தங்கேஸ் எழுதிய ஆறு கவிதைகள்
1. நிகழ்த்து கலை
ஒரு ஸ்பரிசத்தில் எத்தனை
அடுக்குகள் திறந்து கொண்டனவோ
அத்தனை அடுக்குகளிலும்
கிளிகள் வளர்க்கிறேன்
அவை ஓயாமல்
உன் பெயரை
உச்சரிப்பதும்
பயிற்சியினால் அல்ல
இந்தப் பறவை வானத்திற்கு
சொந்தமென்றால்
‘உன் விரல்கள் விடுதலையை
அளிக்கும் தெய்வீகச் சாவிகள் தான்
பருத்தி நூலைப் போல்
பிடரியில் இறங்கும் சுவாசம்
உயிரின் கட்டுக்களை அறுத்து
ஒரு பட்டமாக பறக்க விடுகிறது
மூச்சுக் காற்றினால்
எத்தனை மொட்டுக்கள்
திறந்தனவோ
அத்தனையிலும்
மலர்ந்து வரும் சுவாசம்
பேரன்பின் நிகழ்த்து கலை
நிகழ்த்து கலையின்
வாழ்தல் மரணித்தல்
விளையாட்டு அத்தனையும்
உன்னால் அன்றி
என்னால் கண்டு பிடிக்கப்பட்டதல்ல.
ஒரு பட்டமோ கிளியோ
சுவாசமோ
என்னிலிருந்து
புறப்பட்டுப் போகையில்
எப்படியும்
புதிதாகப் பிறந்து விடுகிறேன்
நான்?
2. கடலென
எங்கிருந்து பிறப்பெடுக்கிறது
இந்தக் காட்டாறு?
உச்சி மலையில் திறந்திருக்கும் இரகசிய அடுக்குகளிலிருந்தா ?
உள்ளே பிரவேசித்துப் பார்க்கிறேன்
புலப்படாத பக்கங்களில்
கசியும் மூலநதிக்கு
சாத்தான்
தன் பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறது
புனல் பொங்கிப் பிரவகித்து
தேகத்தைக் கடக்கும் போது
நான் என் பெயரைச் சூட்டி மகிழ்கிறேன்
பெயர்களைக் கடந்தபின்பு
தனக்குள் கலந்து அடங்கும்
யாவற்றுக்கும்
நீ கடலென்று உன் பெயரை
சூட்டிக்கொள்கிறாய்
3. அது
தீண்டும் அரவங்களுக்குத் தெரியாமல் போனாலும்
வாங்கும் உடல்களுக்குத் தெரிந்தேதான் இருக்கிறது
அது என்னவென்பது
பற்களில் சிக்காவிட்டால் என்ன?
பிளவு பட்ட நாவுகள் எதற்கு?
எச்சிலில் ஊற்றி காற்றில் இறைப்பதற்குத்தானே?
தீண்டும் அரவங்களுக்குத் தெரியாமல் போனாலும்
வாங்கும் உடல்களுக்குத் தெரிந்தேதான் இருக்கிறது
அது என்னவென்பது
சொற்களுக்குள் சுருண்டு கிடக்கலாம்
சிலிர்த்தெழுவதற்குத் தோதுவாய்
அல்லது
ஒரு உரையாடலில்
ஒரு வார்த்தைக்கும் மறுவார்த்தைக்கும்
விழும் இடைவெளியில்
தீண்டும் அரவங்களுக்குத் தெரியாமல் போனாலும்
வாங்கும் உடல்களுக்கு தெரிந்தேதான் இருக்கிறது
அது எவ்விதம் நிகழுமென்பது
இயல்பாக எழும் புன்னகையை மறைக்கத்தவறியதற்காய்
தன் மீதே விரோதம் கொள்ளும்
உதடுகளின் சுழிப்பில்
கத்தி செருகி எடுக்கப்பட்ட ஒரு இதயம்
வழியும் குருதியின் வழியே
கொள்ளும் கடைசித் துடிப்புகளை
சத்தமில்லாமல் நிறுத்தும் துரோகத்தின் கரங்களில்
ஒரு மலர் வளையத்தை முத்தமென வைத்துப்போகும்
புன் முறுவல் பூத்த இதழ்களில்
ஒரு பிரார்த்தனையில் பாதியை எதிரிக்குக் கொடுத்து விடும்
ஒரு கடவுள் சந்நிதாதனத்து அமைதியில்
தீண்டும் அரவங்களுக்குத் தெரியாமல் போனாலும்
வாங்கும் உடல்களுக்குத் தெரிந்தேதான் இருக்கிறது
வாங்கும் உடல்களுக்குத் தெரிந்திருந்தாலும்
கடைசிவரையிலும் தெரியாமலலே போய்விடுகிறது அவைகளிடமிருந்து
தங்களை எவ்விதம் தற்காப்பதென்பது,,
4. பாஷோவின் குளம்
பாஷோவின் குளத்திற்குள்
குதிக்கிறது தவளை
க்ளக் …..
போன ஜென்மத்திலிருந்து
கண் விழிக்கிறேன்
முல்லையாற்றின் மீது
வாசல் தெளித்துக்
கொண்டிருக்கின்றன
இராத்தூறல்கள்
வெள்ளி வளையல்கள்
ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கி
எழுகின்றன தோரணங்களாக
.
உயிர்களைப் படைக்கும்
கட்டற்ற புனைவு
திசை தோறும்
விரிந்து செல்கிறது இரவாக
இவ்வளவு கூர்மையான நிலவை
இதற்கு முன்பு
நான் கண்டதேயில்லை
நீர்க்குமிழி போல்
முளைத்தெழும் மீனொன்று
நதிப் படுகையில்
சற்றே கண்ணசந்திருக்கும்
கடவுளைக் கடித்து விட்டு
நீரோட்டத்தில் பாய்கிறது
இப்போது என் குவிந்த
கரங்களுக்குள் தளும்பிக் கொண்டிருக்கும்
நதிக்குள்லிருந்து
பளிச் பளிச்சென அயிரை மீனாக
குதித்துக் கொண்டிருக்கின்றது
முற்றுப்பெறாத காலம்.
5. நிழல்கள்
எதிர்வீட்டுச் சுவற்றில் தரையிரறங்குகின்றன
என் நிழலின் விழுதுகள்
நானோ என் நிழலின் பார்வையாளன்
கருவறையில் தோன்றிய கருமைநிறம்
பூசி அலைகின்றன
கால்கள் இல்லாத நிழல்கள்
பகலெல்லாம் நாய் வாலென நீண்டிருக்கும்
நிழல்கள் தான் எத்தனை எத்தனை
சாதி நிழல்கள்
மத நிழல்கள்
முகத்திற்கு ஒரு நிறம் காட்டும்
தந்திர நிழல்கள்
கோவில் கருவறையில்
தீப தீபத்தின் வெளிச்சத்தில்
கல்சுவரில் விழுந்து உயிர்த்து
தரிசனம் தருகிறது
மூலவரின் நிழல் என்றால்
நாமோ காற்றில்அசைந்தாடும்
அகல் விளக்கின் நிழல்கள்
பதறிப் படபடத்து
கண்மூடுவோம்
தரிசனம் கிடைக்கும் முன்பே
6. அற்பம்
யாவரும் கைவிட்டுப் போன இரவில்
குழல் விளக்கில் மோதி சரிகின்றன
ஈசல் பூச்சிகள்
சிறகுகள் உதிர்ந்த பின் தென்படும்
அதன் அருவெறுப்பான தோற்றம் தான்
நம்மை ஒரு கணம் நிலைகுலைய
வைக்கின்றது
சிறு அற்பமான வாழ்க்கையை
சிறிதேனும் அர்த்தப்படுத்தும்
ஒரு நேசமான புன்னகை கூட
கிடைக்கப்பெறாத பொழுதுகளில்
கைவிடப்பட்ட இதயங்கள்
சபிப்பது தம்மைத் தாமே தவிர
வேறொன்றையல்ல
நேசிக்கத் தெரியாத மனிதர்களை
அரக்கன் பலி கொண்டு போவதும்
இது போன்ற
தனிமை பீடித்த சமயங்களில் தான்
நடுகற்களைப் போல நின்றிருக்கும்
நட்சத்திரங்கள்
தூண்டிலில் அகப்பட்ட மீனைப் போன்று
துடிக்கும் இதயங்களை
இரவெல்லாம
கண் கொட்டாமல் பார்ப்பதும்
இப்படிப்பட்ட
அற்பமான பொழுதுகளில் தான்
7. துயரத்தின் மொழி
மொழியின் வழியே
கடக்கும் துயரத்தை
கவிதைக்குள் சிறைப்படுத்தி
வைக்கிறான் கவிஞன்
விடுதலை என்பதில்லை
அதற்கு ஆயுள் பரியந்தம்
இனி எத்தனை இதயங்களில் சிறைவாசமோ ?
ஒரு பறவையின் குரலுக்குள்
அதை இறக்கி வைத்து விட
பிரயத்தனப்படும் இசைக் கலைஞனும்
கடைசியில் தன் தோல்வியை
ஒப்புக் கொண்டு
வெறுமையில் திரும்புகிறான்
நாற்புறமும் களங்கமற்றுச் சுழலும்
ஒரு பட்சியின் கண்களை
எப்படி எந்த இசைக் கலைஞனும்
எதிர் கொள்வான் ?
புல்லாங்குழலின் துளைகளின்
வழியே கசியும்
ஒரு உருக்கும் கீர்த்தனை
இறுதியில் புகலிடம் கேட்பது
நமது இதயத்தை தானே ?
ஆயிரம் விழிகளைக் கொண்டு
பூமியை வெறித்துக் கொண்டிருக்கும் வானம்
கடைசியில் காண்பது
அறுந்து போய் துடிக்கும்
ஒரு பல்லியின் வாலை
யாராலும் ஒட்ட வைக்க முடியவில்லையென்ற
அவலத்தைத்தான்
கண்களை அகற்ற முடியாமல் மறுகும்
நம் துயரத்தின் கடவுளோ
பலியாடுகளின் கழுத்தை
சரக் சரக்கென அறுக்கும்
கூர்மையான கத்திகளிலிருந்து நாற்புறமும்
பீச்சியடிக்கும் ரத்தத்தை கண்டு
பித்தேறி
முழுப் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறார்
இப்போது
– தங்கேஸ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக்க நன்றி