கனடாவிலிருந்து சில கவிதைகள் (Some Poems From Canada) | மரணத்தை வரைந்த ஓவியன் (Maranaithai Varantha Oviyan) - நா.வே.அருள் | தமிழ் கவிதைகள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் – முதல் கவிதை

மரணத்தை வரைந்த ஓவியன்
***********************
ஓர் உன்னதமான ஓவியனுக்கு
காலப்போக்கில்
கை விரல்களே
தூரிகைகளாக மாறிவிடுகின்றன

திரைச்சீலைகளில்
அவன் ஓவியங்களைத் தீட்டுகிறபோது
அவனது கைரேகைகளே
கோடுகள் ஆகின்றன

வாலிபனின் உதடுகளின் மேல்
மீசை துளிர்ப்பதைப் போலவோ
ஒரு மங்கைக்கு
மார்பகங்கள் கிளர்ந்தெழுவதைப் போலவோ
ஓர் உன்னதமான ஓவியன்
வானத்தில் மேகங்களென
திரைச்சீலைகளில்
ஓவியங்களை மிதக்க விடுகிறான்

அவன் சிம்மாசனம்
வரைகிற பொழுது
எங்கிருந்தோ ஓர் அரசன் வந்து
அமர்ந்து கொள்கிறான்

அவன் இரண்டு மூங்கில் கழிகளை
வரைகிற பொழுது
ஏதோ ஒரு பிணம்
தானாக வந்து படுத்துக் கொள்கிறது

அவனது தூரிகையின் துளிகளை
ஏந்திக்கொள்ள
திரைச்சீலை கருப்பை ஆகிவிடுகிறது

ஓர் உன்னதமான ஓவியன்
இறந்து விடுகிற பொழுது
ஓவியங்கள் எல்லாம் உயிர்பெற்று
அவனது இறுதி நிகழ்வில்
அஞ்சலி செலுத்த வந்து விடுகின்றன!

மலைகளின் ஓவியக்கிண்ணங்களில்
பனிக்கட்டி வண்ணங்களைக் குழைத்து வைத்திருக்கும்
கனடா நாட்டிலிருந்து உனக்கு
அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்
“இறுதியாக
மரணத்தை வரைவதற்காக
உனது உடலையே
தூரிகை ஆக்கினாயோ?”….

மறைந்த ஓவியர்
மா.சேனாதிபதி அவர்களுக்கு…..

எழுதியவர் : 

– நா.வே.அருள்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. S. Drvaraju

    சேனாதிபதி ஓவியர் மறைவு
    ஆழ்ந்த இரங்கல்கள்
    நா. வே. அருள்
    மரணத்தை வரைய உடலே தூரிகை ஆனதோ கண்ணீர் சிந்தும் கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *