சிறார் கதை: சிட்டுக்குருவியின் நெஞ்சு சிவப்பானது எப்படி?
மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி
தமிழில் – உதயசங்கர்
தூராதூரத்தில் உறைய வைக்கும் பனிப்பிரதேசத்தில் ஒரேயொரு தீச்சுடர் மட்டுமே இருந்த து. ஒரு வேட்டைக்காரனும் அவனுடைய மகனும் சேர்ந்து அந்த த் தீச்சுடர் அணையாமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டனர். ஒருவேளை தீச்சுடர் அணைந்து விட்டால் வடக்கிலுள்ள மக்கள் குளிரில் விரைத்து மரக்கட்டைகளாகி விடுவார்கள். பனிக்கரடிகள் அந்த இட த்திற்கு வந்து குடியேறிவிடும். அதனால் அந்தத் தீ அணைந்து விடாமல் இரவும் பகலும் அவர்கள் பாதுகாத்தனர்.
ஒரு நாள் வேட்டைக்காரனுக்குக் காய்ச்சல் வந்து படுக்கையில் படுத்து விட்டான். எத்தனை கஷ்டம்! அவனுடைய மகனின் தோள்களில் எல்லாப்பொறுப்புகளும் விழுந்தன. அந்தக் கெட்டிக்காரப்பையன் தைரியமாக, அவனுடைய அப்பாவைக் கவனித்துக் கொள்ளவும், தீயை அணையாமல் பார்த்துக் கொள்ளவும் செய்தான்.
அந்த நாட்களில் ஒரு பனிக்கரடி கிராமத்துக்குள் நுழைய விரும்பியது. கிராமத்துக்கு அருகிலேயே பதுங்கி இருந்தது. கரடியால் தீயை அணைத்துவிட முடியும் ஆனால் வேட்டைக்காரனின் அம்புகளை நினைத்துப் பயந்தது. அதனால் அதற்குத் துணியவில்லை. நாட்கள் கடந்தன. வேட்டைக்காரனின் மகன் பலகீனமாகிக் கொண்டே வருவதை பனிக்கரடி உணர்ந்த து. அதனால் பனிக்கரடி பதுங்கிப் பதுங்கி கிராமத்துக்கு அருகிலேயே வந்து விட்ட து.
என்ன செய்ய? அன்று இரவு பாவம் அந்தப் பையன் பலகீனத்தால் அவனை அறியாமலேயே உறங்கிவிட்டான். அதைப் பார்த்த தும் பனிக்கரடி பாய்ந்து வந்த து. எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது துள்ளிக் குதித்தது. அதன் ஈரமான கால்களினால் தீயை மிதித்து அணைத்த து. அதன் மீதே படுத்து உருண்டு தீ முழுவதும் அணைந்து விட்ட தை உறுதிப்படுத்தியது. அதன்பிறகு மகிழ்ச்சியுடன் தன்னுடைய குகைக்குத் திரும்பியது.
ஆனால் இந்த நடவடிக்கைகளை எல்லாம் ஒரு உயிர் பார்த்துக் கொண்டிருந்தது. யார் என்று தெரியுமா? அங்கே பறந்து கொண்டிருந்த ஒரு சிட்டுக்குருவி. அது பனிக்கரடி போகும்வரை காத்திருந்தது. பின்பு பறந்து இறங்கியது. அதன் கூர்மையான சிறிய கண்களினால் அங்குமிங்கும் பார்த்தது.
அதோ! தீ இருந்த இட த்தில் ஒரு சிறிய கங்குத்துண்டு. அதுவும் அணைந்து கொண்டிருந்தது. அந்தக் கங்கை தன்னுடைய சிறகுகளால் விசிறி மீண்டும் எரிய வைக்க தீவிரமாக முயற்சித்தது.
எவ்வளவு நேரம் வீசிக் கொண்டிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. வீசி வீசி சிட்டுக்குருவியின் நெஞ்சு எரிந்தது. சிவப்புநிறமாக மாறிக் கொண்டிருந்தது. அந்தக் கங்கு பெரிதாய் எரியும் வரை வீசுவதை நிறுத்தவில்லை. கடைசியில் தீ பற்றி எரிந்து தீப்பிளம்புகள் உயர்ந்த போது அது பறந்து வடக்குப் பகுதியிலுள்ள ஒவ்வொரு குடிசைக்கும் சென்றது. அது பறந்து சென்று தொட்ட இடம் எல்லாம் தீப்பிளம்புகள் எரியத் தொடங்கின. எவ்வளவு அதிகமாகத் தொடமுடியுமோ அவ்வளவு இடங்களில் அந்தச் சிட்டுக்குருவி தொட்ட து. அந்தப் பகுதியே ஒளிவெள்ளம் ஆனது.
ஆனால் சிட்டுக்குருவியின் நெஞ்சில் தீப்பிடித்து சிவப்பு நிறமாகி விட்டது. இப்படித்தான் செம்மார்பு சிட்டுக்குருவி என்ற புதிய பறவையினம் உருவானது.
தீயை அணைத்த பனிக்கரடியோ இந்த வெளிச்சத்தைப் பார்த்துப் பயந்து போனது. குகையின் மூலையில் போய்ப் பதுங்கிக் கொண்டது. பெருங்குரலில் ஊளையிட்டது. பனிக்கரடிக்கு ஒரு விஷயம் புரிந்தது. ஆசைப்பட்டது தான் மிச்சம். வடக்கு தேசம் ஒருபோதும் தனக்குக் கிடைக்கப் போவதில்லை.
செம்மார்பு சிட்டுக்குருவியின் நெஞ்சு எப்படி சிவப்பானது? என்ற இந்தக் கதையை வடக்கு தேசத்திலிருப்பவர்கள் இப்போதும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செம்மார்பு சிட்டுக்குருவியின் மீது மாறாத அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் தான் சேக்காளிகளுக்கு இந்தக் கதையை நான் சொன்னேன்.
எழுதியவர் :

✍🏻 உதயசங்கர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

