சிறிய மூளை! குறைவான நண்பர்கள்!
செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றுமா?
ஒரு பரிணாம உயிரியலாளரின் கேள்வி!
ராப் ப்ரூக்ஸ் (தமிழில்: மோ. மோகனப்பிரியா)
பல தலைமுறைகளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவால் (AI) மாற்றமடைந்த உலகில், மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? AI மனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றும்? – அதனால் நன்மையா அல்லது தீமையா? – இது போன்ற கேள்விகளை நவீன சிந்தனையாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
சிலர், செயற்கை நுண்ணறிவு மனித குலத்தின் அழிவுக்கு (மற்றும் பல உயிரினங்களின் அழிவுக்கும்) வழிவகுக்கும் என்றும், அல்லது மனிதர்கள் AI உடன் இணைந்து மனித-இயந்திரங்களாக (cyborg) மாறிவிடுவார்கள் என்றும் அச்சமூட்டும் கற்பனைகளைச் செய்கின்றனர். இந்தக் கணிப்புகள் பெரும்பாலும் அவநம்பிக்கையூட்டுபவை. மனித இனத்தின் தலைவிதியை நாம் ஒருங்கிணைந்த AI எதிரியிடம் ஒப்படைப்பதாகவே இவை சித்தரிக்கின்றன.
AI-யின் எதிர்காலம் அறிவியல் புனைகதைகளில் சித்தரிக்கப்படுவது போல் அச்சமூட்டுவதாக இல்லாவிட்டால்?… AI தொழில்நுட்பங்கள் பல்வேறு பயன்பாடுகளில் பரவலடைந்து வருவதை, ஒரு பரிணாம உயிரியலாளரின் பார்வையில் பார்க்கும்போது, அது ஒரு சுற்றுச்சூழலில் நுண்ணுயிரிகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் பெருகுவதைப் போன்றதாகும்.
AI தொழில்நுட்பங்கள் நிறைந்த உலகில், மனித பரிணாமம் எவ்வாறு மாற்றியமைக்கப்படும்? இந்தக் கேள்வி என்னை ஆராயத் தூண்டியது. தி குவாட்டர்லி ரிவியூ ஆஃப் பயாலஜி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட எனது ஆய்வுக் கட்டுரையில், பௌதிக, உயிரியல் மற்றும் சமூக சூழல்களை AI எவ்வாறு மாற்றியமைக்கும் என்பதையும், இயற்கைத் தேர்வை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் ஆராய்ந்துள்ளேன்.
பரிணாமத்தைக் கணிப்பது முட்டாள்தனம்
பரிணாம வளர்ச்சிக்குக் காரணமான இயற்கைத் தேர்வு என்பது, தனிநபர்களிடையே இனப்பெருக்கத்தில் ஏற்படும் மரபணு வேறுபாடுகளின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும்.
இந்த வேறுபாடுகள், சூழலின் இயற்பியல் அம்சங்கள் (எ.கா., குறைந்தபட்ச வெப்பநிலை), பிற உயிரினங்கள் (எ.கா., வேட்டையாடுபவை அல்லது ஒட்டுண்ணிகள்), மற்றும் அதே இனத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் (எ.கா., தோழர்கள், கூட்டாளிகள் அல்லது எதிரிகள்) போன்றவற்றுடனான தொடர்புகளால் உருவாகின்றன.
ஓநாய்களிலிருந்து நாய்களின் பரிணாமம்
சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிய சாம்பல் ஓநாய்கள் மனிதர்களுடன் வாழத் தொடங்கின. அப்போது, மனிதர்களுடன் எளிதில் பழகாத, அதிக பயந்த சுபாவமும் ஆக்ரோஷமும் கொண்ட ஓநாய்கள் விரட்டப்பட்டன அல்லது கொல்லப்பட்டன. இதன் விளைவாக, அடுத்தடுத்த தலைமுறைகளில் ஓநாய்களின் பயம் மற்றும் ஆக்கிரமிப்புக்கான மரபணுக்கள் குறைந்து, அவை படிப்படியாக மனிதர்களுடன் பழகும் நாய்களாக மாறின. ஓநாய்களை நாய்களாக மாற்றிய இந்தத் தற்செயலான தேர்வு, செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மனித மூளை மற்றும் நடத்தையின் பரிணாமத்தை தற்செயலாக பாதிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
எதிர்காலத்தைக் கணிப்பது கடினம்
“எதிர்காலத்தைக் கணிக்க முயற்சிப்பது முட்டாள்தனம்” என்று ஆங்கில எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ் கூறினார். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களுக்கு இது மிகவும் பொருந்தும்.
பரிணாமத்தைக் கணிப்பது என்பது இன்னும் அதிக சிரமமானது. இரண்டையும் இணைப்பது கணிசமான ஊகங்களையும், தவறாக இருப்பதற்கான மிக அதிக சாத்தியக்கூறுகளையும் உள்ளடக்கியது.
தவறாக இருப்பதற்கான அபாயம் இருந்தாலும், மனித பரிணாம வளர்ச்சியையும், நாம் ஒருவருக்கொருவர் மிகவும் மதிக்கும் பண்புகளையும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மாற்றியமைக்கக்கூடும் என்பது குறித்த ஒரு கலந்துரையாடலைத் தொடங்குவதே எனது நோக்கம்.
பரஸ்பர உறவா? அல்லது ஒட்டுண்ணி உறவா?
செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதர்களுக்கிடையேயான உறவை ஒரு பரஸ்பர உறவாகக் கருதலாம். அதாவது, இரண்டு உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தேவையானதை வழங்கிக் கொள்ளும் உறவு.
கணினிகள் நமது கணக்கீட்டுச் சுமையைத் தாங்கி, நமக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி இந்தப் பயன்களை மேலும் அதிகரிக்கும். மனிதர்கள் கலாச்சார ரீதியாக அறிவைப் பகிர்ந்துகொள்வதும், எழுத்து மூலம் பதிவு செய்வதும், நாம் ஒவ்வொருவரும் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டிய சுமையைக் குறைத்ததற்கான சான்றுகள் ஏற்கனவே உள்ளன. இதன் விளைவாக, சமீபத்திய ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மனித மூளையின் அளவு சுருங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, இணையத் தேடல்கள் மற்றும் “யார்-என்ன-யாருக்கு” போன்ற விஷயங்களை “நினைவில்” வைத்திருக்கும் சமூக ஊடகப் பதிவுகள் ஆகியவை நமது நினைவாற்றல் சுமையைக் குறைக்கக்கூடும். இதனால், மனித மூளை பரிணாம வளர்ச்சியடைந்து, சிறியதாகவும், குறைவான தனித்து நிற்கும் நினைவாற்றலுடனும் மாறக்கூடும்.
அச்சப்பட வேண்டாம். சிறிய மூளையால் தாய்க்கும் சேய்க்கும் பிரசவம் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது ஒரு நன்மை. கணினிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை பெருகிவரும் தகவல்களையும் அறிவையும் சேமித்து வைக்கும் கிடங்குகளாகச் செயல்படுவதால், மனிதர்களால் தொடர்ந்து அறிவுசார் செயல்களைச் சிறப்பாகச் செய்ய முடியும்… அதற்கு அவர்களால் செயற்கை நுண்ணறிவை அணுக முடியும் என்றால்.
இருப்பினும், பரஸ்பர உறவில் இருக்கும் உயிரினங்கள் வேறு பாதையை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அவை தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகளாகவும் மாறக்கூடும். அதாவது, தங்களின் விருந்தோம்பி உயிரினத்திற்குத் தீங்கு விளைவித்து, அதன் மூலம் வாழும் உயிரினங்களாக மாறக்கூடும்.
சமூக ஊடகங்களை ஓர் ஒட்டுண்ணியாகக் கருதலாம். தொடக்கத்தில் அவை மக்களை இணைக்கப் பயனுள்ள வழிகளை வழங்கின (பரஸ்பர உதவி). ஆனால், இன்று அவை மனிதர்களின் கவனத்தை அளவுக்கு அதிகமாகக் கவர்ந்து, பலருக்கு மனிதர்களுடன் நேரடியாகப் பழகவும், தூங்கவும் போதுமான நேரமில்லாமல் செய்துவிட்டன (ஒட்டுண்ணி).
செயற்கை நுண்ணறிவு பயனர் கவனத்தை இன்னும் திறம்பட ஈர்க்கக் கற்றுக்கொண்டு, கோபத்தைத் தூண்டிவிட்டு, சமூக ஒப்பீடுகளை உருவாக்கினால், அது மனிதர்களின் வாழ்வு, இறப்பு மற்றும் இனப்பெருக்கத்தைப் பாதித்து, பரிணாமத்தை மாற்றும். இதன் விளைவாக, சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, வெறுப்பைத் தூண்டும் செய்திகளால் பாதிக்கப்படாமல் இருக்கும் திறன் மனிதர்களிடம் பரிணாம வளர்ச்சியின் மூலம் வலுப்பெறக்கூடும்.
கணினிகளுடன் நெருக்கம்
மனித பரிணாம வளர்ச்சியில் பிற உயிரினங்களுடனான தொடர்புகள் முக்கியமானவையாக இருந்தாலும், மற்ற மனிதர்களுடனான தொடர்புகளே இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூக வாழ்வில் நுழைந்து வருகிறது.
நண்பர்களை உருவாக்குவது, நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவது போன்ற மனிதர்களின் சமூக நடத்தைகளைப் பின்பற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியே “செயற்கை நெருக்கம்” எனப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் மிகவும் வியக்கத்தக்க முன்னேற்றங்களில் ஒன்றாகும்.
கணினிகளுடன் பழகுவதற்கான சமூகத் திறனை மனிதர்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெறவில்லை. எனவே, மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நாம் பயன்படுத்தும் அதே வழிமுறைகளையே இயந்திரங்களுக்கும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, அந்த இயந்திரங்கள் உரை, குரல் அல்லது காணொளி மூலம் நம்முடன் உரையாடும்போது.
மக்களுடன் பழகும்போது, அவர்கள் உண்மையாக இல்லாமல் இருக்கலாம் என்ற சாத்தியத்தை நாம் எப்போதும் கருத்தில் கொள்கிறோம். ஆனால், AI “மெய்நிகர் நண்பர்களுக்கு” உணர்வுகள் இல்லையென்றாலும், பயனர்கள் அவர்களை உணர்வுள்ளவர்கள் போலவே நடத்துகிறார்கள்.
“செயற்கை நெருக்கத்தின்” வளர்ச்சியால், தொலைபேசி அல்லது கணினித் திரைகள் வழியாகத் தொடர்பு கொள்ளும்போது நாம் அதிக எச்சரிக்கையாக இருக்க நேரிடலாம். அல்லது, எதிர்காலத்தில் நமது சந்ததியினர் மனிதத் துணை இல்லாதபோதிலும் தனிமையை உணராமல், தனித்தே வாழப் பழகி, தனிமை விரும்பிகளாக மாறக்கூடும்.
கேள்வி அற்பமானதல்ல
தனிநபர்களின் வாழ்வில் செயற்கை நுண்ணறிவின் நேரடித் தாக்கத்தோடு ஒப்பிடும்போது, மரபணு பரிணாமம் பற்றிய ஊகங்கள் அற்பமானவையாகத் தோன்றலாம். புத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு இப்போது வாழும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அல்லது தாழ்த்தும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
எனவே, பல தலைமுறைகளுக்குப் பிறகு AI ஏற்படுத்தக்கூடிய தொலைதூர மரபணு மாற்றங்களைப் பற்றி கவலைப்படுவது இப்போதைக்கு அவசியமானதாகத் தெரியவில்லை. ஆனால் அது நிச்சயமாக சிந்திக்கத் தக்கது.
முன்னோடி சூழலியலாளர் ராபர்ட் மெக்ஆர்தர் கூறினார், “ஒரு விஞ்ஞானி தவறாக இருப்பதை விட மோசமானது, சாரமற்றிருப்பது”.
பல தலைமுறைகளில் ஏற்பட இருக்கும் பரிணாம மாற்றங்கள், நாம் மிகவும் போற்றும் நட்பு, நெருக்கம், தொடர்பு, நம்பிக்கை மற்றும் நுண்ணறிவு போன்ற மனிதப் பண்புகளை மாற்றியமைக்கலாம் அல்லது மங்கச் செய்யலாம். ஏனெனில், செயற்கை நுண்ணறிவு இந்தப் பண்புகளுடன் தீவிரமாக தொடர்புகொண்டு வருகிறது.
இது, மனித இருப்பின் அடிப்படைப் பொருண்மையையே மாற்றும் வல்லமை வாய்ந்த ஒரு புரட்சிகரமான வழியாகும்.
கட்டுரையாளர் :
ராப் ப்ரூக்ஸ்
சிட்னி நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பரிணாமப் பேராசிரியர்.
தமிழில் : மோ. மோகனப்பிரியா
இந்தக் கட்டுரை “தி கான்வர்சேஷன்” என்ற இணையதளத்தில் வெளியானது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
மூலக் கட்டுரையைப் படிக்க
https://theconversation.com/smaller-brains-fewer-friends-an-evolutionary-biologist-asks-how-ai-will-change-humanitys-future-244179
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.