தொடர் – 1 :- சிவப்பு நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து..
– ஆர்.பத்ரி
ஜூன் 14.. உலகம் கொண்டாடும் புரட்சியாளர் சேகுவேரா (Che Guevara) பிறந்த நாளில் புத்தக குவியலுக்குள் சே குறித்த இரண்டு சிறிய புத்தகங்கள் கண்ணில் பட்டன. கியூபாவிற்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே ஏற்பட்ட தத்துவார்த்த, பொருளாதார உறவு, அவற்றில் சே வின் பங்களிப்பு குறித்து ஐ.லாவ்ரெட்ஸ்கி எழுதிய உலக சோஷலிசத்தின் தாய் மற்றும் அமெரிக்க உளவுத்துறையில் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து எனும் ஜா.மாதவராஜின் புத்தகம் என அந்த இரண்டு நூல்களை வாசித்து முடித்த போது, சே எனும் அந்த ஒற்றை மனிதனுக்குள் ஒரு வசீகரமான புரட்சியாளனும், அன்பு மேலிடும் அமைதியான மனிதனுமாக இரு பரிமாணங்கள் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
பொலிவியாவின் அரசியல் விடுதலைக்காக கெரில்லா படைகளுக்கு தலைமையேற்று போராடிக் கொண்டிருந்த தருணத்தில், ராணுவத்திடம் பிடிபட்ட அந்த மாவீரனின் இறுதி நிமிடங்கள் மிகவும் உணர்ச்சி மயமானவை. 1967 அக்டோபர் 9 தேதி. வால்ட் ருஸ்டோவ் எனும் பொலிவிய ராணுவ அதிகாரி அமெரிக்க அதிபருக்கு ஒரு குறிப்பை அனுப்புகிறான். அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட பொலிவிய ராணுவத்திடம் சேகுவேரா (Che Guevara) சிக்கிக் கொண்டார் எனும் செய்திதான் அது. கிடைக்கப்பெற்ற அந்த செய்தியை தொடர்ந்து ரோட்ரிக்ஸ், ஜெனெட்டோ எனும் இரு உயர் அதிகாரிகள் சேகுவேரா (Che Guevara) வைக்கப்பட்டிருந்த அந்த பள்ளிக்கூட வகுப்பறைக்கு வந்து சேர்கிறார்கள். சே கைது குறித்த செய்தியை ரோட்ரிக்ஸ் அமெரிக்காவின் சி ஐ ஏ தலைமையகத்திற்கு ரேடியோ ட்ரான்ஸ்மீட்டரில் சங்கேத வார்த்தைகளால் செய்தி அனுப்பிய பின்னணியில் வாலே கிராண்டில் இருந்து “ஆபரேஷன் ஐநூறு – அறுநூறு” எனும் சங்கேத மொழியிலான உத்தரவு வந்து சேர்ந்தது. ஐநூறு எனும் வார்த்தை சே வையும் அறுநூறு எனும் வார்த்தை அவரை கொன்று விடு என்பதையும் குறிப்பதாகும்.
அங்கிருந்த உயர் அதிகாரிகள் சேகுவேராவை யார் கொல்வது என முடிவு செய்து சார்ஜெண்ட் டெர்ரன் என்பவனை சே இருந்த அறைக்குள் அனுப்புகிறார்கள். அவர் அந்த அறைக்குள் இயந்திர துப்பாக்கியோடு நுழைய, சுவரில் கைகளை பற்றிக் கொண்டு எழுந்து நிற்கிறார் சே. நடுக்கமெடுத்த டெர்ரன் உடனடியாக வெளியே ஓடி வந்து விடுகிறான். வெளியே நின்றிருந்த அதிகாரியான ஜெனெட்டோ அவனை திரும்பவும் சே இருந்த அறைக்குள் சென்று அவரை சுட்டுக் கொல்லுமாறு கடுமையான குரலில் உத்தரவிடுகிறான். தனது அச்சத்தை போக்க மது குடித்து விட்டு சே வின் அறைக்குள் நுழைந்த டெர்ரனை பார்த்து சொல்கிறார் சே. “நீ எதற்கு வந்திருக்கிறாய் என தெரியும். நான் தயார். ஒரு மனிதனைத் தானே கொல்லப் போகிறாய். கோழையே சுடு’ என உத்தரவிடுகிறார். டெர்ரன் சே வின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியை பிடித்துக் கொண்டு, அவரது முகத்தை பார்க்க முடியாமல் வேறொரு பக்கமாக பார்த்துக் கொண்டே சுடுகிறான். சீறிப்பாய்ந்த ஆறு குண்டுகள் சே வின் நெஞ்சை துளைக்க சுவற்றோரமாக சாய்ந்து விழுந்து தான் கனவு கண்ட அழகிய ஒரு உலகை அடைகாத்தபடி தனது துடிப்புகளை நிறுத்தி அடங்கிப் போனார் சேகுவேரா (Che Guevara).
அதற்கு முன்னதாக அவர் இருந்த அறைக்குள் சென்று உங்களை சுட்டுக் கொல்ல முடிவு செய்திருக்கிறது பொலிவிய அரசு எனும் முடிவை ராணுவ அதிகாரி ரோட்ரிக்ஸ் தெரிவித்த போது, பரவாயில்லை, ஆனால் நான் உயிரோடு பிடிபட்டிருக்கக் கூடாது என்று சொனனவாறே, தனது தோழர் காஸ்ட்ரோவிற்கும் மனைவி அலெய்டாவிற்குமாக இரண்டு செய்திகளை அவரிடம் அளிக்கிறார் சே. ‘பிடலிடம் நம்பிக்கையோடு இருக்கச் சொல்லுங்கள், லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் புரட்சி வெற்றி பெறும் நாள் வரும். அலெய்டாவை மறுமணம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கச் சொல்லுங்கள்’.. எனும் செய்திகள் அவை. ஒரு புரட்சியாளனாக ஏகாதிபத்தியத்தை அச்சுறுத்தும் சே எனும் அந்த மனிதன் அன்பால் நிறைந்தவராகவும் இருக்கிறார். தோழர் பிடலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சே எழுதிய கடிதங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்று அன்பாலும் உணர்வுகளாலும் நிறைந்தவையாகும்.
’எனது வீடு என்பது என் இரண்டு கால்கள் என்று மீண்டும் ஆகியிருக்கிறது. என கனவுகளுக்கு எல்லையோ முடிவோ கிடையாது. துப்பாக்கிக் குண்டுகள் வேறொன்றை முடிவு செய்யும் வரை எனது கால்கள் பயணித்துக் கொண்டே தான் இருக்கும்’ என பிடலுக்கும், என் தாய் நாட்டில் பிறந்ததையும், உன்னை மனைவியாக பெற்றதையும் என் வாழ்க்கையின் அற்புத விஷயங்களாக கருதுகிறேன்’ என மனைவிக்கும், ‘என் அன்பு தாய் தந்தையே, உங்களுக்கு கீழ்படியாத இந்த தறுதலை பிள்ளையின் தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என பெற்றோருக்கும், ‘பெரிய மனுஷியே, மீண்டும் உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அம்மாவையும் கினாவையும் அணைத்துக் கொள். உன்னை பிரிந்திருக்கிற காலம் எல்லாவற்றிற்கும் சேர்த்து உன்னை ஆரத்தழுவுகிறேன்’ என மகளுக்கும் எழுதிய கடிதங்கள் வாயிலாக அறிய முடிகிறது சே எனும் மாவீரனின் அன்பான மறுபக்கத்தை. தான் கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரம் முன்பாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பள்ளி அறையின் நிலையை பார்த்து. ‘இந்த மோசமான சூழலில் எப்படி நம் குழந்தைகள் படிப்பார்கள், நான் பிழைத்திருந்தால் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டித்தருகிறேன்‘ என ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸிடம் சே சொன்னதாக அவர் பதிவு செய்திருக்கிறார். புரட்சியாளர்கள் என்பவர்கள் அன்பால் உந்தப்படுபவர்களே.,
முதலாளித்துவத்தின் இறுதி கட்டமான ஏகாதிபத்தியத்தை திட்டமிடப்பட்ட வலிமையான போராட்டங்களின் மூலமாகத்தான் அழிக்க முடியும். வஞ்சிக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் கடமை என்பது என்பது ஏகாதிபத்தியத்தின் அடித்தளங்களை அகற்றுவதே ஆகும் என அறைகூவல் விடுத்தவர் சேகுவேரா(Che Guevara).
இன்றைய ஏகாதிப்பத்தியத்தின் முகம் அத்தகைய அருவருப்பான தன்மையில் தான் இருக்கிறது. காசாவின் மீதான இஸ்ரேலின் மனிதத் தன்மையற்ற யுத்தத்தின் அரசியலையும் அதன் விளைவாக உருவாகும் பேரழிவுகளையும் செய்திகள் வாயிலாகவும், புகைப்பட, வீடியோக்கள் வழியாகவும் முழுமையாக உணர்ந்து விட முடியுமா என தெரியவில்லை. காசாவில் கொல்லப்பட்டவர்களின் இறுதி நாட்கள் குறித்து எழுதப்பட்ட ’மரித்தோர் பாடல்கள்’ எனும் தொகுப்பை வாசிக்கும் போது அப்படியே நம்மை உறைந்து நிற்க வைத்து விடுகிறது.
உலகின் குப்பைத் தொட்டிகள்
உணவுகளால் நிறைந்திருக்க
எங்கள் தேசத்தின் குழந்தைகள்:
பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள்..
வெறுமனே வாசித்து கடந்து விட முடியாத இத்தகைய துயர கதைகள் அத்தொகுப்பில் நிறைந்திருக்கிறது. ஏகாதிபத்தியம் எனும் வார்த்தையை நாம் கேட்டிருப்போம். பயன்படுத்தியிருப்போம். அதுவொரு வார்த்தை மட்டுமா. ஒரு பெரும் அரசியல் அதற்குள் ஒளிந்திருக்கிறது. அதை உணர்ந்து கொள்ளும் போது தான் ஏகாதிபத்தியம் என்பது எவ்வளவு அருவருப்பானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
தொடர்ச்சியாக பத்தாவது ஆண்டாக உலக நாடுகள் தங்கள் ராணுவத்திற்கான செலவை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 2.44 லட்சம் கோடி டாலர்கள் ராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் பத்தில் ஒரு பங்கேனும் சமூக நல நடவடிக்கைகளுக்காக அரசுகள் செலவிட்டிருக்குமா என்றால் இல்லை என உறுதியாக சொல்ல முடியும். உலகத்தை ஒரு யுத்த பதற்றத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பும் அருவருப்பான அரசியலுக்கு பெயர் தான் ஏகாதிபத்தியம். உலகின் முதல் சோஷலிச அரசை உருவாக்கிய மாமேதை லெனின் போரற்ற உலகை படைக்க வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்திய, வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் வளங்களை தங்களுக்குள் மறுபங்கீடு செய்து கொள்வதற்கான நடவடிக்கையே யுத்தம் என தெளிவு படுத்தினார். உலகின் பெரும் ஏகாதிபத்திய நாடாக அமெரிக்கா உலகை பல வகையிலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. போரற்ற உலகை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டிய தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அத்தகையதொரு உலகை படைக்க நமக்கு ஆதர்சமாக நின்று வழிகாட்டுகிறார் சே. அவரது வார்த்தைகளோடு அவரது கனவுகளையும் நமது நெஞ்சங்களில் ஏந்துவோம்
“சுதந்திரம் என்பது
போராடாமலேயே கிடைத்து விடும்
என்று கனவை வளர்த்து கொள்ளக் கூடாது.
அதற்கு நமக்கு உரிமையும் கிடையாது.”
“வாழ்வதற்கான ஒன்றை நாம் ஒரு போதும்
பெறவே முடியாது, அதன் பொருட்டு
நாம் இறக்காவிட்டால்”
எழுதியவர்:-
✍🏻 ஆர்.பத்ரி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Excellent write up. 👏💐🔥
எளிமையாக அனைவரும் அறியக்கூடிய வகையில் எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி.
வாய்ப்பிருந்தால் அனைவருமே ஆண்டர்சனின் சே வாழ்க்கை வரலாற்றையும் படிக்கலாம். விவரங்கள் கொட்டிக் கிடக்கும் படைப்பாகும்.