பதினோராம் வகுப்பு (+1) பொதுத்தேர்வு ரத்து சில கேள்விகள் - ஆயிஷா இரா.நடராசன் | Some Questions About The Cancellation Of The 11th School Public Exam | Ayesha Era Natarasan Tamil Article - www.bookday.in

+1 பொதுத்தேர்வு ரத்து சில கேள்விகள் – ஆயிஷா இரா.நடராசன்

+1 பொதுத்தேர்வு ரத்து சில கேள்விகள்

– ஆயிஷா இரா.நடராசன்

எந்த ரூபத்தில் எந்த அடிப்படையில் வந்தாலும் தேர்வு என்றாலே சமூகத்தை அறிவாளி முட்டாள் என்று வடிகட்டும் துயர அமைப்பு.. தர அடிப்படையில் சமூகத்தை பாகு படுத்தும் உயர் வர்க்க உயர் சாதி ஆயுதம் தேர்வு.. சமூக அறிவு தளத்தை மேம்படுத்த எத்தனையோ பிற வழிகள் உண்டு. – ஆயிஷா இரா நடராசன்.

1. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. வரவேற்கிறோம்.

தமிழக அரசு இந்த ஆண்டு முதல் பதினோராம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்த பொழுது அதை மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகம் கொண்டாடுவதைப் பார்க்க முடிந்தது. 10,11 மற்றும் 12 வகுப்புகளில் மூன்றாண்டுகள் தொடர்ந்து ஒரு மாணவர் பொதுத்தேர்வுகளை சந்திப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை கருத்தில்கொண்டு நீதியரசர் முருகேசன் தலைமையிலான தமிழகக் கல்விக் குழு மற்றும் தமிழ்நாடு கல்விக்கொள்கை முன்வைத்த யோசனையை ஏற்று +1 தேர்வை ரத்து செய்யும் இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. மாணவர்களின் பொதுத்தேர்வு அடிப்படையிலான மன அழுத்தம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதை மறுக்க முடியாது. தேர்வு ரத்து செய்யப்படுவதை முதலில் வரவேற்கிறேன் மனதார பாராட்டுகிறேன்.. ஆரம்பத்தில் இருந்தே இணைந்து நாம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இது சாதிக்கப்பட்டுள்ளது.

+1 தேர்வு தேவையற்றது என்று தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் வேறு வேறு காரணங்களுக்காக அதை ரத்து செய்து இருக்கிறார்கள். கர்நாடகாவை பொறுத்த வரையில் ஒன்றிய அரசினுடைய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 5,8, 9 மற்றும் 11 ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அடிப்படை கல்வி உரிமை சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இந்த தேர்வுகளை சென்ற ஆண்டு ரத்து செய்துவிட்டது.

2. பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுவின் வரலாறு

1964 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி கல்விக் குழு மேல்நிலைக்கல்வி என்கிற ஒன்றை அறிமுகம் செய்து ஒரு பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பதற்கான முன்மொழிவுகளை வழங்கியது. பியூசி என்னும் பழைய முறை ரத்து செய்யப்பட்டு +2 என்பது கல்வியில் அறிமுகமானது பல மாநிலங்களில் மேல்நிலை வகுப்பு தனியாக இளங் கல்லூரிகளாக(JUNIOR COLLEGES) நடத்த திட்டமிட்ட நிலையில் தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்புகளை பள்ளிகளுடன் இணைத்து நடத்தும் சிறப்பான முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக மேல்நிலை கல்வி என்பது பட்டி தொட்டிகளில் கூட சென்று அடையும் நிலையை சாதித்திருக்கிறோம். +1 மாவட்ட அளவிலான தேர்ச்சி முறை அமலில் இருந்தது. ஆனால் பொதுத்தேர்வுகள் பன்னிரண்டாம் வகுப்பில் நடத்தப்படுவதால் பல பள்ளிகளில்( குறிப்பாக தனியார் பள்ளிகளில்) பதினோராம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதில்லை முழுக்க முழுக்க நேரடியாக 12 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.

அகில இந்திய மேல்நிலை பாட தொகுதியை எடுத்துக்கொண்டால் மேல்நிலையில் இரண்டு ஆண்டுகள் கற்றுத் தரப்படும் ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு பாகமாக புத்தகங்கள் எழுதப்பட வேண்டும். மேல்நிலை முதலாம் ஆண்டில் இரண்டு பாகங்களும் மேல்நிலை இரண்டாம் ஆண்டில் இரண்டு பாகங்களும்மாக அவை புத்தகமாக பிரித்து வைக்கப்படுகின்றன இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பகுதியை மட்டுமே நடத்தி பொதுத்தேர்வில் மதிப்பெண் பெறுகின்ற ஒரு மாணவர் கல்லூரிக்குள் நுழைகின்ற பொழுது பதினோராம் வகுப்பில் இடம் பெற்ற பாடத் தொகுதி பாடங்களை இழந்திருப்பதால் நிறைய சிரமத்திற்கு உள்ளாவதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். தேர்வு சீர்திருத்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டு..2017 ஆம் ஆண்டில் (GO(MS)NO:223) +1 பொதுத்தேர்வு அறிமுகமானது. மொத்தம் 1200 மதிப்பெண்கள் என்று +2 தேர் வில் கணக்கிடப்பட்டு வந்த நிலையில் மேல்நிலை முதலாம் ஆண்டில் 600 மதிப்பெண் இரண்டாம் ஆண்டில் 600 மதிப்பெண் என்று பிரித்து வழங்கப்பட்டது. நீட், ஜே இ இ போன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுதல் மற்றும் மத்திய பாடத்திட்டமான சி பி எஸ் ஈ தரத்திற்கு சமமாக நாம் கல்வியை உயர்த்துதல் போன்றவை காரணங்களாக தெரிவிக்கப்பட்டன.

3. நடைமுறை சிக்கல்

மேல்நிலை இரண்டாம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி செல்லுகின்ற பொழுது 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண்களை(CONSOLIDATED MARKLIST) பட்டியலிட்டு கொடுக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்தசூழலில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ தமிழக அளவில் 30,000 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பதினோராம் வகுப்பு பாடங்களை தேர்ச்சி பெறாமலேயே பிளஸ்டூ முடித்து பிறகும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களை எழுதிக் கொண்டிருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இரண்டாவது முக்கிய பிரச்சனை பதினோராம் வகுப்பு மதிப்பெண்கள் எதையுமே கல்லூரிகள் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. பதினோராம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருக்கிறாரா என்பதை மட்டுமே கருத்தில் கொண்ட கல்லூரிகள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தங்களுடைய கல்லூரி சேர்க்கையை நடத்துவது வழக்கமாக ஆகிவிட்டது. ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் பதினோராம் வகுப்பிற்கு பொது தேர்வுகள் நடத்தப்பட்டாலும் மத்திய அரசினுடைய சி பி எஸ் ஈ பதினோராம் வகுப்பை பொருத்தவரையில் பள்ளி அளவிலான தேர்வுகளையே இன்று வரை பின்பற்றி வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

4. தேர்வு ரத்தும் பின் விளைவும்

10, 11 மற்றும் பன்னிரண்டாம் ஆண்டுகளில் ஆண்டுதோறும் ஒரு பொதுத்தேர்வு என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அம்சம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இல்லை. ஆனால் கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி அன்று இந்த ஆண்டு முதலே +1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் தமிழக கல்விக் கொள்கையை வெளியிட்டு அறிவித்த உடனேயே தமிழகத்தின் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அப்படியே பதினோராம் வகுப்பு பாடத்தை நிறுத்திவிட்டு பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை நடத்தத் தொடங்கிவிட்டார்கள் என்கிற குற்றசாட்டு பரவி வருகிறது பல இடங்களில் இது உண்மையும் கூட. +1 தேர்வுகளை பொறுத்தவரையில் 2018 ஆம் ஆண்டுக்கு முந்தைய நடைமுறை பின்பற்றப்படும் என்பதை தற்போது அறிவித்துவிட்டார்கள். +1 பாடங்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்கிற ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. +1 பாடமே நடத்தாமல் போனால் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய நுழைவு தேர்வுகளில் அவர்களுடைய கதி என்ன ஆகும் எங்கிற கேள்வி எழுகிறது. இதற்கு ஒரு தீர்வு தேவை. இது ஒரு புறம்.

+1 பொதுத்தேர்வு அனைவருக்கும் ரத்து செய்யப்படவில்லை இது இரண்டாவது பிரச்சனை. இன்னும் பதினோராம் வகுப்பில் ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தற்போது பன்னிரண்டாம் வகுப்பில் இருப்பவர்களுக்கு தேர்வு தொடரும். இந்த பொதுத்தேர்வு அவர்களுக்கு விட்டுப்போன பதினோராம் வகுப்பு பாடங்களை எழுதி தேர்ச்சி பெறுவதற்கு என்று 2030 வரை நடத்தப்படும் என்று அரசாணை குறிப்பிடுகிறது. இங்கு தான் பிரச்சனை எழுகிறது. 2025 +1 தேர்வு முடிவுகளின்படி மொத்தம் தேர்வு எழுதிய 8,07,098 மாணவர்களில் 59,866 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.(தேர்ச்சி சதவிகிதம் 92.09%). இவற்றில் ஏறக்குறைய 49000 மாணவர்கள் அரசு பள்ளியில் படிப்பவர்கள் .. இவர்கள் தவிர ஏற்கனவே தொடர்ந்து +1 தேர்வில் விட்ட பாடங்களை எழுதி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 37,600 என்று அரசு தேர்வு துறை புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட முடியும்.. ஆக ஏறக்குறைய 1,00,000 மாணவர்களின் தேர்வுகள் தொடரும். இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் தேர்வு ரத்து என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான கல்வியாளர்கள் இந்நிலைப்பாடு. இவர்களை இந்த ஆண்டு நடைபெறும் மாவட்ட அளவிலான தேர்வுகளுடன் இணைத்து வாய்ப்பு வழங்கலாம்.

5. +1 பாடப்பகுதி தீர்வு என்ன

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்து விட்டு பதினோராம் வகுப்பு நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு மாணவர்.. தன் வாழ்க்கையில் அறிவியல் துறையா கலைத்துறையா மொழித்துறையா என்பதை தேர்வு செய்கின்ற ஒரு கால கட்டமாக மேல்நிலைக்கல்வி உள்ளது. மேல்நிலைக்கல்வி முடித்துவிட்டாலே சுய வேலைவாய்ப்புகளை தேடும் அளவிற்கு தொழில் கல்வி இணைக்கப்பட வேண்டும் என்கிற கோத்தாரி மற்றும் யஷ்பால் கமிட்டி ஆகியவற்றின் கருத்துக்கள் ஏற்கப்பட வேண்டும். நீதியரசர் முருகேசன் தலைமையிலான தமிழ்நாடு கல்வி குழு பரிந்துரைத்த தேர்வு சீர்திருத்தங்கள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும். வெறும் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் தமிழக மேல்நிலை கல்வி என்பது மாணவர்களுக்கான கல்லூரி மற்றும் வேலை இடத்திற்கான இணைப்பு பாலத்தை ஏற்படுத்துகின்ற அடிப்படைத் திறன் வளர்ச்சி பற்றிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு சீர்திருத்தம் குறித்து கூட்டங்கள் போடப்படும் போதெல்லாம்.. ஒரு விஷயத்தை கல்வியாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்ட தவறுவதில்லை. சென்ற ஆண்டு தேர்வு விழுக்காட்டைவிட இந்த ஆண்டு 1% மாவது அதிகம் இருக்க வேண்டும் மற்றும் சென்ற ஆண்டு எந்த தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுமோ அதற்கு ஒரு நாள் முன்னதாகவாவது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்கிற அதிகாரிகள் தங்களுக்கு தானே ஏற்படுத்திக் கொள்கிற இது மாதிரியான பிடிவாதங்களை எட்ட வைத்துவிட்டு தேர்வுக்கு சீர்திருத்தங்களை நாம் அணுக வேண்டும் .

+1 படங்களை பொறுத்தவரையில் தேர்வு சீர்திருத்த சோதனை முயற்சிகளை அங்கே மேற்கொள்ள முடியும்.. பதினோராம் வகுப்பு படிக்கும் அந்த ஒரு வருடத்தில் தமிழகம்முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் சென்று பார்ப்பதற்கும் பாடங்களை புரிந்து பாட வாரியாக பகுதி வாரியாக செயல்திட்டங்கள் செய்முறைகள் ஆய்வுகள் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கவும் மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்கு இந்த காலத்தைப் பயன்படுத்தலாம்.. மனிதநேயம் முதல் பகுத்தறிவு வரை பலவற்றை நீ தானமாக செயல்படுத்துவதற்கு அந்த ஒரு ஆண்டை பயன்படுத்தலாம்.

11 ஆம் வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் நடத்த வைப்பதற்கும் மாணவர்களை கற்க வைப்பதற்கும் ஒரு கண்காணிப்பு குழுவை மாவட்டம் தோறும் அரசு அமைக்க வேண்டும். தமிழக அரசின் ஆழமான இந்த கல்வி முறை எப்படியாவது தோல்வி அடைந்து தன்னுடைய தேசிய கல்விக் கொள்கை என்கிற இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரான ஒன்று அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசின் எதிர்பார்ப்பு. இங்கிருக்கும் சிலர் மேல்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு செமஸ்டர் தேர்வை அறிமுகப்படுத்தலாம் என்று கூட சொல்கிறார்கள். 11 புத்தகத்திற்கும் ஒரு தேர்வு என்பது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.. எட்டாம் வகுப்பு முடித்த உடனேயே செமஸ்டர் தேர்வுகளை குழந்தைகள் மீது திணிக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் எந்த ரூபத்திலும் தமிழகத்திற்குள் நுழைவதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

+1 பாடங்களை புறந்தள்ளிவிட்டு நுழைவுத் தேர்வுகளை எழுதுவதும் கல்லூரி முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லை என்பதால் +2 தேர்விலேயே +1 பாடங்களில் இருந்து 20 சதவிகிதமாவது கேள்விகள் இணைக்கப்பட வேண்டும் என்கிற கல்வியாளர்களின் நெடுநாள் கோரிக்கையையும் அரசு பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது… என்றாலும் தற்போதைக்கு +1 பொதுத்தேர்வு ரத்து என்பது பாடங்களில் தோல்வி அடைந்து இருக்கும் அந்த லட்சம் மாணவர்களுக்கும் சேர்த்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய உடனடி தேவை.

எழுதியவர் : 

✍️ – ஆயிஷா இரா.நடராசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *