நூலறிமுகம்: அதிகம், அனாவசியம், ஆபத்து! – சித்தார்த்தன் சுந்தரம்



நூல்: அவசரம் – உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூக, பொருளாதார மாற்றங்கள்
ஆசிரியர்: ஆசிரியர்: சோம.வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ 175   

`சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல நாம் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்கள் நாளடைவில் பூதாகரமாக உருவெடுப்பதற்கான விதைகள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் நாம் தொடர்ந்து நச்சு விதைகளை விதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதை அறுவடை செய்யவிருப்பது நாளையத் தலைமுறையினர்!

மனித வள மேலாண்மைத் துறை ஆலோசகராகவும் பங்குச்சந்தை வர்த்தகம், நிதி, பொருளாதாரம் உணர்வுசார் நுண்ணறிவு போன்ற துறைகளில் பல நூல்களை எழுதியவருமான முனைவர் சோம. வள்ளியப்பனின் சமீபத்திய நூல் `அவசரம் – உடனடியாகச் செய்தாக வேண்டிய சமூகப் பொருளாதார மாற்றங்கள்” ஆகும். 

நகமும் சதையும் போல ஞெகிழி எனப்படும் ப்ளாஸ்டிக் நம் வாழ்நாளில் இரண்டற கலந்துவிட்டிருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பொருட்களில் 60 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சிக்கு செல்கிறது என ஆசிரியர் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

மனித இனம் தோன்றிய நாளிலிருந்து நாம் நமது வசதிக்காக இயற்கையைச் சுரண்டிக் கொண்டு இருப்பதோடு அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் ஏற்படக்கூடிய வளர்ச்சி தொழிலாளர்களின் பங்களிப்பை ஆக்ரமித்துக் கொள்கிறது. முன்பு பல நூறு பேர் சேர்ந்து செய்த வேலையை இயந்திரமாக்கல், ரோபோட்களின் உதவியோடு இன்றைக்கு மிகச் சிலரே செய்து முடிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதை நூலசிரியர் நேரில் கண்ட பல உதாரணங்கள், நிகழ்வுகள் மூலம் குறிப்பிட்டிருக்கிறார். 



இயந்திரமாக்கலும், செயற்கை நுண்ணறிவும் நமது பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா? நாடு செழிப்படைய ஜிடிபி வளர்ச்சி மட்டும் போதுமா? செல்வம் ஒரு பக்கம் சேர்ந்து கொண்டே போகும்போது வறுமையும் அதிகரித்துக் கொண்டே போவது ஏன்? ஆளில்லா மகிழுந்து அறிமுகப்படுத்தப்படுவது போல ஆளில்லா விவசாயம் வந்தால் விவசாயிகளின் நிலை என்னவாகும்?

1980களில் உலகில் இருந்த மக்கள் தொகையில் `டாப் 1%” என அறியப்பட்ட மேல்தட்டு மக்கள் உலக வருமானத்தில் 16% ஐப் பெற்றார்கள். அதுவே 2017 ஆம் ஆண்டு 20% ஆக உயர்ந்தது. ஆக மீதமுள்ள 99% மக்களுக்குக் கிடைத்த வருவாய் 80% சதவிகிதம் மட்டுமே. செழிக்கும் செல்வந்தர்களுக்கும், பெருகும் வறியவர்களுக்குமான இடைவெளி ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை எட்டாவது அத்தியாயத்தில் ஆசிரியர் பல தரவுகளுடன் விளக்கியிருக்கிறார். 

செயற்கை நுண்ணறிவு நாளடைவில் மனித அறிவையும் மிஞ்சிவிடும் என்றும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தனது நூலான `அறிவார்ந்த கேள்விகளும் ஆழமான பதில்களும்’ என்கிற நூலில் குறிப்பிட்டிருப்பதாக ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். 

உலகை அச்சுறுத்தும் பேராபத்துக்களாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது – ஞெகிழி பயன்பாடு, அதீத பொருள்கள் பயன்பாடு, அதீத இயந்திரமயமாக்குதல், சில நிறுவனங்கள் மிகப் பெரும் நிறுவனங்கள் ஆவதால் ஏற்படும் அதிகாரக் குவிப்பும் அதனால் சாமான்யர்களின் சுதந்திரம், வாய்ப்புகள் பறிபோதல், சிலர் மிகப் பெரும் செல்வந்தர்கள் ஆவது இதனால் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சமூக நீதியும் பாதிப்புக்குள்ளாகும். 



இந்த நூற்றாண்டில் மனிதன் உட்பட உயிரினங்களுக்கு பூமியில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய அச்சுறுத்தல்கள் குறித்து இந்நூலின் ஒன்பது அத்தியாயங்களில் ஆசிரியர் ஆதாரப்பூர்வமாக விளக்கியிருப்பதோடு இறுதி அத்தியாயத்தில் இந்த அச்சுறுத்தல்களுக்கான தீர்வாக `பத்து அம்ச’ நடவடிக்கைகளைக் குறிப்பிட்டிருப்பதோடு அவற்றையெல்லாம் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்றும் காலக்கெடு கொடுத்திருக்கிறார். இல்லையேல் இதுவரை இருந்து வந்த உலகம், மக்கள், மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் என பலவும் மறைந்து போகும் ஆபத்து நிறையவே இருக்கிறது என்கிற எச்சரிக்கையோடு பல பின்னிணைப்புகளையும் அதற்கு ஆதாரமாகக் கொடுத்திருக்கிறார். 

இந்த நூல் ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினரைச் சென்றடைந்து பல கிரேட்டா துன்பெர்க்குகளை உருவாக்கி அரசுகளுக்கும், அரசுகள் ஆதரிக்கும் நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதோடு நாம் ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்கவும் அத்தியாவசியமானதை மட்டும் நுகரவும் கற்றுக் கொள்ள வேண்டும். 

நூலை அவசரமில்லாமல் பதிப்பாளர் நன்கு மெய்ப்பு பார்த்திருந்தால் அங்கங்கே தென்படும் சில சொற்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். 

இந்நூலை வாசிக்கையில் இன்றைக்கு கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வளர்ச்சியினால் வரக்கூடிய ஆபத்துகள் குறித்த ஆசிரியரின் ஆதங்கமும், ஆத்திரமும் அதைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்ய வேண்டிய மாற்றங்களுக்கான அவசரமும் நன்கு வெளிப்படுகிறது.