பத்துக் கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுதி. வா. ஸ்டாலினின் முதல் தொகுப்பு. முற்றாக மாறுபட்ட களம் என்றில்லாமலும், கண்டடைய வேண்டிய புள்ளியின் தூரம் இன்னும் நீண்டிருக்கும் நிலையிலும் உருக்கொண்டிருக்கும் இக்கதைகள் மண்ணும், மனமும் சார்ந்த விசயங்களை நம்முன் கதைமாந்தர்களாய் விரித்து வைக்கின்றன. ஒரு கதையானது வாசிப்பவனை கட்டுடைக்க வேண்டும், அப்படி உடைபடுபவன் மீண்டும் தன்னை கட்டமைத்துக் கொள்வதற்கான திறப்புகளையும் அக்கதையே அவனுக்குத் தரவேண்டும் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்ட, புனையப்பட்ட கதைகளின் அடிநாதமாக இருந்து வந்திருக்கிறது. இத்தொகுப்பில் இருக்கும் கதைகளில் சில அந்த அடிநாதத்தைத் தொட்டுச் செல்கிறது.
வெவ்வேறு களங்களில் கதைகள் விரவி நின்றபோதும் அவைகளின் மையமாக மூடநம்பிக்கைகள், நலிந்து போன சிறு வியாபாரிகள், சமூகப்புறக்கணிப்புகள், விழிப்புணர்வு, வர்ணாஸ்ரமம், விளிம்பு மனிதர்கள் எதிர்கொள்ளும் எள்ளல் ஆகியவைகள் அமைந்திருக்கின்றன. இவைகளின் நிகண்டுகளாக தன்னை முன் நிறுத்திக் கொள்பவன் படைப்பாளியாகிறான். தன் கன்னி முயற்சியோடு கதைத்தளத்திற்குள் வந்திருக்கும் ஸ்டாலினையும் அந்தவகையில் பார்க்க முடிகிறது.
சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கான தாழ்வாரத்தை தன்னுடைய பண, அதிகார பலத்தால் பிரமாண்டங்களின் தாழ்வாரமாக மாற்றும் ஒருவரால் சிறு வியாபாரியாய் – முதலாளியாய் இருந்தவர் காவலாளியாய் – தொழிலாளியாய் மாறிய துயரைப் பேசும் கதை ”அன்னா(ச்)சி”.
ஒரு பெண் தன் தாய்மையை அடையாளம் காணுதலை மையமாக வைத்து நகரும் கதை ‘சிகப்பு கோடுகள்”. தொகுப்பின் தலைப்பை அலங்கரிக்கும் இக்கதையின் நாயகி அங்கம்மா, அவளின் கணவன் மற்றும் மாமியார் மூலம் அடித்தட்டு மக்களின் வீட்டிற்குள் நிகழும் எதார்த்தங்களை, எதிர்பார்ப்புகளை நம்முன் விரிக்கும் ஆசிரியர் முடிவை சுபமாக்குகிறார்.
கேள்வி கேட்பது உரிமை. அதற்கு பதில் தர மறுப்பதும், கேட்பவனை ஒடுக்குவதும் அதிகாரத்தின் ஆணவம். இதை சுண்டு என்ற பள்ளிச்சிறுவன் மூலம் பாடசாலை வழியாகவும், ஆசிரியர்கள் மூலமும் நமக்குள் கிளர்த்திய படி நகரும் கதை ”சிவப்புநோட்டீஸ்”. சிவப்பு சித்தாந்தத்தின் மீது எழும்பி நிற்கும் இக்கதை மறந்து போன நம் உரிமைகளை நினைவூட்டுகிறது. அந்த நினைவூட்டலை அந்த சித்தாந்தம் மட்டுமே எல்லா நேரமும் செய்ய முடியாது. அதை நினைவூட்டுபவைகளாக எப்பொழுதும் நம்முன் இருப்பது எது? என்பதையும் முடிவாக முன்முடிகிறார்.
கருவுற்றிருக்கும் ஒருத்தியை வசிப்பிடத்தின் எல்லைக்கே சமூகம் விரட்டியடிக்கிறது. அலைந்து திரிபவள் அடர் கருவேலமரத்தடியில் தஞ்சமடைகிறாள். அவளுக்கு பிரசவ வலி வருகிறது. மழை அனவு அட்டுகிறது. பாம்பு, எலி போன்ற நச்சு விலங்குகள் அவள் பிரசவிக்க துணைபுரிகின்றன. அவைகள் தன்னுடைய இயல்பில் இருந்து நழுவி உயர்திணைக்கு உயர்த்திக் கொள்கிறது. ஆனால், உயர்திணை மனிதனோ சுய தன்மையை இழந்து மறத்துப் போய்விட்டான் என்பதை பேசும் கதை “மிருக குணம்”.
எளிய மனிதர்களாய், அன்றாடங்காய்ச்சியாய் விளிம்பு நிலை மனிதர்கள் அதுவும் பெண்கள் சாதாரண மனிதர்களிடம் படும் அவலங்களை, எள்ளல்களை, துச்சமென மதிக்கப்படும் நிலையை நான்கு கதைமாந்தர்களின் எதார்த்த உரையாடல் வழி நிகழ்த்திக் காட்டுகிறது ”புள்ளபூச்சி’கதை.
கி.ரா.வின் கதவும், கல்யாண்ஜியின் கதவும் வாசிக்கும் கணம் நம்மை இன்னொரு கூட்டிற்குள் மீட்டு சுகம் கொள்ள வைக்கக்கூடியவை. இத்தொகுப்பும் ”கதவு” என்ற தலைப்பிலான கதையோடு முடிகிறது. கதவுக்குப் பின் ஒளிந்து கொள்ளும் கதாநாயகன் சொக்கனை அறிமுகப்படுத்தி நகரும் கதை அதன் ஓட்டத்தில் அவன் அம்மாவை கதவுக்குப் பின் ஒளியவைக்கிறது. இப்படித்தான் முடியப்போகிறதோ என சராசரி வாசகன் எட்டும் அந்த முடிவுப் புள்ளியில் ஸ்டாலின் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதோடு வாசகனையும் சராசரி நிலையில் இருந்து உயர நகர்த்துகிறார்.
சமூகம், உறவுகள், நண்பர்கள், குடும்பம் வழி கேட்ட, கதைகள் மூலம் வாசித்த அமானுஷ்யங்கள் எப்பொழுதெல்லாம் நம்மை ஆட்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் நம்மில் இருந்து தைரியமும், நம்பிக்கையும் நழுவிப் போய்விடுகிறது. அந்த நழுவல் இன்னொருவருக்குச் சாதகமாகிறது. கோடாங்கிகள், குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள், முனியோட்டுபவர்கள் நம்மில் இருந்து நழுவியவைகளையே நமக்குள் முத்தாய் விதைத்து அறுவடை செய்கின்றனர். இவைகளை எதிர் கொள்ளத் தயங்கும் போது அவைகள் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கின்றன என்பதை “இங்க இருக்கு”, ”ஆறாவது மரம்”, “புகையும் பயம்” ஆகிய கதைகள் பேசுகின்றன.
கழுவி, கழுவி புறந்தள்ள முடியாத அழுக்காய் இந்த சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு ஊறிக்கிடக்கிறது. ஏதோ ஒரு மூலையில் அது இன்னும் மனிதர்களின் மனதில் புதராய், அகற்ற முடியாத களையாய் மண்டிக் கிடக்கிறது. அப்படி புரையோடிக் கிடக்கும் மனிதர்களை மூத்திரம் கொண்டு கழுவ வேண்டியதன் அவசியத்தை “அலோன்ஸ்மெண்ட்” அறிவிக்கிறது. கடைசி வரியை “நகராசின் கையால் நெறிபட்டுக் கிடந்த குஞ்சு மணி நெறிசலை முறியடித்துக் கொண்டு குபுக் கென்று மூத்திரத்தை சிந்தியது” என்ற அறச்சீற்றத்தோடு முடிக்கிறார்.
படிப்பதற்கு உறுத்தலற்ற எழுத்துரு, வடிவமைப்பில் நேர்த்தி ஆகியவைகளில் காட்டிய கவனத்தை கதைகளின் மெய்ப்புத் திருத்துதலில் இன்னும் கூடுதலாக்கி இருக்கலாம். எழுத்துப் பிழைகள் கேலி – கேளி, தொண்டை – கொண்டை, வலி – வழி என நிறைய இடங்களில் பொருள் பிழையாக மாறி நிற்கிறது. அடுத்த பதிப்பில் இவைகளில் காட்டும் மெனக்கெடல் தொகுப்பை இன்னும் சிறப்பானதாக்கும். அதேபோல, நேரடி வர்ணனைகள் கதைகள் முழுக்க வருகின்றன. ஆனால், அவைகள் வாசகன் அறிந்த ஒன்றை அவன் அறிந்த நிலையிலும், கதை ஓட்டத்தில் கூறியது கூறலாய் அவைகளையே மீண்டும், மீண்டும் கையாண்டிருப்பதும் வாசிப்பை தாழச்செய்கிறது. சட…….சட என மழை பொழிந்தது, டும்……டும் என இடி இடித்தது, சிக்கு….புக்கு…….சிக்கு என சிரித்தான், திகு……திகுவென பயத்தில் என அறிந்தவைகளையே திரும்பவும் அறியத் தராமல் வாசகனுக்கு புதியதோரு பரிணாமத்தைத் தரக்கூடியவைகளின் வழி காட்சிப்படுத்த முயலலாம். தொடர் வாசிப்பும், கண்டு கவனித்தல் மூலமும் இதை சாத்தியமாக்கிக் கொள்ள முடியும். அத்தகைய சாத்தியங்களை நோக்கி ஸ்டாலின் நகர வேண்டும்.
சொன்னதைச் சொல்லல் மூலம் வாசகன் அயர்ச்சியுறுவதைப் போல படைப்பாளி தான் நினைத்த அத்தனை விசயங்களையும் கதைக்குள் இறுத்தி வைக்க முனையும் போது ஏற்படும் இடைவெளி அவனை சலிப்படைய வைத்து விடுகிறது. கதையின் மையம் நோக்கி நகர வேண்டிய வாசகன் இத்தகைய இடைவெளிக்குள் சிக்கி அதிலிருந்து விலகி போய்விடுகிறான். கதைக்கு இந்த விவரணை தேவையா? இந்த இடத்திற்கு அவசியமா? என தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டு பக்கங்களை தாவிச் சென்று விடுகிறான். இந்த சிக்கலான அபாயத்தை இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் சில இடங்களில் அடர்த்தியாகவும், வேறு சில பக்கங்களில் மென்மையாகவும் தொட்டுச் செல்கின்றன.
கதைக்களம் என்பது மிகப்பெரிய மைதானம். அதில் அடித்து ஆடுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும், வசதிகளையும் படைப்பாளியே உருவாக்கிக் கொள்கிறான் என்பதே வரலாறு. அந்த வரலாற்றில் தனக்கான பக்கத்தை தம் மண்ணின் மொழியாலும், கதை மாந்தர்களாலும் இட்டு நிரப்புவதற்கான அத்தனை சாத்தியங்களும் ஸ்டாலினுக்கு இருக்கிறது என்பதற்கான ஆரம்பக் கோடாய் அவரின் இச் “சிவப்பு கோடுகள்” தொகுப்பை வரவேற்கலாம்.
————————————————————————-
மு. கோபி சரபோஜி
இராமநாதபுரம்
nml. [email protected]