சிறுகதை: இன்னும் அவள் – ப. சிவகாமி

Sivakami Paramasivan's Innum Aval Short Story. This Story About Issues Between Mom And Daughters. Book Day is Branch Of Bharathi Puthakalayam            ங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்றின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சாந்தி. 

              இந்த வானம், பூமி, பிற்பகல் பொழுது, மானிட வெளிச்சம், சூழல்கள், சலனங்கள், ஆரவாரங்கள் எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை  அவள். 

            ‘சாகத் துணிவு இல்லை. அதனால் தொலைந்தாவது போய்விட வேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே அவளை ஆக்கிரமித்திருந்தது. அதற்கு

           தெரிந்த முகங்கள் அற்ற ஏதேனும் தெரியாத ஊருக்குச் சென்றுவிட வேண்டும். எங்கு செல்வது என்றத் தெளிவு இல்லாததால் விழுப்புரம்விருத்தாசலம், திருச்சி, கோழிக்கோடு வழியாக மங்களூர் வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட அவசரமாக திருச்சிக்கு ஒரு பயணச் சீட்டு பெற்றுக்கொண்டு அமர்ந்துவிட்டாள். 

             எதிரில் கருப்புநிற பர்தாவோடு இரண்டு இஸ்லாமியப் பெண்மணிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் வயதில் இளைய பெண்மணி கையில் ஒரு ஆண்மகவு. அவள் பக்கத்தில் ஆறேழு வயதுடைய ஒரு பெண் குழந்தை. அமர்ந்த இடத்திலேயே அசைந்து அசைந்து விளையாடியபடியே பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனியைத் தின்று கொண்டிருந்தாள். மென்மையான ரோஸ் நிறத்தில் ஆடை அணிந்திருந்த குழந்தை அழகாக இருந்தாள். இடப்புற ஜன்னலோர இருக்கையில் கட்சிக்கறை வேட்டியுடன் தூய வெள்ளை ஆடையில் ஒரு முதியவர் காலியாகயிருந்த எதிர் சீட்டில் செளவுகரியமாக காலை நீட்டி, அமர்ந்துகொண்டுக் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தார்.

              மாலை மணி ஐந்தைக் கடந்திருந்தது. ரயில் புறப்படத் தாமதமாகும்போல் தெரிந்தது. பசி வயிற்றைப் புரட்ட, ரயில் நிலையத்தில் கூவிக் கூவி விற்கப்பட்ட  இஞ்சி டீ, சமோசா ஆகியவற்றை வாங்க மனமில்லாத சாந்தி ரயிலை விட்டு இறங்கினாள். ஒரு நூறடி தூரத்தில் வரிசையாக நான்கைந்துப் பெண்மணிகள் கொய்யாப் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். விறுவிறுவென நடந்து அவர்களில் ஒருவரிடம் அரை கிலோ கொய்யாப் பழத்தை வாங்கித் தான் வைத்திருந்த கைப்பையில் திணித்துக் கொண்டாள்.                டீ, காபி, சமோசா, வடை என்ற ஒலிகள் உரத்து ஒலிக்க பரபரப்பாகவே காணப்பட்டது அந்த நடைமேடை.   வந்தவள் பெட்டிக்கு அருகில் நடந்து கொண்டிருந்த ஒருவரிடம் இந்த ட்ரெயின் எத்தனை மணிக்குத் திருச்சிக்கு போய்ச் சேரும்?” என்று கேட்டாள். அவர் சில வினாடிகள் யோசித்தப் பின் பெட்டிக்குள் அமர்ந்திருந்த மற்றொருவரிடம் விசாரித்துவிட்டு எட்டரைக்குச் சென்றடையும் என்றார். 

                  “நன்றி சொல்லிவிட்டுப் பெட்டிக்குள் வந்து அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் ரயில் புறப்பட்டதும் அவளைத் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியாக ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

                திருச்சியில் அவளுக்குச் சொந்தம் என ஒருவர் உண்டு என்றால் அது அந்த ஸ்ரீரங்கநாதன் தான். அப்படியிருக்க இலக்கே இல்லாத இந்தப் பயணத்திற்கு என்ன விசாரிப்பு வேண்டி இருக்கிறது என்றுத் தனக்குத் தானே ஏளனம் செய்து கொண்டாள்.

                   விருத்தாசலத்தில் இஸ்லாமியப் பெண்மணிகள் இறங்கிக்கொள்ள அவ்விடத்தில் சுமார் பதினெட்டு பத்தொன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் அமர்ந்து கொண்டனர். அவர்கள் கல்பாக்கத்தில் இருந்து கோழிக்கோட்டிற்குச் சென்று மீன்பிடி படகுக்குப் போகிறவர்கள் என்பது  அவர்களது உரையாடல்கள் மூலம் தெரிந்தது. உடையலங்காரத்தாலும் சிகையலங்காரத்தாலும் தங்களை நாகரிக இளைஞர்களாகக் காட்டிக்கொண்டாலும் வறுமையின் தாக்கமும் பசியின் தாகமும் அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. 

                       ‘பாவம் இப்பிள்ளைகள்! படிக்கிற வயதில் பிழைப்பைத் தேடி ஊர்விட்டு ஊர் செல்கிறார்களே! சிலருக்குச் செல்வத்தை கொட்டிக் கொட்டிக் கொடுக்கின்ற இறைவன் பலரைப் பசிக்கு உணவுமின்றி இருக்க இடமுமின்றி பரிதவிக்க விடுகின்றானே என்று நினைத்து வருந்தினாள். 

                      டன் தன் கடந்த கால நினைவுகள் அவளுக்குள் அலை மோதின.

மகள்களைப் பற்றிய கவலையேயின்றி தினசரி மது அருந்திவிட்டு வரும் தந்தை. சரியாய் அவரோடு மல்லுக்கு நிற்கும் தாய்!  ஒரு வேளை உணவாவது வயிற்றுக்குக் கிடைக்க வேண்டுமே என ஏங்கித் தவிக்கும் வறிய குடும்பத்தின் நான்கு பெண் குழந்தைகளில் மூத்தவளாய்ப் பிறந்தவள். பகல் உணவு கிடைக்கும் என்றே பள்ளிக்கூடம் சென்றவள். 

                      விடுமுறை நாட்களில் பருத்தி எடுப்பது, நாற்று நடுவது, களை பறிப்பது, கதிர் அறுப்பது, சுள்ளி பொறுக்குவது, புளியம்பழம் உரிப்பதுமணிலா ஆய்வது எனக் கிடைத்த வேலைகளைச் செய்து  வறுமையோடுப் போராடிக் கொண்டு எப்படியோ ஒரு பட்டமும் பெற்று விட்டாள். பிறகு எல்லோரையும் போல கற்றக் கல்வியை விலையாக்க தொடங்கியவள் வயது ஐம்பதைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.                   புகுந்த வீடும் அவளுக்குப் பெரிய மாற்றத்தைத் தரவில்லை. இவளது ஊதியமே மூன்று நாத்திகளையும் ஒரு கொழுந்தனையும் கரைசேர்க்கப் பெருந்துணையாக இருந்தது. இக்கடமைகளை முடிக்கவே மகப்பேற்றினைத் தள்ளி வைத்தது போலிருந்தது மணமாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவள் கருத்தரித்தது!. 

                  பொறுப்பற்ற குடும்பத் தலைவனை வைத்துக்கொண்டு, புகுந்த வீட்டு, பிறந்த வீட்டுக் கடமைகளை புறக்கணிக்காது செய்துகொண்டு இரு மகள்களையும் வளர்த்து ஆளாக்கியதென்னவோ அவள் செய்த மிகப்பெரிய சாதனைதான்!. 

                   ஆனால் இன்று! இந்த இரவில், இந்த இரயிலில் ஏதோ ஒரு ஓரத்தில் தன்னந்தனியாக அனாதையாக அமர்ந்துகொண்டு தன் வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கிறாள். அதன் பக்கங்களில் எந்த ஒரு பகுதியிலும் அவள் தனக்கென ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததைப் பார்க்க முடியவில்லை. தனக்கு எது பிடிக்கும், எப்படி இருந்திருந்தால் தாம் நலம் பெற்றிருப்போம் என்று யோசிக்கக் கூட நேரமின்றி உழைத்துக்கொண்டே இருந்திருக்கின்றாள்.

                    உடல் வலியோ மனச்சுமையோ வதைத்தபோதும், தானே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறதே என்கின்ற கோபத்தில் மகள்களைத் திட்டிவிடுவாள். பிறகு குழந்தைகள் மனதைக் காயப்படுத்தி விட்டோமே என்று அன்றைய பொழுதெல்லாம் நிம்மதியின்றி வருந்தித் தொலைப்பாள். 

                   ன்றைக்கும் அப்படித்தான்! அன்றுப் போகிப்பண்டிகை. அதிகாலை மூன்று மணியிலிருந்து பொழுது சாயும்வரை வேலைகளில் சுழன்று கொண்டிருக்கின்றாள் அங்கமெல்லாம் ஓய்வுக்கு ஏங்கிக் கதறும் அளவுக்கு!.

                 மூத்த மகள் மைவிழி இருக்கையில் அமர்ந்து கைபேசியோடு உறவாடிக் கொண்டிருக்கிறாள்இளையவள் பூவிழி படுக்கையில் சாய்ந்து படிக்கின்றேன் என்று தூங்கிக் கொண்டிருக்கிறாள். தாய் செய்யும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவோ கண்டு கொள்ளவோ நினைத்தவர்களில்லை.

                “காலையில் துவைத்துக் காயப்போட்ட துணிகள் உலர்ந்திருக்கும், எடுத்து வா என்று அரைமணி நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஒருவரும் காதில் வாங்கியபாடில்லை. 

                   அவர்களது அப்பாவைப் போலவே என்ன ஒரு பொறுப்பற்றதனம். குடும்ப சமுதாயத்தில் ஓயாமல் ஒருவர் உழைத்துக் கொண்டிருப்பதைச் சிறிதும் எண்ணிப்பார்க்காது, அவரது நலத்தைப் பற்றித் துளியும் வருத்தப்படாது மேலும் மேலும் அவரது உழைப்பைச் சுரண்டும் வன்முறை!               

இதைக் கேட்கப் போய்த்தான், பிரச்சனை பெரிதாகி மைவிழி தன் தாயையே சாகச் சொல்லி விஷத்தின் பெயரைக்கூட எழுதிக்கொள்ளச் சொல்கிறாள் என்றால்…. 

                சுயவிரக்கத்தால் அவள் கண்களில் கரைபுரண்டு ஓடுகிறது கண்ணீர்! மார்புச்சீலை, கைத்துணி அனைத்தும் நனைந்துவிட்டிருந்தது.                    பெட்டியின் நீண்ட இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலர் இன்றைய அரசியல் நிலவரங்களைக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்ஓரிருவர் வாட்ஸ் அப் தகவல்களைப் பரிமாறிக் கொண்டதோடு அதைப் பற்றியும் விவாதித்துக் கொண்டார்கள். 

                  சற்று நேரத்தில் ஸ்ரீரங்கம் வந்துவிட்டதாக ஓரிரு குரல்கள் ஒலித்தன. ரயிலின் வேகமும் குறைந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு வெளிப்புறம் கூர்ந்து கவனித்தாள் சாந்தி. ஸ்ரீரங்கம் என்றப் பெயர்ப்பலகை கடக்கவும் ரயில் நிற்கவும் சரியாக இருக்க, ஏதோ ஒரு தூண்டலில் வினாடியில் ரயிலை விட்டு இறங்கிவிட்டாள். 

                    ரயில் சென்ற  பிறகு சில நிமிடங்கள் செய்வதறியாதுத் திகைத்தாள். பின்பு அங்கிருந்த ஒருவரிடம் இப்போது சென்றால் ரங்கநாதரை தரிசிக்க முடியுமா?” என்று விசாரித்தாள்.   

                      வாட்சைப் பார்த்த அவர் மணி எட்டாகிறது என்று சொல்லி அருகிலிருந்த தன் நண்பரிடம் விசாரித்து உறுதி செய்த பின்பு, நீங்கள் கோவிலுக்குச் செல்வதற்குள் எட்டரை ஆகிவிடும். கதவை அடைத்து விடுவார்கள். சுவாமி தரிசனம் செய்ய இயலாதே என்றார்.

                    “எங்கிருந்து வருகிறீர்கள்? நேரத்திற்கு வந்திருக்கக் கூடாதா? உங்களுடன் யாரும் வரவில்லையா?” என்று பரிவுடன் விசாரித்தார்கள். நாளை தைத் திங்கள் முதல் நாள்! காலை ஐந்தரை ஆறு மணிக்கு மேல்தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்றார்கள். 

                     இவள் தனியாக வந்திருப்பதால் இரவு தங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பான ஓர் இடத்தை அருகிலிருந்த ஒரு ஆட்டோகாரரிடம் அவர்களே விசாரித்தார்கள். அருகிலுள்ள ரெசிடென்சி ஒன்றில் 750 ரூபாய். கோயிலுக்கு அருகிலுள்ள மற்றொரு ரெசிடென்சியில் 950 ரூபாய் வாடகை என்றார் ஆட்டோகாரர். அவ்வளவு பணம் இல்லை அவளிடம்! 250 ரூபாய் வாடகையில் ரயில் பயணிகள் தங்கும் அறைக்கு முன்பதிவும் அதாரும் அவசியமாம். இவள் முன்பதிவு செய்யவில்லை. ஆதாரும் கொண்டு வரவில்லை. 

                   என்னப் படித்து என்ன? இயந்திரங்களைப் போல பணிகளைச் செய்தாளே தவிர வெளியுலக அனுபவங்கள் அறிந்தவளில்லை. அதன் பலனை இன்று பூரணமாக உணர்ந்து வதைபட்டுக் கொண்டிருந்தாள் இந்த ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில்!.

               அந்த மாயவனின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களை மனக்கண்முன் நிறுத்தி தினம்தினம் உருகி உருகி பாசுரம் பாடுபவள். இன்று இதோ மிக அருகில் இருந்தும் அவனது கிடந்த கோலத்தைக் கண்குளிரக் காண அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. கையில் பணமுமில்லை. உடலில் பலமுமில்லை. மனதில் உறுதியுமில்லை. என்ன செய்வாள் அவள்?. 

                     மனிதநேயமிக்க ரயில்வே ஊழியர் ஒருவர் சொன்ன ஆலோசனையின்படி அடுத்த அரைமணி நேரத்தில் வந்த பல்லவன் எக்ஸ்பிரஸில் திருச்சி ஜங்ஷனுக்கு வந்து பெண்கள் தங்கும் அறையில் அமர்ந்து கொண்டாள். பக்கத்தில் மாற்றுத் திறனாளி மங்கை ஒருவர் அமர்ந்திருந்தார். நடுவயதைக் கடந்த மகளிர் இருவர் தரையில் ஓய்வெடுத்திருந்தனர். பாலூட்டும் அறையில் இரு மங்கையர்கள் தம் மழலையர்க்குத் தாய்ப்பாலூட்டி மகிழ்ந்தனர்.

                   மறந்திருந்த பசி வயிற்றைக் கிள்ள கைப்பையில் இருந்த கொய்யாப்பழம் நினைவுக்கு வந்தது. அதை உண்ணலாம் என பையைத் திறந்தாள். பையில் கைபேசி மின்னிக் கொண்டிருந்தது. நேரம் பார்க்க எடுத்தவள் சுவிட்ச் ஆப் செய்யாமல் வைத்திருக்கிறாள். எடுத்துப் பார்த்தாள். ஏராளமான மிஸ்டு கால்கள்! இரு மகள்களும் மாறிமாறி அழைத்திருக்கிறார்கள். 

                     ஒரு கொய்யாவை எடுத்து  உண்டாள். பின்பு பள்ளி இறுதியாண்டு படிக்கும் இளைய மகள் பூவிழி மீது பரிவு மீதூர அவளுக்குப் போன் செய்தாள். 

                    “அம்மா! நீ எங்கே இருக்கிறாய்? கிளம்பி வாம்மா! அக்காவும் உன்னைத் தேடிக்கொண்டிருக்காம்மா! அவள் மட்டும்தான் உனக்கு மகளா? அவளுக்காக மட்டும்தான் நீ இருந்தியா? அவள் செத்துப்போ என்றால் நீ போயிடுவியா? நான் உனக்கு மகள் இல்லையா? நான் எப்படி போனாலும் உனக்குப் பரவாயில்லையா? நீ எங்கே இருக்கிறாய் சொல். நானும் வருகிறேன் என்று படபடத்தாள் பீறிடும் அழுகையினூடே! 

                 “நான் இல்லையென்றால் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்றாளே உன் அக்கா! அவள் உன்னைப் பார்த்துக் கொள்வாள். நீ கவலைப்படாமல் படிப்பில் கவனமாயிரு என்றாள் சாந்தி.                 “அவள் சொன்னால் நீ நம்பிவிடுவாயா? அவளும் உன்னைத் தேடி அழுது கொண்டிருக்கிறாள். கிளம்பி வாம்மா!” என்றாள் பூவிழி.

                    தாய்மைக்கே உரிய அன்பு பெருக்கெடுத்து இதயம் உருகியது சாந்திக்கு!  மீதூரும் இந்த அன்புதானே எத்தனையெத்தனை இன்னல்களையும் வேதனைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் தாண்டி அவளை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

                    மணி பதினொன்றரை ஆகிறது. விடிந்தால் பொங்கல் திருநாள்! தமிழர் திருநாளாம்  இத்திருநாளைக் கொண்டாடப் பணிநிமித்தம் எங்கெங்கோ பிரிந்து சென்றவர்கள் கூட சொந்த ஊரைத் தேடி சென்று கொண்டிருப்பதை பறைசாற்றுகிறது நள்ளிரவிலும் மக்கள் கூட்டம் அலைமோதும் திருச்சி சந்திப்பு! 

                     மைவிழி  அன்பும் பண்பும் நிறைந்த பெண்தான். கல்லூரியில் முதலாண்டு படிக்கும் வரை கூட சின்னக் குழந்தை போலவே வெகுளியாகத்தான் இருந்தாள். போகப் போக பேச்சு அதிகமாகிவிட்டது. அவள் அப்பாவின் அகால மரணத்திற்குப் பிறகு எதிர்த்துப் பேசவும் துணிந்தாள். தாயை ஏளனம் செய்யவும் துணிந்தாள்.

                 ‘என்ன செய்வது? அவளது எளிமை கல்லூரியில் ஏளனத்துக்கு உள்ளாகிறதோ என்னவோ? அந்த எரிச்சலைக் கூட என்மீது காட்டியிருக்கலாம். நாளை அவள் புகுந்த வீடு எப்படி  அமையுமோ? நானே என் பெண்ணை வெறுத்துவிட்டால் அவள் என்ன செய்வாள்! அவள் பேச்சை பொருட்டாக எண்ணி முட்டாள்தனம் செய்தேனே! என் செயல் அவளை எப்படி வேதனைப்படுத்தி இருக்குமோ! நாளும் கிழமையுமா ஊரே விழாக் கோலத்தில் இருக்கும்போது ஒன்றுமறியா என் குழந்தைகள் என்ன செய்வார்கள்! பாவம்!’ என்று இதயம் கசிந்துருகினாள் சாந்தி. 

               “கிளம்பி வாம்மா! அம்மா வாம்மா! இல்லைன்னா நீ எங்கே இருக்கிறாய் என்று சொல் என்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்த பூவிழிக்கு குரலே வாடிவிட்டது. 

               “நீ வர வேண்டாம். நானே வரேன்!” என்றாள்  சாந்தி, மகளிடம். 

               “எப்போது வருவாய்? எவ்வளவு நேரம் ஆகும்?” என்றாள் பூவிழி. 

                “எத்தனை மணிக்கு ட்ரெயின் என்றுத் தெரியவில்லை. விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் என்று போனை துண்டித்தாள் சாந்தி. 

                   ‘தன் உடம்பில் உயிர் இருக்கும்வரை தன் குழந்தைகள் சோர்ந்து போவதையோ துன்பப்படுவதையோ துவண்டு போவதையோ துளியும் தன்னால் சகித்துக்கொள்ள முடியாது…’ முழுதும் மனம் மாறினாள் சாந்தி.

                   பயணச் சீட்டு பெற்றுக்கொண்டு விசாரித்ததில் நள்ளிரவைக் கடந்து ஒன்றரை மணிக்கு திருச்சி வந்தடையும் ஒரு சிறப்பு ரயில், அதிகாலை நான்கு மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என்று தெரியவர பூவிழிக்குத் தகவல் தெரிவித்தாள்.

************இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.