அ.சீனிவாசன் எழுதிய ஆறு கவிதைகள்
1. காணாமல் போகமுடியாதவர் பற்றிய அறிவிப்பு
******************************************************************
எல்லோரையும்
தொலைத்து விட்டேன்.
என்னைத்தான்
தொலைக்க முடியவில்லை.
தொலைத்தல் என்பது
அடையாளங்களை இழத்தல்.
அடையாளங்களை இழப்பதும்
ஓர் அடையாளமாகிவிட்ட உலகில்,
என்னைத்தான்
தொலைக்க முடியவில்லை…
2. காதல் உள்ளபோதே கவிதை எழுதிக்கொள்
***********************************************************
வழி தேடி
திரிந்த மழைநீரை
செடி நோக்கி
திருப்பியிருந்தால் —
கோடையில்
நிழல் தேடி அலைவதற்குப் பதிலாக,
உன் புன்னகையில்
மறைந்திருப்பேன்.
நீ என் மனதிலிருந்து
காததூரத்தில் இருக்கிறாய் —
அண்மையில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் நான்.
நான் உன் மனதிலிருந்து
கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறேன் —
கண்டுபிடிக்க முடியாத தூரத்தில்
இருப்பதாக நினைக்கிறாய் நீ.
காதலில்
அண்மையும் சேய்மையும்
இயற்பியல் கூறு அல்ல, சகியே!
“கூப்பிடு தூரம்” என்பதற்கு
கூப்பிட்டால்தான் தெரியும், அன்பே!
3. புத்தர் ஆசையைத் தூண்டுகிறார் .
**********************************************
புத்தரின் தலைக்கு
விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆங்கிலேயரால்
வாங்க முடியாத காந்தியை
அதிக விலைக்கு
வாங்குகின்றனர் சுதந்திர இந்தியர்.
காந்தி காட்டிய பொம்மைகள்
மட்டுமே
எப்போதும் காந்தி காட்டிய வழியில்.
பொம்மைகளாக இருக்க மறுத்த
புத்தரையும் காந்தியையும்
ஒருவன் விண்ணில் விளக்காக்கினான்,
எல்லோரும் சேர்ந்து
பொம்மைகளாக்கி விட்டோம்.
4. சிரி சிரி ஸ்ரீ
***************
எழுதத்
தூண்டாத
எதுவும்
சோகமே இல்லை,
எழுதிய
பின்
எதுவும்
சோகமாய் இல்லை.
5. உரிமையுடன்
*******************
எல்லோர் வீட்டுக் கதவுகளோடு
ஜன்னல்களையும் தட்டுகிறது
காற்று!
மலைகளின் மடியில்
பனித்துளியைத் தாங்கி,
வயல்களின் வாசனையை
மார்பில் சுமந்து,
தெருக்களின் கதைகளை
செவிகளில் ஏந்தி,
எல்லை தாண்டி
எவரையும் வணங்கி,
காற்று பயணிக்கிறது!
களிமண் குடிசைகளின்
திறந்த வாசல்களில்
குழந்தைகளின் சிரிப்போடு
கைகோர்க்கிறது;
மாடமாளிகைகளின்
மூடிய ஜன்னல்களில்
மெல்லத் தட்டி
மௌனத்தை உடைக்கிறது.
அது ஓய்வதில்லை,
அது பாகுபடுத்துவதில்லை,
வறுமையின் வாசல்,
வளமையின் முற்றம்,
எல்லாம் ஒன்றென
அதன் பயணத்தில்
எல்லோரையும் தழுவி,
சுதந்திரத்தின் பாடலை
பாடுகிறது காற்று!
கேட்கிறாயா,
அதன் மெல்லிய இசையை?
உன் இதயத்தின் ஜன்னலைத்
திறந்து வை,
காற்று உன்னோடும்
கதை பேச வரும்!
6. முதன்முதலாக மூக்குக் கண்ணாடி அணிபவன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதலில்
கண்களுக்கு கண்ணாடியை அணிவிக்கிறான்,
அதே நேரத்தில் கண்ணாடிக்கும் கண்களை.
மெல்ல
கண்ணாடிக்குக் கண்கள் பழகுகின்றன,
கண்களுக்குக் கண்ணாடி பழகுகிறது.
பிறகு
எதிரே வரும் ஒவ்வொன்றையும்
முதலில் கண்ணாடிக்குக் காட்டுகிறான்,
அதன்பின் தான்
தன் பார்வைக்கு.
அதேபோல்
பார்வைக்கு வருவது ஒவ்வொன்றையும்
முந்தைய போல
கண்ணாடியுடன் பகிர்கிறான்.
நாள்கள் செல்லச் செல்ல
மூக்கின் மேல் கண்ணாடி இருப்பதை மறக்கிறான்,
அதோடு
பார்வைக் குறைபாடும் நினைவில் இல்லை.
முதன்முதலாய் மூக்குக்கண்ணாடி அணிபவன்
தொடக்கத்தில் சிறிது தடுமாறுகிறான்,
முதன்முதலாய் வார்த்தைகளை
பார்வை அணிவிக்கும்
கவிஞன் போல.
எழுதியவர்:
அ.சீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Glad to read these