“பட்டிமன்றம் – பாதைகளும் பயணங்களும்” – நூல் அறிமுகம்
பாப்பையாவின் பன்முகத் தன்மை
– சித்தார்த்தன் சுந்தரம்
பட்டிமன்ற பிதாமகன் `பாப்பு’ (ஐயா) அவர்கள் எழுதி மறு பதிப்பாக வெளியாகியிருக்கும் “பட்டிமன்றம்: பாதைகளும் பயணங்களும்” என்கிற நூலின் என்னுரையில் ஆசிரியர்,
“இது அப்படியொன்றும் வரலாற்றுச் சாதனைகளின் தரமான தொகுப்பு இல்லை. மாதம் பாதி நாள்கள் அரைப் பட்டினியில் அன்றையப் பொழுதை ஆனந்தமாகக் கழித்த ஓர் ஏழைச் சிறுவனின் எழுத்துச் சித்திரம்தான் இது.” என எழுதியிருப்பதோடு `மகாத்மா காந்தி அளவுக்கு நான் பண்பட்டவனில்லை தான்; இருந்தாலும் என்னளவுக்கு மிகையில்லாம நேர்மையா பதிவு செஞ்சு வச்சிடணும்னு விரும்பினேன். என் அறிவுக்கு எட்டியவரை மனப்பூர்வமா செஞ்சிருக்கேன்.’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வாசகங்களைப் பிரதிபலிப்பதாக முதல் இரண்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. ”அப்படிக் கஷ்டப்பட்டவரா இப்படி உயர்ந்திருக்கிறார்” என என்னும் போது இலக்குத் தெளிவாக இருந்தால் அதைக் கண்டிப்பாக அடைய முடியும் என்பதற்கு ஐயா ஒரு முன்னுதாரணமாக நம் முன் உயர்ந்து நிற்கிறார்! கண்கலங்காமல் இந்த அத்தியாயங்களைக் கடந்து செல்ல முடியாது.
இது நூலாக வருவதற்கு முன் குங்குமம் இதழில் தொடராக வெளிவந்து அதன்பின் விகடன் பிரசுரத்தால் நூலாக வெளியாகி இப்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் இதை மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறது. எனவே முதன் முதலில் இது எழுதப்பட்ட ஆண்டு 2011-12 ஆக இருக்கக்கூடும். (நூலாசிரியர் இதைத் தொடராக எழுதும்போது ஓரிடத்தில் `அநேகமா இப்போ எனக்கு எழுபத்தஞ்சு வயசு இருக்கலாம்ங்கிறது என்னோட கணிப்பு’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்)
இந்த நூல் வறுமையிலிருந்து உயர்ந்தவரின் வாழ்க்கைப் பயணம். வசதிகள் நிறைந்த குடும்பப் பின்னணியிலிருந்து வராமல், வறுமையையும் பல்வேறு தடைகளையும் கடந்து உச்சம் தொட்டிருக்கிறார் பத்மஸ்ரீ பாப்பையா. பஞ்சாலைத் தொழிலாளர்களான பாக்கியத்தம்மாள் – சுந்தரம் தம்பதியினருக்கு (பிறந்த 10 குழந்தைகளில் மிஞ்சினது 8 அதில் இவர் கடைக்குட்டி). மகனாகப் பிறந்த இவர், கல்வி கற்பதற்குப் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்களின் ஆதரவும், பின்னர் நண்பர்களின் உதவியும் அவரது கல்விப் பயணத்தில் முக்கியப் பங்காற்றின. காலணி வாங்குவதற்குக்கூடப் பணமில்லாத சூழலில், நண்பர்களின் துணையுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்த அவரது வாழ்க்கை, விடாமுயற்சிக்கும் நட்பின் வலிமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
பள்ளிப் பருவத்திலிருந்தே பாட்டு, நடிப்பு, ஓவியம், மேடைப்பேச்சு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஆர்வங்களே பிற்காலத்தில் அவருடைய பேச்சாற்றலுக்கும் மேடை ஆளுமைக்கும் அடித்தளமாக அமைந்தன. பல்வேறு ஆளுமைகளின் வழிகாட்டுதலையும் அனுபவங்களையும் உள்வாங்கிக்கொண்டு, தனக்கென தனித்துவமான பேச்சு நடையொன்றை உருவாக்கிக்கொண்டார்.
அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப் பணி, பட்டிமன்றத் தமிழ் அறிஞர்களின் தொடர்பு (குன்றக்குடி சாமி என இவர் குறிப்பிடும் குன்றக்குடி அடிகளார் குறித்து இவர், `என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட மனிதர்கள்ல குன்றக்குடி சாமி மகத்தான மனிதர்’ என்கிறார்), திரைப்படத் துறையினரின் தோழமை, சன் தொலைக்காட்சியின் அன்பு இவை எல்லாம் கிடைத்த பிறகு என்னுடைய ஏழ்மை வேறு இடம் தேடிச் சென்றுவிட்டது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நட்பு எப்படியெல்லாம் நமக்கு உதவும் என்பதை அணு அணுவாக அனுபவித்ததாக கூறும் இவர் தனது நண்பர்களான ’தியாக’ராஜன், ராம’மூர்த்தி’, அருணாசலம், வாசுதேவன், குருபாதம் போன்றோரை நினைவுகூர்வது மட்டுமல்லாமல் அவர்களுக்கிடையேயான ஆத்மார்த்தமான நட்பின் வெளிப்பாடாக தனது ஒரே மகனுக்கு இரு நண்பர்களின் பெயரில் ஒரு பாதியை எடுத்து அதை இணைத்து தியாகமூர்த்தி என பெயர் வைத்து நட்பிற்கு இலக்கணமாக இருந்திருக்கிறார்.
மேலும் `நான் கடவுளை நேராப் பார்த்ததில்லை. ஆனா, நண்பர்கள் வடிவத்திலே கடவுளை உணர்ந்திருக்கேன்’ எனும் இவர் தனக்கு ஏணியாக இருந்து உயர்த்திவிட்ட ஆசிரியப் பெருமக்களையும், தோளோடு தோள் நின்று இவர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு உதவி செய்த சக நண்பர்களையும் குறித்து பல பக்கங்கள் எழுதியிருக்கிறார். அதே சமயம் தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்து நாகரிகம் கருதி அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்.
தன் வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த பல இன்னல்களையும், வாய்ப்புக் கிடைக்காத பேச்சாளர்கள் செய்த உள்குத்து வேலைகளையும், சிவாஜி திரைப்படத்தில் வரும் அங்கவை – சங்கவை கதாபாத்திரங்கள் குறித்து இவர் பேசிய வசனங்கள் மீது எழுந்த அவதூறு பேச்சுகள் பற்றியும், திரைத்துறைக் கலைஞர்களான ரஜினி, பாலசந்தர், பாக்கியராஜ், விஜயகாந்த் என பலருடனான தனது நட்பு குறித்தும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
இதோடு அவருக்கு பல்வேறு காலகட்டங்களில் இருந்த அரசியல் ஈடுபாடு (காங்கிரஸ், திராவிட ஈர்ப்பு, கம்யூனிசத்துடனான தோழமை) குறித்தும் கலை இலக்கியப் பெருமன்றம், கம்பன் கழகம் ஆகியவை பற்றி எழுதியிருப்பது எந்த அளவுக்கு அவர் அரசியல், கலை, இலக்கியம் குறித்து தெளிவான ஒரு பார்வையைக் கொண்டிருந்தார் என்பதையும் தனக்கு எது சரி வரும் எனத் தெரிந்து அதைத் தெரிவு செய்து அதில் ராஜபாட்டை போட்டதும் தெரியவருகிறது.
சாலமன் பாப்பையா என்ற பெயர் தமிழ்ப் பட்டிமன்ற உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றது. இலக்கியத்தைப் பண்டிதர்களின் எல்லைக்குள் நிறுத்திவிடாமல், சாமான்ய மக்களும் ரசிக்கவும் புரிந்துகொள்ளவும் கூடிய வகையில் எடுத்துச் சென்றவர் அவர். அவரது வாழ்க்கைப் பயணத்தையும், பட்டிமன்றக் கலையின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் அறிந்துகொள்ள இந்த நூல் கண்டிப்பாக உதவும்.
பட்டிமன்றம் என்பது இரு அணிகள் வாதிடும் நிகழ்ச்சி மட்டுமல்ல; கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், சிந்தனையைத் தூண்டுவதற்கும், நகைச்சுவையின் வழியாகச் சமூகத்தை அணுகுவதற்குமான ஒரு கலைவடிவம் என்பதைத் தமது செயல்பாடுகளின் மூலம் உணர்த்தியவர் சாலமன் பாப்பையா.
கம்பனடிப்பொடி சா. கணேசன் மீட்டுருவாக்கிய பட்டிமன்ற மரபு, தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றோரின் முயற்சிகளால் மக்களிடம் பரவியது. அந்த மரபைத் தொலைக்காட்சியின் வழியாக உலகெங்கும் வாழும் தமிழர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் சென்றதில் சாலமன் பாப்பையாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களில் பட்டிமன்றமும் ஓர் அங்கமாக இடம்பெறச் செய்தது அவரது சாதனைகளில் ஒன்று.
அவரது பேச்சின் சிறப்பு, எளிமையான மொழிநடை; நகைச்சுவை கலந்த அணுகுமுறை; அன்றாட வாழ்க்கையோடு இலக்கியத்தை இணைக்கும் திறன். கடினமான இலக்கியக் கருத்துகளைக்கூடப் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைப்பதன் மூலம், தமிழிலக்கியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தார். இலக்கியம் என்பது தேர்வுக்காகப் படிப்பதற்கான பாடம் மட்டுமல்ல; வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டியும் என்பதை அவரது அணுகுமுறை உணர்த்தியது.
ஒரு சிறந்த பேச்சாளர் தன்னுடைய திறமையால் மட்டுமே மதிப்பிடப்படுவதில்லை; அடுத்த தலைமுறையை உருவாக்குவதிலும் அவரது பங்களிப்பு இருக்க வேண்டும். அந்த வகையில், புதிய பட்டிமன்றப் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடைய திறமைகளை வளர்த்து, தம்முடன் பயணிக்கச் செய்து வழிநடத்தியவர் சாலமன் பாப்பையா. பட்டிமன்ற உலகில் பலருக்கு அவர் வழிகாட்டியாக விளங்கியதை இந்நூலின் அறிமுகக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ‘தினம் ஒரு திருக்குறள்’ நிகழ்ச்சியின் மூலம் திருக்குறளின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்ற அவரது முயற்சியும் குறிப்பிடத்தக்கது. தமிழிலக்கியத்தின் ஆழத்தையும் அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும் இணைப்பதில் அவர் காட்டிய அக்கறை, அவரது பணியின் பரந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
நிறைவாக…
‘பட்டிமன்றம் – பாதைகளும் பயணங்களும்’ என்பது ஒரு தனிமனிதரின் வாழ்க்கைப் பயணத்தை அறிந்துகொள்வதற்கான நூலாக மட்டுமல்லாமல், தமிழ்ப் பட்டிமன்றம் எவ்வாறு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது. வறுமையிலிருந்து தொடங்கி, கல்வி, மேடைப்பேச்சு, இலக்கியம், தொலைக்காட்சி எனப் பல தளங்களில் தடம் பதித்த ஒருவரின் பயணம் இதில் மையம் பெறுகிறது.
ஒரு மொழியின் பெருமை அதன் இலக்கியச் செல்வத்தில் மட்டுமல்ல; அந்த இலக்கியத்தை எத்தனை பேரிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதிலும் இருக்கிறது. அந்தப் பணியைத் தமது வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டவர் கலைமாமணி பாப்பையா. அவரது அனுபவங்களையும் சாதனைகளையும் அறிய விரும்பும் தமிழார்வலர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினருக்கும் இந்நூல் பயனுள்ள வாசிப்பாக அமையும்.
`கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ளே காலம் கண்ணாமூச்சிக் காட்டிட்டு ஓடிப் போயிருது….ஆசுவாசமா உக்காந்து, கடந்த காலத்தை அசை போடறப்போ ஏற்படுற உணர்விருக்கே…சுகமாத்தான்யா இருக்கு’ என ஐயா எழுதியிருப்பது நிதர்சனமான உண்மை என்பது இந்நூலை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.
இந்த நூலை வாசிக்க எடுத்தால் அதை முடிக்கும் வரை கண்டிப்பாகக் கீழே வைக்கத் தோன்றாது. ஒரே அமர்வில் வாசித்து முடித்த சில நூல்களில் இதுவும் ஒன்று இந்நூலை வாசிக்கையில் அந்த சொற்கள் எல்லாம் அவருடைய பேச்சிலேயே கேட்பது போன்ற ஓர் உணர்வு எழுந்தது மட்டுமல்லாமல் `அன்புத் தாய்மார்களே! அருமைப் பெரியோர்களே! இனிய குழந்தைகளே!’ என பார்வையாளர்களை அவர் விளிப்பது காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | பட்டிமன்றம் – பாதைகளும் பயணங்களும் |
| ஆசிரியர்: | சாலமன் பாப்பையா |
| வெளியீடு: | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) |
| விலை: | ₹.210 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சித்தார்த்தன் சுந்தரம் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

