தங்கேஸ் கவிதைகள்
*****************************************************************
1. காதலும் பெருங்காதலும்
வானம் போல விரிந்து போகும்
எல்லையற்ற அன்பைத்தான்
நான் நேசமென்று நினைத்திருந்தேன்
நீயோ உன் விழிகளுக்குள்
வலம் வருவதே
பெருங்காதலென்கிறாய்
அம்மைக்கு மட்டும் காதலனாய்
இருந்திருந்தால்
இறைவன் எப்படி
உலகத்திற்கே உள்ளம் கவர் கள்வனாகியிருப்பானா சொல் ?
தவவளயும் மீனும் சரி சமமாகத் தான்
நீரை நேசிக்கின்றன
எல்லையற்ற அன்பின் நிமித்தத்தினால்
மீன் கடலுக்குள் பிரவேசித்து விட்டது
தவளையோ பாசி படர்ந்த குளத்திற்குள்ளேயே
காலம் தள்ளுகிறது
கல்லில் முட்டிக் கொண்டு
சாவது தான் காதலென்றால்
இதயமே இதயமே
நீ தவளையா ? மீனா சொல் ?
*****************************************************************
2
பிறை நிலவு நாள் தான்
இதைச் சொல்வதற்கு உகந்தது
வெளிச்சமும் இருளும் கலந்த கலவை
அன்பின் நிமித்தம்
செய்த தவறுகளெல்லாம்
இன்று மன்னிக்கப்பட்டு விடும்
வெள்ளிக்குடம் போல்
பிறையில் ஒரு தளதளப்பு
உள்ளே தழும்பிக்கொண்டிருக்கிறது
கட்டற்ற மனது
சாத்தானுக்கும் எட்டப்பனுக்கும்
இன்று விமோசன நாள்
நானே என்னை
பாத்திரமாக்கிய
பிச்சாடனன்
நீ உன்னை இட்டு நிரப்பலாம்
கருவறையில் எரியும் தீபத்தில்
தணல் கொழுந்தாக
சுடர்விடும் நம் ஆன்மாக்கள்
இன்று பூரண விழிப்புணர்வு பெற்று விட்டன
இந்த நாளை கொண்டாட
மௌனத்தின் மேல் சுழலும் பேரண்டம்
நேசத்தை கருந்திரவமாக்கி
நம் உடலெங்கும் பீய்ச்சி அடித்து விட்டு
செல்கிறது
*****************************************************************
3. மகத்தான சல்லிப் பயல்
கலகத்தை மூட்டி விட்டு
கமுக்கமாய் தப்பித்துக் கொள்வதில்
மகத்தான சல்லிப் பயலடா நீ
என்னால் தெருவில்
என்ன பிரச்சினை வந்து விட்டது என்று தானே கேட்கிறாய்
தெரு வாய் பேசாதது என்பது
எத்தனை வசதியாகப் போய் விட்டது உனக்கு
குறைந்தது இரண்டு தெரு நாய்களாவது
உன்னை கவனித்துக் கொண்டு தானிருக்கும் என்பது கூட
எப்படி தெரியாமல் போனதோ உனக்கு
வாய்ச் சவடாலில்
சித்தன் புத்தனென்று ஆரம்பித்து
வரலாற்றையே ஒரு புரட்டு புரட்டிவிடும்
எமகாதகப் பயல் தானே நீ
எதிர் வீட்டுக்காரன் தன் பெண்டாட்டியை
தெருவில் விட்டு அடித்த போது
எப்படி ரசித்துக் கொண்டே சென்றாய் நீ ?
வெறும் பயலே
என்னை யாரென்று கண்டு விடத் தானே
சுற்று முற்றும் தேடுகிறாய்
அது சரி சரக்கடித்தால் தானே
என்னை யாரென்றே
அடையாளம் தெரியும் உனக்கு
*****************************************************************
4
புன்னகைக்கும் புத்தனே உண்மையைக் கூறு
கடவுள் என்ற ஒருவரைக் கடைசி வரையிலும்
நீ காணவேயில்லையா?
இருளிலிருந்து இருளைப் பிரிப்பது போல
என்னிலிருந்து வெறுமையை
எப்படிப் பிரிப்பது சொல் ?
புன்னகையில் ஒளி வெள்ளம் தேக்கி வைத்திருப்பவனே
உண்மையை உரைத்திடு
வாழ்க்கை என்பது அவ்வளவு
மகோன்னதமானதா ?
யசோதரவாவின் கண்ணீரிலும்
குழந்தை ராகுலனின் கண்ணீரிலும்
எந்தத் தோணியில் கடந்து போனாயோ
துறவறத்திற்கு?
*****************************************************************
5. கேள்வி
கண்ணாடிப் பெட்டிக்குள்
கை கால் பரப்பி படுத்திருப்பவனை
கேட்க முடியாது
கால் மாட்டில் அமர்ந்து
அழுது கொண்டிருப்பவளையும்
கேட்க முடியாது
சத்தம் வராமல் சங்கேத மொழியில்
பேசிக் கொண்டிருக்கும்
இரண்டு குழந்தைகளையும்
கேட்க முடியாது
சாமியானா பந்தலுக்கு கீழே
நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு
கை பேசியை நோண்டிக் கொண்டிருப்பவனையும்
கேட்க முடியாது
உயிரை மாய்த்துக் கொள்ளும்
ஒரு முடிவை எடுப்பதற்கு முன்
வாழ்க்கை அவனை
எந்த நொடியில் கை விட்டதென்று.
*****************************************************************
6. வருகை
என் சுவாசக் காற்றே
நீ எங்கே இருக்கிறாய் ?
இந்த மரம் கல்லாகி
எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன !
இதன் கிளைகளுக்குள்
தேரை புகுந்து விட்டது
முதுமை
ஒவ்வொரு இலையாக
பட்டுப்போக வைத்துக் கொண்டிருக்கிறது
இன்னும் கொஞ்சம் உயிர்ப்போடு இருப்பது
பச்சையம் கலந்த இதன் அடிப்பகுதி தான்
சபிக்கப்பட்ட ஆண்டுகள் முடிவடையும் நேரம்
ஒவ்வொரு கிளையும் ஏகாந்த தவத்தில்
உன் வரவை நோக்கி
நீ எப்படி வரப்போகிறாய்
குளிர் மழையாகவா
கடும் புயலாகவா ?
வாழ்க்கை இன்னும் கொஞ்சம்
மிச்சமிருக்கிறது இந்த மரத்தில்
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

