“போகாதே போகாதே என் கணவா ! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்.” என சோக இசையில் யாரோ எச்சரிப்பதுபோல் ஓர் உள்ளுணர்வு . செய்திகளைப் படிக்கப் படிக்க மனது நைந்து போகிறது . வெறுப்பு என்னைத் தின்னும் போதெல்லாம் ஏதேனும் கவிதை படிப்பதிலோ எழுதுவதிலோ என்னைக் கரைப்பது என் வழக்கம் . இன்றும் அப்படித்தான்.

“அவன் காயத்தின் மேல் …
அடித்துக் கொண்டே இரு!
அது குணமாகவிடாதே!
அந்த வலி
ஓயாமல் புதுரத்தம் கக்கிக்கொண்டே இருக்க வேண்டும்
குடல்களிலே வேதனை எப்போதும்
குடியிருக்க வேண்டும் “

இப்படி கவிதையை ஆரம்பித்தால் அவனுள் எவ்வளவு வலி இருக்குமோ ?

மார்க்கோஸ் அநா என்கிற ஸ்பெயின் நாட்டு கவிஞன் அவன் .

“எண்ணெய் வற்றிய தீபச்சுடராக
எம் தேசம் செத்துக் கொண்டிருந்த போது
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”

என அறிவுஜீவியை நோக்கி [சிலி கவிஞன் ஆட்டோரென காஸ்புலாவிடம் கருவைக் கடன் வாங்கி] பாகி சீறுகிறார் .

சூரிய தீபன் தொகுத்த “சோஷலிசக் கவிதைகள்” நூல் . அலைகள் வெளியீட்டகம் . 112 பக்கங்களே .வாசித்துக் கொண்டிருக்கிறேன் .இந்நூலை புரட்டுவது எத்தனாவது முறை ? இதுவரை நான் கணக்கு வைக்கவில்லை.

“ ஆனால் அவர்களின்
மதத்திற்கோ சட்டத்திற்கோ
இசைவாக
ஒரு ராகம்கூட
என் தொண்டைக் குழியிலிருந்து வராது
என் தேசத்தை விடுதலை
செய்வதற்கு
என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் விதைக்கிறேன்.”

என சிறையில் அடைக்கப்பட்ட போது செரபண்ட ராஜு பாடினான்.

“மானுடத்தின் எதிர்மறையே!
கிழக்கிலிருந்து மேற்குவரை
நீ
உனது சவுக்கைச் சொடுக்கலாம்

ஆனால்
ஒரு முதுகூட
இனிமேல் குனியாது.”

இன்குலாப் விதைத்த நம்பிக்கையோடும் , காலம் நெஞ்சைக் கீறி தூவிக்கொண்டிருக்கும் மிள்காய்ப் பொடியோடும் , ஊரடங்கு நேரத்தில் இக்கவிதை நூலோடு நான் .

சுபொஅ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *