நூல்: சிவந்த காலடிகள்
ஆசிரியர்: சி.ஆர்.தாஸ் | தமிழில்.கே.சண்முகம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கம்:416
விலை:ரூ.395/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sivantha-kaladikal/
இந்தப் புத்தகத்தை நேற்றுப் படிக்கத் தொடங்கிய போது இதை ஒரே நாளில் படித்து முடிப்பேன் என்றோ, என்னிடம் இவ்வளவு கிளர்ச்சியையும், மனவெழுச்சியையும் உண்டாக்கும் என்று நினைக்கவில்லை. கோதாவரி பருலேகரின் ‘மனிதர்கள் விழிப்படையும்போது’, டி.செல்வராஜின் ‘தோல்’ ஆகிய புத்தகங்களுக்குப் பிறகு என்னை மிகவும் கிளர்ச்சியடையச் செய்த புத்தகம் இதுதான்.
இன்றைய புதிய தாராளமயச் சூழலில் நமது இளைஞர்களுக்குப் போதிய போராட்ட உணர்வு இல்லை என்ற குறை அனைத்து மூத்த தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் உண்டு.
”பழைய போராட்டங்களின் வரலாற்றைப் புதிய தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கத் தவறியதும், புதிய போராட்ட வடிவங்களுக்கான புதிய தலைவர்களின் வரிசையை உருவாக்கப் போதிய அளவு முடியாமல் போனதுமே இப்போதைய நிலைக்கும் காரணம் . . .” (பக்.377).
இந்தக் குறையைப் போக்க ஒரு மிகப்பெரும் போராட்ட வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பதுதான் ‘சிவந்த காலடிகள்’. நாம் கோடை காலங்களில் ஏற்காடு, நீலகிரி, மாண்டியா போன்ற இடங்களில் ரப்பர், தேநீர் எஸ்டேட்டுகளுக்கு அந்தக் காலநிலையையும், ரம்மியமான சூழலையும் அனுபவிக்கச் செல்வதுண்டு. ஆனால் அவற்றுக்குப் பின்னால் ஏராளமான போராட்ட வரலாறுகள் மறைந்து கிடக்கின்றன. அத்தகையதொரு போராட்ட வரலாறு காலடி ப்ளாண்டேஷன் தொழிலாளர்களின் போராட்ட வரலாறு.
வரலாற்றிலேயே முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சியான இ.எம்.எஸ். ஆட்சியில் இந்தப் ப்ளாண்டேஷனுக்கான அடிக்கல் நாட்டப்பட்டாலும், விமோசன சமரம் என்ற சதிப் போராட்டத்தின் மூலம் அது அகற்றப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றதும் இந்த முயற்சி தொடர்ந்தது. அங்கிருந்துதான் இந்தப் போராட்ட வரலாறும் தொடங்குகிறது. காட்டின் நடுவே அமைந்திருக்கும் இந்தத் தோட்டத்துக்கு வேலை தேடி ஆயிரமாயிரம் ஏழை மக்களும், தொழிலாளர்களும் படையெடுக்கின்றனர். அவர்களில் தோமச்சனும், படித்த இளைஞன் தாமுவும் அடங்குவர். மரங்களை அப்புறப்படுத்தி நிலத்தை சமப்படுத்தி, ரப்பர் மரங்களை நடுவதில் அவர்களது வாழ்க்கை அங்கு தொடங்குகிறது.
நட்ட நடுக் காட்டில் அவர்கள் தங்க எந்த ஏற்பாடும் கிடையாது. பெரும் பாறை மீது அவர்கள் ஓலை கட்டி இருந்து கொள்ள வேண்டியதுதான். பாறைகளின் இடுக்கிலிருந்து வழியும் தண்ணீர்தான் குடிப்பதற்கும், சமையலுக்கும். மருத்துவம், குடியிருப்பு என்று எந்த வசதியும் கிடையாது. நாளொன்றுக்கு இரண்டு ரூபாய் கூலிதான். எதிர்த்துப் பேசினால் சாவும் வரும்.
சிறிது சிறிதாக உயரும் தொழிலாளர் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் 3500ஐத் தொடுகிறது. அங்கு ப்ளாண்டேஷன் ஒர்க்கர்ஸ் யூனியனும், ஆளுங்கட்சி சங்கமும் உருவாகின்றன. அங்கு வரும் அமைச்சரிடம் தமது கூலியை உயர்த்துமாறு தொழிலாளர்கள் முறையிட, ஒப்புக்கொண்டு செல்லும் அவர் கூலியை ரூ.1.66 ஆகக் குறைத்து உத்தரவிடுகிறார். அப்போதுதான் ஆளுங்கட்சியின் வர்க்கப் பாசத்தை உணர்கின்றனர் தொழிலாளர்கள். வழிகாட்ட வருகிறது ஒர்க்கர்ஸ் யூனியன். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெறும் 25 பைசா மட்டும் உயர்த்தப்பட்டது. ஆனால் தொழிலாளர்களிடம் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது.
அடுத்த போராட்டம் அவர்களுக்குக் குடியிருப்பு மற்றும் பிற வசதிகளைக் கோரியது. ஆளுங்கட்சி தனது சங்கம் ஒன்றுமில்லாமல் போனதைக் கண்டு 500 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து குண்டர்கள் அடங்கிய 500 பேரை அங்கு வலுக்கட்டாயமாகத் திணிக்க முயல அதற்கெதிரான வீரம் செறிந்த போராட்டம். அப்போது போலீஸ் ஆடிய நரவேட்டை நம்மிடம் ஒரே நேரத்தில் கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்துவது.
காலடி தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டம் ஒரு கட்டத்தில் அவர்களை ஒரே கம்யூனாக இணைக்கிறது. எந்தப் பேதமும் இல்லை. அவர்களுக்குப் பல உரிமைகளைப் பெற்றுத் தருகிறது. அதற்காக ஊழியர்களும், தலைவர்களும் செய்த தியாகம் அளவிடற்கரியது.
நெருக்கடி நிலையின் போதும் அவர்கள் போராட்டத்தில் இறங்க, ஆளும் கட்சி கடும் அடக்குமுறையை ஏவி தொழிலாளர்களை விரட்டியடித்தது. பெண்கள் மீது பலவாறான கொடுமைகள் இழைக்கப்பட்டன. அப்போது உடல்நிலை முடியாமல் இருந்த தோழர்.ஏ.கே.ஜி. வெகுண்டெழுந்து தம் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அங்கு சென்று சிங்கமெனக் கர்ஜித்தார். அடக்குமுறையை ஏவிய போலீஸ் அச்சமடைந்து பின்வாங்க, நெருக்கடி நிலையின்போதே இத்தகைய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த ஏ.கே.ஜியின் போராட்டம் நமக்கு ஒரு பாடம்.
இந்தப் புத்தகத்தில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களும், தோழர்களும் உயிருடன் உலா வருகின்றனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு தியாக வரலாறு. நான் இங்கு பெயர் சொல்லத் தொடங்கினால் யாருடைய பெயரையாவது விட்டு விடுவேன் என்ற அச்சத்தால் அதைக் குறிப்பிட மறுக்கிறேன்.
புத்தகத்தை எழுதிய சி.ஆர்.தாஸ் நேரடியாக அங்கு சென்று தகவல்களைத் திரட்டி ஒரு நாவலைப் போல் பதிவு செய்கிறார். தோழர். ஏ.கே.ஜி.யின் துணைவரும் சகபோராளியுமான தோழர்.சுசீலா கோபாலன் தன் நினைவுகளிலிருந்து எழுதுவது போன்ற ஒரு வழிமுறையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. தமுஎகசவின் மாநிலக்குழு உறுப்பினரும், கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான கே.சண்முகம் அந்தப் புத்தகத்தின் தீவீரமும், எழுச்சியும் சற்றும் குறையாமல் நமக்குத் தமிழில் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு தொழிற்சங்கப் போராளியும் படித்து உள்வாங்க வேண்டிய போராட்ட வரலாறு இது. ஒரு இடத்தில் தன்னை வளர்த்தெடுத்த அச்சுதன் மாஸ்டரைச் சந்திக்க தாமு செல்லும்போது அவர் சொல்கிறார்:
”ஒரு நல்ல போராளி ஒரு நல்ல வேலைக்காரனாகவும் இருக்க வேண்டும்.”
நான் 1987இல் வேலை கிடைத்து பம்பாய்க்குச் சென்றபோது எனக்கு விடை கொடுத்த தமுஎசவின் ஸ்தாபனத் தலைவர்களில் ஒருவரான அமரர்.ப.ரத்தினம் என்னிடம் கூறிய வார்த்தைகள் இவை. எந்தக் காலத்திலும் பணியை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்று என்னிடம் உறுதி பெற்றுக் கொண்டார். நான் மட்டுமல்ல, நான் சார்ந்திருக்கும் தொழிற்சங்கத்தின் முன்னணி ஊழியர்களும் அப்படியே. அதிகாரிகள் எங்களைக் கேட்டு வாங்கிக் கொள்ளும் அளவுக்கு எங்கள் பணி அமைந்துள்ளது என்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும்.
”சுசீலா. . . நமது வீரம் செறிந்த போராட்டங்கள் சாதாரணமானதல்ல . . . மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போன ஒரு மக்கள் கூட்டத்தை எப்படி அடிமைப்படுத்தலாம் என ஆட்சியாளர்களுக்குத் தெரியும். . அது மட்டுமல்ல . . பாரத மண்ணில் எதிர்வரும் காலங்களும் ஆபத்து நிறைந்ததாகும். அதனால் நமது வரலாறு உலக மக்களுக்குத் தெரிய வேண்டும். மனித குல முன்னேற்றத்தில் நமக்கும் பெரிய பங்கு உண்டு என்பதற்கு நமது வரலாற்றுப் பாடங்களும், வியாக்கியானங்களும், கலை இலக்கியப் படைப்புக்களும் சாட்சியாகிறது. அதனால் நீ கொஞ்சம் கர்வத்துடனேயே எழுத்தைத் தொடரலாம். சொர்க்கத்தின் ஒளியைப் பார்த்திட பகை வர்க்கத்தின் கதைகளை அவர்களிடமிருந்தே பிரித்து எடுப்பதற்கு உன் எழுத்து உதவியாக இருக்கும்.”
”கடந்த கால வரலாறுகளைப் படித்து . . . போராட்டப் பூமியில் உறுதியாக நின்று . . . நாளைய நல்ல நாட்களுக்காக அணி திரள வேண்டும். . .!”.
போராட்டங்கள் இல்லாமல்
திண்டாட்டங்கள் தீராது!
திண்டாட்டங்கள் தீராமல்
போராட்டங்கள் ஓயாது!
இன்குலாப் ஜிந்தாபாத்!
கி.ரமேஷ்
பி.கு.: புத்தகத்தைப் படித்து விட்டு என் மனவெழுச்சியை வாசிப்பு அசுரன் தோழர்.சிராஜிடம் சொல்ல, அவர் மகிழ்வுடன் எனக்கு ஒரு ஆஃபர் கொடுத்தார். ரூ.395/- பெருமானமுள்ள இந்தப் புத்தகத்தை ரூ.350/-க்கு (குரியர் கட்டணம் உட்பட) வேண்டும் தோழர்களுக்குக் கொடுப்பதாகக் கூறினார். படிக்க வேண்டிய, தவற விடக்கூடாத புத்தகம். பயன்படுத்திக் கொள்ளவும்.