தங்கேஸின் ஆறு தமிழ் கவிதைகள்
*****************************************************************
1.
சொற்களை விரட்டிப்போகிறேன்
ஆதிக்காட்டில்ஓநாய்களாகி
என்னைச் சூழ்ந்து கொள்ளுகின்றன
காலடியில் தட்டுப்பட்ட
எலும்புக்கூட்டை எடுத்து
அவைகள் மீது வீசுகிறேன்
ஏவாள் உயிர் பெற்று எழுகிறாள்
அவள் கழுத்தில் சீறும்
அரவத்தைப் பார்த்து
ஓநாய்கள் எச்சிலூறுகின்றன
விலா எலும்பற்ற
ஆதாம் வந்து முன் நிற்கிறான்
அவனது தொண்டைககுள்
சிக்கியஆப்பிளும் அப்படியே தானிருக்கிறது
உற்றுப் பார்க்கிறேன்
சொற்களின் திரட்சிதான் ஆப்பிள்
அங்கேதள்ளாடிய படி வரும்
முதியவரை
அடையாளம் தெரிகிறது
இப்போது
சாத்தான் அவர் கழுத்திற்கு
தாவி விடுகிறான்
இனி ஒநாய்கள்
அவர்களை
விரட்டிப் போகும்
*****************************************************************
2. பெயர் சூட்டுதல்
எங்கிருந்து பிறப்பெடுக்கிறது
இந்த காட்டாறு?
உச்சி மலையில் திறந்திருக்கும் இரகசிய அடுக்குகளிலிருந்தா ?
உள்ளே பிரவேசித்துப் பார்க்கிறேன்
புலப்படதாத பக்கங்களில்
கசியும்மூலநதிக்கு
பேய்
தன் பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறது
புனல் பொங்கி பிரவகித்து
தேகத்தை கடக்கும் போது
நான் என் பெயரை சூட்டி மகிழ்கிறேன்
பெயர்களை கடந்தபின்பு
தனக்குள் கலந்து அடங்கும்
யாவற்றுக்கும்
நீ கடலென்று
உன் பெயரை
சூட்டிக்கொள்கிறாய்
*****************************************************************
3. கானவன் மகள்
கல் கெழு சிறு குடிக்
கானவன் மகள் அவள்
புலிப் பல் கோத்த
புலம்பு மணித் தாலி அணிந்து
அசோகந்தழை ஆடையை
இடையில் உடுத்தி
நவ்வி என்ற ஆண் மான்
பின் சென்ற
பிணை என்னும்
பெண்மானைப் போல
தலைவனோடு தனித்து
கானகம் சென்றவள் தான்
இன்னும் திரும்பி வரவில்லை
எந்த அணங்கு தாக்கியதோ ?
வனத்தைக் கடந்தாளோ!
வரிப் புலிக்குத்தான்
இரையானோளோ !
வழிப்பறி கள்வர்களின்
வலையில் விழுந்து விட்டாளோ!
காதலன் ஓடி விட்டானோ !
கொடும் சுரம் தாண்டினாளோ !
இல்லை சருகுகளுக்கு
மெத்தையாகி விட்டாளோ !
அல்லது தாவரங்களோடு
தாவரமாய் சமைந்தே விட்டாளோ !
ஒன்றும் புரியவில்லை
இரண்டாயிரம்
ஆண்டுகள் ஆகிவிட்டன
அவள் இன்னும் காட்டை விட்டு
வெளியே வரவில்லை
செவிலித்தாய் இன்றும்
காத்துக் கொண்டு தான் இருக்கிறாள்
போவோர் வருவோரிடமெல்லாம்
கண்ணீர் மல்க விசாரிக்கிறாள்
தண்டவாளங்களில் தலையை
தேடிப்பார்க்கச் சொல்கிறார்கள சிலர்
பாழுங் கிணற்றுப் பக்கம்
கை காட்டுகிறார்கள் சிலர்
ஊர் ஒரத்துப் புளிய மரங்களை
பார்க்கச் சொல்லுகிறார்கள்
இன்னும் சிலர்
அவள் தண்டவாளங்களில் தேடுகிறாள்
நீர் நிலைகளில் தேடுகிறாள்
கோவில் சுவருக்கு பின்புறம்
முட் புதர்களில் தேடுகிறாள்
ஊரோரம் ஆல மரம் அரசமரம்
புளிய மரங்களில் தேடிப்பார்க்கிறாள்
ம் ஹூம் மகளை காணவில்லை
ஆனால் ஒவ்வொரு முறையும்
காதல் மணம் புரிந்து கொண்ட
ஏதோ ஓர் இளம் பெண்ணின் உடல்
அவள் கண்களில்
தென்பட்டுக் கொண்டேதானிருக்கிறது
கருணைக் கொலையோ
காமாந்தக கொலையோ
சாதியக் கொலையோ
ஆணவக் கொலையோ
ஏதோ ஒரு பெண் வருடமெல்லாம்
கொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள்
இங்கே
ஒவ்வொரு முறை தேடும் போகும்
அது தன் மகளின் முகமாக
இருக்க கூடுமென்று மனது
பதை பதைக்கிறது
இரண்டாயிரம் ஆண்டுகளாகியும்
காதல் மணம் புரிந்த வளை
காணவில்லை
வனம் அழிந்து வருகிறது
இனமும் அழிந்து வருகிறது
இருபது நூற்றாண்டுகள்
கடந்த பின்பும்
பிணம் தேடும் பணி மட்டும்
இன்னும் இங்கே தொடர்ந்து
கொண்டேதானிருக்கிறது.
*****************************************************************
4. மாபெரும் நூலகம்
இந்த உலகத்தை
பெரியதொரு நூலகமாக
மாற்ற முடிந்தால்
ஏறத்தாழ எட்டு பில்லியன்
நடமாடும் புத்தகங்களை அடுக்கலாம்
சர்வ சுதந்திரமாக
நடமாடும் புத்தகங்கள்
தேவையான அடுக்குகளில் தாங்களே
போய் அமர்ந்து கொள்ளும்
சமயங்களில் தேவையான நபர்கள் வாசிக்க
தாங்களாகவே அவர்களின் கைகளில் போய் ஒப்படைத்துக் கொள்ளும்
சில கவர்ச்சிகரமான புத்தகங்களுக்கு
எந்த விளம்பரமும் தேவையில்லை
தாங்களே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும்
சூரியனின் ஆகர்ஷனம் போல்
அவைகள் நம்மை ஈர்த்துக் கொள்ளும்
ஒரே ஒரு புத்தகம் தான் போர்ஹேஸ்
முதலில் கண்டது
பிறகு உலகமெல்லாம் பல்கிப் பெருகியது
அதில் ஒன்று தான் நீ நான் மற்றும்
இந்த பேசும் புத்தகமென்றால்
நீ நம்பவா போகிறாய்?
*****************************************************************
5. சந்தை
ஏதேன் தோட்டமாக இருந்த பூமி
சபிக்கப்பட்ட வனமானது
ஆதாமின் வாரிசு
ஆப்பிள்களை சந்தைப்படுத்த
ஆரம்பித்த பிறகு தான்
மனிதர்கள் வாரிசுகளை
விட்டுச்செல்வது போது
பாம்புகளும் வாரிசுகளை
விட்டுச் செல்ல ஆரம்பித்தன
பல்கிப் பெருகிய அவைகள்
அவசரத்திற்கு ஒளிந்து கொள்ள
இடமில்லாமல்
மூளைக்குள் ஓடிவந்து
ஒளிந்து கொண்டன
சமயங்களில் முதலாளிகளின்
புன்னகைகளில்
ஒளிக்கீற்றுகளாகவும்
அரசியல்வாதிகளின்
மணிக்கட்டுகளில்
ஆபரணங்களாகவும்
அதிர்ச்சியில் தற்காலிகமாக
ஊமையாகிப் போன புனிதர்கள்
யாவற்றையும் மௌன சாட்சியாக
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
பூமி நெட்டி முறித்து புரண்டு படுக்க
ஆசைப்படுகிறது
கார்ப்பரேட் அதை
ஒரு போர்வையாகச் சுருட்டி
கடலுக்குள் கொண்டு செல்ல
எத்தனிக்கிறான்
இந்த முறை வராக உருக்கொண்டெல்லாம்
அவர் வரவேண்டியதில்லை
இதை நாமே தடுத்துவிடலாம் என்று
தோழர் நமது கரங்களை எடுத்து
ஒன்றாக கோர்க்க ஆரம்பிக்கிறார்
பூமி முன்னெப்போதையும் விட
அசுர வேகத்தில் சுழல
ஆரம்பிக்கின்றது
*****************************************************************
6. இரண்டு உலகங்கள்
இதயங்களை கொன்று தீர்க்கும்
இரக்கமற்ற விளையாட்டை
நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
நிலவு
மீன் விழிகளுக்குள் கருங்கடலென
புரளும் இரவைப் பார்த்து சிரிக்கிறாள்
அன்னை மீனாள்
பரிதவிக்கும் இதயங்களின் சாட்சி நீ
சருகுகள் போல உதிரும் நாட்களின் மீது
பொறிக்கப்பட்ட நமது பெயர்கள்
காற்றில் கரைந்து போவதை
காணும் போது
காலம் இரண்டு ராட்சச சிறகுகளை
கொண்ட பறவையாக
கண்முன் விசுவரூபமெடுக்கிறது
பொழுதென்னும் செப்படி வித்தையை சிருஷ்டித்தவன்
மனிதனா கடவுளா என்று தெரியவில்லை
ஆனால்
நினைவில் ஒரு உலகத்திலும்
நிஜத்தில் ஒரு உலகத்திலும்
தாவித் தாவித் செல்லும்
அந்த ஒற்றை வஸ்து தான்
இதயமென்பது போல
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 தங்கேஸ்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
