இத்தொகுதியின் முதல் கதையில் நாம் கவனிக்க வேண்டியது இதன் தலைப்புதான்.
குருகும் உண்டு மணந்த ஞான்றே….
இது குறுந்தொகையின் 25-வது பாடலின் கடைசி வரி.
யாருமறியாமல் நான் தலைவனோடு கூடிய காலையில் அங்கே ஓடிக் கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையும், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் மட்டுமே இருந்தன. அவைகளை எப்படி சாட்சிகளாக்க முடியும்? தலைவன் என்னோடு கூடியதற்கு சாட்சிகள் இல்லையே? அவன் தன் உறுதியிலிருந்து தவறினால் நான் என் செய்வேன்? என்று பதறுகிறாள் தலைவி. இது இப்பாடலின் கருத்தாக மிளிர்கிறது என்று அறியப்படுகிறது.
கதையின் நாயகி படித்தவள். நிதானமாய் அணுகுகிறாள் விஷயத்தை. அவனோடு சினிமா திரையரங்கில் நுழைந்த காட்சிக்கான சாட்சியும், பிள்ளையார் சிலைக்கு எதிரிலான விளக்குக் கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த காமிரா வழியும், சாட்சிகளைச் சேகரிக்கிறாள்.
காதலித்தவன் கைவிட்ட நிலையில் அவனது பெற்றோரிடம் நேரில் சென்று உண்மையுரைக்கிறாள். அவர்களும் படித்தவர்கள். நேர்மையாக கண்ணியமான குடும்பம். அணுகுமுறை நிதானமாய் இருக்கிறது.
நடப்பு உலகத்தின் பராபரியான ஊடகச் சூழலை மனதில் வைத்து வெட்ட வெளிச்சமாய் எதையும் செய்து கேவலப்படுத்தாமல், நேரில் வந்து தங்களிடமே சொன்னதற்கு நன்றி என்று அப்பெண்ணின் பண்பாடு குறித்து மெச்சி, அவளை ஏற்றுக் கொள்கிறார்கள். சொல்ல நினைத்த கதைக்கு எவ்வகையிலான வடிவம் கொடுத்து எடுத்துரைத்தால் சிறக்கும் என்று சரியாக முடிவெடுத்து இச்சிறுகதையை வடிவமைத்திருக்கிறார் ஜனநேசன். அதனால் எளிய விஷயமாயினும் இக்கதை சிறப்புப் பெறுவதான தோற்றம் கொள்கிறது.
அந்தவகையில் ஜனநேசனுக்கு நம் பாராட்டுக்கள். இது போல் கருத்து மிகுந்த எட்டுக்கதைகள் இத்தொகுதிக்குப் பெருமை சேர்க்கின்றன. மாதிரிக்கு ஒன்று. அப்போதுதான் வாங்கிப் படிக்கும் ஆர்வம் மிகும்.
இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளின் ஆன்மாவைக் குறிக்கிறது இந்த “சொல்லப்படாத கதைகள்“ தலைப்பின் கதை என்கிறார் ஆசிரியர். தலைப்பு வைப்பதிலும் அதைப் பொருள் கொள்ளும்படி செய்வதிலும் படைப்பாளியின் அக்கறை முக்கியமே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், போதும் என்கிற மனம் வந்துவிட வாய்ப்புண்டு. புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படித்தால்தான் இலக்கியச் சுவை கூடும்.
கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று படைப்பாளியின் பயணம் வெற்றிகரமாய்த் தொடர்கிறது. அவருக்கு நம் பாராட்டுக்கள். மனமார வாழ்த்துவோம்.
ஆசிரியர் : ஜனநேசன்
விலை : ரூ.₹110/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
https://thamizhbooks.com/product/sollaphpadatha-kathaigal/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.