சூரிய சக்தியில் இயங்கும் கடல் நத்தை (Solar Powered Sea Slug Tamil Article): வட கிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் வரை வாழ்கிறது - https://bookday.in/

சூரிய சக்தியில் இயங்கும் கடல் நத்தை – ஏற்காடு இளங்கோ

சூரிய சக்தியில் இயங்கும் கடல் நத்தை

– ஏற்காடு இளங்கோ

தாவரங்கள் தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும். ஆனால் விலங்குகள் தனக்கு வேண்டிய உணவை தாவரங்கள் அல்லது விலங்குகள் ஆகியவற்றிலிருந்து தான் பெறுகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் ஒரு விலங்கு, ஒரு தாவரத்தைப் போல் தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்கிறது. அதாவது ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவைத் தயாரித்துக் கொள்ளும் திறன் கொண்டது.

இது கடலில் வாழும் ஒரு உயிரினம். இது கடல் நத்தை (Sea Slug) இனத்தைச் சேர்ந்தது. இதன் விலங்கியல் பெயர் எலிசியா குளோரோடிகா (Elysia chlorotica) என்பதாகும். ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) மூலம் தனக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்துக் கொள்ளும் உலகின் முதல் விலங்கு இதுவாகும். ஆகவே இது சூரிய சக்தியில் இயங்கும் கடல் நத்தை (Solar Powered Sea Slug) என்று அழைக்கப்படுகிறது.

சூரிய சக்தியில் இயங்கும் கடல் நத்தை (Solar Powered Sea Slug Tamil Article): வட கிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் வரை வாழ்கிறது.

வாழிடம்

இந்த இனம் பொதுவாக உப்பு சதுப்பு நிலங்கள், குளங்கள், ஆழமற்ற சிற்றோடைகள் மற்றும் குறைந்த உப்புத்தன்மைக் கொண்ட நீரிலும் வாழ்கிறது. இது 0 முதல் 1.6 அடி ஆழத்தில் காணப்படுகிறது. ஆகவே சூரிய ஒளி இதற்கு நன்கு கிடைக்கிறது.

இது வட கிழக்கு அட்லாண்டிக் மற்றும் இங்கிலாந்திலிருந்து மத்திய தரைக்கடல் வரை வாழ்கிறது. மாசசூசெட்ஸ், கனெக்டிகட், நியூயார்க், நியூ ஜெர்சி, மேரிலாந்து, ரோட் தீவு, புளோரிடா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் உட்பட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் இதைக் காணலாம். நோவா ஸ்கோடியா மற்றும் கனடாவிலும் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல்

சூரிய சக்தியில் இயங்கும் கடல் நத்தை (Solar Powered Sea Slug Tamil Article): வட கிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் வரை வாழ்கிறது.

இதன் பொதுவான பெயர் கிழக்கு மரகத எலிசியா (Eastern Emerald Elysia) என்பதாகும். இது 2 முதல் 3 சென்டிமீட்டர் நீளம் வரை காணப்படும். ஆனால் 6 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இது நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இது பெரிய பக்கவாட்டு பரபோடியா என்னும் சதைப் பகுதியைக் கொண்டுள்ளது. இது உடலை மூடுவதற்கு ஏற்ப மடிகிறது.

இது கடல் முயலைப் போலவே இருக்கிறது. இது இளம் வயதில் சிவப்பு நிறமி புள்ளிகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். வளர்ந்தப் பிறகு தெளிவான பச்சை நிறத்தில் காணப்படும். ஆனால் அது உண்ணும் பாசி வகையைப் பொறுத்து சிவப்பு அல்லது பழுப்பு நிறமாகவும் இருக்கும். எப்போதாவது சாம்பல் நிறத்தில் தோன்றும். இதன் உடல் முழுவதும் செரிமானச் சுரப்பிகளின் கிளைகளைக் காணலாம்.

இதன் உடலில் மிகச்சிறிய சிவப்பு அல்லது வெள்ளைப் புள்ளிகள் சிதறி இருக்கலாம். இதன் தலை, கால் மற்றும் இறக்கைகளில் தனித்துவமான குளோரோபிளாஸ்டுகளைக் கொண்டுள்ளது. அது சிறிய நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக்கல் போல் பிரகாசமாக ஒளிரும். இது தனது சிறகுகள் கொண்ட உடலை விரிக்கும் போது ஒரு அழகான பச்சை இலையாக உருவாகிறது. இந்த உருவ அமைப்பு பாசிகளுக்கு இடையில் மறைந்து கொள்ள உதவுகிறது. ஆகவே எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது.

உணவு தயாரிப்பு

சூரிய சக்தியில் இயங்கும் கடல் நத்தை (Solar Powered Sea Slug Tamil Article): வட கிழக்கு அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் வரை வாழ்கிறது.

இது வவுச்சேரியா லிட்டோரியா (Vaucheria litorea) என்ற பாசியை உண்ணுகிறது. இந்த குறிப்பிட்ட பாசி ஒரு சிறந்த உணவு ஆதாரமாக உள்ளது. ஏனெனில் அதன் உடலில் உள்ள செல்களுக்கு இடையில் சுவர்கள் இல்லை. இது அடிப்படையில் கருக்கள் மற்றும் குளோரோபிளாஸ்டுகள் (Chloroplasts) ஏற்றப்பட்ட நீண்ட குழாய் ஆகும்.

கடல் நத்தை அதன் ராடுலா என்ற நுண்ணிய பல் போன்ற அமைப்பால் பாசியின் செல் சுவரைத் துளைக்கிறது. அதன் வாயில் பாசி இலையை உறுதியாகப் பிடித்து உறிஞ்சுகிறது. அப்போது குளோரோபிளாஸ்டுகள் உடலுக்குள் ஒரே நேரத்தில் செல்கின்றன. மில்லியன் கணக்கான உயிருள்ள குளோரோபிளாஸ்டுகள் அதன் உடல் செல்களில் சேமிக்கப்படுகின்றன. அவை சிறிய சோலார் பேனல்கள் போன்றவை.

இந்த குளோரோபிளாஸ்டுகள் உயிருடன் மற்றும் செயல்பாட்டுடன் பராமரிக்கப்படுகிறது. பழுப்பு நிறத்தில் இருக்கும் இளம் நத்தை பாசிகளை உண்ட பிறகு பச்சை நிறமாக மாறுகிறது. இது பரவலாக கிளைத்த குடல் முழுவதும் குளோரோபிளாஸ்டுகள் பரவுவதால் ஏற்படுகிறது. மேலும் குளோரோபிளாஸ்டுகளைத் தனது உடலில் தக்க வைக்க பாசிகளைத் தொடர்ந்து உண்ணும். அதன் பிறகு உண்பதை நிறுத்தி விடுகிறது.

குளோரோபிளாஸ்டில் பச்சையம் (Chlorophyll) என்ற நிறமி உள்ளது. இது சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உற்பத்தி செய்கிறது. இது நத்தைக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஒரு விலங்கு ஒரு தாவரம் போலவே நடந்து கொள்கிறது. இந்த நத்தை 12 முதல் 15 மாதங்கள் வரை உயிர் வாழும். இதன் உடலில் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதால் மட்டுமே பல மாதங்கள் வரை உயிர் வாழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:

 Yercaud Elango

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *