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருவதாலும் விரக்தியினால் பிடிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களும்கூட, மிக எளிதாக பலியாகி விடுகிறார்கள்” என்று டிமிட்ரோவ் சொல்கிறார். நவீன தாராளமயத்தின் உதவியோடு இன்று பாசிசம் வளர்ந்து வருகிறது என்பதை உணர்வது அவசியம். முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளின் தோல்வியின் விளைவாக நிலவக்கூடிய மக்களின் அடிப்படை வாழ்வாதார நெருக்கடி, வேலையின்மை, ஏழ்மை, பட்டினி சாவுகள் என எதைப்பற்றியும் கவலைப்படாதபடி மனித மூளையை மழுங்கடிக்க செய்து பாசிசத் தன்மையோடு மதவாத அரசியலை ஆர்எஸ்எஸ் நடைமுறைப்படுத்தி வருகிறது.
மனு அதர்மத்தை உயர்த்துப் பிடித்து
இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுநராக கோல்வால்கர் மனுவை ஏற்றுக் கொள்கிறார். இந்திய சமூகத்தில் சாதிய கட்டமைப்பை கெட்டிப்படுத்தவும், பெண்களை இழிவானவர்களாகவும் நடத்தவே ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இந்து ராஷ்டிரத்தில் மனுதர்மம் தான் அரசியலமைப்புச் சட்டம். இந்தியா பழமைவாதம் நிறைந்த சாதிய படிநிலைகளை கொண்ட மனிதநேயமற்ற சமூகமாக மாற வேண்டும் என்பதுதான் கோல்வால்கரின் விருப்பமாக இருந்துள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட அம்சங்கள் ஆர்எஸ்எஸ் – க்கு நெல்லிக்கனியாய் கசக்கிறது. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை ஏற்பதற்கு இன்றளவும் ஆர்எஸ்எஸ் தயாராக இல்லை. கோல்வால்கர் 1949 செப்டம்பரில் லக்னோவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் “பாரதத்தினருக்கு எதிரானது” என்கிற ஆர்எஸ்எஸ் – ன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். எனவே, அவர்கள் விரும்பக்கூடிய பாரதத்திற்கு ஏற்ற வகையிலான சட்டங்களை இன்று அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு ஆர்எஸ்எஸ் – ன் வழித்தோன்றலான பாஜக செய்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
தோழர்.சீதாராம் யெச்சூரி குறிப்பிடுகிறார், “காவிப்படையினர் ஆட்சிக்கு வருவது என்பது, மத்தியில் ஒரு கட்சிக்குப் பதிலாக பிறிதோர் கட்சி ஆட்சியை அமைக்கிறது என்பதுபோன்ற வழக்கமான ஒன்று அல்ல. மதச்சார்பின்மை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பு, சகிப்புத்தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ள வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது என்பது இதன் பொருளாகும்”. இந்துக்களுக்கான நாடு என்று இந்து ராஷ்டிரத்தை ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொண்டிருந்தாலும், அப்பட்டமான பிராமணிய மேலாதிக்கத்துடன் கூடிய ஒரு இந்து ராஷ்டிரத்தை படைப்பது என்பது மட்டும் தான் அவர்களின் நோக்கம். இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த கருத்தியலை வீழ்த்துவதற்கு நாம் இஸ்லாமியராக இருக்க வேண்டிய அவசியமில்லை, இதர மத சிறுபான்மையினராக இருக்க வேண்டிய அவசியமில்லை, சக மனிதனை விரும்பக்கூடிய எந்த ஒரு நபரும், மனித மாண்புகளோடு வாழும் எந்த ஒரு நபரும் ஆர்எஸ்எஸ் – ன் கருத்தியலுக்கு எதிராக களமாட வேண்டிய அவசர நிலையில் இந்தியா உள்ளது. இந்த தீவிரத் தன்மையை உணர்ந்து கொள்வதற்கு பேருதவியாக தோழர் சீதாராம் யெச்சூரியின் இந்த புத்தகம் அமைந்துள்ளது.
நூலின் தகவல்கள் :
நூல் : இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?
ஆசிரியர் : சீத்தாராம் யெச்சூரி
தமிழில் : ச.வீரமணி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 56 பக்கங்கள்
விலை : ரூ.50
தொடர்பு எண் : +91 94449 60935
நூல் அறிமுகம் எழுதியவர்:
என்.குமரன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.