என்சிபிஎச் பிரச்சனைக்கு சுமமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்..
ஒரு மாத காலத்திற்கு மேல் இது பெரிதும் பேசப்படும் பொருளாக அமைந்துவிட்டது. கவலையும், கோபமும், வருத்தமும் கொண்டு பல தோழர்கள் நேரிலும் தொலைபேசியிலும், சிலர் சமூக ஊடகங்களிலும் இது பற்றி பேசிக் கொண்டே இருந்தார்கள்.
‘இல்லாத சொத்துக்கு உரிமை கொண்டாடும் சிபிஐ’ என்று மின்னம்பலத்தில் திரு ராஜதுரை லாவணியை தொடங்கி வைத்தார். எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்சிபிஎச் என்று ‘அறம்’ மின் இதழில் சாவித்திரி கண்ணன் தொடர்ந்தார். இந்திய கம்யூனிஸ்ட் பதிப்பக சர்ச்சை என்று ஜூனியர் விகடன் கட்டுரை வெளியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரிமையாளர் யார் என பதிலையும் கேள்வியையும் கலந்து கொடுத்தது பிபிசி செய்தி நிறுவனம். நக்கீரனிலும் ஒரு விபரமான கட்டுரை வந்தது. இன்னும் பல இதழ்களில் இருந்து, என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டு கேள்விகள் வந்து கொண்டே இருந்தன.
முதலாவது கட்டுரை வன்மமும், அகங்காரமும், மேட்டிமையும் கலந்து, தன் விருப்பத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறுகளைப் பொழிந்து வந்தது. அந்தத் தலைக்கனமிக்க கட்டுரையையும், எழுதியவரையும், எதிர்வினை ஆற்றிய தமிழ்ச் சமூகம் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்தது.
மற்ற கட்டுரைகளில் சில உண்மைகளையும், அவர்களிடம் சொல்லப்பட்ட சில கற்பனைகளையும், கட்டமைக்கப்பட்ட பொய்களையும் சேர்த்தும் திரித்தும், ஆர்வமூட்டும் முடிச்சுகளுடன் எழுதப்பட்டிருந்தன. ஒரு கட்டுரையை வெளியிட்டால் அதில் கொஞ்சம் சுவாரசியம் இருக்க வேண்டும் என்றுதான் கட்டுரையாளர்கள் நினைப்பார்கள். நல்ல விவரங்களைக் கொண்ட நக்கீரன் கட்டுரையிலும் கூட மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் பொறித்த செங்கொடி இடம் பெற்றிருந்தது.
சில கட்டுரைகளில் கட்சியிடம் கேட்கப்பட்ட கருத்துகளும் இடம் பெற்றிருந்தன. “இது பெரிதுபடுத்த வேண்டிய விஷயம் அல்ல சுமூகமாக தீர்வு காணப்பட்டு விடும்” என்பதையே கட்சி தனது பதிலாக இவற்றில் கூறியிருந்தது.
இதை இந்த அளவுக்கு பொதுவெளியில் விவாதிக்கப்படும் வகையில் வளர்த்திருக்க வேண்டுமா? சுமுகமாக பேசி தேர்வு செய்திருக்கக் கூடாதா என்று தோழர்கள் ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது.
72 ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கப்பட்ட என்சிபிஎச் நிறுவனம், நமது முந்தைய தலைமுறையால் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. நமது தலைவர்கள் எத்தகைய பெரும் பங்களிப்பைச் செய்து, இந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்கள் என்ற விபரம், சென்ற கடிதங்களில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தை உருவாக்கினால் அதிலிருந்து லாபம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாது, ஈட்டப்படும் தொகையை தொகைகளை மீண்டும் மீண்டும் அந்த நிறுவனத்திலேயே முதலீடு செய்ததால் இந்தப் பெரும் வளர்ச்சி கிட்டியது. புத்தகத் தயாரிப்பு, அச்சிடுதல், விநியோகம் மற்றும் விற்பனைக்கான வலைப்பின்னல் அமைப்பு என எல்லாம் அடங்கியதாக
தமிழ்நாட்டின் முன்னணி புத்தக நிறுவனமாக என்சிபிஎச் உருப்பெற்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்தான், நிறுவனத்தின் தலைவர்களாகவும் நிர்வாக இயக்குனர்களாகவும் செயலாளராகவும் பங்குதாரர்களாகவும் இருந்தனர். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மாறும்போது, அல்லது இறந்து விடும் போது அவர்களுக்கு பதிலாக வேறு தோழர்களை கட்சி இயக்குனர்களாக பரிந்துரைத்தது. பங்குகளும் அவர்களது பெயர்களில் பகிர்ந்து வைக்கப்பட்டது. இரண்டரை ஏக்கர் பரப்புள்ள அம்பத்தூர் தலைமை நிலையம், ராயப்பேட்டையில் உள்ள பாவை அச்சகம், பல்வேறு ஊர்களில் உள்ள புத்தக நிலையங்கள் இவற்றையெல்லாம் அரும்பாடு பட்டு உருவாக்கிய நமது தலைவர்கள் யாரும், தமது பங்கை எடுத்துச் சென்றதோ, சொந்தம் கொண்டாடியதோ இல்லை என்பது மட்டுமல்ல, அவ்வாறு அவர்கள் நினைத்தது கூட இல்லை.
புத்தகங்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், சாமானிய குடும்பங்களின் குழந்தைகள் பயில்வதற்கான பள்ளிக்கூடம், மருந்தகங்கள், மருத்துவமனை ஆகியவற்றையும் துணை நிறுவனங்களாக என்சிபிஎச் இயக்குகிறது.
நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த தோழர்கள் தா. பாண்டியன், எம். எஸ். தாவூத் ஆகிய தோழர்கள் இறந்துவிட்டதால், அந்த இடத்துக்கு தோழர்கள் இரா.முத்தரசன், க.சந்தானம் ஆகியோர் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்னர்தான், நிறுவனத்தின் தலைவராக இருந்த தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் பெயரில் இருந்த பங்குகள் உட்பட பலரிடமிருந்த பங்குகள் ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
தோழர் இரா. நல்லகண்ணு அவர்களிடமிருந்து எடுத்த பங்குகளை திரும்ப அவருக்கே மாற்றம் செய்யுமாறு நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்த சண்முகம் சரவணன் அவர்களிடம் கட்சி கூறியது. அவரும் அதைச் செய்து தருவதாகவே 16.2.2023ல் உறுதி அளித்தார்.
ஆனால் நாள் கடத்திக் கொண்டு சென்றாரே தவிர ஒப்புக்கொண்டதை செய்யவில்லை. 16.3.2023 அம்பத்தூரில் நடந்த என்சிபிஎச் இயக்குனர் குழு கூட்டத்திலும் இது வலியுறுத்தப்பட்டது. ஆனால் தனக்கு மறுநாள் வரை கால அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்னரும் அவர் எந்த பதிலும் கூறவில்லை. 19.3.2023 அவரது வீட்டுக்கே தோழர்கள் கோ.பழனிச்சாமி, வை.சிவபுண்ணியம் இருவரும் தேடிச்சென்று சந்தித்துப் பேசினர். அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த கட்சியின் மாநிலக் குழு கூட்டத்திற்கு, சண்முகம் சரவணனை அழைத்து வந்தனர். அவர் என்சிபிஎச் கட்சி கிளையின் சார்பில் மாநிலக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்று இருக்கிறார்.
அன்று இரவு செயற்குழு கூட்டத்திற்கு அவரை அழைப்பாளராக அழைத்துப் பேசியபோது, அவரே ஐந்து தோழர்களை இயக்குனர்களாக வைத்துக் கொண்டு, பங்குகளை பகிர்ந்து தரலாம் என்று தெரிவித்தார். கூடுதலாக இரண்டு தோழர்களை சேர்க்கலாமா என்று கேட்டபோது அதையும் ஒத்துக் கொண்டார். அவர்களை இயக்குனர்களாக நியமிப்பதற்கான ஆவணங்களையும் வாங்கிச் சென்றார். ஆனால் அதன் பின் தானே முன்மொழிந்த அந்த ஆலோசனைகளை அமுல் நடத்த மறுத்துவிட்டார்.
அதன் பின்பு 20 ஏப்ரல் 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் அவருடன் தொடர்பு கொண்டு பேசிய போது தான் சென்னையில் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். கடைசியில் ஏப்ரல் 27ஆம் தேதி பாலன் இல்லம் வருவதாக உறுதியளித்தார்.
ஆனால், நிறுவனத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், 15 இயக்குனர்களை தான் நியமித்து விட்டதாகவும் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்ட எழுத்துப்பூர்வமான தகவல் நமக்கு கிடைத்தது.
அதன் பின்னும் சமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு 28.4.2023ஆம் தேதி அன்று கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா அவர்களே நேரடியாக அம்பத்தூரில் உள்ள என்சிபிஎச் அலுவலகத்திற்குச் சென்றார். தோழர்கள் இரா.நல்லகண்ணு, கோ.பழனிச்சாமி, வை. சிவபுண்ணியம், டி இராமசாமி இயக்குனர் ஸ்டாலின் குணசேகரன் வழக்கறிஞர் கோ பாண்டியன் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, தெற்கு மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி ஆகியோரும் அவருடன் சென்றனர். அவர்களிடம் 2.5.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்து ஏற்கனவே பேசிய வகையில் தீர்வு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால் 1.5.2023 ஆம் தேதி அன்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் மேலே குறிப்பிட்ட தோழர்கள் தங்களை அலுவலகத்துக்குள் வந்து மிரட்டியதாக காவல்துறையில் என்சிபிஎச் சார்பில் புகார் செய்தார்கள். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, கோ.பழனிச்சாமி, நா.பெரியசாமி, வை.சிவபுண்ணியம், வழக்கறிஞர் கோ.பாண்டியன் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களான இரா முத்தரசன், க.சந்தானம் ஆகியோர் என்சிபிஎச் அலுவலகத்துக்குள் நுழையக்கூடாது எனத் தடை உத்தரவும் பெற்றார்கள்.
உள்ளரங்கில் பேசிக் கொண்டிருக்கும்போதே, காவல்துறையில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு, தடை உத்தரவு என பிரச்சனையை அவர்களே பொதுவெளிக்கு கொண்டு சென்றார்கள். இதன் தொடர்ச்சியாக எஸ்.வி.ராஜதுரை கட்டுரை எழுதினார். அதில், மதிப்புமிக்க தலைவர் டி.ராஜா அவர்கள், அலுவலகத்துக்குச் சென்று மிரட்டியதாக மதியிழந்து குற்றம் சாட்டினார்.
பங்குகளை மாற்றுவதில் செய்யப்பட்டிருந்த முறைகேடுகளை நிரூபிக்க தெளிவான ஆவணங்கள் நம்மிடம் இருந்தன. அவற்றை வைத்து நாமும் காவல்துறையில் புகார் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவ்வாறு ஏற்படுத்தியவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்வது தானே சட்டம் விதித்துள்ள நடைமுறை. ஆவணங்களை பரிசீலித்த காவல்துறை, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அதற்குரிய பிரிவுகளில் வழக்கு போட்டது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தேடியது. ஆனாலும் கூட, அந்த நிலையிலும் பேசி சுமூக உடன்பாடு காண வேண்டும் என்றே கட்சி விரும்பியது.அதற்கான செயல்பாட்டிலும் ஈடுபட்டது.
இந்த நிலையில் சண்முகம் சரவணன் நேரில் வந்து பேசுவதாக உறுதி அளித்தார். 24.5.2023 அன்று அவரும் அவருடன் மண்டல மேலாளர்களான மதுரை கிருஷ்ணமூர்த்தி, திருச்சி குமார், கோவை ரங்கராஜன், மற்றும் பாவை அச்சகத்தின் மேலாளர் சிவகுமார் ஆகியோர் பாலன் இல்லம் வந்தார்கள். அவர்களோடு பேச கட்சியின் செயற்குழு, தோழர்கள் இரா.முத்தரசன், கே.சுப்பராயன், டி.எம்.மூர்த்தி ஆகியோரை நியமித்தது. மேலே சொல்லப்பட்டவை உட்பட பல்வேறு விஷயங்களை ஆவணச் சான்றுகளோடு தோழர்கள் முன்வைத்து பேசினார்கள்.
நிறைவாக, தான் செய்தது பெரும் தவறு என்பதை சண்முகம் சரவணன் ஒப்புக்கொண்டார். ‘சிலரது தவறான வழிகாட்டுதலின் பேரில் இவ்வாறு நிகழ்ந்து விட்டதாகக்’ கூறி வருத்தம் தெரிவித்தார்.
பொதுவெளியில் இந்த விஷயம் பேசப்பட்டு விட்டதாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்சிபிஎச் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்ற விவாதம் முன்வைக்கப்பட்டதாலும், கட்சி அணிகள் கடும் கோபமடைந்திருக்கின்றன. உரிய மாறுதல்களைச் செய்யாமல் பழைய நிலையிலே தொடர்வது சாத்தியமில்லை. அவர் பெயரில் மாற்றப்பட்ட பங்குகள் அனைத்தையும் திரும்பத் தர வேண்டும், இயக்குனர் குழு கூட்டத்தை நடத்தாமல் அவர் நியமித்த ஒன்பது இயக்குனர்களை திரும்பப் பெற வேண்டும் என்ற செயற்குழு முடிவு அவர்களிடம் கூறப்பட்டது.
தனது கருத்துக்களை முன்வைத்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், இறுதியில் கட்சி முடிவை ஏற்பதாக சண்முகம் சரவணன் ஒப்புதல் அளித்தார். இதற்கான ஆவணங்களில் எல்லாம் கையெழுத்திட்டதோடு, அப்போதே இயக்குனர் கூட்டமும் நடத்தப்பட்டு நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது.
என்சிபிஎச் நிறுவனத்தின் புதிய தலைவராக த. ஸ்டாலின் குணசேகரன், நிர்வாக இயக்குனராக க. சந்தானம் ஆகியோரை இயக்குனர் குழு கூட்டம் தேர்வு செய்தது. நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் சண்முகம் சரவணன் தொடர்ந்து பணிபுரிவார். நிறுவன மேம்பாட்டுக்காக தனது பங்களிப்பைச் செலுத்துவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. சட்ட ஆலோசகராக கோ.பாண்டியன் செயல்படுவார் .
இந்தச் சுமூகத் தீர்வின் அடிப்படையில் இரு தரப்பிலும் தரப்பட்ட புகார்கள், வழக்குகளை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி ஒற்றுமையாக நின்று இந்த பதட்டமிக்க பிரச்சனையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், நிர்வாக அதிகாரிகள் இன்னும் பலரும் அக்கறையோடு விசாரித்தனர். இதில் தீர்வு காணப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஒத்துழைப்பு செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி.
வாழ்த்துக்களுடன்….