நூல் அறிமுகம்: அண்டனூர் சுரா எழுதிய *சொல்லேர்* – முனைவர் பா.ஜம்புலிங்கம்
சொல்லேர் – அண்டனூர் சுரா

நூல் அறிமுகம்: அண்டனூர் சுரா எழுதிய *சொல்லேர்* – முனைவர் பா.ஜம்புலிங்கம்



நூல் : சொல்லேர்
ஆசிரியர் : அண்டனூர் சுரா
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை 600 018 (044-24332424, 24332924, 24356935,
[email protected]
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, பிப்ரவரி 2021
விலை : ரூ.150

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sollare/

வாசிப்பு என்பது ஒரு கலை. வாசிப்பை அதற்கேயுரிய ரசனையோடு மேற்கொள்ளும்போது கிடைக்கின்ற அலாதியான சுகத்தை அதனை அனுபவித்தவர்கள் நன்கு உணர்வர். அன்றாட செய்தியை, நிகழ்வுகளை மேம்போக்காக வாசிப்பவர் ஒரு பக்கம், மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் ஆழ்ந்து வாசிப்பவர் ஒரு பக்கம். குறிப்பிட்ட பத்திகளுக்காகவும், எழுத்தாளர்களுக்காகவும், பொருண்மைக்காகவும் செய்திகளைப் படிக்கின்ற வாசகர்கள் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறாக தத்தம் விருப்பத்திற்கேற்பத் தெரிவு செய்து குறிப்பிட்ட ஒரு துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து வாசிக்கும்போது அது தொடர்பான பன்முக அறிவினை அவர்கள் பெறுகின்றார்கள். அவ்வாறான ஒரு முயற்சியாக சொல்லுக்கான பொருள் தேடலில் ஈடுபட்டு, அதனை சொல்லேர் என்ற தலைப்பில் நூலாக்கித் தந்துள்ளார் அண்டனூர் சுரா.

நாளிதழ்களில் வெளிவந்த, சமூகத்தில் புழக்கத்தில் உள்ள சொற்களில் சிலவற்றைத் தெரிவு செய்து அதற்கான மூலம், வேர்ச்சொல், பொருள், பயன்பாடு என்ற வகைகளில் விவாதிக்கும்போது அவருடைய தேடலானது சங்க இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரையிலும், உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலும் விரிகிறது. கதை, கவிதை, இலக்கியம், நாடகம், வரலாறு, பண்பாடு என்ற பல பரிமாணங்களில் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துகின்ற விதம் நூலைப் படிக்கின்ற வாசகர்களின் புருவங்களை உயர்த்திவிடுகிறது. இதற்காக எண்ணற்ற அகராதிகளையும், நூல்களையும் ஒப்புநோக்கி உரிய இடங்களில் மேற்கோளாகவும் தந்துள்ளார். சொல்லாய்வு என்பது சொற்களை ஆராய்தல் அல்ல, சொல்லுடன் சேர்ந்து காலத்தையும் ஆய்தல் என்று அவர் கூறுவது முற்றிலும் பொருந்தும். 

Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்
அண்டனூர் சுரா

ஐயன்  என்பதற்கு மூத்தோன் என்பது பொருள் என்று பதிவினை நிறைவு செய்யும் முன்பாக பிற இலக்கியங்களிலும், அகராதிகளிலும், ஆங்கிலத்திலும்  அச்சொல்லின் பயன்பாடு தொடங்கி, உத்திரப்பிரதேசத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ அந்த மாநில அரசு விதித்த தடை, திருவள்ளுவரின் படம் உருவாக்கப் பின்புலம், திருவள்ளுவரின் காலம், திருவள்ளுவர் உருவம் பதித்த தங்க நாணயம், அண்மையில் தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு கறுப்புச்சாயம் பூசியதும், அதே சிலைக்கு காவித்துண்டும் ருத்ராட்ச சாலை அணிவித்ததும் விவாதித்து அந்த இரு செயல்களையும் கண்டிக்கிறார். 

துவரி (காவி), கிரேக்க இதிகாசத்தில் முக்கியமான நிறமாக இருந்திருக்கிறது, வாலறிவன் (முழுதுணர்ந்தவன், முற்றும் உணர்ந்தவன், கடையிலா அறிவன், தூய அறிவன், மெய்யறிவுடையோன்) என்பது சமணச்சொல், அந்தியோதயா (வறியோரை உயர்த்தும் வரிசை) சர்வோதயா இவ்விரு சொற்களும் சமஸ்கிருத வடிவிலான பிராகிருத இந்திச் சொல், அபலை (ஆதரவற்ற பெண்) அபலை அஞ்சுகம் இரண்டும் திரைப்படங்கள், நாப்கின் (அணையாடை) அமெரிக்க ஆங்கிலச்சொல், ஆளி (வலிமையான, துடிப்பான வேட்டையாடும் திறன் கொண்ட பெண் சிங்கம்) குறிஞ்சி நிலக்கடவுள் முருகன், பொருநன் (வன்கூத்தன்) என்பவன் ஒரு நாளுக்கு எட்டு தேர்கள் செய்யும் தச்சன் ஒரு மாதம் முழுவதும் முயன்று ஒரு தேரின் காலினைச் செய்தால் அந்த ஒரு காலிற்கு நிகரானவன் என்ற வகையில் ஒரு சொல்லைப் பற்றிய ஆய்வில் பல செய்திகளை அறியமுடிகிறது.

21ஆம் நூற்றாண்டின் வன்சொற்களாக உலக நாடுகள் அறிவித்துள்ள சொற்கள், 600 ஏக்கர் பரப்பளவு தீவில் எழுப்பப்பட்டுள்ள திருவரங்கம் கோயிலின் வரலாற்றைக் கூறும் நூல் கோயிலொழுகு, மின் துறையில் மின் தடையின் அலகாகக் குறிக்கப்படுகிறது ஓம், பிரமிள் எழுதிய நீலம் கதையில் மேற்கத்திய ஓவியங்களைக் கிறுக்கல்களாக வரைந்து திரியும் ஒரு ஓவியனிடம் ஒரு சிறுவன் கொடுத்துவிட்டுச் செல்லும் பூ நீலோத்பலம், இந்தியா-பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எழுதிய குழூவுக்குறி, ரஷ்யா உளவுத்துறையிடம் சிக்க இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்தது, எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சாகர் மாதா, மாடும் மாட்டுக்கயிறும் விற்பனைக்காக அணிவகுத்திருக்கும் இடம் மாட்டுத்தாவணி, எப்போதும் முடிவிலே இன்பம் என்கிற சிறுகதையில் புதுமைப்பித்தன் ஓய், என் வீட்டு வாசலில் உட்கார்ந்து பிலாக்கணம் வைக்காதேயும் என்பதாக ஓரிடம் வரும்….என்றவாறு ஒரு சொல்லுக்கு பொருள் தருவதோடு மட்டுமன்றி தொடர்புடைய பல செய்திகளைத் தந்துள்ளதை வாசிக்கும்போது இவருடைய நினைவாற்றலையும், பல்துறை சார்ந்த அறிவினையும் கண்டு வியக்கமுடிகிறது. 



Love letter என்பதற்கு காதல் கடிதம் என்பதைக் கடந்து பெரும் எதிர்பார்ப்பிற்குரிய கடிதம் எனப் பொருள் கொள்ளலாம் என்று கூறி உதாரணங்கள்கூறி விளக்கும்போது The Hindu நாளிதழில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்த சொற்றொடர் நினைவிற்கு வந்தது. ஆட்சி அமைக்கும் முயற்சியில் வாஜ்பாயி ஈடுபட்டபோது ஜெயலலிதாவிடமிருந்து ஆதரவுக்கடிதத்தை எதிர்பார்த்ததை “The love letter of Jayalalithaa is yet to reach Vajpayee” என்ற வகையில் அவ்விதழ் கூறியது என் நினைவில் இன்னும் உள்ளது. நாளிதழ் வாசிப்பில் இவ்வாறான பல சொற்களை ரசித்து அனுபவித்துள்ளேன். தொடராக வந்தபோது பல சொற்களைக் குறித்து  விவாதித்தபோது வாசிப்பின் மீதான அவருடைய ரசனையை உணர்ந்தேன். 

இந்த வகையிலும் வாசிக்க முடியும், சிந்திக்கமுடியும் என்ற நூலாசிரியரின் பாணி பாராட்டத்தக்கதொன்றாகும். அவர் மிகவும் முயன்று சொல்லுக்கான பொருள்களையும், தொடர்புடைய செய்திகளையும் தந்துள்ள முயற்சி தொடரவும், இந்த வரிசையில் மென்மேலும் பல நூல்களை எழுதவும் மனம் நிறைந்த வாழ்த்துகள். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *