சோளகர் தொட்டி – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : சோளகர் தொட்டி
ஆசிரியர் : ச.பாலமுருகன்
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை : ரூ. 350
நூலைப் பெற : thamizhbooks.com
சோளகர் தொட்டி: வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல்துறை அராஜகத்துக்கு ஆளான பழங்குடி மக்களின் துயரைச் சொல்லிடும் நாவல்.
வழக்குரைஞர், எழுத்தாளர், மனிதஉரிமைப் போராளி, பழங்குடி மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர் எனப் பல்வேறு பரிமாணங்களுடன் வலம் வருபவர் ’சோளகர் தொட்டி’ நாவலாசிரியர் பாலமுருகன். அவர் நிறையச் சிறுகதைகள், சோளகர் தொட்டி, டைகரிஸ் ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். பி.யு.சி.எல் எனும் மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பில் தீவிர செயற்பாட்டாளராக பாலமுருகன் பணியாற்றி வருகிறார்.
பாலமுருகனின் டைகரிஸ் நாவல் முதலாம் உலகப் போரில் தொலைதூர நாடுகளில் போரிட்டு இன்னுயிர் ஈந்த இராணுவ வீரர்களின் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. முதலாம் உலகப் போரில் இராணுவ வீரராகப் பங்கேற்ற தன் தாத்தாவின் கடிதங்களில் கிடைத்த அரிய செய்திகளைத் திரட்டி இவ்வரலாற்று நாவலை பாலமுருகன் எழுதியுள்ளார்.
‘தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்துடன்’ இணைந்து செயல்பட்ட போது தனக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் ‘சோளகர் தொட்டி’ நாவல் எழுதப்பட்டுள்ளது. தான் அறிந்த சோளகர்களின் கதைகள் பாறையைவிட கனமானவை, இருளைவிட கருமை மிக்கவை, நெருப்பைவிட வெப்பமானவை என்கிறார் நாவலாசிரியர் பாலமுருகன். பழங்குடி மக்களுடன் தனக்குள்ள பிணைப்பை இந்நாவலில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சோளகர்கள் வீரப்பன் உலவிய காடுகளில் வாழும் பழங்குடித் தமிழர்கள். தொட்டி அவர்களுடைய வாழ்விடம். இரண்டு பாகங்களாக முன்னூறு பக்கங்களில் விரிந்து செல்லும் ‘சோளகர் தொட்டி’ நாவல் படிப்பவர் மனதைப் பதறச் செய்கிறது. நாவலின் முதல் பாகம் விலைமதிப்பற்ற வனச் செல்வங்களைப் பரிவுடன் பாதுகாத்து, அதனுள்ளே எளிமையாக வாழ்ந்து வரும் சோளகர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா காவல்துறைகளுக்கு மாபெரும் சவாலாக இருந்த வீரப்பன் நாவலின் இரண்டாம் பாகத்தில் ஒரு கதாபாத்திரமாகி சிறப்பு பெறுகிறார். கதைமாந்தர்களில் ஒருவராக வீரப்பன் உண்டு, உறங்கி, உரையாடி, உறவாடுகிறார்.
தொட்டியின் தலைவர் ’கொத்தல்லி’யின் வழிகாட்டுதலில் சோளகர்கள் அன்புடனும், அமைதியுடனும் வாழ்வதை நாவலின் முதல் பாகத்தில் காண்கிறோம். இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்வு கள்ளங் கபடமற்று இருக்கிறது, விவசாயம், வேட்டை மட்டுமே அவர்கள் அறிந்த தொழில்கள். கஞ்சா தரும் போதை – அவர்கள் அனுபவிக்கும் ஒரே மகிழ்ச்சி. காலனிய காலத்தில் அந்த வனத்துக்கு வேட்டையாட வரும் வெள்ளைக்கார துரைக்கு கொத்தல்லி உதவுகிறார். அதற்குப் பரிசாக துரை தரும் துப்பாக்கியை மிகப் பத்திரமாக அவர் தன்னிடம் வைத்திருக்கிறார். அந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு யானைகளை விரட்டி தன் சமூகத்தினரை அவர் பாதுகாத்து வருகிறார். தொட்டியின் தலைவன் கொத்தல்லி, அவன் மகன் பேதன், பேதன் மனைவி ஜோகாம்பாள், அவர்கள் மகன் சிவண்ணா, அவன் மனைவி மாதி, மாதி மகள் சித்தி, தொட்டியின் கோல்காரன் செந்நெஞ்சா, அவன் மகன் சிக்குமாதா, சிக்குமாதா மனைவி கெம்பம்மா, அவர்கள் மகன் தம்மய்யா என்று தொட்டியில் வாழும் அனைவரும் காய்தலும், உவத்தலுமின்றி ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
காட்டின் எல்லையில் கட்டாந்தரையாக இருந்த இடத்தைச் சீர்திருத்தி விளைநிலமாக்கி, அதில் கொத்தல்லியின் மகன் பேதன் ராகி பயிரிடுகிறான். ராகி களியும், கஞ்சியும் அவர்களின் அன்றாட உணவு. அவர்களின் ஆன்மீக வழிகாட்டியாக தொட்டியில் அமைந்திருக்கும் கோயிலின் கோல்காரான் (பூசாரி) செந்நெஞ்சா இருக்கிறார். செந்நெஞ்சா-கெம்பம்மா தம்பதியினரின் மகன் சிக்குமாதா வேட்டை மீது அதீத ஆர்வம் கொள்கிறான். அது ஆபத்தானது என்று பெற்றோர்கள் அவனை எச்சரிக்கின்றனர். ஒருமுறை கரடியை வேட்டையாடிய போது வனக்காவலர்களிடம் அவன் பிடிபடுகிறான். அதிலிருந்து சோளகர்களின் துயர்மிகு வாழ்வு தொடங்குகிறது.
சிக்குமாதாவை மீட்டுவர மணியகாரன் மாதப்பனின் உதவியை நாடுகிறார்கள். காவல்துறையினரிடம் பேரம் பேசி சிக்குமாதாவை மீட்டெடுக்கும் பொறுப்பை மாதப்பன் தன்னுடைய வேலையாள் துரையனுக்கு அளிக்கிறான். காவல்துறையினர் கேட்கும் பெரும் தொகை அவர்களிடம் இல்லை. பணத்தை தான் ஏற்பாடு செய்து தருவதாக துரையன் கூறுகிறான். அவன் அவ்வாறு கூறுவதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியை அறியாத சோளகர்கள் அதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். மாதப்பன், துரையன் அவன் மனைவி சாந்தா ஆகியோர் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
துரையன் கொடுத்த பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கிறார்கள். அப்பாவி பழங்குடி மக்களை எளிதில் ஏமாற்றி பேதனின் நிலத்தை துரையன் வாங்கிக் கொள்கிறான். தன் மனைவி சாந்தாவை மாதப்பனுக்கு கூட்டிக் கொடுக்கும் இழிதொழில் செய்யும் துரையன் சோளகர்கள் வாழ்வைச் சீரழிக்கும் வில்லனாகிறான். தன்னுடைய விளைநிலத்தை இழந்த துயரில் பேதன் இறந்து போகின்றான்.
வனக் காவலர்கள், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் என்று அனைவரும் ஈவிரக்கமின்றி பழங்குடி மக்களைச் சுரண்டுகின்றனர். மலையின் ஆபத்தான பகுதியில் இருக்கும் தேனடைகளில் இருந்து தேனை எடுத்துத் தரச் சொல்கிறார்கள். கூலியைக்கூட கொடுக்காமல் வெட்கமின்றி தேனை எடுத்துச் செல்கிறார்கள். சோளகர்களின் தொட்டிக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்று அவர்களின் வாழ்வியல் முறைகளை வாசகர்களுக்கு நாவலாசிரியர் காட்டுகிறார். நாவலின் முதல் பாகத்தில் சோளகர்கள் சமூகத்தில் நிறைந்திருக்கும் குழந்தைத் திருமணம், தம்பதிகளிடம் நிலவிடும் தூய்மையான காதல், பொருந்தாத் திருமணத்திலிருந்து எளிதான மணமுறிவு, மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், கடவுள் பயம், சடங்குகளின் மீதான அதீத நம்பிக்கை, விலங்குகளின் மீதான பரிவு, ஆண்-பெண் உறவு முறையில் வெளிப்படும் நேர்மை, குழந்தைப் பராமரிப்பு, முதியோர் மீதான மரியாதை என்று சோளகர்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கண்முன்னே நிறுத்துகிறார்.
இரண்டாம் பாகத்தில் வீரப்பனின் வருகை நாவலின் திசைவழியை மாற்றுகிறது. வீரப்பனைப் பிடிப்பதாகச் சொல்லி மேற்கொள்ளப்படும் அரச பயங்கரவாதம் சொல்லொண்ணாத் துயரத்தில் தொல்குடிகளை ஆழ்த்துகிறது. வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என்று மும்முனைத் தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் ஆளாகிறார்கள். ’இணைந்த செயல்பாடு’ என்று சொல்லி வந்திறங்கும் கர்நாடக மாநிலக் காவல்துறையும் வன்முறை வெறியாட்டத்தை ஆடுகிறது.
காட்டின் முகப்பில் வீடு கட்டிக்கொள்ளும் துரையன் தொட்டி மக்களை வனத்துறைக் காவலர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் வேலையில் ஈடுபடுகிறான். பேதனின் மரணத்துக்குப் பின்னர் அவனுடைய மகன் சிவண்ணா தலையெடுக்கிறான். வேட்டையில் ஆர்வம் கொண்டு துப்பாக்கியுடன் அலையும் சிவண்ணா ஒருநாள் தற்செயலாக வீரப்பனின் முகாமை வந்தடைகிறான். வீரப்பனின் வாழ்வியல் முறையால் ஈர்க்கப்படும் அவன் மனைவி மக்களை மறக்கிறான்.
காட்டின் இந்தப் பகுதிக்குள் வீரப்பன் முகாமிட்ட பின்னர் தொட்டியின் நிலைமை முற்றிலுமாக மாறுகிறது. கணந்தோறும் தொல்குடியினர் கண்காணிக்கப்படுகின்றனர். காவல்துறை மேற்கொள்ளும் வன்முறைகளை விளக்கிட வார்த்தைகள் போதாது. வீட்டுக்குள் புகுந்து கிடைப்பவை அனைத்தையும் அவர்கள் சூறையாடிச் செல்கின்றனர்.
காவல்துறை ஆணையம் அவ்வப்போது இந்தியக் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது. ரான் ஹென்றிக்ஸ் எனும் காவல்துறை அதிகாரி தயாரித்த இத்தகு அறிக்கை இந்திய காவல்துறையின் குணாம்சங்களை மிகச் சரியாகச் சித்தரிக்கிறது. ”இந்தியாவில் பணக்கார்களுக்கு ஏவலர்களைப் போல காவல்துறை பணிவிடை செய்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தினரை அது உதாசீனம் செய்கிறது. ஏழை மக்களைக் கொடூரமாக நடத்துகிறது”. என்கிறது அவரது அறிக்கை. அதனை நிரூபிக்கும் வண்ணம் காவல்துறையினர் விதவிதமான முறைகளில் சித்ரவதைகளை மேற்கொள்கின்றனர். சோளகர் தொட்டியின் தொல்குடி மக்களை மிகக் கொடூரமாக, கேவலமாக நடத்துகின்றனர்.
குறிப்பாக தொட்டியைவிட்டு நிரந்தரமாக விலகி வீரப்பன் முகாமிற்கு சிவண்ணா சென்றதும் காவல்துறையின் சந்தேகம் வலுக்கிறது. சிவண்ணாவைப் பிடித்தால் வீரப்பனைப் பிடித்துவிடலாம் என்றெண்ணி அவனுடைய மனைவி மாதி, மகள் சித்தி இருவரையும் கொட்டடியில் அடைக்கின்றனர். அவர்களை கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். அனைவர் முன்னாலும் இருவரையும் நிர்வாணப்படுத்தப்படுகின்றனர். கிளிப்புகளை உதட்டில், முலைக் காம்புகளில் பொருத்தி மின்சாரம் செலுத்தப்படுகிறது. தலைகீழாகத் தொங்கவிட்டு அடிக்கின்றனர். பட்டினியிட்டு, தூங்கவிடாமல் செய்து சித்ரவதை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவர் பார்க்க ஒருவரை என்று அந்தக் கொட்டடியில் இருக்கும் தந்தை மகன் இருவரையும் அடிக்கின்றனர். அவர்கள் இருவரையும் மாறிமாறித் தாக்கிக் கொள்ளுமாறு சொல்கின்றனர். வாயில் சிறுநீர் கழித்து இழிவுபடுத்துகின்றனர். கை, கால்களை முடமாக்குகின்றனர். சிவண்ணா மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்த செய்தியைக் கேட்ட பின்னரே காவல்துறையினர் அராஜகத்தை நிறுத்துகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்பவர்களை குற்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்யவும், குற்றம் பற்றிய ரகசியங்களைப் பெறுவதற்கும் Third Degree Method எனப்படும் சித்ரவதை முறை காவல்துறையால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பீஹாரில் பகல்பூர் எனும் நகரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தவர்களின் கண்களில் சூடுவைத்து குருடாக்கிய கொடூரம் நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தில் அப்பா, மகன் இருவரையும் இரவில் கைதுசெய்து, இரவோடு இரவாக அடித்தே கொன்ற கொடூரம் நிகழ்ந்தது. பத்மினி என்ற ஏழைப் பெண் சிதம்பரம் காவல்நிலையத்தில் காவலர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளான கொடூரம் நடந்தது.
மனித உரிமைப் பாதுகாவலர்கள் காவல்நிலைய வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஒருவரைக் கைது செய்வதிலிருந்து அவரை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து நிறுத்துவதுவரை காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. ஆனாலும் காவல்துறையினர் அவற்றைத் துச்சமெனக் கருதி மதிப்பதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டே ’சோளகர் தொட்டி’ நாவலில் நாம் காணும் கொடூரக் காட்சிகள்.
உளவியலாளர்கள் ”பிறரைத் துன்புறுத்தி அதன் மூலம் தான் இன்புறுதல்” எனும் உளவியல் போக்கை ’sadism’ எனக் குறிப்பிடுகின்றனர். சோளகர் தொட்டி நாவலில் நாம் காணும் காவலர்கள் அது போன்ற சாடிஸ்டுகளாகவே இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் மத்தியிலும் ஈர நெஞ்சுடையவராக சுபாஷ் எனும் காவலர் மனிதநேயத்துடன் நடந்துகொள்வதைப் பார்த்து வியக்க முடிகிறது.
‘சோளகர் தொட்டி ’நாவலில் காவல்துறை வன்முறைகளின் கொடூரத்தை பாலமுருகன் படம்பிடித்துக் காட்டியுள்ளார். காட்டின் உண்மையான பாதுகாவலர்களாக கள்ளங்கபடமற்ற தொல்குடியினர் இன்றும் நம்மிடையே சோளகர்களைப் போல் வாழ்ந்து வருவதை பாலமுருகன் நேர்மையுடன் சித்தரிக்கிறார். இயற்கை வளங்களைச் சூறையாடி கொள்ளை லாபம் அடைய நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொல்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டிவிடக் காத்திருக்கின்றன. அதற்குத் துணைபோகும் அரசியல்வாதிகளும் மலிந்து கிடக்கின்றனர். தொல்குடி மக்களின் பிரச்சனைகளை புனைகதைகள் வழி சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவரும் பாலமுருகனின் பணி தொடரட்டும்! அவர் மேலும் இது போன்ற நாவல்கள் படைத்து பழங்குடி மக்கள் துயர்போக்கிட உதவிடுவார் என்பதில் ஐயமில்லை.
நூலின் தகவல்கள் :
பெ.விஜயகுமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.