நூல் அறிமுகம்: சொல்ல மறந்த தமிழர் வரலாறு – கார்த்தி டாவின்சிநூல்: சொல்ல மறந்த தமிழர் வரலாறு 
ஆசிரியர்: முனைவர் கீரைத் தமிழன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ. 100/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/solla-marandha-thamizhar-varalaru/

சொல்ல மறந்த தமிழர் வரலாறு என்ற இந்நூலில் உலக நாகரிகங்களில் எல்லாம் காணப்படும் தமிழர்களின் அடையாளங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர் கீரைத்தமிழன். நூலின் முகப்பு அட்டையில் உள்ள படங்களிலேயே இந்நூலின் மையப்புள்ளி எது என்று தெளிவாக தெரிகின்றது. உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை நிறுவும் முயற்சியின் ஒருபடிதான் இந்நூல்.

உலக நாகரிகங்களுக்கு எல்லாம் தொட்டில் என்று கருதப்படக் கூடிய சுமேரிய நாகரீகம் தொல் தமிழர்களின் விளைவு என்று குறிப்பிடுகிறார். கி.மு. 3500க்கு முன்பு உருவாகிய பெரும் நாகரிகம் சுமேரிய நாகரிகம். உலக நாகரீகங்களோடு ஒப்பிடும்போது இதுவே இருப்பதிலேயே பழமைக்கு பெயர் போனதாக இருக்கிறது. அதனால்தான் இதனை ‘உலக நாகரிகங்களின் தொட்டில்’ என்று அழைக்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் இந்நாகரிகம் இறுதியில் கி.மு. 2500 ஆண்டு வாக்கில் முற்றுப்பெற்றது.

பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் பல இந்திய ஆய்வறிஞர்களும் ஆய்வு செய்து இது தொல் தமிழ்-திராவிட நாகரிகம் என்று குறிப்பிடுகின்றனர். ஏனெனில் சுமேரிய மொழியிலும் இலக்கியத்திலும் பண்பாட்டு அடையாளங்களிளும் திராவிடத்தின் அடையாளக்கூறுகள் குறியீடுகள் அதிகம் கொண்டிருக்கின்றன. இங்குதான் நாம் இன்று சொல்லும் ‘ஊர்’ என்ற சொல்லில் ஓர் நகரமே இருக்கிறது. ‘ஊர், நிப்பூர், மாரி,  ஊருக், சூரப்பாக், எரிது’ போன்று பல ஊர்களின் பெயர்கள் இன்றைய தமிழின் ஆதி மொழிவடிவத்தால் ஆனது என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த எரிதுதான் காலப்போக்கில் பல மொழி தாக்கங்களைப் பெற்று ஈராக் ஆகியுள்ளது. ஆனால் எரிது நகரம் மதுரை என மருவி வந்துள்ளது என்று ஆய்வாளர் ‘பிரபாகரன்’ தனது ‘குமரிக் கண்டமா சுமேரியமா.?’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல, இங்கு வணங்கப்பட்ட கடவுள்களின் பெயர்களும்கூட தமிழின்- திராவிடமொழியின் ஆதி வடிவத்தில் இருப்பதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல பல குறிப்புகள் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. படிக்கும்போது ஏற்படும் வியப்பு பல நாட்களுக்கு நீடிக்கிறது. இதெல்லாம் உண்மையா இல்லையா என்ற கேள்வி ஒரு பக்கம் மனதில் தோன்றினாலும், இந்நூல் காட்டும் ஆதாரங்களும் அடையாளங்களும் நம்மை யோசிக்க வைக்கின்றன. மேலும் நமது தாய் மொழியறிவோடு நாம் ஒத்து போகும்போது நமக்கு கிடைக்கிற மெய்ஞானமும் நம்மை உண்மைக்கு இன்னும் அருகில் கொண்டு செல்கிறதாகவே உணர்கிறேன்.

மொழி என்பது காலம் காலமாக மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். சொற்கள் மாறும், சொல்லின் உச்சரிப்பு மாறும், அதன் எழுத்துமுறை மாற்றம் கண்டு காலம் கடந்து புரியாமல்கூட போகும். ஆனாலும் சொல்லின் வேர் தன் இயல்பை விடுவதில்லை. உதாரணமாக, ‘ஊருக்’ என்ற சொல் சுமேரிய மொழிச் சொல், அது ஏசுவின் தாய்மொழியான ‘அராமைக்’ மொழியில் ‘எரிக்’ என்றழைக்கப்பட்டு பின்னர், பாரசீக மொழியில் ‘ஈராக்’ என்று மாறியுள்ளது. இதுவே இன்றுவரை நாம் அழைக்கும் சொல். சொல்லின் உச்சரிப்பும் எழுத்தும் காலத்தினாற் மாற்றம் கண்டிருப்பினும் அதன் வேரியல்பு விட்டுப்போகவில்லை. இப்படி சொற்களின் வேரியலைக் காண்பதன் மூலம் பல வரலாறு நமக்கு புலப்படும் என்று பாவாணர் முதற்கொண்டு பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.சுமேரிய நாகரீகம் நிலவிய, இந்த பகுதிதான் பின்னர் மெசப்படோமியா என்றும் பாபிலோன் என்றும் இன்றைக்கு ஈராக் என பல பெயர்களால் ஆளும் வர்க்கத்தினரின் விருப்பத்திற்கேற்ப மாற்றம் பெற்றுள்ளது. ஈராக் பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டுச் சொன்ன வார்த்தைகளையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

விவேகானந்தர் தனது ‘ஐரோப்பிய பயணத்தின் நினைவுகள்’ என்ற நூலில் கீழ்வருமாறு ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் இது..

‘தமிழர்களின் ஒரு பகுதியினரே சுமேரியர்கள் என்றழைக்கப்பட்டனர். மெட்ராஸ் ராஜதானி வாழ் தமிழர்களின் முன்னோர்கள் சுமேரியாவில் குடியேறியப்பின்தான் நாகரிகம் முதன்முதலில் தலைக்கத் தொடங்கியது. இவர்களது வானாருடமும் கதைகளும் அறிவும்தான் அசிரிய மற்றும் பாபிலோனிய நாகரிகங்கள் உருவாகவும் அடித்தளமிட்டது.  மேலும் இவர்களது புராணங்கள்தான் இன்றைய பைபிளின் மூலக்கதைகளாக மாறியிருக்கிறது. மேலும் மலபார் பகுதியிலிருந்து போன ஒரு தமிழர் கூட்டம்தான் அழகான எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.’

சுமேரியாவில்தான் கலிமண் ஓடுகளில் உலகின் முதல் காவியமான ‘கில்கேமெஸ் – எங்கிடு’ உருவானது. இந்த கதை பல வரலாற்று விசயங்களை கதைகளாகத் திரித்து வைத்திருக்கிறது. மேலும் இதன் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்கள்தான் நமக்கு ஆச்சர்யமூட்டுகின்றன. கில்கேமெஸின் தந்தையின் பெயர் தமுஷிட்.  இது தமிழ்ப்பெயர் என்று கூறுகிறார் நூலாசிரியர். எப்படி.?

தமுஷிட்—>தமுஷி—>தமிஷ்—>தமிழ் = தமி.  இச்சொற்களின் மூல வேர் ‘தமி’ என்பதாகும். தமி என்றாலே அது தமிழர்களைக் குறிக்கும் சொற்பதமே என்கிறார் நூலாசிரியர். அதாவது தமுஷிட் என்ற சொல்லுக்கு சுமேரிய மொழியில் ‘மீனவன்’ என்று பொருள்.

இதேப்போலத்தான், ‘திரைமீளர்’ என்ற சொல் திரமிள’ என்று மாற ஆரம்பித்து திராவிட —> தமிழ் என்ற வடிவத்திற்கு வந்திருப்பதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். திரை என்றால் ‘கடல்.’ ஆக, கடல் கடந்து வந்து குடியேரியவர்கள் என்று பொருள்படுகிறது. மேலும், திரையை ஆள்பவர்கள் என்ற இன்னொரு பொருளும் மறைமுகமாக விளங்குகிறது. ஆக, இந்த பொருளுக்கும், தமுஷிட் என்ற சொல்லின் பொருளான மீனவர் என்ற சொல்லுக்கும் பொருத்தம் இருப்பதை நாம் காணலாம். இதுதான் சொல் வேரியல் வரலாறைச் சொல்லும் என்பது..! ‘திரைக்கடலோடி திரவியம் தேடு’ என்று நாம் படித்திருக்கிறோம்.

தமிழகத்தின் வரலாற்றை பின்னோக்கி பார்க்கையில் தமிழகம் என்பது இந்தியாவின் மேற்கு நாடுகளால் பெரிதும் போற்றப்பட்டிருக்கிறது என்பதும் வியாபாரம் முதற்கொண்டு இயற்கை சீற்றங்களால் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கென ஏற்ற இடமாகவும் விளங்கியிருப்பது தெரிகிறது. வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், மா வறட்சி, போ என பல காரணங்களுக்கு தமிழகம் நல்ல தீர்வாக அமைந்திருக்கிறது. அதன்படிதான் கடல்வழி வாணிகம் அதிகம் நடைபெற்றிருக்கிறது. இப்படி கப்பல் கலன்களில் வருபவர்களைக் குறிப்பிட்டுதான் தமிழில் ஒரு பழமொழியும்,  ‘காகம் கரைந்தால் விருந்தாளி வருவார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கும்போல.

எப்படியெனில், இதற்கு இலக்கியங்கள்தான் தொடர்பைக் காட்டுகின்றன. கில்கேமெஸ் காவியத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் உத்தனபிஸ்டிம். சாகாவரம் பெற்றவர். பெருவெள்ளம் ஒன்று வருவதை  முன்னறிந்து பெரிய மரக்கலன் உருவாக்கி, அதில் சிலரையும் சில உயிரினங்களையும் ஏற்றிக்கொண்டு கடல் கடந்து, ‘தில்முன்’ என்ற இடத்திற்கு புலம் பெயர்ந்து வந்து குடியேரியதாக கதை கூறுகிறது. கடலில் வருகையில் கரையை அறிய, ஒரு காகத்தை கூண்டிலிருந்து விட்டதாக ஓரிடத்தில் வருகிறது. மரக்கலன்கள்தான் கப்பல்களாக இருக்கும் பட்சத்தில் காகத்தை கரையறிய பயன்படுத்தி நிலம் வந்தடைபவரை விருந்தாளியாகக் கருதி, நம் முன்னோர், ‘காகம் கரை வந்தால் விருந்தாளி வருவார்கள்’ என்று கூறியிருப்பதாக எண்ணுகிறேன். ‘கரை வந்தால்’ என்பதுதான் ‘கரைந்தால்’ என்று மாறியிருக்கும் என்று தோன்றுகிறது.இக்கூற்றையெல்லாம் ஆய்வுக்கு எடுத்து பார்க்கும் பட்சத்தில்தான் மேலும் பல ஆச்சர்யங்கள் தோன்றுகின்றன. அதாவது, உத்தனபிஸ்டிம் வந்து சேர்ந்த இடமான ‘தில்முன்’ என்பது சொல்லோசைகளின் அடிப்படையில் தமிழகம்போல தெரிகின்றது. தமிழகம் என்றப் பெயர் இன்றைக்கு புழக்கத்தில் உள்ளதாகும், அது எப்படி தில்முன் தமிழகம் ஆகும் என்ற கேள்வி எழுந்தால் நீங்களும் ஆய்வாளரே.!

சுமேரிய இலக்கியமும், அதனை ஒட்டி எழுந்த சில நாகரிகங்களின் இலக்கியங்களும் தில்முனை பாராட்டி பாடுகின்றன. அவற்றின் அடிப்படையில் பல ஒற்றுமைகள் தில்முனுக்கும் தமிழகத்திற்கும் இருப்பதை அறிய முடிகின்றது. சுமேரிய மொழியிலான பல மந்திரங்கள் தொல்திராவிட மொழியின் வடிவத்தில் அமைந்திருப்பதை அறிஞர்கள் கண்டுள்ளனர். ஆக, அம்மா, ஆயா, அய்யா என்ற சொற்கள் சுமேரியத்தில் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றின் அடிப்படைகளில்தான் தில்முன் என்பது தமிழகமே என்று முடிவெடுக்க தோன்றுகிறது. ஆக, தமிழகத்தின் வரலாற்றின்படி பல நாடுகள் தமிழகத்தை பெரும்பேறாக, சொர்க்க பூமியாக எண்ணியிருப்பதை அறிய முடிகிறது. ஆச்சர்யம்தான்..!

கில்கேமெஸ் காவியத்தில் வரும் உத்தனபிஸ்டிம் கப்பல் கட்டி, வெள்ளத்திலிருந்து தப்பினார் என்ற கதையைப் போலவே, நோவா கப்பல் கட்டி வெள்ளத்தினின்று தப்பியதாக, விவிலியம் ஒரு கதை கூறுகிறது. தமிழில் மச்ச புராணமும் ஒரு கதை கூறுகிறது. மச்ச அவதாரம் புராணப்படி, ஒரு பாண்டிய மன்னன் ஒரு மரக்கலன் செய்து மக்கள் மாக்கள் ஆக்கள் என பல உயிர்களை ஏற்றி பெருவெள்ளத்தினின்று காப்பாற்றி புதிய இடத்தில் குடியமர்த்தினான். அதனால் அவன் முதல் மனு எனப்பட்டான் அவனது சந்ததிகளே பிறகு மனித குலம் தழைக்க உதவியதாக கதை முடிகிறது. ஆக, உத்தனபிஸ்டிம், நோவா, பாண்டிய மன்னன்,  ஆகியோரின் கதைகள் பொதுவாக வெள்ளத்திலிருந்து மரக்கலன் மூலமாக தப்பிப் பிழைப்பது.

நல்ல ஆட்சி நடக்கிறது என்றாலே அங்குதான் போர்களும் நிகழும். அப்படி பல போர்களின் தாக்கங்களில் சுமேரிய மொழி அழியத் தொடங்கியதாக சொல்கின்றனர். அப்படி பல குளறுபடிகளுக்கு ஆளாகி பல இடங்களுக்கு சுமேரு வாழ் மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் சிந்துவெளிப் பகுதியிலும் போய் கலந்திருக்கின்றனர். சுமேரு மற்றும் சிந்து சமவெளி எழுத்துருக்களும் ஒற்றுமையாக இருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். அப்படிதான் தமிழகத்திலும் சுமேரியர்கள் குடியேரியிருக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் பல நூற்றாண்டுகள் கடந்து நாம் இருக்கிறோம். அவர்களது காலத்திய மொழியறிவு இன்று அப்படியே இருப்பது மிக மிக சிரமம். ஏற்கனவே சொன்னதுபடி, சொல்லின் ஓசை, ஒலி, எழுத்து, உச்சரிப்பு மாறலாம். ஆனால் அதன் வேரியல்பு மாறாது. அதன்படிதான் இலக்கியம், அதன்வழியாக வரலாறு என்று மனிதரின் மூலத்தைத் தேடிப் போக முடியும்.!

அப்படியாக, ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட, புனித நூலாக கருதப்பட்ட ‘தோரா’ பிற்காலத்தில் பைபிளின் பழைய ஏற்பாடாக மாறியது. அதன்படி, ஆதாம் ஏவாள்தான் முதல் தாய் தந்தையர். ஆடம், ஈவ் என்று ஆங்கிலத்தில் அறிந்த இவர்களின் பெயர்கள் ஹீப்ரு மொழியில் ஆதப்பா, ஹாயா அல்லது ஹவவா. அதாவது இன்றைய சுமேரியப் பகுதியில் சுமேரியர்களை ஒட்டி வளர்ந்த மொழியான ஹீப்ருவில் ஆதப்பா, ஆயா என்ற தமிழ் பெயர்களின் முன் வடிவம் இருக்கிறது. இங்கே, ஆதன் என்னும் சொல்லையும் மனதில் கொள்ளலாம்.

சரி, திரைமீண்டு வாழ்ந்த தமிழர் சுமேரியம் மட்டும் கண்டார்களா என்று கேட்டால், பல நாடுகளில் தமிழர்களின் வழிதோன்றல்கள் இருக்கின்றனர். உதாரணமாக, ஆஸ்திரேலிய பழங்குடியினருடன் பல நூற்றாண்டுகள் முன்பு கூடி, கலந்தனர். அவர்களது பூர்வமொழியோடு தமிழ் இணைந்து அவர்களுக்கு ஒரு முழுமையான மொழி உருவாகியிருக்கிறது.  அதிலும் பல தமிழ்ச்சொற்கள் அதன் வேரியல்பு மாறாமல் இருக்கிறது.ஆஸ்திரேலியாவில், அணங்கு இன பழங்குடியினர் அதிகம் வாழும் ‘உள்ளூர்’ என்றொரு இடம் மிகவும் புனிதமாக மதிக்கப்படுகிறது. அங்கு மிகப் பெரிய செம்மணல் மேடு உள்ளது. அதற்குள் குகையில் பல நூற்றாண்டுகள் பழமையானப் பாறை ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் தமிழர்களின் மரக்கலன்களின் வடிவங்களும் பல நாய்களின் படங்களும் வரையப்பட்டிருக்கிறது. அது ஏன் நாய் என்று கேட்டால், அட.. எங்கு பழங்காலத்து ஓவியங்கள் இருந்தாலும் அதில் நாய்களும் இருந்திருக்கின்றன. அதேப்போல, மரக்கலன்களும்… அவை தமிழரின் அக்காலத்திய மரக்கலன்களுடன் ஒத்துப் போகின்றன. மேலும் மதுரா குகை எனுமிடத்திலிருந்து ஒரு நாயின் மண்டை ஓடு கிடைத்திருக்கிறது. ‘மதுரா குகை’ தமிழ்ச் சொல்லாகும். இதை ஆங்கிலத்தில் படிக்கும்படி உலகம் அறிந்திருக்கிறது, ஆனால் இதன் உண்மை வடிவம், ‘மதுர.’

நாயின் மண்டையோட்டை ஆராய்ந்து பார்த்தால் அதில்தான் பல உண்மைகள் வெளிச்சம் கொள்கின்றன.

அதாவது, இந்த நாயின் வகை டிங்கோ. இதை ‘ஆஸ்திரேலியன் டிங்கோ’ என்று பொதுவாகச் சொல்லுவர். ஆனால் அதன் பூர்வீகம் ஆஸ்திரேலியா அல்ல. மேலும் அந்த மண்டையோடு 4300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆக, பூர்வீகமே இல்லாத நாட்டில் டிங்கோ வகை நாய் வேறிடத்திலிருந்து போயிருக்கிறது என்பது உறுதியாகிறது. அப்படியானால் எங்கிருந்து வந்திருக்கும் என்ற கேள்வி எழும்போது, ஒரே வாய்ப்பு, இந்தியன் பரியா..! நாம் சாதாரணமாக தமிழகத்தில் அதிகம் காணும் ஒரு நாய்வகைதான் பரியா..! உருவ ஒற்றுமையே இந்த இரண்டு நாய்வகைகளின் ஒற்றுமையை நமக்கு காட்டிவிடும். கப்பல், நாய் மட்டும்தான் ஆதாரமாக இருக்கின்றதா என்று கேட்டால், இங்குதான் ஒரு புத்தகமே எழுதக்கூடிய அளவிற்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியா ஒரு பெரிய தீவு. அதில் மொத்தமாக 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்களில் பல இனத்தவர்களின் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாகவே இருக்கின்றன; அணங்கு, அப்பா, நுங்கா, வர்த்தமா, பல்லவா என்று பலப்பெயர்கள். அடுத்ததாக, ஆஸ்திரேலியாவின் பல இடப்பெயர்கள் தமிழ் பெயர்களாக உள்ளன ; உள்ளூர், குந்தகை, தமிழி, மலைநீ, மின்னமுரா ஆறு, பல்லமல்லவா, கூட்-தா மலை(கூட்டுத் தேன் அதிகமுள்ள மலை என்பதால் இப்பெயர்), கொண்டலினி அருவி, தூவும்பா, மந்தூரா(மண் தூர்ந்தப் பகுதி), கல்லு கல்லு(2 பெரும் பாறைகள் ஒன்றாக இருப்பதால் இப்பெயர்), பிணக்கல்( இடுகாட்டில் நட்டு வைப்பதைப்போன்ற பாறைகள் இயற்கையாக, அதுவும் கூர்மையாக உருவாகும் இடம்) மற்றும் மதுரா குகை. இப்படி இன்னும் பல இடங்களின் பெயர்கள் தமிழிலும் தமிழ்ப் பெயர்கள் மருவியும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆங்கில எழுத்துகளில் உலகினருக்கு படிக்கக் கிடைக்கிறது. இதில் இந்த பிணக்கல் என்பதை, PINNACLES என்று ஆங்கில வயப்படுத்தியே வைத்துவிட்டார்கள்.!ஆஸ்திரேலிய மொழியியல் ஆய்வாளர்கள் அங்குள்ள பழங்குடியினர்களின் மொழிகளை ஆராய்ந்து பார்த்து தங்கள் கருத்துகளை வெளியிட்டனர். அதில் அவர்கள் சொல்லும் பொதுவான ஒரு கருத்து, இந்த மொழிகளின் வளர்ச்சி திடீரென ஒரு காலக்கட்டத்தில் வளர்ச்சியடைந்திருக்கிறது, மேலும் இவை திராவிட மொழியின் வடிவமைப்பை ஒத்து போகின்றது. இது இப்படியிருக்க, மரபணு ஆய்வியலில் இப்பழங்குடியினரில் சில இனத்தவரின் டி.என்.ஏ வில் ஒன்று தமிழர்களின் டி.என்.ஏவுடன் ஒத்து போகின்றது. அதேப்போல அப்பழங்குடியினத்தவர்கள் கருப்பு நிறத்தவர்கள், தமிழர்களின் முகக்குறியுடனானவர்கள். இது மட்டுமா… தமிழர்களைப்போலவே இன்றும் வீரம் காட்டி பெண்களைக் கவரும் ‘காளகரிப்பா’ என்னும் பண்போடு வாழ்கின்றனர். அதேநேரம், அவர்களது மொழிகளிலும் தமிழ்ச்சொற்கள் நிறையக் காணப்படுகின்றன. இதையெல்லாம்விட பெருமை, தமிழை ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியாக அறிவித்துள்ளனர்.

இவ்வளவு ஒற்றுமைகள் உள்ளன.

இது மட்டுமா… ஐரோப்பிய எழுத்துமுறை வளர்ச்சி பெற தமிழ் உதவியிருக்கிறது. ஆங்கிலத்தில் Phoenitians என்றழைக்கப்படும் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்றால் நம்மால் நம்ப முடியுமா.? ஆனால் இது உண்மைதான். ஃபொனீசியர்கள் பயன்படுத்திய பிப்லோஸ் எழுத்துமுறை, வணிகத்தின் சார்பாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் வணிகம் உலகின் மாபெரும் தொழில்களில் ஒன்று. இந்த வணிகர்களை வடமொழியில் ‘பணியா’ என்று அழைப்பர். இந்த வ’கரமும் ப’கரமும் அவ்வபோது இடம்மாறி உச்சரிக்கப்பட்டு இருப்பர்களை குழப்பிவிடும். அதனால் இதனை சரியாக பயனறிந்து பயன்படுத்த வேண்டியுள்ளது.

( வணிகர் —> பணியா—> ஃபொனிசியா )

தமிழர்கள் மரக்கலன்களில் பல்வேறு நாடுகளுடன் திரைக்கடலோடி திரவியம் தேடி வணிகம் செய்தனர் என்பதறிவோம். அப்படி, தமிழரின் ஒரு முன்னோர் குலாம் ஃபொனீசியப் பகுதியில் குடியேறி, வணிகம் செய்தனர். இந்நூலின் ஆசிரியர் இவர்களின் பழம்பெயர் பனையர் என்று கூறுகிறார்.

சரி இவர்களுக்கான முக்கியத்துவம் என்ன.? என்று கேட்டால், இவர்கள் பயன்படுத்திய மொழி, ஐரோப்பிய எழுத்துமுறைகளில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கி, மாற்றியே விட்டது. பல புதிய குறியீடுகளைப் பயன்படுத்தி வணிகம் செய்ய, அதைப்பார்த்து ஐரோப்பியர்களும் அக்குறியீடுகளை கற்று பயன்படுத்த, நாளடைவில் அனைத்தும் இணைந்து முழுமையான மொழிகளாக உருவாகிவிட்டன. இதன் மூலம் தமிழின் ஆதி வடிவம் ஐரோப்பிய மொழிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறது என்பது தெளிவு. அந்த ஆதி வடிவம் தமிழி ஆகும்.

ஃபொனிசிய எழுத்துமுறை முதலில் படவுரு வடிவத்தில் இருந்தது. அதன்பின் தமிழியின் தாக்கத்தில் படவுரு என்பது மாறி, எழுத்துரு வடிவத்திற்கு வந்திருக்கிறது. இதெல்லாம் கி.மு. 900, அதாவது இன்றைக்கு 2900 ஆண்டுகள் முன்பு நடந்தது. அவர்களது 22 எழுத்துருவிலும்கூட, உயிரெழுத்துகள் இல்லை. A,E,I,O,U ( அ+A, இ+E, ஒ+O, உ+U) ஆகிய ஐந்தில் I நீங்களாக, மீதி நான்கும் தமிழியின் கொடை என்று கூறுகிறார் நூலாசிரியர்.

இக்கூற்றுக்கு ஆதாரம் இருக்கின்றதா.?

இல்லாமலா… இன்று நம் நாட்டில் விதவிதமான குரங்குகளை நாம் கண்டிருப்போம். அக்காலத்தில் மயில், யானைத்தந்தம், குரங்குகளை மருந்துக்காக பிடித்து கொண்டுபோய் விற்றிருக்கின்றனர். அவர்களுக்கு குரங்கை குரங்கென சொல்லத் தெரியாமலிருக்க, அங்குதான் ‘Q’ என்ற குறியீடு உதவுகிறது. இதன்படி, ‘கு’ என்பதும் ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் ‘Q’ என்பதும் ஓசைப்படி, கிட்டத்தட்ட ஒரேவிதமாக உச்சரிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலம் 600 ஆண்டுகள் முன்பு வந்தது. ஆக, அதற்கு முன்பாக ஐரோப்பியர் பேசிய, எழுதிய எழுத்துகளில் Q இருக்கிறது. மேலும் ஆதாரம் வேண்டுமா…

அப்படியாயின், அந்த Qவின் மேல் சிறியதாக ஒரு வட்டம் போட்டு பாருங்கள், குரங்கின் வடிவம் 🐒 தோன்றும். ஃபொனிசிய எழுத்துருவிலும் Q என்பதன் பொருள் குரங்குதான்.

இவ்வாறு தமிழன் எங்கெங்குமே பரவி வாழ்ந்திருக்கிறான் என்பது உறுதியாகின்றது. இது மட்டுமா..? கிரேக்கர்கள் பாண்டியர்களே என்று ஒரு கூற்றை நூலாசிரியர் முன் வைத்துள்ளார். அதேப்போல அமெரிக்காவின் பூர்வக்குடிகளான மாயன்கள் அஸ்டெக்குகள் எல்லாம் தமிழர்கள் என்றும் கூறுகிறார். எவற்றின் அடிப்படையில் இதையெல்லாம் அவர் கூறுகிறார் என்பதை நாம் நூலை வாசித்து அறியலாம். ஆச்சர்யங்கள் கொட்டிக் கிடக்கும் நூல் இது.  படித்து அதிசயிக்கலாம். தமிழா..? கல்லா..? முதலில் எது தோன்றியது என்று விவாதிக்கலாம்..!

– கார்த்தி டாவின்சி

  மே, 2021.