சோலைமாயவன் கவிதைஉச்சந்தலையைச் சுட்டெரிக்கும்
கோடைப்பொழுதுகளில் வானத்தை
உற்று உற்று கண்களால் மழையைக் கண்காணிப்பார்
முதல் மழை பூமியைக்
குளிர வைக்கும் பொழுதே
போக்கியத்திற்கு ஓட்டும் கழனியை
மேலும் கீழுமாக ஆறப்போட ஆரம்பித்துவிடுவார்
வேங்கையின் வேகத்தோடு விதைநெல்லை மோப்பம்  பிடித்து
முன் தொகை ஒப்படைத்து அடைமழைக்காக
தலைப்பிரசவத்திற்கு காத்திருக்கும் பெண் போலத் தவித்துக்கொண்டிருப்பார்
வெளுத்து வாங்கும் மழைக்கு முன்
நெல் மூட்டை வட்டிக்குப்
பணத்தைப் புரட்டி வைத்திருப்பார்
ஏரியின் கால்கள்
தண்ணீரில் மூழ்க மூழ்க
நாற்றங்காலுக்கு
முதல் உழவை ஒப்பேத்தியிருப்பார்
நீர் தேங்கும் குட்டைகளில் விதைநெல் ஊர வைத்து
விடிய விடியக் குளிரில்
காவல் இருப்பார்
மாட்டுச்சாணி அவர்  கைப்பட்டதும்
பிள்ளையாராக மாறிடும்
தூவும்  விதைநெல்
குழந்தையாக மாறி நீருக்குள் அமைதியாகக் கண்ணுறங்கும்
நாற்று வளர வளர
கழனி சேடை ஓட்டி
கட்டியை மிதித்து பரம்பு அடித்து
கார்மேகம் கொண்ட வானத்தைக்
கழனியில் கொண்டு வந்து கண்ணாடியாக  நிறுத்தியிருப்பார்
சாமியெனக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு
சனிமூலையில் நடவு நட்டுத்
தொடங்கும் பொழுது
முனிவர்  போல் தவத்திற்குத் தயாராவார்
கார்த்திகையில் ஏரி உடையும் பெருமழைக்கு
ஊரே வீட்டில் பதுங்கிக்கிடக்க
நட்ட பயிரைப் பார்த்திட
ஆளுயர தண்ணீரில்
நீந்திச் செல்வார் பாம்பு போல
கதிர் பால் பிடிக்கும் பருவத்திலிருந்து
அந்தக் கழனியையே
ஒரு வேட்டை நாயாகச்
சுற்றிச் சுற்றி வருவார்
விளைந்த நெற்கதிரை  மேய வரும் மாட்டினை
குரலாலே விரட்டுவார்
நெல் அறுத்து
களத்து மேட்டில்  பெரும் மலையெனக் குவிந்துகிடக்கும்
களஞ்சியத்தை
மூட்டைகளாக மூட்டைகளாகக்
கடனை அடைத்து
வைக்கோல் மாட்டுக்கு போதுமென
வெறும் கையோடும் கம்பீரமாக வீடு வந்து சேருவார் அப்பா
அடுத்த மழைக்காகக் காத்திருப்பது போல்
உங்களிடம் தான்
சாலையில் கையேந்தி நிற்கிறார்
அட்சயபாத்திரத்தை அழவைத்துவிடாதே
நம் பசியின் விதை
அவர் கைரேகைகளுக்குள்