நூல் அறிமுகம்: எழுத்தாளர் நக்கீரனின் *சூழலும் சாதியும்* – கார்த்தி டாவின்சி 

நூல் அறிமுகம்: எழுத்தாளர் நக்கீரனின் *சூழலும் சாதியும்* – கார்த்தி டாவின்சி 



இந்த நூலைப் முதன் முதலில் பார்த்த மாத்திரத்தில் எனக்கு பிடித்திருந்தது. இதன் அட்டைப்படம் நேரடியாக எதையோ சொல்ல வருவதைப்போல இருப்பதாக எனக்குள் தோன்றவே இதைப் படிக்க ஆவல் எழுந்தது. நூல் கைக்கு வந்ததும் அதன் அட்டைப்படத்தை முழுமையாக ரசித்தப் பின் தான் நான் நூலுக்கும் குதித்தேன். ஆழமான நூல் என்பதால் எளிதாகவே மூழ்கிவிட்டேன். ஆழம் நம்மை வசீக்கரிக்கும். அதன் பால் ஈர்க்கும். இந்நூலும் என்னை அப்படிதான் வசியத்தில் ஈர்த்துக் கொண்டது. ஆழம் தொட்டு மீண்டு வர சிறிது அவகாசம் எனக்கு தேவைப்பட்டது தான். ஏனெனில் நூல் அதன் தரத்தை அந்த ஆழத்திற்குள் தான் வைத்திருந்தது.

எத்தனை குறிப்புகள், எத்தனை ஆதாரங்கள், எத்தனை விவாதப்பொருள், அடடா… என்று சொல்லிக் கொண்டேன். இவ்வளவு திரட்சியான கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு நிற்கிறது நூல். சூழலும் சாதியும் என்றத் தலைப்பில் ஆசிரியர் நக்கீரன் எழுதியுள்ள இந்நூல் சிறந்த கட்டுரைத் தொகுப்பாகும். சாதியே சூழலாக இருக்கும் இந்த நாட்டில், சூழலும் சாதியும் என்ற நோக்கில் இந்நூல் அணுகப்பட்டுள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், சாதி என்பது எப்படியெல்லாம் சூழலியலில் இயங்குகிறது என்று ஆரம்ப காலம் முதல் தற்போதைய நிலை வரை ஆராய்ந்துள்ளார் ஆசிரியர். அதனை எளிமையாகவும் ஆதாரத்துடனும் விளக்குவது அவரது எழுத்துக்கான வெற்றியாக கருதுகிறேன்.!

நூலின் முதல் கட்டுரையில் தான் அட்டைப்படத்தின் பொருள் புரியும். வாய் கட்டப்பட்டக் காக்கையும் பச்சை நிறமும் சூழலுக்குள் சாதி எவ்வாறு தகவமைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடும் விதமாகவும் இதில் காகத்தின் கட்டப்பட்ட வாய் சாதியால் நசுக்கப்படும் மக்களையும் குறிப்பிடுவதாகவும் அறிகிறேன். காகத்தின் இடத்தில் சாதியால் பாதிக்கப்பட்டவர் எவரும் தங்களை இருத்திக் கொள்ளலாம். நான் என் வாழ்வில் அனுபவித்த பெருங்கொடுமைகளில் சாதியால் நிகழ்ந்தது அதிகம். ஆக ஒரு வகையில் நானும் அந்தக் காகமே.!

காகத்துக்கு அப்படி என்னப்பா ஆச்சு.? என்று கேட்பவர்களுக்கு பதில் முதல் கட்டுரையில் தான் இருக்கிறது. இந்திய சூழலில் கதைகள் மிகப்பெரிய ஆளுமை. ஆனால் அதிலும் சாதி இருக்கிறது. காகம் வடையை ஏமாந்த கதையை விட காகம் பானையில் நீர் நிரப்பி தாகம் தீர்ந்த கதை தான் எங்களுக்கு அதிகம் சொல்லப்பட்டதும் பாடமாக வந்தததும். விடா முயற்சி என்றும் அயராத உழைப்பு என்றும் அக்கதையின் உட்பொருளாக இருந்தன. பாட்டி வடை சுட்டதும் சுட்ட வடையை காக்கா சுட்டதும் என்ற கதையை இது காரும் நான் படித்ததில்லை. இதில் காகம் ஏமாந்து போகும் என்பது கதையின் முடிவு. காகத்தை கதாப்பாத்திரமாகக் கொண்ட பல கதைகளைக் சிறுவயது முதல் கேட்டிருக்கிறேன். அதில் இந்நூலினின்று வரும் காகம் குருவியின் சோற்றைத் தின்றுவிட்டு அங்கேயே எச்சமிட்டு விட்டு போனக் கதையையும் சிறு சிறு மாறுதல்களுடன் கேட்டிருக்கிறேன். அதேப்போல, குருவிக் கூடு கட்டிய காகம் என்ற கதையையும் கேட்டிருக்கிறேன். இப்படி பல கதைகள் உள்ளன. அதிலெல்லாம் காகம் ஒரு வேண்டாத ஆளாகவும், வில்லன் போலவும் தவறாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சரி. அது எப்படி காகம் மட்டும் இந்த மாதிரியே சித்தரிக்கப்படுகிறது என்று ஆய்வு மேற்கொண்டவர்கள் கண்டறிந்த உண்மை, பறவை இனத்தில் காகம் என்ற பறவை தாழ்த்தப்பட்டதாக இருக்கிறது. யாரால் என்பதை விட எதனால் என்பதே சிறந்த கேள்வி. பார்ப்பனியம் என்பது தான் அது.!

காகத்திற்கும் சாதி சாயம் பூசி இயல் பானகாகத்திற்கு ‘பறகாக்கா’ என்று பெயர் வைத்திருக்கிறது பார்ப்பனியம். காரணம்.? பெரிதாக ஒன்றுமில்லை, காகம் ‘கருப்பு’ நிறமாம். சரி, காகம் கருப்பாயிருந்தால் அது பறகாக்காயா.? என்று நமக்குள் ஒரு கேள்வி எழுந்தாலே நாமெல்லாம் சாதியை வெறுக்கிறவர்கள் என்று பொருள்.



ஆனால் அது மட்டுமல்ல, காகம் நல்ல நேரத்தின் அறிகுறி என்றும் சூழலியல் துப்புரவாளர் என்றும் சுற்றுச்சூழல் அறிவியல் சொல்லிக் கொடுத்திருக்கிறது. மாலுமிகள் காகத்தை கூண்டுகளில் வைத்து எடுத்து போவதும் தேவைப்படுகையில் அதைத் திறந்து விட்டு கரையிருக்கும் திசையறிவதும் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘காகம் கரைந்தால் விருந்தாளி வருவார்’என்ற பழமொழியும் இருக்கிறது. மாலுமிகளின் காகப் பயன்பாட்டிலும் ‘காகம் கரைந்தால்’ என்ற பழமொழியிலும் எனக்கு ஓர் ஒற்றுமைத் தெரிகிறது. ‘காகம் கரை வந்தால்’ என்று அந்த பழமொழி இருக்குமோவென்றும் பேச்சு வழக்கில் வேகமாகப் பேசுகையில் ‘காகம் கரைந்தால்’ என்றாகி இருக்குமோ என்றும் தோன்றுகிறது. வேள்பாரி புகழ் எழுத்தாளர், தோழர் சு. வெங்கடேசன் கூற்றுபடி, கரைக்கும் கரைதலுக்கும் தமிழில் இருக்கும் ‘ரகரம்’ ஒன்றே. அதெப்படி பழமொழி மாறும்.? என்றால் மாறும். அப்படி மாறிய பழமொழிகள் ஏராளம். உதாரணத்திற்கு 1. படிச்சவன்பாட்டக்கெடுத்தான்எழுதியவன்ஏட்டக்கெடுத்தான், 2. ஆமஆத்தக்கெடுக்கும், எழுத்தாணிகழுத்தறுக்கும். இதில் வருவது எல்லாம் படித்தவன் ஒருவன் இருந்தால் அவனுக்கு நன்மை, தீமையை பிரித்தறியத் தெரிந்து விடுமே, அப்படியானால் யாரையும் படிக்கவிடக் கூடாதே என்று பழமொழியில் கூட தீண்டாமை நுழைத்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது படித்தவன் பாட்டைக் கொடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கொடுத்தான். இப்படியாக இருக்க வேண்டியதை, நமது விரைவு வேக பேச்சுப் பழக்கம் ‘கொடுத்தான்’ என்பதைக் ‘கெடுத்தான்’ என்றே மாற்றி புரிந்துக் கொண்டு காலங்காலமாக கடத்தி வந்திருக்கிறது, படிக்காமலேயே..! தான் ஏன் படிக்கக்கூடாது என்று இவனும் யோசிக்கவில்லை, இவர்களைப் படிக்கவிட்டால் தனது தகுதி என்னாவது என்று பார்ப்பனியமும் மற்றவரைப் படிக்கவிடவில்லை.

அது மட்டுமா, ‘கஸ்டப்பட்டு உழைக்கனும், பிரதிபலன் எதிர்பாராது உழைக்கனும், அயராமல் உழைக்கனும், உண்மையா இருக்கனும், அப்பதான் உயர்வுவரும்’ என்று நமக்கு சிறுவயதிலிருந்து சொல்லப்பட்டவையெல்லாம் பொய்களே.! இதெல்லாம் யாருக்கு என்ற தெளிவை மட்டும் யாராலும் வரையருக்கவே முடியவில்லை. யாருக்காக.? என்று நம் தலைமுறைகளும் கேட்கவேயில்லை. ஆக, பானையில் கற்கள் போட்டு போட்டு நீர் நிரம்பாமல் அந்த காகம் செத்து விழுந்ததைப் போல, இந்த மூதாதையர்களும் விழுந்திருக்கின்றனர்.

துப்புறவிலும் குறிப்பிட்ட அந்த சில சாதியினரைத் தவிர வேறு யாரும் இல்லை. எந்த அரசு உயர் பதிவியானாலும் அதில் ஒரு தலித் இல்லை. அப்படி தலித் இருந்தால் அவர் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையைப் போல இருக்கின்றார். வெறுமனே இப்படி சொல்ல முடியாது என்பதால் இந்தியத் திரு நாட்டில் சாதி எந்தளவுக்கு ஊரிப்போய் இருக்கிறது என்பதை எழுத்தாளர் நக்கீரன் தன் நூலில் ஆதாரத்தோடு குறிப்பிடுகிறார். ‘குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் என்பதனால் கடந்த 2018 மார்ச் 18 அன்று புனித வெளியான பூரி ஜகன்னாதர் கோவிலில் அவர் தடுக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியானதைக் காண்கிறோம்.’ (ப.36)

சாதி என்பது அரசு உயர் பதவி வகிக்கும் இந்தியாவின் முதல் குடிமகனானாலும் தூக்கிப் போட்டு மிதிக்கிறது ‘நீ தலித்து’ என்று. இது தான் சூழலே முழுமையாக சாதியாக மாறியிருக்கும் நிலைமை. இதைத்தான் நக்கீரன் ஆய்வுக்கு எடுத்து இப்போது நூலாக்கி இருக்கிறார்.

இது இப்போது மட்டும் தான் நடக்கிறதா என்றால் இல்லை. ஃப்ரெஞ்ச் பேராசான் தத்துவ அறிஞர் ரூசோவின் மாணவரான, பெர்னார்டன் டிசென்பியர் என்பார் இந்திய சாதி நிலையைப் பற்றி அறிந்து அதையொட்டி, ‘இந்தியக் குடிசை’ என்ற நாவல் எழுதினார். அதில் ஒரு ஃப்ரெஞ்ச் பேராசிரியர் உலகெங்கும் சுற்றி பல்லாயிரம் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கிறார், அவர் இந்தியாவிற்கும் வருகிறார். அப்படி அவர் ஜகன்னாதர் கோவிலுக்கும் செல்கிறார். உள்ளே உச்ச பீடத்நில் ஒரு குரு அமர்ந்து கொண்டிருக்க, கீழே ஒருவர் கீழ் ஒருவராக பத்து பேர் அமர்ந்திருக்க, பேராசிரியர் தனது கேள்வியை கேட்டார். அது அந்த பத்து பேருக்கும் ஒருவர் மேல் ஒருவராக சொல்லப்பட்டு இறுதியில் குருவிடம் சொல்லப்பட்டது. கேள்விக்கான பதிலும் சொல்லப்பட்டது. அதில் வேதபுராணத்தின் புரட்டுதான் இருந்தது. பேராசிரியர் ஒரு வெள்ளையர். அயல் நாட்டுக்காரர். அவருக்கே இந்த தீட்டு நடக்கிறது என்று எண்ணி மனம் வெதும்புகிறார். பிறகு தான் இங்கெல்லாம் எந்த பதிலும் கிடைக்காது என்று கிளம்புகிறார். காட்டு வழியில் போகையில் மழை வர, அருகிலிருந்த ஒரு ஏழை தலித்தின் மரத்தில் அமைந்த குடிசைக்குள் இடம் கேட்டு தஞ்சமடைகிறார்.  பல்லாயிரம் கேள்விகளுக்கு பதில் தேடி வந்த பேராசிரியருக்கு தனிப்பட்ட முறையில் மூன்று கேள்விகள் இருந்தன. அவற்றிற்கு எங்குமே பதில் கிட்டவில்லை, ஆனால், இந்த ஏழை தலித்தின் குடிசையில் அந்த பதில்கள் கிட்டின. அதுதான் பெர்னார்டன் டிசென்பியர் என்ற தத்துவவாதியும் தனது தத்துவ வளர்ச்சிக்காக கண்டெடுத்த உண்மைகள். அந்நூலை வாசித்தவர்களுக்கு அந்நூலின் இன்றைக்கான அவசியம் தெரியும். திரும்ப நூலுக்குள் வருவோம்.

தீண்டாமை பார்ப்பனியத்தால் உருவாக்கப்பட்டது. அமைதியாக குழுக்கள், குலங்கள் என்றிருந்த இந்தியப் பூர்வகுடிகளின் மனங்களில் தீண்டாமை என்ற நஞ்சை விதைத்தது பார்ப்பனியம். அந்த கருத்து அவர்களுக்குள் உளவியலாக தன்னை வலிமையானவராகவும் மற்றவர்களை வலிமையில்லாதவராகவும் கீழானவர்களாகவும் எண்ண வைத்தது. இது நேரடியாக இன்றி திருட்டுதனமாக மக்களைப் பிரித்தாழும் சூழ்ச்சி. ஒருவனை நேரடியாக போரிட்டு வெல்ல முடியாமல் சிந்தனையிலேயே தன்னை அவன் கீழானவன் என்று நினைக்க வைப்பது. ஆனால் அவனுக்கு மனதில் தனது காலுக்கடியில் ஒருவனது தலை இருக்கவேண்டும் என்று எண்ணம் வருகையில் அவன் மற்றவர்களை தாக்குகிறான். இப்படியே நான்கு வர்ணமும் இன்று நான்காயிரம் வர்ணங்களாகிவிட்டன. எந்த ஒன்றும் இன்னொன்றுக்கு சமமில்லை என்பதை அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டது அவ்வளவு பொருளார்ந்து பொருந்தி போகின்றது. ஆனால் இவற்றின் ஆணி வேர் நஞ்சினாலான பார்ப்பனியத்திலிருந்தே தொடங்குகிறது.



நான்கு திசைகளில் சாதி, ஜம்பூதங்களில் சாதி, தாவரங்களில் சாதி, நிறத்தில் சாதி, தொழிலில் சாதி, மீன், பறவை, மாடு, குதிரை, நாய் என உயிரினங்களில் சாதி, வீதிகளில் சாதி, நேரத்தில் சாதி, கோவிலில் சாதி, கடவுள்களில் சாதி, உணவில் சாதி, உடையில் சாதி இப்படி இன்னும் எவற்றிலெல்லாம் பார்ப்பனியம் நஞ்சை விதைத்திருக்கிறது. இன்னும் எங்கெல்லாம் இருக்கிறது என்று மீளாய்வு நடத்த வேண்டும்.

ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்தில், சாதி இப்படியாக செயல்படுகிறது; மார்பில் ஒரு சட்டியும் உடம்புக்கு பின்னால் முள் செடியும் கட்டிக் கொண்டுதான் அன்றைய மராட்டியத்தில் தலித்துகள் உள்ளே நுழைய முடியும். ஏனெனில் அவர்களது காலடித்தடம் கூட அங்கே நிலைக்கக் கூடாது என்பதால். ஆனால் அவர்கள் நுழையும் போது பார்ப்பனர்களின் வேதம் ஓதுதல் நிறுத்தப்பட்டதாம். காரணம் தலித்துகளின் காதில் வேதமந்திர உச்சாடனங்கள் கேட்கக் கூடாதவையாம். ஆனால் இதை கொஞ்சம் திரித்து, முட்செடிக்கு பதிலாக துடைப்பம் கட்டுக்கொண்டு வருகிறதாக இன்றைய அம்பேத்கர் சீரியலில் கூட காட்சி வருகிறது. அது மட்டுமா..? சில இடங்களில் அதிகாலையிலும் அந்தி மாலையிலும் தலித்துகள் நடக்கவே கூடாது என்பது பார்ப்பனியத்தின் சட்டம். ஏனெனில் அந்த வேளைகளில் அவர்களது நிழல் நீண்டு தெரியும், அது ஆதிக்க சாதியினர் மேல்பட்டு விடக் கூடாது என்பதனால்.

இந்த இடத்தில் தான் ககோட்டுகள் பற்றி இந்தியர்கள் அறிய வேண்டி இருக்கிறது. இந்தியாவில் தீண்டாமைக் கொடுமை எந்தெந்த ரூபங்களிலெல்லாம் இருக்கிறதோ, அதேப்போல ஃப்ரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் எல்லைப் பகுதியில் வாழ்ந்த ஓர் இனக்குழுவினர் தான் ககோட்டுகள். விதவிதமான முறைகளில் அவர்களை மற்றவர்கள் ஒதுக்கினர். ககோட்டுகள், எச்சில் துப்பும் கலயம் கழுத்திலும், பின்னால் துடைப்பமும் கட்டிக்கொண்டு தான் நடக்க வேண்டும், பொதுக்குளத்தில் நீர் எடுக்கக்கூடாது, பொது வீதியில் நடக்கக்கூடாது, பொது கூடாரங்களுக்குள் நுழையக் கூடாது, ககோட்டு அல்லாத வரை மணக்கக்கூடாது,  சில இடங்களில் தேவாலத்திற்குள் அனுமதி இல்லை, அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை, புனித நீரைத் தொடக்கூடாது, மரக்கரண்டியால் தூர நின்று பொருள் பாதிரியார் தரும் பொருளை வாங்க வேண்டும் இப்படி ஏகப்பட்ட அடக்கு முறைகளுக்கு ஆளானவர்கள், ஃப்ரெஞ்சு புரட்சிக்கு பிறகு இன்று ககோட்டுகள் என்றால் என்னவென்று கேட்கும்படிக்கு மேற்கு நாடுகள் தீண்டாமையை வெறுத்துவிட்டன. தான் ஒரு ககோட்டு என்று யாருக்குமே அங்கே தெரிவதில்லை. அனைவருமே மக்கள் அவ்வளவுதான். அப்படிதான் இஸ்ரேலியர்களை அடிமைகளாக பல தலைமுறைகளுக்கு வைத்திருந்த கதை அறிந்திருப்போம். ஆப்பிரிக்காவின் கருப்பின சகோதரர்களை அடிமைகளாக வைத்திருந்த அமெரிக்கர்களையும் அதை வென்றெடுத்த தலைவர்களையும் அறிவோம். இங்கெல்லாம் இனம், நிறம் என்ற அடிப்படையில் தீண்டாமை நடைபெற்றது. ஆனால் பிறப்பினால் தீண்டாமை ஒருவர் மேல் சுமத்தப்படுகிறது என்றால் அது இந்தியாவில் பார்ப்பனியத்தால் மட்டுமே. இந்தியாவின் அதி புத்திசாலியானவர்கள், அரசியல் மாமேதைகள், இந்த இனக்குழுக்கள் எவ்வாறு வென்றனர், அவர்களின் மீதான தீண்டாமை எவ்வாறு ஒழிக்கப்பட்டது என்று ஏன் ஆராயக்கூடாது..? ஜப்பானில் கூட தீண்டாமை இருந்து அதை சவக்குழியில் தள்ளிவிட்டு சக மனிதர்களாகவும், உலகில் மகிழ்ச்சியான நாடாகவும் மாறியதெப்படி என்று ஏன் இவர்கள் ஆராயக்கூடாது.? தீண்டாமையை ஏன் வேரறுக்கக்கூடாது.? இப்படியான கேள்விகள் ஏராளம்..!

‘சாதியே சூழலாகிப் போன’ என்ற சொல்லை அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்நூலின் பொருண்மையே ‘சூழலே சாதியாக’ இருக்கின்றதை நமக்கு உணர்த்துவதற்குதான். சாதி தீண்டாமை மனிதனின் நம்பிக்கைக்குள்ளும் கூட இருக்கையிட்டு அமர்ந்திருக்கிறதை தோழர் அருள்மொழியின் ஓர் உரையில் தான் அறிந்தேன். அவர் கூறுகிறார், வெள்ளையனோட நம்பிக்கையெல்லாம் பேய் கருப்பாக இருக்கும். ஏன்னா அவன் கருப்பு நிறத்தைப் பார்த்து பயப்படுகிறான். ஆனால் திராவிடர்களின் நம்பிக்கைப் படி பேய்கள் வெள்ளையாக இருக்கின்றன. ஏனெனில் வெள்ளை நிறத்தைக் கண்டு பயம்.’ ஆக யாருக்கு எந்த நிறம் பயமோ, அந்த நிறத்தில் தான் பேய் என்ற மூடநம்பிக்கையைக் கூட உருவாக்குகிறான் மனிதன். இதன் உளவியல் சிக்கல் என்னவென்றால், தான் பயப்படுவதற்கு ஓர் உருவம் வைத்து பார்க்கும் மனதின் செயல்பாட்டை மற்றவர்களுக்கும் பரப்புவது தான். அப்போது சாதாரண பயம் பெரும் பயமாக உருவெடுக்கிறது. உதாரணத்திற்கு ஐரோப்பியர்கள் பெண்களை அடக்கி ஆளவேண்டி, அடிக்கடி பல பேருக்கு சூனியக்காரி என்று முத்திரைக் குத்தி லட்சக்கணக்கானவர்களை கொன்றனர். ஆனால் உண்மையோ, சூனியக்காரிகள் என்று யாரும் இல்லை. அந்த பயம் மட்டும் உண்மை.



இந்த நிறத்தின் அடிப்படையிலான பயம் தான் திராவிட பார்ப்பன மோதல்களின் அடிப்படைகள் என்று பலரும் கூறியுள்ளதை நக்கீரன் எடுத்துக்காட்டியுள்ளார். தென்னகத்தின் எள், பனைவெல்லம் எல்லாம் கடவுளுக்கு படைக்கப்பட்ட காலம் ஒன்று இருந்திருக்க, நிலம் பார்ப்பனருக்கு தாரை வார்க்கப்பட்டப்பின், நமது சொந்த மண்ணின் விளைப்பொருட்களை ஓரங்கட்டி விட்டு, வெளுப்பான நிறத்திலான பொருட்களையே படையல் வைத்தனர் பார்ப்பனர்கள். ஆக, தீண்டாமை கடவுள் பக்தியிலும் கூட நுழைந்திருக்கிறது என்பது தெளிவு. வெள்ளை நிறத் தேங்காய், கற்பூரம் இதற்கு உதாரணம்.

நிலத்தில் உயரமான இடங்களில் பார்ப்பனரும், அங்கேயே கோவில்களும் அமைத்து அதைச்சுற்றியே அடுத்ததடுத்த மாடவீதி, ரத வீதிகள், சாலைகள், சந்துகள் என ஆதிக்க சாதியினருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தலித்துகளுக்கு மட்டும் ஆற்றோரங்களும் காட்டோரங்களும், மலைக்குன்றுகளும், சுடுகாட்டுக்கு பக்கத்திலும் இருப்பிடங்கள். குறத்தி முடுக்கு என்று தமிழில் ஒரு நல்ல நாவல் இருக்கிறது. குறத்தி முடுக்கு கதையின் தலைப்பு ஏன் இப்படி அமைந்திருக்கிறது என்று யோசனை இருந்தது. தொ.பரமசிவத்தின் கருத்தை நக்கீரன் இங்கு எடுத்துக்காட்டியுள்ளதன் மூலம் என் கேள்வியை தீர்த்துள்ளார். மாடவீதி, ரதவீதி அதற்கடுத்த இடங்கள் கோயில்களுக்கு சேவை செய்யும் சாதியினர் இருக்கும் இடம். அது பெரும்பாலும் குறுகலானதாக அமைந்திருக்கிறது. இதில் முடுக்கு என்ற சொல்லும் அடக்கம். சரி இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்றால், அதாவது, கோயிலுக்கு சேவை செய்யும் மக்கள் என்றாலே தேவதாசிகள் கன்னிமார்கள் தான் அதிகம் இடம்பெறுவர். அவர்களை மாடவீதி ரத வீதியில் வாழ்பவர்கள் போதை போகப் பொருளாகப் அனுபவித்தனர்.

நாகராஜன் எழுதிய குறத்தி முடுக்கிலும் ஒரு பெண் பறத்தைத் தொழில் செய்பவராக இருப்பார். அந்த வீதியே அப்படித்தான். கதையின் ஓரிடத்தில் நாகராஜன் சொல்கிறார், ‘வள்ளி குறத்தி முடுக்கு’ என்பதே ‘குறத்தி முடுக்கு’ என்று சுருங்கியது. சேவை செய்யும் பெண்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதே இதன் பொருள். ஆக, தீண்டாமையின் வடிவங்களில் இந்த தேவதாசிகள் முறையும் ஒன்று என்று அறிகிறோம்.

இந்த ஏற்றத்தாழ்வை பல தலைமுறைகள் அனுபவித்து விட்டன. ஆனாலும் எந்த கேள்வியும் எழவில்லை. அதேப்போல தென்னாட்டு தாய் தெய்வங்கள் எல்லாமும் வடக்கு நோக்கியே வீற்றிருக்கின்றன என்றும் வடக்கிலிருந்து வரும் காற்று வாடைக் காற்று என்றும் திராவிடர்கள் சுடுகாடுகளை ஊருக்கு வடக்கில் வைத்திருந்தனர் என்றும் மானுடவியல் அறிஞர் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டுகிறார். ஆக, வடக்கிலிருந்து வந்தவர்களை வெறுப்பதன் ஒரு வெளிப்பாடு தான் இது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

புல்லும் பூனூலும் எனும் அத்தியாயத்தில் தருப்பைப் புல்லாலான பூனூலை பார்ப்பனர்கள் அணிந்தனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் முடிவுவரை பார்த்தேன் நான் எதிர்ப்பார்த்த ஒரு கருத்து இல்லை. அதாவது திருமணச் சடங்கை செய்யும் பார்ப்பனர் மற்ற சாதியினருக்கு வேதம் ஓதுகையில் அப்போது மட்டும் மணமகனுக்கு கை விரலில் ஒரு புல்லாலான கட்டு ஒன்றை விரலைச் சுற்றி நீட்டிக் கொண்டு மோதிரம் போல அணிவிப்பதுண்டு. அதன் பொருள், திருமணம் என்பதே பார்ப்பனருக்கு மட்டுமே உரியது, மற்றவர்களுக்கு அது இல்லை என்றும், மேலும் திருமணம் செய்கிற மணமகன் மட்டும் அப்போதைக்கு பார்ப்பனன் என்று அடையாளமிடும் செயல் என்றும் நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். இப்படி இன்னும் எந்தெந்த வகையில் எந்தெந்த விசயத்திலெல்லாம் சாதியை விதைத்து ஒழித்து வைத்துள்ளதோ பார்ப்பனியம் என்று தெரியவில்லை.

ஆனால் எச்சரிக்கை ஒன்று விடுக்கிறார் எழுத்தாளர் நக்கீரன். ‘அம்பேத்கர், பெரியார் மகாத்மா பூலே போன்றோர் அரசியலை விட சமூக சிந்தனைகளுக்கே முதலிடம் தந்தனர்,’ (ப.37), என்று கூறுகிறார். இப்போதைய ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களுக்கு சமூக சிந்தனை தீண்டாமையில் மட்டுமே கொழுந்துவிட்டு எரிவதாக அறிகிறோம். ஆட்சிகள் மாறலாம்.  ஆனால் சிந்தனைகள் மாறாதவை. பாமர மக்களிடம் அவை நல் நேரத்தை சேர்த்துவிடும்.

‘அனைத்தும் சமம் என்பதே இயற்கையின் அடிப்படைத் தத்துவம்’ (ப.39) என்று நூலில் குறிப்பிடுகிறார் நக்கீரன். ‘இறைவனின் முன்பு அனைத்தும் சமம்’ என்று வைதீகமாக்கப்பட்ட சொற்களையே கேட்டிருக்க, இவரது இக்கருத்து மிகுந்து ஏற்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் கடவுள்களை உருவாக்கியவன் வெறுமனே உருவாக்காமல் இயற்கை சக்திகளுக்கு பெயரிட்டு அதற்கு உருவம் கொடுத்து தான் உருவாக்கினான் என்பது வரலாறு. ஆக, இயற்கை தான் அனைத்திற்கும் மூலம். ஆனால் இதை எதிர்த்து மூடி மறைத்து, ‘பிரம்மம்’ என்ற ஒன்றை உருவாக்கியது பார்ப்பனியம். இறுதியில் அறிவியல் இவை அனைத்தையும் அடித்து வெளுத்து வாங்கிவிட்டது. பூமியைக் கடந்து அண்டத்திலும், அண்டம் கடந்தும் கடவுளை தேடிவிட்டது. காணவில்லை. ஆக,  இனி இந்திய மக்கள் அறிவியல் அறிவை ஏற்று சக மனிதர்களை மதிக்க பழகுவதே சிறந்த செயல்.



இந்த நூலின் ஆரம்பத்தில். காந்திக்கும் கேரளத்தின் நாராயணகுருவுக்கும் நடந்த உரையாடல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘மரத்தின் இலைகள் எல்லாமே ஒன்று போலவே இருப்பது இல்லை’ என்று காந்தி சொல்கிறார். ‘

எல்லா இலைகளின் சாற்றையும் பிழிந்தால் அது ஒன்று போலவேதான் இருக்கும்’ என்று நாராயணகுரு பதிலளிக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு குறித்து இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் இந்த பேச்சு வருகிறது. இருவருமே மேதைகள் தான், ஆனால் அவர்களது நோக்கம் வேறு. அதன் படி சில உண்மைகள் மறைக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.

பார்ப்பனியம் தனது கருத்துகளை கதைகளின் மூலம் நிறைய பரப்பி வைத்திருக்கிறது. அதேப்போல இப்போது ஒரு கதை.

“கேரளத்தில் ஒரு மகான் இருந்தாராம். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டாராம். அவரைத் தடுக்க எண்ணினார் ஒரு மூக்கு கண்ணாடி தாத்தா.  அவரைப்போலவே ஒரு தாத்தாவிடம் அந்த மகானை தடுக்கச் சொல்லி கேட்டார். மகானிடம் சென்ற அந்த தாத்தா, தலித்துகளுக்கு ஏன் உதவி செய்கிறீர்கள்.? இதையெல்லாம் விட்டு விடுங்கள் என்று சொன்னார். ஆனால், மகான் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு தாத்தாவிடம் பதில் இல்லை. சரி, ஒரு கணக்கு போட்டு பார்ப்போம் என்று அருகிலிருந்தவனை, எடோ… வேகமாயிட்டு இவட வரும் என்று அழைத்து, அனைத்து சாதிகளின் பெயர், தொழில், உழைப்பு என அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தார். ஆனால் கணக்கு சரியாக வரவில்லையாம். அப்படியானால் இந்த சாதிகளில் ஒரு சாரார் திருடுகிறார்கள் என்று கூறினார் மகான். ஆதாரத்தோடு கடக்கு காட்டியதால் தாத்தாவால் அவரை மாற்ற முடியாமல் போனது. திரும்பி வந்த தாத்தாவை மூக்கு கண்ணாடி தாத்தா விசாரித்து அறிந்து கொண்டார். மகானிடம் சாதியை ஆதரிக்கவும் தலித்துகளை எதிர்க்கவும் இவரை அனுப்பியிருக்க கூடாது என்று கண்ணாடி தாத்தா நினைத்தாராம். இறுதியில் வேறொரு மதத்தாரை ஆதரித்தார் என்றெண்ணி, அந்த தாத்தா கொல்லப்பட்டாராம். இதை செய்தது மூக்கு கண்ணாடி தாத்தா இல்லை, அவரது மண்டையில் ஊரிப் போயிருந்த, நஞ்சு மனநிலையைக் கொண்ட வேறு சிலரால் கொல்லப்பட்டாராம். ஏனெனில், நஞ்சு மன நிலைக்கு எதிராக யார் வந்தாலும் அந்த மனநிலையே அவர்களை கொன்று விடுமாம். இதையே தர்மம் என்று பொய் சொன்னதாம் அந்த நஞ்சு மனநிலை.” இது வெறும் கதையோ உள்நோக்கத்துடனானதோ, அவரவர் பாடு. ஏனெனில் நூலின் முன்னுரையில் இருக்கும் கருத்து தெளிவு முக்கியம், ‘ பெரியாரின் மொழியில் சொன்னால், ‘நமது எதிரி பார்ப்பனர் கிடையாது, பார்ப்பனியம் மட்டுமே.’ இந்தப் புரிதலோடு நூலுக்குள் நுழைய வேண்டுகிறேன்,’ என்பது தான்

‘தீண்டாமையைக் கடைப்பிடிப்பதும் தம்மை பார்ப்பனியத்துக்கு உயர்த்திக்கொள்ளும் முயற்சிகளும் உள்ளவர்கள் அனைவரும் மனதளவில் இரு பிறப்பாளர்களே எனவே உளவியல் மேதை யூங் அவர்களின் கருத்தின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் நோயாளிகளே.’ (ப.82) இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பார்ப்பனியம் என்ற சொல்லுக்கு முழு பொருள், பார்ப்பனர்கள் அல்ல, யாரெல்லாம் தீண்டாமையை கடைபிடிக்கிறார்களோ, பலனடைகிறார்களோ, பின்பற்றுகிறார்களோ, அதற்காக தங்கள் இன்னுயிரைக் கூட தறந்து வீணாக்குகிறார்களோ, அவர்களையே குறிக்கும். மாமேதை மார்க்சின் கூற்றுப்படி, மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது. அந்த பயன் அனைவருக்கு மானதாக இருக்க வேண்டும் என்பதே தேவை.

‘பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற மனநிலையில் வாழ்கிறவர்களே ஒரு பிறப்பாளர். இந்த மனநிலையே நலம் மிக்க மனநிலை என்கிறது உளவியல். இதை மனதில் நிறுத்தி நமக்கு நாமே ‘சாதி நீக்கம்’ செய்து வாழப் பழகுவோம். ஏனெனில் தமிழர்கள் ஒரு பிறப்பாளர் மட்டுமே.!’ (ப.82) இவ்வாறாக எழுத்தாளர் நக்கீரன் தனது ஆய்வு நூலை முற்றாக முடித்து தமிழர்க்கு தனது அரும்பங்கை நிலை நாட்டுகிறார்.

மிக மிக முக்கியமான நூலாகவே இதை நான் கருதுகிறேன். சாதி பற்றி ஆரியரே அறிந்துக் கொள்ளக் கூடிய அளவில் எழுதப்பட்ட அரிய நூல். தமிழர்கள் அனைவருக்குமான பெருமை இந்த நூல். இதை வெளியிட்ட மாத்திரத்தில் விற்றுத் தீர்ந்ததென அறிந்தேன். அவ்வளவு தூரம் இந்நூலுக்கான தேவை மனிதர்களுக்கு இருந்திருக்கிறதை அறிகையில் மகிழ்ச்சி தோன்றுகிறது.!

– கார்த்தி டாவின்சி 



Show 2 Comments

2 Comments

  1. Neelaveni

    அருமையான பதிவு கார்த்தி டாவின்சி 👌👌

    • Karthi Davinci

      மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *