முதலீட்டாளர்களைக் கவரும் சிறு நிறுவனப் பங்குகள் - Small-cap stocks that attract investors - Small Medium Enterprise – SME - ஐபிஓ - Article - https://bookday.in/

முதலீட்டாளர்களைக் கவரும் சிறு நிறுவனப் பங்குகள்

முதலீட்டாளர்களைக் கவரும் சிறு நிறுவனப் பங்குகள்

கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்கத்துக்கென ஐபிஓ மூலம் முதலீடுகளைத் திரட்ட அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களையும் அணுக ஆரம்பித்திருக்கின்றன. அதாவது, `நாளொரு ஐபிஓ-வும் பொழுதொரு விளம்பரமுமாக’ வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பத்திரிகைகளில் பரவலாகப் பேசப்பட்ட ஐபிஓ `ரிசோர்ஸ்ஃபுல் ஆட்டோமொபைல்’ என்கிற சிறு, நடுத்தர நிறுவன வகைமையைச் (Small Medium Enterprise – SME) சார்ந்ததாகும். அப்படிப் பேசப்பட்டதற்கானக் காரணம் என்ன?

முதலீட்டாளர்களைக் கவரும் சிறு நிறுவனப் பங்குகள் - Small-cap stocks that attract investors - Small Medium Enterprise – SME - ஐபிஓ - Article - https://bookday.in/

ரிசோர்ஸ்ஃபுல் ஆட்டோமொபைல் என்பது யமஹா தயாரிக்கும் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் பல டீலர்களில் ஒன்றாகும். இதற்குச் சொந்தமாக இரண்டு ஷோரூம்கள் இருக்கின்றன. இதில் வேலை செய்பவர்கள் எட்டே எட்டு பேர்தான். இது தனது செயல்பாடுகளை விரிவாக்கும் நோக்கத்தோடு ஐபிஓ மூலம் ரூ 12 கோடி திரட்ட திட்டமிட்டு அதன்படி அறிவிப்புகளை வெளியிட்டது. முதலீட்டாளர்கள் இதன் பங்குகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்க விண்ணப்பித்தனர். ஐபிஓ முடிந்த நிலையில் வெளியிட்ட பங்குகளின் மதிப்பை விட சுமார் 400 மடங்கு அதிகமான அளவுக்கு இதை வாங்குவதற்கு மக்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இது குறித்து ஊடகங்கள் பரவலாகப் பேசினாலும் இது போல பல நிறுவனங்கள் ஏற்கனவே மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

ப்ரைம் டேடாபேஸ் என்கிற அமைப்பின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இது வரை சுமார் 152 சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் அவற்றின் ஐபிஓக்களை வெளியிட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் சராசரி ஐபிஓ வெளியீட்டு மதிப்பு சுமார் ரூ 33 கோடியாகும். இந்தப் பங்குகளை வாங்குவதற்கு சராசரியாக 200 மடங்கு அளவுக்கு அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

இதில் சுமார் 18 நிறுவனங்களின் ஐபிஓ அதன் வெளியீட்டுத் தொகையை விட 400 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்களைப் பெற்றிருப்பது ஆச்சரியப்படத்தக்க விஷயமாகும். எடுத்துக்காட்டாக, Hoac Foods India-வின் ரூ 5 கோடி மதிப்புள்ள ஐபிஓ சுமார் 1,963 மடங்கு அளவுக்கு மிகு பங்குத் தொகையைப் (oversubscribed) பெற்றிருக்கிறது. இது போல ரூ 6.6 கோடி மதிப்பு கொண்ட Magenta Lifecare என்கிற நிறுவனம் கிட்டத்தட்ட 1,000 மடங்கு மிகு பங்குத் தொகையைப் பெற்றிருக்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தையானது SME ஐபிஓ-க்களின் மூலமாக வலுவான ஊகத்தன்மையைப் பெற்றது. கடந்த மூன்றாண்டுகளில் சில பிரதானமான நிறுவனங்களின் ஐபிஓ-க்களை விட SME ஐபிஓ-க்கள் அதிக விண்ணப்பங்களை ஈர்த்தது, அதிக விலையில் பட்டியலானது, சந்தையில் பட்டியிலிட்ட பிறகு வருமானம் ஈட்டியது என பலவற்றில் எதிர்பார்க்காத அளவுக்கு செயல்பட்டன.

உதாரணமாக, கடந்த ஆண்டு 182 SME ஐபிஓ-க்கள் வெளியாயின. இவை சராசரியாக 86 மடங்கு மிகு பங்குத் தொகையைப் பெற்றதோடு வெளியீட்டுத் தொகையை விட பங்கொன்று 36 சதவீதம் அதிக விலையில் பட்டியலானது. இந்தப் பங்குகளின் மூலம் முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்ற மதிப்பு சுமார் 216 சதவீதமாகும்.

முதன் முதலாகப் பட்டியலிடப்படும்போது அதற்குப் பிறகும் இந்நிறுவனப் பங்குகள் நல்ல மதிப்பை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருவதால் கடந்த 2-3 ஆண்டுகளாகவே SME ஐபிஓ-க்களின் மீது ஓர் ஈர்ப்பு இருந்து வருகிறது. இருந்தாலும் செபி அமைப்பானது SME ஐபிஓ-க்கள் மீது அதிக எச்சரிக்கையாக இருக்கும்படி பங்குச் சந்தை நிர்வாகத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஐபிஓ-வை அங்கீகரிப்பதற்குச் சிறிது கால தாமதமானலும் முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு due diligence செயல்முறையை அதிகரிக்கும்படி கேட்டிருக்கிறது.

முதலீட்டாளர்களைக் கவரும் சிறு நிறுவனப் பங்குகள் - Small-cap stocks that attract investors - Small Medium Enterprise – SME - ஐபிஓ - Article - https://bookday.in/

இப்போதைக்கு, SME ஐபிஓ-க்கள் புதிய `பென்னி பங்கு’களாகத் (குறைந்த விலை/மதிப்புக் கொண்டவையாக) தெரிவதோடு பங்குச் சந்தையில் ஊக ஆர்வத்தையும் தூண்டுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் இந்த மாதிரியான நிறுவனங்களின் ஐபிஓ-க்களில் முதலீடு செய்யும் ஒரு தடவைக்கு பத்துத் தடவை யோசித்து முதலீடு செய்வது நல்லது.

எழுதியவர் :

– சித்தார்த்தன் சுந்தரம்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *