தொடர் – 3 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து (Sivappu Natkurippin Pakkangalilirunthu)..
– ஆர்.பத்ரி
சென்னையில் வக்ஃப் சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் பங்கேற்றேன். அந்த போராட்டத்தில் திமுக சார்பில் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர் திரு எம்.எம்.அப்துல்லா பங்கேற்று உரையாற்றிய போது மிக முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்தார்.

விடுதலைக்கு பிறகு அமைந்த முதல் நாடாளுமன்றத்தில் நேரு அவர்கள் பிரதமராக அமர்ந்திருக்கிறார். நாடாளுமன்ற விவாதங்களுக்கு நேரு பதில் அளிக்கும் போது, ஒரு சில முக்கியமான தருணங்களில் மெளலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். அப்படி ஒரு நாளில் அவர் ஆசாத்தை தேடிய போது அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இல்லை. எப்போதும் குறித்த நேரத்தில் அவைக்கு வரும் ஆசாத் ஏன் இன்று வரவில்லை என உதவியாளரிடம் நேரு கேட்டபோது, ‘அய்யா, இன்று வெள்ளிக்கிழமை. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ஆசாத் அவர்கள் மதிய நேர தொழுகைக்கு போய்விட்டு உணவுக்கு பின் அரை மணி நேரம் காலதாமதமாக அவைக்கு வருவார்’ என்று பதிலளித்தார் உதவியாளர். அன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் மதியம் இரண்டு மணிக்கு பதிலாக இரண்டரை மணிக்கு கூடும் என பிரதமர் நேரு அறிவித்திருக்கிறார். விடுதலைக்கு பிறகான இத்தனை ஆண்டுகளில் வெள்ளிக்கிழமைகளில் இரண்டரை மணிக்கு நாடாளுமன்ற கூடும் எனும் விதியை தற்போதைய பாஜக அரசு ரத்து செய்துவிட்டு இரண்டு மணிக்கு கூடும் என முடிவு எடுத்திருக்கிறது. இதனை கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்த முஸ்லீம் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, அப்போது அவையில் இருந்த இதர கட்சிகளின் உறுப்பினர்கள் அமைதியாக இருக்க கம்யூனிஸ்டுகள் மட்டுமே எங்கள் உணர்வை புரிந்து கொண்டு கடுமையாக சண்டை போட்டார்கள் எனும் தகவலை பகிர்ந்து கொண்டார்.
ஆம். யோசித்து பார்த்தால் இந்த தேசத்தின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் கம்யூனிஸ்டுகள் எப்போதுமே முன்வரிசையில் தான் நின்றிருக்கிறார்கள். நிற்கிறார்கள். விஜய் பிரசாத் அவர்கள் எழுதி ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் இடது திருப்பம் எளிதல்ல எனும் புத்தகம் மிக மிக முக்கியமான நூலாகும். தேசத்தின் வரலாற்றையும், பல்வேறு தடைகளை தாண்டி இந்த தேசத்திற்காக கம்யூனிஸ்டுகள் அளித்த மகத்தான பங்களிப்புகளையும் அழகாக விவரிக்கும் அட்டகாசமான புத்தகம் அது. அனைவரும் அந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை
ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை
ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுவதாக சொல்லலாம்
என தி மாடர்ன் பிரின்ஸ் ல் அந்தோனியா கிராம்ஷி எழுதியதன் அடிப்படையில் இடதுசாரிகளின் கண்ணோட்டத்திலிருந்து இந்திய தேசத்தின் வரலாற்றை குறுக்கும் நெடுக்குமாக ஆய்வுக்கு உட்படுத்தும் புத்தகம் அது.
தேசிய விடுதலை போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் மகத்தான பங்களிப்பையும், மக்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டிய அதன் பாத்திரத்தையும் அந்நூலை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். தேசத்தந்தை என போற்றப்பட்ட காந்தியோடு உடன்பட்டும், முரண்பட்டும் தேசிய விடுதலை வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள்.
“வர்க்க போராட்டம் என்பது
இந்திய தேசத்திற்கு அந்நியமானது.
நான் விரும்பும் ராமராஜ்ஜியத்தில்
அரசனுக்கும் ஆண்டிக்கும் சம உரிமை உண்டு”
என்று சொன்ன காந்தியோடு முரண்பட்டு தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் வர்க்க உணர்வை ஊட்டி அவர்களின் போராட்டங்களை தேசவிடுதலை போராட்டத்தோடு இணைத்ததில் கம்யூனிஸ்டுகளின் பாத்திரம் மகத்தானது.
பெற்றோர்களாகிய முதலாளிகள்
குழந்தைகளான தொழிலாளர்களை
பரிவோடு பார்த்துக் கொள்ள வேண்டும்
எனும் பார்வை தான் காந்திக்கு இருந்தது. ஏகாதிபத்திய மூலதனம் ஆனாலும், உள்நாட்டு மூலதனம் ஆனாலும் உழைப்பை சுரண்டுவதே அதன் முதன்மையான குணம் எனும் வர்க்க அரசியல் பார்வை காந்தியிடம் இல்லை. ஆகவே தான் தொழிலாளர்கள் போராட்டங்களை பல நேரங்களில் அவர் ஆதரிக்கவில்லை.
கப்பற்படை வீரர்களின் எழுச்சியையும், அதற்கு ஆதரவான தொழிலாளர்கள் போராட்டங்களையும் கூட அவர் பகிரங்கமாகவே கண்டித்தார். அவர் ஆதரித்த டாடா, பிர்லா போன்ற இந்திய பெருமுதலாளிகள் கருணை மிக்கவர்கள் என்று கருதினார். இத்தகைய முரண்பாடுகளுக்கு மத்தியில், ஆளும் வர்க்க செல்வாக்கிற்கிடையே தான் கம்யூனிஸ்டுகள் தனித்துவமான அரசியல் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை பல்வேறு தரவுகளோடு விளக்குகிறது அந்நூல்.
இந்திய ஆளும் வர்க்கம் எப்படியெல்லாம் ஏகாதிபத்திய சாய்மானத்தோடும், கம்யூனிச எதிர்ப்போடும் தனக்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்கிறது தெரியுமா..? காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது, இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை எதிர்த்து இடதுசாரிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் அது நமது நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் எதிரானதாகும் என்பதால் இடதுசாரிகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த பாஜக காங்கிரசை அரசியலாக விமர்சித்துக் கொண்டே அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்த கதையை விவரிக்கிறது அந்நூல். அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனென் சென் அவர்களை தூதரக அலுவலகத்தில் சந்தித்து இந்த ஒப்பந்தத்திற்கு தங்கள் ஆதரவு உண்டு என தெரிவிக்கிறார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சேஷாத்ரி சாரி. அன்றைய பாஜக தலைவரான ஜஸ்வந்த் சிங் அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கிய அதிகாரியான நிக்கோலஸ் பர்ன்ஸை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கிறார். பாஜகவின் அறிக்கைகள் தேர்தல் அரசியலுக்கானவை, அவற்றோடு இந்த ஒப்பந்த்தை இணைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகளிடம் மன்றாடியவர்கள் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளும் வர்க்கமான பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரப்புக்களின் நலன்களை பாதுகாப்பதே அவர்களின் பிரதான பணியாக இருக்கிறது. கம்யூனிஸ்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையும், செல்வாக்கும் இல்லாத நாடாளுமன்ற அமைய வேண்டும் என்பது தான் அவர்களுக்கான விருப்பமாகவும் தேவையாகவும் இருக்கிறது. இத்தகைய அனைத்து விதமான எதிர்ப்புகளையும் கடந்தே கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் கடமையை செய்ய வேண்டியிருக்கிறது.
மார்க்சின் 175 வது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1993 ம் ஆண்டு கல்கத்தாவில் உலக நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்ற ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார்.
“சோஷலிசம் என்பது வெறும் முழக்கமல்ல,
அது, உழைப்பாளிகள் – மக்கள் திரட்சியிலிருந்து
அவர்களின் புரட்சிகர செயல்பாட்டிலிருந்து
வெளிப்படும் உணர்வு ரீதியான அறைகூவலாகும்.”
அப்படி ஒர் சமூகத்தை படைக்கும் வரை கம்யூனிஸ்டுகளுக்கு ஓய்வில்லை தானே. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ‘எர்னஸ்ட் புளோக்’ இவ்வாறு சொன்னார்.
இன்றைய தினத்தில் உள்ள
‘நாளை’ என்பது உயிரோட்டமானது.
ஆம். நாளைய வசந்த காலத்திற்கான கனவில் தான் இன்றைய அர்ப்பணிப்பும் அடங்கியிருக்கிறது.

எப்போதும் குறித்த நேரத்தில் அவைக்கு வரும் ஆசாத் ஏன் இன்று வரவில்லை என உதவியாளரிடம் நேரு கேட்டபோது, ‘அய்யா, இன்று வெள்ளிக்கிழமை. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ஆசாத் அவர்கள் மதிய நேர தொழுகைக்கு போய்விட்டு உணவுக்கு பின் அரை மணி நேரம் காலதாமதமாக அவைக்கு வருவார்’ என்று பதிலளித்தார் உதவியாளர். அன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் மதியம் இரண்டு மணிக்கு பதிலாக இரண்டரை மணிக்கு கூடும் என பிரதமர் நேரு அறிவித்திருக்கிறார். விடுதலைக்கு பிறகான இத்தனை ஆண்டுகளில் வெள்ளிக்கிழமைகளில் இரண்டரை மணிக்கு நாடாளுமன்ற கூடும் எனும் விதியை தற்போதைய பாஜக அரசு ரத்து செய்துவிட்டு இரண்டு மணிக்கு கூடும் என முடிவை எடுத்திருக்கிறது.
எழுதியவர் :

முந்தைய கட்டுரையை வாசிக்க: தொடர் – 2 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து.. – ஆர்.பத்ரி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.