Dr.ஜலீலா முஸம்மில் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) | www.bookday.in

Dr.ஜலீலா முஸம்மில் கவிதைகள்

Dr.ஜலீலா முஸம்மில் கவிதைகள்

*****************************************************************

1.விடாய் கொண்டு 

வனம் முழுவதும் தூயவளி போல்
மனம் முழுவதும் உன் ஒளி

வானம் பூராவும் மென்னீலம்
போல்
இதயம் பூராவும் உன்னீரம்

மேகம் எல்லாம் வெண்மை
போல்
நினைவில் எல்லாம் உன்மென்மை

விடாய் கொண்டு தேடும் உள்ளம்
பெருங்காடாய் சடைக்கும் நேசம்

கண்மணி
பாகாய்ப் பெருகும் பேரன்பிங்கு
வாகாய்ப் பருக நீ எங்கே?

*****************************************************************

2. என்னை உருக்கி

மௌனத்தை மென்மை என்பார் சிலர்
மௌனத்தை அமைதி என்பார் சிலர்

மௌனத்தை கனம் என்பவர் சிலர்
மௌனத்தை திமிர் என்பவர் சிலர்

நானோ அதைத் தீ என்பேன்
அதில் என்னை உருக்கி எடுப்பேன்

நானோ அதைப் போர்வாளென்பேன்
தீயில் செம்பா எடுத்து ஜனித்தெழும் பேராயுதமாயென் மௌனம்

பேராயுதம் போர் புரியாமலே
வெற்றி கொள்ளும்
புரவிகள் பூட்டிச் சிறகுகள் வளர்க்கும்

சிறகுகள் கொண்டு விடுதலை காணும்
இரும்புடைத்துப் பறத்தலின் கணத்தில்
வானமென் வசப்படும்!!!

*****************************************************************

3. சுபமாக்குவதே நிம்மதி

விருப்பங்கள் வெளிப்பட்டு
உண்மை விளம்புதலில் உருவாகலாம் பற்பல சர்ச்சைகள்

உனக்குப் பிடிக்காதது எனக்குப் பிடித்திருக்கிறது

நீ வாழ்த்தி வரவேற்கும் விடயம்
எனக்கு அசூயையாக இருக்கிறது

நான் உச்சி குளிர்ந்து செய்கின்ற விடயங்கள் நச்சென ஆகிவிடுகிறது உனக்கு

குடை பிடித்து உலாவி வர எத்தனிக்கையில்
நடைசாத்தி விட்டு உறங்கும் மனநிலையில் நீ

சிறுதவிப்பு சிறு எதிர்பார்ப்பு
என்னிடம்
ஒறு முறைப்பு பெருமெதிர்ப்பு
உன்னிடம்

ஒத்துப் போகின்ற ஓரிரு விடயங்களில்
செத்துப் போயின
நீர்த்துப்போயின
நிறைய விடயங்கள்

அந்தந்தக் கால வாழ்தலில்
சமாளித்து விடுதலென்பது
போர் புரிதலுக்குச் சமமாக இருக்கிறது

பொருந்திக் கழித்து விடுதலே
பெருஞ்சுமை கழிப்பதாகிறது

ஒவ்வொருவருக்கும் பிறப்பிலிருந்து
ஒவ்வொரு இயல்பு

ஒவ்வொருவருக்கும்
இறப்பு வரையிலும்
ஒவ்வொரு குணம்
அதை மாற்றுவது சுலபமில்லை

அனுபவங்களைச் சுமந்த
நினைவுத்திரி எரிந்து
பெருஞ்சுடர் வெளிச்சம்
போல
சுபமாக்குவதே நிம்மதி.

அதே
அதே
நல்வாழ்வியல்!!!

*****************************************************************

4. ஈரப்பசும் வெளி…

என்
புன்னகையைக்
களவு செய்து
அழுகையைப்
பரிசளிக்கிறீர்கள்

என் புன்னகையை நேசிக்கும் நீங்கள்
அழுகையை வெறுத்து வெறுமையாக்கி என்னிடம்
வீசுகிறீர்கள்

என் வெளியழகை
ரசித்த நீங்கள்
என் கனவுலகைத்
தரிசிக்கத் தவறி விட்டீர்கள்

ஆனால்
நீங்கள்தான் எனது நேசம்
புன்னகையோ
கண்ணீரோ அல்ல

நேசிப்பவரின்
ஆசையில் ஆகாயமளந்து
வலியில் விரல் தந்து
ஈரப்பசும்வெளியாய்
நான்
நனைந்திருக்கிறேன்

நான் நேசிப்பவரின்
புன்னகை கண்ணீர்
இரண்டுக்கும்
ஒரே நிறுவை
என் தராசில்

இரண்டாம் இடமென்று
இதயத்தில் எந்த மூலையும்
கிடையாது

ஆனால்…

என் புன்னகைக்குள் ஒளிந்திருக்கும்
அழுகையையும்
கண்ணீருக்குள்
ஒளிந்திருக்கும் கனத்தையும் எப்போது அறிந்து கொள்ளப் போகிறீர்கள்?

*****************************************************************

5. மேற்கு வானின் மஞ்சள்…

மெல்லத் துடித்தழுது சொல்லாது
செத்துக் கொண்டேயிருப்பது
சிறு சிரிப்பால் பூசி மெழுகப்படுகிறது

இன்னதென்று தெரியாத வல்லூறு இதயம் பிராண்ட
அதிகபட்சமாக வழியும்
இரத்தக்கசிவை சுருக்கமாக
மௌனச்சீலை கொண்டு துடைக்க முடிகிறது

மரம் வளர உதிர்ந்த வண்ணம் இருக்கும் பழுத்தவிலை
வெயிலில் காய்ந்து சருகாவது போல
ஒவ்வொரு நாளும் கழிவதில் கடப்பாடுதானே ஒழிய,
திருப்திதானே தவிர பூக்களில்லை வாணாளில்..
பூரண வருடல்களில்லை வரலாற்றில்..

கழிந்து உதிர்ந்தவை
பின்னும் உரமாதலில் கூடுதல் திருப்தி அடைதல் கூடும்
அவர்கள்
இருக்கட்டும்..
காய்ந்து கொண்டேயிருப்பதுதான்
சருகின் இலட்சணவிலட்சியம்
என்றறிந்தும் இவர்கள் அறியாதிருக்கிறார்கள்

பொழுதுகள் கடந்தாலும்
உபயங்கள் உபயோகித்தாலும்
தப்பர்த்தங்கள் தடயங்களாகித்
தொடர்ந்து ஊருகின்றன கிழக்கில்..
எனினும் மேற்கு வானில்
மஞ்சள் பூசி உங்களை இரசிக்கச் செய்வேன்

இதுதவிர இன்னும் நிறையவே உள்ளன நினைவுகளில்
பாறை இடுக்குகளில் பாயும்
சுனை நீரென
அவை உங்களை ஈரலித்து வசந்தத்தின் சுகந்தத்தை
பிரவாகிக்கும்
ஆயினும் சிலாகிக்கவொண்ணா
நிலை உறக்கத்தில்
ஆழ்ந்து விட்ட
மலைவாசிகளென உங்கள் விழிகள்

மறுபடியும் கனவுகள் வரும்
மறுபடியும் விடிவெள்ளி தோன்றும்
மறுபடியும் விடியல் புலரும்
ஒருபோதும்
விட்டுக்கொடுக்காத
கட்டுக்கடங்காத
நேசத்தின் அகத்தூண்டலில்
ஆழ்ந்த கிருபை பெற்றுவிட்டேன்

அஃதது அவ்வாறே இருக்கட்டும்
எத்தனையோ துயரங்கள் இருக்க இல்லையென்றேதானே
கவிதை
எழுத முடிகிறது….!!

*****************************************************************

6.பெருந்தேடல்

கொண்டாடும் நேசகர்களை எல்லாம்
ஒவ்வொன்றாய் இழந்தேன்

காலவிருட்சம்
என் காதல் இலைகளை
உதிர்த்து கொண்டே இருக்கிறது

பழுத்தும் பழுக்காமலும்
உலர்ந்தும் உலராமலும்
சருகான கதைகளில்
பசுமையை எழுதிய கனாந்தரம் எத்தனை

தழுவிய காற்றில்
தகிக்கும் வெயிலில்
ஆகாய முகிலில்
இரவின் நிலவில்
தாகித்தழும் உள்ளம்
அவர்களைத் தேடி

ஒரு போதும் நிகழப் போவதில்லை என்றறிந்தும்
தேடியழுது
துக்கிக்கும் இதயத்தை என்னதான் செய்வேன்

உனது விருப்பத்திற்குரியவர்
உன்னைத் தவிர்க்கும் வகையில்
உணரும் போது
நொறுங்கியுடையும் வலியானது
மிகக்கொடியது
இதயத்தைக் அறுத்தும் அரிந்தும் கூறு போடும் துயரம் தருவது

ஆயினும்…
நீ என்னைத் தேட மாட்டாயா என்பதே
என் பெருந்தேடலாக இருக்கிறது

*****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻 Dr.ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *