Socialist China to eradicate extreme poverty! Tricontinental Institute for Social Research Article Translated in Tamil by K. Ramesh



ஒருபுறம் பெரும் கோடீஸ்வரர்கள் விண்வெளிப் பயணம் செய்ய நூற்றுக் கணக்கான கோடிகளைச் செலவு செய்யும் போது, சத்தமே இல்லாமல் இன்னொரு புறம் அதிதீவீர வறுமையை ஒழித்துக் கட்டியிருக்கிறது சீனா. அதுவும் கடுமையான கரோனா காலத்தில் அடையப்பட்டது என்பது இன்னொரு சிறப்பு. விண்வெளியை யார் முதலில் சுற்றுவது என்று அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் போட்டி ஏற்பட்டது பழைய கதை. முதலில் சோவியத் விண்வெளியை சுற்றி வந்தாலும், அதை முறியடிப்போம் என்று சொல்லி அமெரிக்க தனது ராக்கெட்டை நிலவைத் தொட வைத்து, ஆம்ஸ்ட்ராங்கையும், ஆல்ட்ரின்னையும் அங்கு இறக்கியது.

இப்போது கதை வேறு. பெரும் கோடீஸ்வரர்கள் சில நிமிடங்கள் விண்வெளியைத் தொடும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அதில் முதலில் விண்வெளியைத் தொட்ட ஒரு விமான ராக்கெட்டில் பயணித்த கோடீஸ்வரர் 85000 அடி உயரத்தைத் தொட்டுத் திரும்பினார். அந்த விமானத்தை அனுப்பிய கம்பெனியின் போட்டி கம்பெனி தாம் அனுப்பப் போகும் விமான ராக்கெட் ஒரு லட்சம் அடி உயரத்தைத் தொடும், அதாவது உலகின் காற்றுப் பகுதியின் இறுதியை அடையும் என்று சவால் விடுத்துள்ளது.

புதிய தாராளமயக் கொள்கைகளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தமது செல்வத்தைப் பல மடங்கு இந்தக் கரோனா காலத்தில் பெருக்கிக் கொண்டுள்ளனர். இன்னொரு புறம் அறுதிப் பெரும்பான்மையினரான சாதாரண மக்கள் தமது வேலையையும், வாழ்க்கையையும் இழந்து அதிதீவீர வறுமையில் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான் இந்த இரண்டு முரணான நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன.

சர்வதேச நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார அறிக்கையில் பல விஷயங்களை அது சுட்டிக் காட்டியுள்ளது. நமது உலகைப் பல பிரச்சனைகள் அழுத்திக் கொண்டிருக்கின்றன. உலக விநியோகச் சங்கிலியில் இடையூறுகள், அதிகரித்து வரும் சரக்குப் போக்குவரத்துச் செலவு, கச்சாப் பொருட்களின் பற்றாக்குறை, அதிகரிக்கும் பொருட்களின் விலை, பொருளாதாரங்கள் மீது அதிகரிக்கும் பணவீக்க அழுத்தங்கள் போன்றவற்றை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. உலக அளவில் அதிகமான அரசுக் கடனால் உந்தப்பட்டு, உலக வளர்ச்சி விகிதங்கள் 2021இல் 6 சதவீதத்தையும், 2022இல் 4.9% தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தக் கடன், 2020இல் உலக மொத்த வளர்ச்சி விகிதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 100%ஐத் தொட்டு விட்டது என்றும், 2021, 2022இல் அதே அளவில் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. வளரும் நாடுகளின் வெளிநாட்டுக் கடன் அதிகமாகவே நீடிக்கும். அதில் பெரிதாக நிவாரணம் ஒன்றும் கிடைக்காது.

Socialist China to eradicate extreme poverty! Tricontinental Institute for Social Research Article Translated in Tamil by K. Ramesh

ஒவ்வொரு ஆண்டும் உலக பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் இந்த அறிக்கையின் முக்கியமான அம்சங்களைத் தனது பிளாகில் வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டு, அவரது பிளாக் தெளிவாகத் தனது தலைப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மேலும் விரிவடையும் பிளவு: உலக மீட்சியில் அதிகரிக்கும் விரிசல்’. இந்த விரிசல் வடக்கு-தெற்கு வழியில் செல்கிறது. பெருந்தொற்றால் உந்தப்பட்ட உலகளாவிய மந்தநிலையிலிருந்து விடுபட ஏழை நாடுகளால் எளிய வழியைக் காண முடியவில்லை. இந்த விரிசலை உண்டாக்கும் பல காரணங்கள் உள்ளன. அதிகமாகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான தண்டனை, மக்கள் தொகையின் பரவலான ஏழ்மை நிலை, நீண்ட காலப் பிரச்சனையான கடன். ஆனால் கீதா ஒரு விஷயத்தில் தன் கவனத்தைச் செலுத்துகிறார்: தடுப்பூசி தீண்டாமை (vaccine apartheid) முன்னேறிய பொருளாதாரங்களில் 40% பேர் தடுப்பூசி பெற்று விட்டனர். வளரும் நாடுகளில் 11% பேரும், குறைந்த வருவாய் கொண்ட வளரும் நாடுகளில் மிகவும் குறைவாகவே தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிடுகிறார். தடுப்பூசி கிடைக்காததுதான் பொருளாதார மீட்சியில் ஏற்படும் இந்த விரிசலுக்குக் காரணம் என்று அவர் வாதிடுகிறார்.

இவ்வாறு விரிவடையும் பிளவுகளால் உடனடியான சமூக விளைவுகள் ஏற்படுகின்றன. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2021ஆம் ஆண்டு அறிக்கையைப் பார்ப்போம். உலக அளவிலான உணவுப் பாதுகாப்பு மற்றும் சத்துணவு பற்றிக் கூறும்போது, ‘2020ஆம் ஆண்டில் உலகின் சுமார் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு (2.37 பில்லியன்; 100 கோடி) போதுமான உணவு கிடைக்கவில்லை – ஒரே வருடத்தில் இந்த அளவில் 320 மில்லியன் (ஒரு மில்லியன்: 10 லட்சம்) மக்கள் அதிகரித்துள்ளனர். பட்டினி என்பது சகிக்க முடியாத ஒன்று. இப்போது தென்னாப்பிரிக்காவில் உணவுக்கான கலவரங்கள் அதிரடியாக அதிகரித்து வருகின்றன. ‘அவர்கள் இங்கு எங்களைப் பட்டினியால் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று இந்தக் கலவரத்தில் பங்கேற்ற ஒரு டர்பன்வாசி குறிப்பிட்டார். இந்த எதிர்ப்புக்களூம், உலக பன்னாட்டு நிதியம் மற்றும் ஐ.நாவும் வெளியிட்ட விவரங்கள் மீண்டும் பட்டினியை உலக நிகழ்ச்சிநிரலில் மீண்டும் கொண்டு வந்துள்ளன.

ஜூலை இறுதியில், ஐ.நாவின் பொருளாதார, சமூக கவுன்சில் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி பற்றிய ஒரு உயர்மட்ட அரசியல் அரசியல் கூட்டத்தை நடத்தியது. இந்த அமைப்பின் அமைச்சரவைப் பிரகடனமானது, கோவிட் 19 பெருந்தொற்றினால் விளைந்த நெருக்கடியை அங்கீகரித்தது. நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கு இடையிலும் அதிகரித்த உலகின் பலவீனங்களையும், அமைப்பு ரீதியான பலவீனங்கள், சவால்கள், ஆபத்துக்கள் அழுத்தம் தந்து நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி இலக்குகளை அடைவதைத் தடுத்து நிறுத்தவோ அல்லது முன்னேற்றத்தை பாதிக்கவோ செய்கிறது என்று பிரகடனம் கூறுகிறது. 2015இல் நிலைத்து நீடிக்கும் பதினேழு வளர்ச்சி இலக்குகள் ஐநா உறுப்பு நாடுகளால் நிர்ணயிக்கப்பட்டன. அவற்றில் வறுமை ஒழிப்பு, பட்டினியை ஒழித்துக் கட்டுவது, நல்லாரோக்கியம், பாலின சமத்துவம் ஆகியவை அடங்கும். இந்த இலக்குகளை 2030இல் அடைய முடியாது என்பது பெருந்தொற்றுக்கு முன்னாலேயே வெளிப்பட்டு விட்டது. பட்டினியை ஒழித்துக் கட்டுவது என்ற மிகவும் அடிப்படையான இலக்கைக் கூட அடைய முடியாது.

Socialist China to eradicate extreme poverty! Tricontinental Institute for Social Research Article Translated in Tamil by K. Ramesh

இந்த இருண்ட காலகட்டத்தில், 2021 பிப்ரவரியில் சீனாவின் அதிபர் ஜீ ஜிங்பிங், இந்த உலகளாவிய மந்தநிலைக்கும் முரணாக, சீனா அதிதீவீர வறுமையை ஒழித்துக் கட்டி விட்டதாக அறிவித்தார். இந்த அறிவிப்பின் பொருள் என்ன? அதாவது 85 கோடி மக்கள் கடும் வறுமையிலிருந்து மீண்டு விட்டனர் (1949இல் சீனப் புரட்சியில் தொடங்கிய இந்த நீண்ட எழுபது கால நிகழ்வு முடிவுக்கு வந்தது) அவர்களது சராசரி வருவாய் பத்தாயிரம் அமெரிக்க டாலராக அதிகரித்தது (கடந்த இருபது ஆண்டுகளில் இது பத்து மடங்கு அதிகரித்துள்ளது), சராசரியாக உயிர்வாழும் வயது 77 ஆக அதிகரித்துள்ளது (இது 1949இல் 35 ஆக இருந்தது) என்பதே இதன் பொருள். இலக்கை பத்தாண்டுகளுக்கு முன்பே எட்டியதன் மூலம் உலக வறுமை ஒழிப்பில் 70%த்தை சீனா செய்து காட்டியுள்ளது. இந்த வெற்றியை ‘உலக நாடுகளின் ஒட்டுமொத்த சமூகத்திற்கு நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை அளிக்கும்’ என்று ஐ.நாவின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடிரெஸ் மார்ச் 2021இல் கொண்டாடினார்.

இதைத் தொடர்ந்து தோழர் விஜய் பிரசாத் தலைமையில் செயல்படும் ட்ரைகாண்டினண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனம் தனது தொடர் ஆய்வை ஜூலையில் மேற்கொண்டது. சோசலிசக் கட்டமைப்புக்கான ஆய்வு என்ற இந்த ஆய்வில் கியூபாவிலிருந்து கேரளம் வரையிலும், பொலீவியாவிலிருந்து சீனா வரையிலும் சோசலிச நடைமுறைகளின் கட்டமைப்பை ஆய்வு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட கால ஆய்வுத் திட்டத்தில் சீனாவின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்குச் சேவை என்ற பெயரில் நடைபெறும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை கள அளவில் ஆய்வு செய்வது, இத்திட்டத்தில் பங்கேற்ற நிபுணர்களிடம் பேட்டி எடுப்பது போன்றவை நடைபெறும். உதாரணமாக, ரென்மின் பல்கலைக்கழகத்தின் தேசிய வறுமை ஒழிப்பு ஆய்வு நிறுவனத்தின் தலைவரான வாங் சாங்குயி எங்களிடம் சீன அணுகுமுறையில் பன்முக வறுமைக் கோட்பாடு எவ்வாறு மையமான ஒன்று என்பதை எங்களிடம் கூறினார்.

இந்தக் கோட்பாடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமான மூன்று உறுதிகள் (பாதுகாப்பான வீட்டு வசதி, சுகாதார வசதி, கல்வி) மற்றும் இரண்டு உறுதிகள் (உணவு அளித்தல், ஆடை அளித்தல்) ஆகியவற்றிலிருந்து வந்தது. ஆனால் இங்கும் கூட, இந்தக் கொள்கையின் சாரம் ஆழகாம உள்ளன. வாங் இதனை தண்ணீரைக் கொண்டு விளக்கினார்:

குடுதண்ணீர் பாதுகாப்பாக உள்ளது என்பதை நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்? முதலில், தண்ணீர் விநியோகத்தில் எந்தப் பற்றாக்குறையும் என்பது அடிப்படைத் தேவை. இரண்டாவது தண்ணீர் எடுக்கும் நீராதாரம் மிகவும் தொலைவில் இருக்கக் கூடாது. தண்ணீர் எடுத்து வர 20 நிமிடங்களுக்கு மேல் ஆகக் கூடாது. கடைசியாக தண்ணீரின் தரம் எந்த ஊறு விளைவிக்கும் பொருளும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தண்ணீரின் தரம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய நமக்கு சோதனை முடிவுகள் தேவை. அப்போதுதான் நாம் அதற்கான தரம் அடையப்பட்டு விட்டது என்று கூற முடியும்.

ஒரு கொள்கை வடிவமைக்கப்பட்டதும் அதனை அமலாக்குவது தொடங்குகிறது. கிராமப்புறத்தின் வறுமை நிலையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வீடுகளை சர்வே செய்யும் பணிக்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எட்டு லட்சம் தொண்டர்களை அனுப்பியது. பிறகு கட்சியின் 9.51 கோடி உறுப்பினர்களில் 30 லட்சம் உறுப்பினர்களை 2,55000 குழுக்களில் உறுப்பினர்களாக ஒதுக்கியது. அவர்கள் வறுமை நிறைந்த கிராமங்களில் பல ஆண்டுகள் வாழ்ந்து, அது உருவாக்கிய வறுமையையையும், சமூக நிலைகளையும் ஒழிக்க உழைத்தனர். ஒரு கிராமத்துக்கு ஒரு குழுவும், ஒரு குடும்பத்துக்கு ஒரு தொண்டரும் ஒதுக்கப்பட்டனர்.

வறுமை குறித்த ஆய்வுகளூம், தொண்டர்களின் அனுபவமும் சேர்ந்து வறுமை ஒழிக்க ஐந்து மையமான வழிமுறைகளை உருவாக்கின: தொழிலை வளர்ப்பது; மக்களை மீள்குடியமர்த்துவது; சுற்றுச்சூழல் நிவாரணத்துக்கு ஊக்கமளித்தல்; இலவச, தரமான, கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்துவது; சமூக உதவி அளிப்பது. இந்த ஐந்து மிகவும் வலுவான உந்துகோல்களில் தொழில் வளர்ச்சியானது அதிக முதலீடுகளுடனான விவசாய உற்பத்தி (பயிர் செயலாக்கம், கால்நடை வளர்ப்பு உட்பட); விளைநிலங்களை மீண்டும் அமைத்தல்; சுற்றுச்சூழல் நிவாரணத் திட்டங்களின் ஒரு பகுதியாகக் காடு வளர்த்தல்; ஆதாரங்களை அதிகமாக உறிஞ்சியதால் கெட்டுப் போன பகுதிகளை மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகியவை அடங்கும். கூடுதலாக சிறுபான்மை மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி அளிப்பதன் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, 2020 வாக்கில், உலகப் பொருளாதார அமைப்பின் கூற்றுப்படி சீனா உலகில் இறுதிக் கல்வியைப் பெண்கள் பெறுவதில் முதலிடத்தை அடைந்தது.

தம்மை தீவீர வறுமையிலிருந்து விடுவித்துக் கொண்டவர்களில் 10%க்கும் குறைவானவர்கள் இடப்பெயர்ச்சியால்தான் அதை அடைந்தனர். இது இத்திட்டத்தில் மிகவும் நாடகபாணியிலான நடவடிக்கை. இவ்வாறு இடப்பெயர்ச்சி செய்த ஒருவரான மவுஸ் அதற்கு முன் அவர் ஒரு மலையின் முனையிலிருந்த அடுலீர் என்ற கிராமம் பற்றி எனக்குச் சொன்னார். ‘ஒரு பாக்கெட் உப்பு வாங்குவதற்கு மலையைத் தாண்ட எனக்கு அரைநாளானது’ என்றார். அந்த மலைமுகடின் முனையில் ஆபத்தான முறையில் ஆடிக் கொண்டிருந்த ஒரு கயிற்றேணியில் அவர் இறங்கிக் கீழே செல்ல வேண்டும். அவரும், அவருடன் சேர்ந்து எண்பத்து மூன்று குடும்பங்களும் இடப்பெயர்ச்சி செய்து கொண்டதானது அவர்களை இப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையிலிருந்து விடுவித்து நல்ல வசதிகளைக் கிடைக்கச் செய்துள்ளது.

Socialist China to eradicate extreme poverty! Tricontinental Institute for Social Research Article Translated in Tamil by K. Ramesh

தீவீர வறுமையை ஒழித்துக் கட்டியதென்பது மிகவும் முக்கியமானது என்றாலும் அது அனைத்துப் பிரச்சனைகளையும் அதுவே தீர்த்து விடாது. சீனாவில் சமூக அசமத்துவம் மிகவும் தீவீரமான பிரச்சனையாக உள்ளது. இது சீனாவின் பிரச்சனை மட்டுமல்ல, நமது காலத்தில் மனித இனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. மிகச் சில விவசாயிகளே தேவைப்படும் மூலதனம் மிகுந்த விவசாயத்துக்கு நாம் நுழையும்போது, கிராமப்புறமும் அல்லாத, நகர்ப்புறமும் அல்லாத இடங்களில் நாம் எப்படிப்பட்ட குடியிருப்புகளை உருவாக்கப் போகிறோம்? விவசாயத்தில் இனியும் தேவைப்படாத மக்களுக்கு நாம் எந்த வகையான வேலைவாய்ப்புக்களை உருவாக்கப் போகிறோம்? சமூக, சமூகம் சார்ந்த வாழ்க்கைக்கு அதிக நேரம் கொடுக்கும்படியாக நாம் குறைந்த வார வேலைநாட்களைக் கொடுப்பதன் மூலம் தொடங்க முடியுமா?

வறுமையை ஒழிப்பது என்பது சீனாவின் திட்டமல்ல. அது மனித இனத்தின் இலக்கு. அதனால்தான் இந்த இலக்குக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கங்களும், அரசுகளும் சீன மக்களின் இந்த வெற்றியைக் கவனமாகப் பார்க்கின்றனர். எனினும் நடப்பில் இருக்கும் பல திட்டங்களில் (தென்னாப்பிரிக்காவின் பல ஆய்வு நிறுவனங்கள் கூறுவது போல) வருவாயை மடைமாற்றுவது என்ற வேறுபட்ட அணுகுமுறை மூலம் வறுமையை ஒழித்துக் கட்ட முயலப்படுகிறது. ஆனால் பணத்தை நேரடியாக அளிக்கும் திட்டங்கள் போதுமானவை அல்ல. பலபரிமாண வறுமைக்கு இதை விட அதிகத் தேவை உள்ளது. உதாரணமாக பிரேசிலின் முன்னாள் அதிபர் லூலா டி சில்வா அமல்படுத்திய பிரேசிலின் போல்சா ஃபேமிலியா திட்டம் அந்த நாட்டின் பட்டினியில் பெரும் உடைப்பை ஏற்படுத்தியது, ஆனால் அது பட்டினையை ஒழிப்பதற்கான திட்டமேயல்ல.

அதே சமயம், இந்திய மாநிலமான கேரளாவில் 1973-74இல் இருந்த 59.79% தீவீர வறுமையானது இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் 2011-12இல் 7.05% ஆக வீழ்ச்சியடைந்தது. விவசாய சீர்திருத்தம், பொதுக்கல்வி, சுகாதார வசதிகளை உருவாக்கியது, உணவுப் பொதுவிநியோக முறையை உருவாக்கியது, சமூகப் பாதுகாப்பு, நலனை அளித்தது, (குடும்பஸ்ரீ கூட்டுறவுத் திட்டங்களைப் போன்ற)பொதுச்செயல்பாடுகளை அதிகரித்தது ஆகியவை இந்தப் பெரும் சரிவுக்கு இட்டுச் சென்றன. சமூகக் கட்டுமானம் பற்றிய எங்களது தொடர் ஆய்வுஇன் அடுத்த நடவடிக்கை கேரளாவின் கூட்டுறவு இயக்கத்தில் கவனம் செலுத்தும், வறுமை, பட்டினி, ஆணாதிக்கத்தை ஒழிப்பதில் அதன் பங்கின் மீது கவனம் செலுத்தும்.

மார்ச் மாதத்தில், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் தனது உணவு வீணாகுதல் குறித்த தகவல் அறிக்கையை வெளியிட்டது. உலகம் முழுதும் சுமார் 931 மில்லியன் டன் உணவு குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதை அது காட்டுகிறது. அதாவது 40 டன் டிரக்குகளில் இவற்றை ஏற்றினால் அது 23 மில்லியன் (ஒரு மில்லியன் – பத்து லட்சம்) டிரக்குகளில் முழுவதுமாக அவற்றை நிரப்பலாம். இவற்றை வரிசையாக இடைவெளியின்றி நிற்க வைத்தோமானால், இந்த உலகின் சுற்றளவை அது ஏழு முறை சுற்றி வரும். அல்லது கோடீஸ்வரர்களான ஜெஃப் பெசோசும், ரிச்சர்ட் பிரான்சனும் முடிவெடுத்தது போல் விண்வெளிக்குச் செல்லும். அவர்களில் பெசோஸ் விண்வெளியில் நான்கே நிமிடம் செலவிடுவதற்கான பயணத்துக்கு 5.5 பில்லியன் டாலர்களை செலவிட்டார். அந்தப் பணத்தைக் கொண்டு 37.5 மில்லியன் மக்களுக்கு உணவளித்திருக்க முடியும் அல்லது இரண்டு கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசியைப் போட்டிருக்க முடியும். பெசோசுக்கும், பிரான்சனுக்கும் இருக்கும் இலட்சியங்கள் வாழ்க்கையல்ல. மாறாக, வாழ்க்கை என்பது தேவைகளின் கொடுமையை ஒழிப்பதேயாகும்.

விஜய் பிரசாத்.
தமிழில்: கி.ரமேஷ்

மூலம்: China Eradicates Absolute Poverty While Billionaires Go for a Joyride to Space: The Thirty-First Newsletter (2021)
Tricontinental Institute for Social Research

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *