கவிஞர் ச. சக்தி எழுதிய ஆறு கவிதைகள் | சிறந்த தமிழ் கவிதைகள் | Tamil Love Kavithai | தமிழ் புதுக்கவிதை | www.bookday.in

கவிஞர் ச. சக்தியின் கவிதைகள்

கவிஞர் ச. சக்தியின் கவிதைகள்

***************************************************

வேப்பமரம்
நிழலில் நிற்கிறேன்
அசையும் அதன் கிளைகள்
பூமியின் மடிமேல் உதிரும்
அதன் பூவும் சில பழங்களும்
அவளில்லா எல்லா நேரங்களிலும்
ஊஞ்சல் கட்டித் தூங்க வைக்கும்
அம்மாவின்
ஊதா கலர் புடவை
பசியாற மேலேறும் அணில்கள்
உச்சியில் காகங்களின் முட்கூடுகள்
மரத்திற்குக் கீழே ஒய்யாரமாய்
பாட்டியின் நிழல்
பொருக்குவது பழமோ காயோ
மரம் போல் நிமிர்ந்து நிற்கிறது
குடும்பத்தின் ஆணி வேர்
பாட்டியின் கனிவினிலே,

***************************************************

பொட்டு வைத்து
உள்ளே அழைக்கிறேன்
மெட்டு போட்டவாறே
உள்நுழைகிறது
இளையராஜாவின்
ஆர்மேனியத்தின் காதல் கீதம்

***************************************************

வியர்வையை
உறிஞ்சிக் குடிக்கும்
அட்டைப் பூச்சிகளென சில உறவுகள்
இதுவோ முக்காலத்துக்கான பருவம்

***************************************************

நானே கைகொடுத்தேன்
அவர்களோ காலை நீட்டினார்கள்
எதை நீட்டினால் நமக்கென்ன
காலில் விழவில்லை
மண்ணில் தவழவில்லை
கொஞ்சம் கொஞ்சமாய் நிமிர்ந்திருக்கிறது
சேரியின் முதுகு
கூண்டுகளற்ற அம்பேத்கர் சிலையின் பக்கத்திலே
ஒரு நூலகம்

***************************************************

யாரும் பேசாத
பொழுதெல்லாம்
நானே எனக்குள் பேசிக்கொள்கிறேன்
வெளியில் கேட்காதவாறு
“இந்த பாழாய்ப் போன
இரவுகளுக்கோ காதுகள் நிறைய ”

***************************************************

நீங்கள்
அதை நிலா என்று
சொல்லியே பழக்கப்பட்டுவிட்டீர்கள்
நாங்கள் என்னமோ
அந்த நிலாவை
எங்கள் குடிசைக்கான
விளக்கு என்றே
சொல்லிப் பழக்கிக்கொள்கிறோம்
இருட்டு விடியும் வரை,

***************************************************

எழுதியவர் : 

✍️ – கவிஞர் ச. சக்தி
அழகு பெருமாள் குப்பம்
பண்ருட்டி,

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *