]சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) 2 | ஈஷா ஜக்கி வாசுதேவ் ‘Miracle of Mind” | ஹிட்லர்

தொடர் – 2 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து..  – ஆர்.பத்ரி

தொடர் – 2 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu).. 

– ஆர்.பத்ரி

ஹிட்லரை பற்றி ஒரு அவலச்சுவையான ஒரு குறிப்பு உண்டு. 
ஹிட்லரின் சுயசரிதையில் 1,40,000 சொற்கள்
உண்டு என கணக்கில் கொண்டால், 
அதில் 1,39,000 பொய்கள் இருக்கும்

உலகமே தனது காலடியின் கீழே வீழ்ந்து கிடக்க வேண்டுமென அதிகார வெறியின் உச்சத்தில் அலைந்தவன் அடால்ஃப் ஹிட்லர். அவன் விரும்பிய அதிகாரமும் நிலமும் அவனுக்கு கிடைக்கவில்லை. மாறாக கற்பனையிலும் நினைத்திராத ஒர் குரூர மரணத்தை காலம் ஹிட்லருக்கு பரிசளித்தது. சீரழிந்து கிடக்கும் சமூகத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்காக கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவன் எனும் கர்வத்தோடு அலைந்த ஹிட்லர் தன்னை ஒரு அதிமனிதனாக (சூப்பர் மேன்) கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தான். இனத்தூய்மை வாதம் எனும் கோட்பாட்டை (Racial Utopia)  முன்னெடுத்த ஹிட்லரின் கொடூரமான வரலாற்றை காலம் தன் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கிறது.

]சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) 2 | ஈஷா ஜக்கி வாசுதேவ் ‘Miracle of Mind” | ஹிட்லர்
ஹிட்லர் & முசோலினி

ஹிட்லரின் சமகாலத்தில் வாழ்ந்த முசோலினி பாசிசம் எனும் கோட்பாட்டை முன்வைத்தான். ஜனநாயகத்தை ஓரு அழுகிய பிணம் என்று வர்ணித்தவன் முசோலினி. பாசியோ டி கம்பார்ட்டிமெண்டோ எனும் அவனது கட்சியின் பெயரால் தான் பாசிசம் எனும் சொல்லாடல் பிறந்தது. பண்டைய ரோமானிய மன்னர்கள் மரத்தாலான முனையில் கோடரியை பொறுத்திய ஆயுதம் ஒன்றை தண்டணை வழங்குவதற்காக வைத்திருந்தார்கள். அந்த கொலைக்கருவியின் பெயர் பாசிஸ் என்பதாகும். அதைக் குறிப்பதாகத்தான் முசோலினியின் கட்சியின் பெயரும் அவனது சித்தாந்தமும் அறியப்பட்டது. ஹிட்லரின் நாஜிசத்திற்கு இனத்தூய்மை வாதம் அடிப்படையாக இருந்ததைப் போல, முசோலினி முன்வைத்த பாசிசத்திற்கு சர்வாதிகாரம் என்பது அடிப்படையாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பாசிச – நாஜிச சக்திகள் சோஷலிச சோவியத் யூனியனால், ஜோசப் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தீரம் மிக்க போரினால் முறியடிக்கப்பட்டது. ஆனால் தற்போது உலகில் ஆங்காங்கே பாசிச சக்திகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவிலும் அதன் அபாயங்களை நாம் காண்கிறோம்.

’தனது சக்தி முழுவதையும் இழக்கும் எதுவொன்றும் மரணிக்கும்” என்றார் மார்க்ஸ். தனது சக்தியை இழந்து விட்ட முதலாளித்துவம் இப்போது பாசிசத்தில் தஞ்சமடைந்திருக்கிறது. பாசிசம் என்றால் என்ன ? எனும் கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் அளிக்க வேண்டுமென்றால், ‘தோல்வியடைந்த முதலாளித்துவம் அணிந்து கொண்டிருக்கும் முகமூடியே பாசிசம்’ என்று சொல்லலாம். “நாம் – இதரர்” எனும் கோட்பாட்டை முன்வைப்பதும், இனம், மதம், மொழி ஆகிய கூறுகளை அடிப்படையாக கொண்டு சிறுபான்மையினரை ’இதரர்’ என அடையாளம் காட்டுவதும் பொதுவாக பாசிஸ்டுகளின் அணுகுமுறையாக இருக்கும். அந்த வகையில் இந்திய சமூகச் சூழலில் சிறுபான்மை முஸ்லீம்களை இதரர்களாக முன்வைத்து தங்களுக்கான அரசியலை ஆர்.எஸ்.எஸ்ஸும், பாஜகவும் முன்னெடுக்கின்றன. அனைத்து நடவடிக்கைகளிலும் ’இந்து அடையாளத்தை புகுத்துவது – முஸ்லீம் வெறுப்பை விதைப்பது’ ஆகிய உத்தியை அவர்கள் இணைக்கிறார்கள். அத வெளிப்பாடு தான் இந்திய ராணுவ உயர் அதிகாரியான கர்னல் சோஃபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என ஒரு அமைச்சரே அடையாளப்படுத்தும் அருவருப்பான நடவடிக்கையாகும்.  மதச்சார்பற்ற இந்திய அடித்தளத்தை தகர்த்து ஒற்றை மத அடையாளத்தை முன்னிறுத்த துடிக்கிற இத்தகைய ஆபத்தானவர்களை எதிர்கொள்ளும் வகையின் ஜனநாயகத்தை நாம் இன்னும் வலுப்படுத்த வேண்டியிருக்கிறது.

]சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) 2 | ஈஷா ஜக்கி வாசுதேவ் ‘Miracle of Mind” | ஹிட்லர்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு

அண்மையில் மதுரையில் ஆன்மீக மாநாடு எனும் பெயரால் முருக பக்தர்கள் மாநாடு ஒன்றை நடத்தி “இந்துக்களாய் ஒன்றிணைவோம், அரசியல் அதிகாரம் பெறுவோம்’ எனும் முழக்கத்தோட் அரசியலை இணைத்திருக்கிறார்கள்.  அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் அப்படி தொடர்பு இல்லையோ அதே போல் தான்  ஆன்மீகத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்.  – சங் பரிவார் கூட்டத்திற்கும் கூட எவ்வித  தொடர்பும் இல்லை.  ஆனால் நாங்கள் தான் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்கிறார்கள். சுயநல அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தும் இத்தகைய போலிகளை பற்றி நாம் சொல்வதை விட சுவாமி விவேகானந்தர் வார்த்தைகளை பயன்படுத்துவது பொறுத்தமாக இருக்கும். சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க பயணத்தின் போது, அவர் பலருக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாக தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்திலிருந்து சில பகுதிக: இதோ..

”மனிதனின் மகிமையை (dignity) இந்து மதத்தைப் போல உலகில் வேறு எந்த மதமும் உயர்வாக கூறவில்லை. அதே வேளையில் உலகில் உள்ள வேறு எந்த மதமும் இந்து மதம் செய்வதை போல ஏழைகள் மற்றும் தாழ்த்தப்படவர்களின் கழுத்தை நெரிப்பதும் இல்லை. குற்றம் மதத்தில் அல்ல. மாறாக உட்கருத்தை பார்க்காமல், வெளி ஆச்சாரத்தை கொண்டாடுபவர்களை, வஞ்சக போலிகளை, பரமார்த்திகம் வியாவகாரிகம் எனும் கொள்கைகளின் அடிப்படையில் பல கொடுங்கோல் எந்திரங்களை உண்டாக்கி வைப்பவர்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என எச்சரிக்கிறார் விவேகானந்தர். அவரது கூற்றுப்படி மத நம்பிக்கைகளை தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்தும் இவர்கள் உண்மையில் வஞ்சகப் போலிகள் தான். அவர் மேலும் எச்சரிக்கிறார்.

”மதம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது. சமூக விஷயங்களில் தலையிட அதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே விளைந்துள்ள தீமைகள் அனைத்தும் அப்படித் தலையிட்டதன் காரணமாகவே உருவானது என்பதையும் மறக்கக் கூடாது. ஒவ்வொரு சமூக விவகாரங்களிலும் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது”..? என கேள்வி எழுப்புகிறார் விவேகானந்தர். பொதுவாக விவேகானந்தரை பற்றி சொல்லும் போது வீரத்துறவி என்றும் சூறாவளித்துறவி என்றும் அடைமொழிகளை பயன்படுத்துவதுண்டு. மதம் என்பது ஆன்மா தொடர்புடைய ஒன்றாகும். சமூக விவகாரங்களில் அதை கலக்கக்கூடாது எனும் தெளிவு அவருக்கு இருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கூட்டம் மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். அதனால் தான் வெட்கமே இல்லாமல் மதத்தின் அடிப்படையிலான வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என அலைகிறார்கள்.

ஹிட்லரைப் போல, முசோலினியைப் போலவே, ஒரு அதிமனிதனை உருவாக்கி நம் முன்னே உலவ விடுவது தான் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஆகும். நாட்டின் எல்லா துயரங்களுக்கும் அவர் ஒருவரே முடிவு கட்டுவார் என்றும், அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றும் கதைகளை தயார் செய்கிறார்கள்.  தேசத்தின் தலைவர் என்பதை தாண்டி அவர் உலகத்தின் தலைவர் என செயற்கையானதொரு ஒளிவட்டம் உருவாக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு பின்னால் பாசிச சக்திகளும் கார்ப்பரேட்டுகளும் நிற்கிறார்கள்.

]சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu) 2 | ஈஷா ஜக்கி வாசுதேவ் ‘Miracle of Mind” | ஹிட்லர்
ஈஷா ஜக்கி வாசுதேவ் ‘Miracle of Mind” எனும் பெயரில் ஒரு செயலி

ஆட்சியதிகாரத்தில் இருக்கும் இவர்களால் மக்களுக்கான தேவையை, நிவாரணத்தை அளிக்க முடியவில்லை. எனவே மக்களின் கோபம் மேலெழுந்து விடக்கூடாது என்பதற்காக மக்களை வெவ்வேறு வகையில் திசை திருப்புகிறார்கள். இந்த ஆண்டு சிவராத்திரி கொண்டாட்டத்தின் போது, ஈஷா ஜக்கி வாசுதேவ் ‘Miracle of Mind” எனும் பெயரில் ஒரு செயலியை (App)  அறிமுகப்படுத்தினார். அடுத்த ஓராண்டில் இந்த செயலியின் வாயிலாக 300 கோடி மக்களை இணைப்பது என்பது தனது இலக்கு என அறிவித்திருக்கிறார். நாள்தோறும் ஏழு நிமிடங்கள் கூட்டு தியானம் எனும் நடவடிக்கை மூலம் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் கோபத்தை, பதற்றத்தை கட்டுப்படுத்துவதே “Miracle Of Mind” செயலியின் அடிப்படை என அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பின் போது அமித்ஷா அவர் அருகே அமர்ந்திருந்தார். நவ பாசிச குணாம்சம் கொண்ட ஆட்சியாளர்களும், நவீன கார்ப்பரேட் சாமியார்களும் இணைந்து நின்று மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் எழுதிய பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

“விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்.
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டை விட்டார்”

எழுதியவர் : 
✍🏻 ஆர்.பத்ரி
 

முந்தைய கட்டுரையை வாசிக்க: தொடர் – 1 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து.. – ஆர்.பத்ரி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ராமச்சந்திர வைத்தியநாத்

    ஒரு சின்ன திருத்தம் : பாடலுக்கு இசையமைத்தவர் சுப்பையா நாயுடு அவர்கள். பாடல் பட்டுக்கோட்டையாருடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *