நூல் அறிமுகம்: கனவை எழுதும் கலை – பாவண்ணன்ஒரு கனவு ஏன் வருகிறது, எப்படி வருகிறது, அது எதைச் சுட்டுகிறது என்பதை இந்த உலகத்தில் ஒருவராலும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அது எல்லா வரையறைகளையும் கடந்த, எதைக்கொண்டும் வகுத்துவிட முடியாத அபூர்வமான பாதை. அது இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. அந்த இன்னொரு உலகத்துக்கும் இந்த உலகத்துக்குமான பாலமாக நீண்டிருக்கிறது  கனவு. கனவிலிருந்து விழித்ததுமே அந்த உலகம் மறைந்துபோய்விடும் என்பதுதான் துயரத்துக்குரிய செய்தி. அது முற்றிலும் கரைந்துபோகும் முன்பாக அதற்கு ஒரு கரையையெழுப்பி சேமிப்பது என்பது எளிதான செயலல்ல. ஆயினும் அபூர்வமான மனங்களுக்கு அபூர்வமான கணங்களில் அது சாத்தியப்படுவதும் உண்டு. அப்படி அரிதாக சேமித்துவைத்த ஒரு கனவை எழுதிய முயற்சியாகவே விட்டில் எழுதிய நாவலைக் கருதத் தோன்றுகிறது. 

இந்தக் கனவுக்கு தர்க்கம் எதுவும் இல்லை. ஒழுங்கும் இல்லை. அடுக்குமுறை எதுவுமில்லை. ஆற்றோட்டத்துடன் செல்லும் பரிசிலைப்போல சென்றுகொண்டே இருக்கிறது. அந்தக் கற்பனையினாலேயே அது சுவாரசியமாகவும் இருக்கிறது. 

ஆசிரியையும் அவர் வைத்திருக்கும் புத்தகமும் அதில் அடங்கியிருக்கும் கேள்விப்பட்டியலும் வண்டாகக் குடைவதால் பதற்றம் கொண்ட சிறுமியொருத்தி ஆற்றங்கரைக்கு வந்து அமர்ந்திருக்கும் காட்சியிலிருந்து விட்டில் தன் நாவலைத் தொடங்குகிறார். வழக்கமாக அச்சிறுமி கொஞ்சிப் பேசுகிற அணிலைப் பார்த்து தன் இயல்புக்கு மாறாக சிடுசிடுப்போடு பேசுகிறாள். அணிலுக்கே அது அதிர்ச்சியாக இருக்கிறது. அப்போது தற்செயலாக அந்தப் பக்கமாக ஓடிவரும் மான்தலை கொண்ட மீன் அவளை மோதித் தள்ளிவிட்டு ஆற்றுக்குள் குதிக்கிறது. தடுமாறி மயங்கி அதே ஆற்றுக்குள் விழும் சிறுமி மீனின் முதுகோடு ஒட்டிக்கொள்கிறாள். 

அதற்குப் பிறகு கதை இன்னொரு உலகத்தில் நிகழ்கிறது. ஆழத்தில் ஆகாய நீலநிறத்தில் மீனுக்குச் சொந்தமான  கண்ணாடி பங்களா இடம்பெறுகிறது. தன் தவறால் தன்னோடு வந்துவிட்டவள் என்கிற காரணத்தால் அவளை அங்கே தங்கிக்கொள்ள அனுமதிக்கிறது மீன். அந்தக் கண்ணாடி பங்களாவுக்குள் மீன்கள் ஒரு மேசையைச் சுற்றி உட்கார்ந்து சீட்டாடுகின்றன. குளிருக்கு இதமாக சூடாக தேநீர் அருந்துகின்றன. ஒரு மீன் தனக்கு க்ரீன் டீ வேண்டும் என்று வாங்கிப் பருகுகிறது. இப்படி ஒவ்வொரு காட்சியும் கற்பனைமயமானதாகவும் சுவாரசியம் நிறைந்ததாகவும் அமைந்திருக்கிறது.சீட்டாட்டம் தொடர்கிற சமயத்தில் ஜியோகிலானி என்னும் ஆமை பதற்றத்துடன் உள்ளே நுழைந்து ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. வெள்ளிமணல் பகுதியில் திடீரென பறவைகள் மயங்கி விழுந்த செய்தியையும் கோம்ப் ஜெல்லி உதவியோடு தம்முடைய இடத்துக்கு அழைத்துச் சென்று வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறது. உடனே மருத்துவம் தெரிந்த கடல்பசு ஆவுளியா அந்த இடத்துக்குச் செல்கிறது. மயக்கத்தில் இருக்கும் பறவைகளின் அடிவயிற்றைச் சோதித்துப் பார்த்து பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதைக் கண்டறிகிறது. அறுவை மருத்துவத்துக்குப் பிறகு அவற்றைக் காப்பாற்றுகிறது. காளான் தோட்டத்துக்குள் பிளாஸ்டிக் வந்து சேர்ந்த காரணத்தை அனைவரும் சேர்ந்து கண்டுபிடிக்கிறார்கள். அதற்கு அங்கு சென்று சேர்ந்த ஸ்நோ பாப்பா உதவுகிறாள். 

பிளாஸ்டிக் பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதற்கான வழியைப்பற்றி பேசுவதற்காக ஸ்நோ பாப்பாவும் மற்றொரு மீனும் ஆந்தைகளின் அரசன் கேபி ஈகிளைச் சென்று சந்திக்கிறார்கள். பிறகு அங்கிருந்து முயல்கூடு தீவுக்குச் செல்கிறார்கள். அங்கிருந்து கதிரியக்க மருத்துவர் மிஸ்டர் ரேயைச் சந்திக்கிறார்கள். ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு கதையாக விரிகிறது.

மருத்துவர் ரேயிடம் ஒரு கதிர் அலைமானி இருக்கிறது. அந்த அலைமானிக்கு தன் துடிப்புவட்டத்துக்குள்  எங்கேனும் பிளாஸ்டிக் துகள் இருப்பதை உணர்ந்துகொண்டால், எச்சரிக்கை மணியை எழுப்பும் ஆற்றல் உள்ளது. அந்த எச்சரிக்கை மணியோசையைக் கேட்டு பறவைகளும் மீன்களும் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று சொல்கிறார் ரே. கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் இருப்பதுபோல கண்ணுக்குத் தெரியாத நண்பர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறாள் ஸ்நோ. இப்படி தாவித்தாவி சென்றுகொண்டே போகிறது கதை. இறுதியில் துறவிநண்டு கொடுத்த அதிசய சக்தியால் மீண்டும் ஆற்றங்கரைக்கே வந்து சேர்கிறாள் சிறுமி. 

கனவுப்பயணத்தின் விளைவாக அவள் மனசிலிருந்த இறுக்கம் முற்றிலும் கரைந்துவிடுகிறது. உற்சாகத்தில் அவள் உள்ளம் மிதக்கிறது. அந்தப் பயணம் அவளை இன்னொரு புதிய சிறுமியாக மாற்றிவிடுகிறது. 

புதிய கற்பனைகள் வழங்கும் புது அனுபவங்களும் புதிய அனுபவங்கள் ஊட்டுக் புத்துணர்ச்சியும் மகத்தானவை. ஸ்நோ பாப்பாவை முன்வைத்து அந்த மகத்துவத்தை உணர்த்துகிறார் விட்டில் என்கிற அறிவழகன். அவர் முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஸ்நோ பாப்பாவும் அதிசயக்கடலும்.
சிறார் நாவல்.
ஆசிரியர்: விட்டில்
அனன்யா வெளியீடு,
8/37 பி.ஏ.ஒய். நகர்,
புதுக்கோட்டை சாலை,
தஞ்சாவூர் – 613005.
விலை. ரூ.90